மறையுரைச் சிந்தனை: கிறிஸ்து பிறப்புப் பெருவிழா



அருள்தந்தை மரிய அந்தோணிராஜ் - வேலாயுதபுரம் - பாளை மறைமாவட்டம்

மண்ணுலகில் இன்று தேவன் இறங்கி வருகிறார்.

முன்பொரு காலத்தில் பெர்சியா நாட்டை ஆண்ட ஷா என்ற மன்னர் மக்கள்மீது அதிகமான அக்கறையும், அன்பும் கொண்டவராக இருந்தார். எந்தளவுக்கு என்றால் இரவு நேரங்களில் மாறுவேடத்தில் நகர்வலம் சென்று, மக்களோடு பேசுவார். அப்போது அவர்கள் சொல்லக்கூடிய குறை, நிறைகளை எல்லாம் கருத்தில் எடுத்துகொண்டு, மக்களுக்கு எது தேவையோ அதைச் செய்துவந்தார். இதனால் மக்கள் அனைவரும் அவரது ஆட்சியில் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்கள்.


ஒருநாள் அரசர் ஊரில் இருக்கக்கூடிய ‘பொதுக்குளியல் அறைகள்’ பகுதிக்குச் சென்றார். அங்கே மக்கள் குளிப்பதற்காகத் தண்ணீர் வெதுவெதுப்பான நிலையில் வைக்கப்பட்டிருக்கும். வேலையை முடித்துவிட்டு வீட்டுக்குத் திரும்பக்கூடியவர்கள் அதில் மகிழ்ச்சியாகக் குளித்துவிட்டு வீட்டுக்குத் திரும்புவார்கள். இப்படி மக்கள் எல்லோரும் மகிழ்ச்சியாகக் குளிக்க, தண்ணீரைச் சூடாக்குகின்ற பணியை யார் செய்கிறார்? என்று பார்ப்பதற்காக மன்னர் ‘பொதுக்குளியல் அறைகள்’ இருக்கக்கூடிய பகுதியின் உட்புறத்திற்குச் சென்றார்.


அங்கே ஒரு தாழ்வான அறை இருந்தது. அதில் ஒரு பெரியவர் நாள் முழுவதும் வெதுவெதுப்பாக இருக்கக்கூடிய அளவில் தண்ணீரைச் சூடாக்கிக் கொண்டிருந்தார். சாதாரண மனிதர் உருவில் இருந்த அரசர், அம்மனிதரிடம் பேச்சுக் கொடுத்தார். அதற்கு அம்மனிதர், “நாள் முழுவதும் இந்த இருட்டு அறைக்குள் சூட்டையும், வெக்கையையும் தாங்கிக்கொண்டு வேலைப் பார்த்தாலும் மக்கள் மகிழ்ச்சியாகக் குளிக்கிறார்ளே என்று நினைக்கும்போது எனக்கு இன்னும் மகிழ்ச்சியாக இருக்கிறது” என்றார். அதோடு நின்றுவிடாமல், அவர் தன்னிடம் இருந்த கொஞ்சம் உணவையும் சாதாரண உடையில் இருந்த அரசரோடு பகிர்ந்து உண்டார்.


இவற்றையெல்லாம் பார்த்து அரசருக்குச் சந்தோசம் தாங்கமுடியவில்லை. சிறிதுநேரம் அவர் அவரிடம் பேசிவிட்டு, இன்னொரு நாள் வருவதாக வாக்குறுதிக் கொடுத்துவிட்டு, அவரிடமிருந்து விடைபெற்றுச் சென்றார்.


ஒருசில நாட்களுக்குப் பிறகு அரசர் மீண்டுமாக அந்த மனிதர் இருக்கும் இடத்திற்குச் சென்று, அவரிடம் பேசினார். அன்றைக்கு அரசர் அவரிடம், “உனக்கு என்ன வேண்டுமானாலும் கேள், நான் தருகிறேன்” என்று சொல்லிவிட்டு, தான் யார் என்பதை அவருக்கு வெளிப்படுத்தினார்.


அரசர் தான் தன்னைப் பார்க்க இங்கே மாறுவேடத்தில் வந்திருக்கிறார் என்பதை அறிந்துகொண்டு அந்த மனிதர், “அரசே! எனக்கு எதுவும் வேண்டாம். யாருமே வராத இந்தப் பகுதிக்கு வந்து, என்னைப் பார்த்துப் பேசினீர்களே, அந்த அன்பு ஒன்றே போதும்” என்றார். தான் அரசனாக இருந்தாலும், தன்னுடைய நிலையிலிருந்து இறங்கி வந்து, சாதாரண மனிதரைப் பார்க்க வந்த அந்த ஷா என்ற அரசரைப் போன்றுதான் இயேசுவும் விண்ணிலிருந்து இறங்கிவந்து, மண்ணில் மனிதனாக வாழ வருகின்றார். இன்று நாம் கிறிஸ்து பிறப்புப் பெருவிழாவைக் மகிழ்வோடு கொண்டாடுகின்றோம். கடவுளோடு, கடவுளாக இருந்த வார்த்தையாகிய ஆண்டவர் இயேசு கிறிஸ்து ஒரு சாதாரணக் குழந்தையாகத் தோன்றுகின்றார். இப்படி ஒரு குழந்தையாகப் பிறந்திருக்கும் இயேசு கிறிஸ்து இன்றைய நாளில் நமக்கு என்ன செய்தியைத் தருகின்றார் என்று சிந்தித்துப் பார்ப்போம்.


ஊரில் பெரியவர்கள் சொல்வார்கள் ‘உஷ்ணம் (வெப்பம்) அதிகரித்தால் பெருமழை வரும்’ என்று. அதே போன்றுதான் மக்களின் வாழ்வில் துன்பமும், வேதனையும் அதிகரிக்கின்றபோது இறைவன் தாமாகவே இறங்கிவந்து, அவர்களின் துன்பத்தை இன்பமாக மாற்றுவார். இது உண்மை.


இஸ்ரயேல் மக்கள் தங்களை ஆண்ட உரோமையரின் ஆட்சிக்காலத்தில் சந்தித்த துன்பங்கள், வேதனைகள் ஏராளம். அவற்றையெல்லாம் வார்த்தையால் விளக்கிச் சொல்லமுடியாது. அந்தளவுக்கு அவர்கள் கொடுமைகளைச் சந்தித்தார்கள். இதைக் கண்ணுற்றதாலோ என்னவோ, கடவுள் தன்னுடைய ஒரே மகனை உலகிற்கு அனுப்பி, அவர்களுக்கு வாழ்வு கொடுக்க முன்வருகிறார். எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய இரண்டாம் வாசகத்தில் படிக்கின்றோம், “பலமுறை, பலவகைகளில் முற்காலத்தில் இறைவாக்கினர் வழியாக நம் முன்னோர்களிடம் பேசிய கடவுள், இவ்விறுதி நாட்களில் தன் மகன் வழியாகப் பேசியுள்ளார்” என்று. ஆக, கடவுளே தன் மக்கள்மீது இரக்கம் கொண்டு, தன்னுடைய ஒரே மகனையும் இந்த உலகிற்கு அனுப்பி வாழ்வளிக்கின்றார் என்று சொன்னால் அது மிகையாது.


அடுத்ததாக, கடவுள் தன்னுடைய மகன் வழியாக இந்த உலகிற்கு அளிக்கும் கொடை எத்தகையதாக இருக்கும் என்பதை இன்றைய முதல் வாசகத்தில் நாம் படிக்கின்றோம். விண்ணத்திலிருந்து இறங்கி வரும் மெசியாவாகிய இயேசு நற்செய்தியையும், நல்வாழ்வையும், ஆறுதலையும், மீட்பையும் தருவார் என்று எசாயா இறைவாக்கினர் அங்கே சுட்டிக்காட்டுகின்றார். ஆகவே, இயேசுவின் பிறப்பினால் நமக்கு எல்லாவிதமான ஆசீரும், அருளும், மீட்பும் கிடைக்கும் என்பதை யாரும் மறுக்கமுடியாது. சில ஆண்டுகளுக்கு முன்பாக நியூயார்க் நகரில் உள்ள ஒரு பிரபல மருத்துவமனையில் ஒரு கர்ப்பிணிக்கு மகப்பேறு அறுவைச் சிகிச்சை நடைபெற்றுக் கொண்டிருந்தது. அந்தப் பெண்ணின் கணவர் வெளியே நின்றுகொண்டு, தன்னுடைய மனைவிக்கு என்ன ஆகுமோ? என்று பரபரப்பாக இருந்தார்.


நீண்டநேர இடைவெளிக்குப் பின்னர் வெளியே வந்த மருத்துவர் அப்பெண்ணின் கணவரைத் தனியாக அழைத்து, “தயவு செய்து எங்களை மன்னித்துக்கொள்ளுங்கள், நாங்கள் எவ்வளவோ போராடியும் உங்களுக்குப் பிறந்த குழந்தையை, இரண்டு மணிநேரத்திற்கும்மேல் உயிர் பிழைக்கச் வைக்கமுடியவில்லை, மிகவும் பலவீனமாகப் பிறந்த அந்தக்குழந்தை இப்போது இறந்துவிட்டது” என்றார். இதைக் கேட்டு அவர் வீரிட்டு அழுதார்.


அப்புறம் என்ன நினைத்தாரோ தெரியவில்லை. மனதைத் தேற்றிக்கொண்டு அந்த மருத்துவரிடம், “இன்று காலையில் ஒரு செய்தியைக் கேள்விப்பட்டேன். அதாவது பக்கத்தில் இருக்கும் ஒரு மருத்துவமனையில் ஒருவருக்கு இதய அறுவைச் சிகிச்சையும், இன்னொருவருக்குக் கண் சிகிச்சையும் நடைபெறுகிறது. இறந்துபோன என்னுடைய குழந்தையின் இரண்டு கண்களையும், இதயத்தையும் தேவையில் இருக்கும் அவர்கள் இருவருக்கும் பொறுத்தி வாழ்வளிக்கலாமே” என்றார். இதைப் கேட்ட அந்த மருத்துவர் மிகவும் சந்தோசப்பட்டார்.


உடனே ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டது. வேலைகள் துரிதப்படுத்தப்பட்டன. ஒருமணி நேரத்திற்குள்ளாகவே இறந்த அந்தக் குழந்தையின் கண்கள் ஓர் ஏழைக்குப் பொறுத்தப்பட்டது. அதன் இதயமோ கணவனை இழந்துத் தவித்த ஒரு விதவைக்குப் பொறுத்தப்பட்டது. இப்படியாக அந்தக் குழந்தையால் இரண்டுபேர் வாழ்வு பெற்றார்கள். இந்தக் குழந்தையைப் போன்றுதான் இயேசுவின் வருகையால் நாம் வாழ்வுப் பெற்றுக்கொண்டோம்.


யோவான் நற்செய்தி 10:10, “ஆடுகள் வாழ்வைப் பெறும்பொருட்டு, அதுவும் நிறைவாகப் பெறும்பொருட்டு வந்துள்ளேன்” என்று இதைதான் ஆண்டவர் இயேசு கூறுவார். ஆகவே, இயேசுவின் மானிடப் பிறப்பால், நாம் அனைவரும் வாழ்வினைப் பெற்றுக்கொண்டோம், அவரது அருளால் இன்றும் வாழ்கின்றோம் என்று சொன்னால் அது மிகையாகாது. எனவே வாழ்வினை நிறைவாகத் தரவந்த ஆண்டவர் இயேசுவுக்குக் கைமாறாக நாம் என்ன செய்யவேண்டும் என்பதுதான் நமது சிந்தனைக்கு உரியதாக இருக்கின்றது.


யோவான் எழுதிய இன்றைய நற்செய்தி வாசகத்தில் படிக்கின்றோம், “அவரிடம் (இயேசுவிடம்) நம்பிக்கை கொண்டு, அவரை ஏற்றுக்கொண்ட ஒவ்வொருவருக்கும் அவர் கடவுளின் பிள்ளைகள் ஆகும் உரிமையை அளித்தார்” என்று. அதாவது கடவுளின் திருமகனாகிய ஆண்டவர் இயேசுவின்மீது நம்பிக்கை வைத்து வாழவேண்டும் அல்லது ஏற்றுக்கொண்டு வாழவேண்டும். அப்படி ஏற்றுக்கொண்டு, நம்பிக்கை வைத்து வாழும்போது இறைவன் நம்மை அவருடைய பிள்ளைகளாக ஏற்றுக்கொள்வார் என்பதே இங்கே குறித்துக்காட்டப்படும் செய்தியாக இருக்கின்றது. எனவே, நம்மைத் தேடிவரும் இயேசுவை நாம் ஏற்றுக்கொள்வதுதான் மீட்பிற்கான, வாழ்விற்கான வழியாக இருக்கின்றது.


ஆனால் நடைமுறையில் அவரை ஏற்றுக்கொள்ளாததும், அவர்மீது நம்பிக்கை வைக்காமல் வாழ்வதும்தான் வேதனையான உணமையாக இருகின்றது. “அவர் தமக்குரியவர்களிடம் வந்தார். அவருக்கு உரியவர்கள் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை” என்பது எவ்வளவு வேதனை நிறைந்த வார்த்தைகளாக இருக்கின்றது.


ஒரு போர்த்துக்கீசிய நாவலில் வரக்கூடிய நிகழ்வு இது. ஜான் என்ற இளைஞன் கப்பலுக்கு வேலைக்குச் சென்று, பல ஆண்டுகளுக்குப் பிறகு பெரும்செல்வம் திரட்டிக்கொண்டு, தன்னுடைய சொந்த ஊரான லிஸ்பனில் வந்து இறங்கினான். அப்போது அவனுடைய உள்ளத்தில் ஓர் எண்ணம் உதித்தது. இப்படியே உறவினர்களது வீட்டிற்குச் செல்லாமல், கிழிந்த, அழுக்கான உடையில் செல்வோம். அப்போது அவர்கள் எப்படி நடந்துகொள்கிறார்கள் என்று பார்த்துவிட்டு, அதன்பிறகு அவர்களது வீட்டிற்குச் செல்வோம் என்று நினைத்துகொண்டு, ஒரு கிழிந்த அழுக்கான சட்டையும், ட்ரவுசரையும் போட்டுக்கொண்டு தன்னுடைய நெருங்கிய உறவினரான பட்ரோவின் வீட்டிற்குச் சென்றான்.


அங்கே அவரிடம், “கப்பலில் விபத்து ஏற்பட்டு, என்னிடம் இருந்த பணமெல்லாம் போய்விட்டது, இப்போது இந்தநிலைக்கு ஆளாகிவிட்டேன். அதனால் ஒரு நல்ல வேலைக் கிடைக்கும்வரைக்கும் இங்கே தங்கிக் கொள்ளலாமா? என்று கேட்டான். அதற்கு அவருடைய உறவினரோ, “என்னுடைய வீட்டில் போதுமான இடமில்லை, அதனால் தயவுசெய்து வேறொரு இடத்தில் போய்த் தங்கிக்கொள்” என்று சொல்லி விரட்டிவிட்டார்.


அவனும் சரி என்று சொல்லிவிட்டு, தன்னுடைய நண்பர்கள், தெரிந்தவர்கள் என்று எல்லாரிடமும் கேட்டுப்பார்த்தான். ஆனால் எல்லாருமே ஏதாவது ஒரு சாக்குப்போக்குச் சொல்லி, அவனுக்கு இடம்தராமல் விரட்டிவிட்டார்கள். இறுதியாக அவன், இனிமேலும் இவர்களை நம்பிப் பிரயோஜனம் இல்லை’ என்று தான் வைத்திருந்த பெரும் செல்வத்தை வைத்து ஒரு மிகப்பெரிய மாடமாளிகை கட்டினான், அவனுக்கென்று பணியாளர்களை வைத்துக்கொண்டான். இதனால் சில நாட்களிலேயே அவனுடைய செல்வச் செழிப்பைப் பற்றிய பேச்சு லிஸ்பன் நகர் முழுவதும் பரவியது.


இதைக் கேள்விப்பட்ட ஜானின் உறவினர்கள், நண்பர்கள் “இவையெல்லாம் முன்பே தெரிந்திருந்தால் அவனுக்கு வீட்டில் இடம் கொடுத்திருக்கலாமே“ என்று வருத்தப்பட்டார்கள்.


மக்கள் நம்மிடம் பணம் இருந்தால் ஒருவிதமாக நடந்துகொள்வதும், பணம் இல்லையென்றால் வேறொரு விதமாக நடந்துகொள்வதும் வேதனையாக இருக்கின்றது. இயேசு சாதாரண ஒரு மனிதராகப் பிறந்ததனால் தான் என்னவோ, அவரை யாருமே ஏற்றுக்கொள்ளவில்லை. இயேசு செல்வந்தராக இருந்தும், நமக்காக ஏழையானார். எல்லாம் நம்மீது வைத்த அன்புதான்.


ஆகவே, இந்தக் கிறிஸ்து பிறப்புப் பெருவிழாவில் நம்மைத் தேடி வரும் இறைவனின் மேலான அன்பைப் புரிந்துகொள்வோம், அவரை முழுமையாக ஏற்றுக்கொள்வோம். இறைவனிடமிருந்து பெற்ற அன்பை ஒருவர் மற்றவருக்குக் காட்டுவோம். எல்லோரையும் இறைவனின் மக்களாக ஏற்றுகொள்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.