merry christmas

உலகின் முதல் கிறிஸ்துமஸ் குடில்

மறைத்திரு சேவியர் இராஜன், சே.ச.
vatican crib-18

கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களில் கிறிஸ்துவின் பிறப்புக்காட்சியைக் காட்டும் கிறிஸ்துமஸ் குடில் அமைப்பது நம்மவரிடையே பாரம்பரியமாக நடக்கும் ஒரு நிகழ்வு.

வத்திக்கானில் புனித பேத்ரு பசிலிக்கா பேராலயத்துக்குமுன் கிறிஸ்துமஸ் குடில் அமைக்கும் பழக்கத்தைப் புனித இரண்டாம் ஜான் பால் போப்பாண்டகை தான் கொண்டுவந்தார். அதற்குமுன்பு, கிறிஸ்துமஸ் மரம் வைப்பதுமட்டுமே வழக்கமாக இருந்தது. இவ்வாண்டு நவம்பர் மாதமே கிறிஸ்துமஸ் மரம் வடஇத்தாலியிலிருந்து வந்து சேர்ந்து விட்டது. கிறிஸ்துமஸ் குடில் இவ்வாண்டு மிக நூதனமாக மணலிலே அமைக்கப்படுகிறது. தரை, கூரை, சுவர், மிருகங்கள், வானதூதர்கள், சூசை, மரியா, குழந்தை இயேசு, இடையர்கள் என அனைத்தும் மணலிலேயே செய்யப்படுகிறது. இதைச் செய்ய நான்குபேர் வெவ்வேறு நாடுகளிலிருந்து வந்து வேலை செய்கிறார்கள்.

ஆனால், கிறிஸ்துமஸ் குடில் அமைக்கும் பழக்கம் எப்போது தொடங்கியது என்று நாம் சிந்தித்திருக்க மாட்டோம்.

மிருகங்கள் தொழுவத்தில் இயேசு பிறந்த காட்சியை உலகிலேயே முதன்முதலாக அமைத்தவர் புனித பிரான்சிஸ் அசிசியார்தான் (1181-1226). இயேசுவைப்போலவே வாழவேண்டும், அவர்போலவே ஏழையாயிருக்க வேண்டும், அடக்கம், தாழ்ச்சி, பணிவு நிறைந்தவராய் இருக்கவேண்டும் என மனதிற்கொண்டு வாழ்ந்தவர், அப்படிப்பட்ட வாழ்வு வாழவே ஒரு சந்நியாச சபையை நிறுவவேண்டும் என உறுதி கொண்டிருந்தவரும் அசிசி நகர் பிரான்சிஸ்தானே. தான் இறப்பதற்கு மூன்றாண்டுகளுக்கு முன்னர்தான் – 1223ல் - புனித பூமிக்குச் சென்று இயேசு பிறந்து வாழ்ந்து மரித்த இடங்களைப் பார்த்திருந்தார் இவர். எனினும், சிலுவைப்போரின் காரணத்தால் போர் மூழலாம் என்ற பதற்றநிலையில் திருச்சபை அதிகாரிகள் திருப்பயணிகள் தங்கள் தங்கள் நாட்டுக்குச் செல்ல வேண்டும் எனச்சொல்லிவிட்டார்கள். உடனே இவர் தன் நாட்டுக்கு – இத்தாலிக்கு- த்திருப்பி அனுப்பப்பட்டிருந்தார். எனவே, இயேசு வாழ்ந்த இடங்களில் இருக்க முடியாத சூழ்நிலையில், இயேசுவின் வாழ்க்கைக் காட்சிகளையாவது நாம் அமைத்தால், இயேசுவின் நினைவு நமக்கு அடிக்கடி வரும் என்ற எண்ணம் அவரிடம் உதித்தது.

1stxamsbyass
1223ல் கிறிஸ்து பிறப்புவிழா அண்மித்திருக்கும் நாட்களில் இத்தாலியின் மையப்பகுதியில் உள்ள க்ரெச்சோ (Greccio) எனும் சிற்றூரில் இருந்தார். இயேசு பிறந்த காட்சியை பெத்லெஹெமில் இருந்தது போலவே இவ்வூரில் அமைக்கலாமே என்று அவர் மனதில் பட்டது. அக்காலகட்டத்தில், கிறிஸ்து பிறப்பு விழாதிருப்பலியில் குழந்தை இயேசுவின் உருவத்தை மெழுகில் அமைத்து மிக அழகாக உடையுடுத்திக் காட்சிக்கு வைப்பதுதான் வழக்கம். உயிருள்ள மனிதரையும் மிருகங்களையும் வைத்துக் காட்சிப்படுத்தினால் மக்கள் மனத்தில் நன்றாகப்பதியுமே என்று நினைத்தவராய் போப்பாண்டகை ஒனோரியசிடம் அதற்கான ஒப்புதலையும் பெற்றார் புனித பிரான்சிஸ். (இந்தப் போப்பண்டகைதான் இதே 1223ல் தொமினிக்கன் சபை, அசிசியாரின் பிரான்சிஸ்கன் சபை மற்றும் கார்மேல் சபைகள் இயங்க திருச்சபையின் அதிகாரப்பூர்வ உத்தரவு கொடுத்தவர்.)

(க்ரெச்சோ - உலகின் முதல்குடிலின் இன்றைய தோற்றம்)

க்ரெச்சியோ ஊரையொட்டிக் குகை போன்ற ஒரு பாறையைக் கண்டு பெத்லெஹெம் ஊரருகே கிறிஸ்து பிறந்த மாட்டுத்தொழுவம்போன்றே உள்ளது எனக்கண்டார். தனக்கு மிக அறிமுகமான பணக்காரர் ஆனால் உத்தமர், தன் மூன்றாம் சபையிலும் ஓர் அங்கத்தினர், ஜோவான்னி வெலீத்தா என்பவரை அணுகிக் கிறிஸ்து பிறப்பு “உயிர்” காட்சிக்காக ஒரு மாடு, ஒரு கழுதை, ஓரிளம் ஆண், ஓரிளம் பெண்ணை ஒழுங்கு செய்யுமாறு கேட்டார். அருகிலேயே கிடைத்த காய்ந்த புற்களை வைத்து ஒரு தீவனத்தொட்டியை அமைத்தார். இத்தொட்டிக்கு இருபுறமும் “மரியா” “சூசை”யை நிறுத்தினார். அதுபோலவே மாடும் கழுதையும். இடையே, குகையைச் சுற்றி இருந்த புல் வெளியில் மிருகங்கள், இடையர்கள். நடு நாயகமாகத் தீவனத்தொட்டியில் மெழுகில்செய்யப்பட்ட குழந்தை இயேசு. இதைப்பார்த்த மக்கள் சிறுசிறு விளக்குகளையும் எரியும் திரிகளையும் கொண்டுவந்து வைத்ததால் அது உண்மையான பெத்லெஹெம்ஊர் மிருகங்களின் தொழுவத்தில் இயேசு பிறந்திருப்பது போலவே பட்டது. நள்ளிரவு திருப்பலியில் தியக்கோனான பிரான்சிஸ் உருக உருக மறையுரையாற்றினார். அவரிடமிருந்த பக்தி மேலீடு அனைவரிடமும் ஓர் எழுச்சியை ஏற்படுத்தியது. இயேசுவின் பெயரைக்கூட உச்சரிக்கத் தகுதியற்றவராகத்தன்னை உணர்ந்து அவரை பெத்லெஹெம் பாலன் என்றே குறிப்பிட்டார்.

திருப்பலி முடிந்த பின்னர் குடிலில் இருந்த காய்ந்த புற்களை மக்கள் வீடுகளுக்கு எடுத்துசென்று நோயுற்றோருக்குக் கொடுத்து அவர்களும் குணமானார்கள் என்று ‘புனித பிரான்சிஸ் அசிசியார் அமைத்த உலகின் முதல் கிறிஸ்துமஸ் குடில்’ பற்றி ப்ரான்சிஸ்கன் சபையைச் சேர்ந்த புனித பொனவென்ச்சர் (1221-1274) எழுதியிருக்கிறார்.

இப்படித்தான் தொடங்கியது கிறிஸ்துமஸ் குடில் அமைக்கும் வழக்கம். அது சரி, மிருகங்களின் தொழுவத்துக் குடிலில் கிடக்கும் குழந்தை இயேசு நம் நெஞ்சில் குடி கொள்வாரா?