merry christmas

ஒரு இடையரின் மலரும் நினைவுகள்

அ. ஜோசப் ஜெரால்டின்

மலைத் திசை மாட்டுக் குடிலிலிருந்து
மழலை ஓசைக் கேட்கிறதே !
குரல் ஒலியாய் இல்லாது
குழல் ஒலியாய் இனிக்கிறதே !
தவித்தழும் சத்தமாய் இன்றி
தனித்தெழும் சங்கீதமாய் இசைக்கிறதே !

விளக்கொளிக்கு வழியில்லாக் குடிலில்
வியப்பொளித் தெரிகிறதே !
விழி மூடும் வேளையிலே
விடியல் போல் தோன்றிடுதே !
ஒளிக் கூட்டிய விண்மீன்(கள்)
வழிக் காட்டிப் பறக்கிறதே !

பயப்படுத்தும் நிகழ்ச்சியா இல்லை
பயன்படுத்தும் மகிழ்ச்சியா ?
குழம்பிய வேளையிலே ;
குளிரிலும் வியர்த்திட்ட நிலையிலே
குரலொலி ஒன்று கூறியது

“ சொல் மீறியக் காரணத்தால்
அல் ஏறிய மானுடத்தை
நல் பாதையில் மாற்றிடவே
நல் மேய்ப்பர் பிறந்திருக்கிறார்
யாரிவர் எனத் தேடிட வேண்டாம்
தூயவர் எனத் தெரிந்து கொள்ளுங்கள் ”

நிகழ்ந்தது என்ன, என நினைவுகள் எண்ண
நிஜமாயிது என நிச்சயம் பண்ண
கால்நடையோடு குடில் ஏறினோம்
காலநடையோடு குடியேறும் மாற்றம் அறியாது

அங்கே,

மரியாதைக்குரிய தாயாகக் கன்னி
மரியாள் அமர்ந்திருந்தார்
மறுதலிக்காத காவல் தந்தை
சூசை அடுத்திருந்தார்
மய்யத்தில், தேவ மகன்
பாலகனாய்ப் படுத்திருந்தார் –

பொதுவாக, குழந்தையைக் கண்டால்
ஏதேதோ சொல்லிக் கூப்பிடத் தோன்றும்
பாலன் ஏசுவைக் கண்டதும்
இடைவேளை ஏதுமின்றிக் கும்பிடத் தோன்றியது
மனம் பயந்துக் கும்பிட வில்லை
மனம் உவந்து நம்பிட, கரம் குவிந்தது ; தலைக் குனிந்தது

ஆணுக்கும் பெண்ணுக்குமான இணைப்பின் பிறப்பல்ல
விண்ணுக்கும் மண்ணுக்குமானப் பிணைப்பின் திறப்பு
இரத்தச் சேர்க்கையின் நிகழ்வன்று
பரிசுத்த வாழ்க்கையின் மகிழ்வென்று உணர்ந்தோம்
எங்கள் குடியிருப்பில் தேவன் பிறந்ததால்
சிறியோர் நாங்கள் பெரியோராய் உயர்ந்தோம்

ஆம்,
“ எளிய மனத்தோர் பேறு பேற்றோர் ”  - இறை வாக்கின்படி –

இன்றும்,

கிறிஸ்துமஸ் குடிலில் வருகின்றோம் பொம்மையாய்
கிறிஸ்துவின் அருகில் வாழ்கின்றோம் உண்மையாய்.
-