புதியதோர் பெத்லகேம்
அருள்சீலி அந்தோனி
அன்புள்ளங்களே!
புதிய விடியலுக்காய் விண்மீன்கள் விழித்திருக்கின்றன!
நிலவும் நித்திரையை நீக்கி நெடு நேரம் காய்கின்றது!
பனித்துளிகள் பரிசுடன் பார்த்துக் கொண்டிருக்கின்றன!
அதோ !
மேற்குத் திசையான பெத்லகேமில் ஓர்
உன்னத விடியல்! பகலவன் பாலன் இயேசு!
ஒளியாக உலகில் உதித்தார்!
அன்னைமரியின் அரவணைப்பில் - கதகதப்பில்
வைக்கோல் மெத்தை மதில் கந்தை துணியில்
கவழ்ந்திருக்கின்றார்! விண்மீன்களை!
வால் நட்சத்திரம் வழி காட்ட! வானவர்
கீதமிசைக்க மண்ணகம் புனிதம் அடைய
வந்துதித்தார் மாபரன் மழலையாக!
அதே வேளையில்
கோமகன், இடையர் சாமக்காவல் கலைந்து
தம் துயர் துடைக்க வந்த பாலகனை காண -
சிறு கவிதைகளை இதழ்களில் கூட்டி புன்னகையோடு
உலக அதிசயங்கள் ஒன்றிணைந்தாற் போல
கோமகனை கோ வீட்டில் கண்டிட வந்துதித்தார்!
மழலை இயேசுவாக!
மானிடா!
ஈராயிரம் ஆண்டுகளைக் கடந்து இந்த பிறப்பு தொடர்கின்றது ஆனால்
இந்த மானுடம் புது பிறப்பாவது எப்போது?
இன்று சாதி - மதம் - சமயம் - மொழி - இனம்
என்ற கூறுகள் மனு குலத்தை அரசியல்
எனும் போர்வையில் சின்னா பின்னமாகிடும்
நிலையை பாலன் மழலை இயேசுவிடம்
ஒப்படைத்து சரணடைவோம் வாரீர்!
இந்த மண்ணுலகை புண்ணிய பூமியாகிட
புதியவர்களின் பிறப்பிடமாகிட
அன்பின் அடையாளமாகிட
ஆன்மீக அருவியாக!
வரங்களின் வாய்க்காலாக
மலர்ந்திடும் மாபரனை, மடியில் ஏந்தி நிற்கும்
இயேசு - மரி - சூசையின் அரவணைப்பில்
கர்த்தரை எதிர் நோக்கிய அன்னையின்
மலரடியில் சரணடைவோம்! புத்துலகு
படைக்க புறப்படுவோம்!
மழலை இயேசுவை நோக்கி........
பிளவுபட்ட மனுகுலத்தை ஒன்றினைக்கவே
வந்துதித்தார் இறைவன், மழலையாக
எனும் வரிகள் நம் வாழ்வின் நங்கூரமாகட்டும்..