merry christmas

கிறிஸ்து பிறப்பு பெருவிழா- சிறப்பு செய்தி

தந்தை தம்புராஜ் சே.ச.

இயேசுவின் இனிய நாமத்தில் என் நெஞ்சுக்கினிய அன்பு உள்ளங்களே! வணக்கம்!!

டிசம்பர் மாதம் என்ற உடனேயே நம் மனக் கண்முன் வந்து நிற்பது கிறிஸ்துமஸ் அல்லது கிறிஸ்து பிறந்த மாபெரும் திருநாள்!

மனிதன் கடவுளைக் காண முடியாததால், கடவுளே மனிதனை நோக்கி வருகின்றார். இம்மாபெரும் நிகழ்வைப் பற்றித் தூய பவுல் கீழ்வருமாறு கூறுகின்றார்:
"கடவுள் வடிவில் விளங்கிய அவர், கடவுளுக்கு இணையாயிருக்கும் நிலையை வலிந்து பற்றிக் கொண்டிருக்க வேண்டிய தொன்றாகக் கருதவில்லை. ஆனால், தம்மையே வெறுமையாக்கி, அடிமையின் வடிவை ஏற்று மனிதருக்கு ஒப்பானார். மனித உருவில் தோன்றி சாவை ஏற்கும் அளவுக்கு, அதுவும் சிலுவைச் சாவையே ஏற்கும் அளவுக்குக் கிறிஸ்து தம்மையே தாழ்த்திக் கொண்டார்" பிலிப்(2:6-8)

இத்தகைய இறைவனைத் தூய உள்ளத்தோர் தான் பார்க்க முடியும்! அரச மாளிகையில் அரசோச்சியிருந்த ஏரோதுவால் குழந்தை இயேசுவைக் காணமுடியவில்லை. ஆனால் சாதாரண, சாமானிய படிப்பறிவில்லாத இடையர்கள் குழந்தை இயேசுவைக் கண்டு மகிழ்ந்தார்கள்.

"தூய உள்ளத்தோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் கடவுளைக் காண்பர்" (மத் 5:8).

எல்லா பொருட்களையும் வேடிக்கைப் பார்ப்பதுபோல் கடவுளையும் பார்க்க விரும்பிய இளைஞன் ஒருவன் காட்டிலே தவம் செய்து கொண்டிருந்த முனிவர் ஒருவரைச் சந்தித்தான்.

இளைஞன் முனிவரைப் பார்த்து, "கடவுளைப் பார்த்திருக்கின்றீர்களா?" என்று கேட்டான். அதற்கு அந்த முனிவர் "ஆம், பார்த்திருக்கிறேன்" என்றார்.

"நீங்கள் அவரை எனக்குக் காட்டுவீர்களா?" என்றான் இளைஞன். "உனக்கு அவர் தெரியமாட்டார்" என்றார்முனிவர்.

"ஏன்?" என்று கேட்டான் இளைஞன்.

"வா, என்னோடு" என்று சொல்லி, அந்த இளைஞனை முனிவர் ஒரு குளத்தங்கரைக்கு அழைத்துச் சென்றார்.

"தண்ணீரில் உன் முகம் தெரிகிறதா?" என்றார். "நன்றாகத் தெரிகிறது" என்றான் அந்த இளைஞன்.

பிறகு ஒரு குச்சியை எடுத்து முனிவர் தண்ணீரைக் கலக்கினார். "இப்போது உன் முகம் தெரிகிறதா?"

"இல்லை"

"ஏன்?"

"தண்ணீர் கலங்கியிருக்கிறது!"

"உன் உள்ளம் கலங்கியிருக்கிறது. ஆகவே, உன்னால் கடவுள் முகத்தைப் பார்க்க முடியாது" என்றார் முனிவர்.

ஆம், அன்பார்ந்தவர்களே! இந்தக் கிறிஸ்துமசுக்கு முன் நல்ல பாவசங்கீர்த்தனம் செய்து, நமது இதயம் இயேசுவை ஏற்க மனமுவந்து நம்மைத் தயாரிப்போம்.

அனைவருக்கும் எனது அன்பும், பாசமும், மன்றாட்டும் கலந்த கிறிஸ்து பிறப்பு விழா நல்வாழ்த்துகள்!.

தந்தை தம்புராஜ் சே.ச.