side1

அன்புடன் வாழ்த்துமடல்பூவுலகத்து மாந்தர்களே
புன்னகையோடு வாழுங்கள்
புதுவாழ்வு அளித்திட
புதுநாயகன் வருகின்றான்.
இதய வேள்வியில்
இனிமையை நிரப்பிட - உறவை
மேன்மைப் படுத்திட வாருங்கள்
உண்மையை நேசித்த - இறை
உறவை வரவேற்றிட
உரிமையோடு வாருங்கள்


அன்புடையீர்!

இன்றைய நாள்களில் மேலைநாடுகளில் டிசம்பர் மாதத்தில் நீண்டதோர் விடுமுறைநாள்களை அனுபவித்து வருகிறார்கள். இந்த நீடித்த விடுமுறை நாள்கள் கிறிஸ்மஸ விழாக் கொண்டாட்டங்களின் மையக் கருத்தைக் கொஞ்சங் கொஞ்சமாக திசைதிருப்பி, அவற்றை வியாபார சந்தை நோக்கில் உல்லாசப் பயண நிகழ்வாக மாற்றிவிட்டன. விழாக்காலக் கொண்டாடங்களிலும், வெளிஅலங்காரத்திலும், குடும்பத்தினரோடு பரிசுப் பொருட்களை மாற்றிக் கொள்வதிலும் எல்லாருடைய கவனமும் இருக்கிறதே ஒழிய, எந்த இடத்திலும் கிறிஸ்துவைக் காணமுடிவதில்லை


புனித லூக்கா தனது நற்செய்தி நூலில் (2:8-20) விவரிக்கின்ற முதல் கிறிஸ்மஸ் நிகழ்வில், நாம் இன்று கற்பனைப் பண்ணுவது போல் கொட்டும் பனியோ, அலங்காரவிளக்குகளோ இல்லை. மாறாக வயல்வெளியில் தங்களின் ஆடுமாடுகளைக் காவல் காத்துக் கொண்டிருந்த ஏழை எளிய இடையர்களுக்கு, அதுவும் சமுகத்தில் எந்த உயரிய நிலையிலும் இல்லாத கடைநிலை மக்களுக்கு தான் உலகின் அதிமுக்கியமான கிறிஸ்து பிறப்பின் நற்செய்தி கொடுக்கப்பட்டது.


இதுவரை தனது எல்லா அறிவிப்புகளையும் இறைவாக்கினர்கள் மூலமே அளித்து வந்த கடவுள், இந்த முக்கிய நிகழ்வை மட்டும் தன் வானதூதர்களை நேரடியாக அனுப்பி அறிவிக்கிறார்..

“வானதூதர் அவர்களிடம், “அஞ்சாதீர்கள், இதோ, எல்லா மக்களுக்கும் பெரும் மகிழ்ச்சியூட்டும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன். இன்று ஆண்டவராகிய மெசியா என்னும் மீட்பர் உங்களுக்காகத் தாவீதின் ஊரில் பிறந்திருக்கிறார்.” (லூக்கா2:10-11).

பல நூற்றாண்டுகளாகக் காத்திருந்த மெசியா என்னும் மீட்பர் இன்று பிறந்துவிட்டார். இக்குழந்தை அனைவருக்கும் மீட்பை அளிக்க உள்ளது. “உலகில் அவருக்கு உகந்தோருக்கு அமைதி உண்டாகுக” என்ற வாழ்த்துச் செய்தி வானதூதர்களால் வழங்கப்பட்டது. இயேசுவை தம் சொந்த மீட்பராக ஏற்றுக் கொண்ட நம் அனைவருக்கும் இந்த அமைதி உரித்தானது. இப்பிறப்பின் மூலம் ஆதிபெற்றோர்களால் விலகி இருந்த நாம் மீண்டும் அவரில் இணைக்கப்பெற்றோம்.


கிறிஸ்மஸ் செய்தி என்பது அனைவருக்கும் பகிரப்படவேண்டிய ஒன்றாகும். வானதூதர்கள் தங்களுக்கு அளித்த செய்திகளை இடையர்கள் எவ்வாறு பிறரோடு பகிர்ந்துகொண்டார்களோ, அதைப்போலவே நாமும் அன்பைப் பகிர்வதின் மூலமும், உறவுகளை மேம்படுத்துவதின் மூலமும் இறையரசை உலகிற்கு எடுத்துரைக்க கடமைப்பட்டுள்ளோம். இவ்வாறு இயேசுவின் அன்பைப் பிறரோடு பகிர்வதன் மூலம் மீண்டும் இயேசுவை நாம் கிறிஸ்து பிறப்புப் பெருவிழாவில் உணரமுடியும்அன்பின்மடல் தனது 15ஆம் ஆண்டு கிறிஸ்து பிறப்பு பெருவிழா சிறப்பு மடலை பார்வையாளரான உங்களுக்கு காணிக்கையாக்குகிறது.

படித்து மகிழுங்கள். அத்துடன் உங்கள் எண்ணங்களை விருந்தினர் பக்கத்தில் பதிவு செய்யுங்கள்.

இம்மடல் சிறப்பாக அமைய தங்களின் படைப்புகளைத் தந்து ஊக்கமளித்த அனைத்து எழுத்தாளப் பெருமக்களுக்கு எம் இதயம் கனிந்த நன்றிகள்!

இணைந்துச் செயல்படுவோம் இறையரசை அறிவிக்க..

அனைவருக்கும் கிறிஸ்து பிறப்பு பெருவிழா நல்வாழ்த்துகள்! நத்தார் வாழ்த்துகள்!!
என்றும் அன்புடன்
நவராஜன்side2