ஆண்டவரின் திருவிருந்து
திரு. சார்லஸ் சென்னை-24
ஆண்டவரின் திருவிருந்து என்பது நற்கருணைக் கொண்டாட்டத்தைத் தான் குறிக்கிறது என்பது தெளிவு. அப்படியெனில் நற்கருணைக் கொண்டாட்டம் என்பது வெறும் உணவுப் பறிமாற்றமல்ல.
இது பிறரோடு சேர்ந்து உட்கொள்வது, உறவுகளை உருவாக்குவது, நாம் பெற்ற இந்த வாழ்வைப் பிறரோடு பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பு இது.
அவரின் அப்பத்திலும், இரசத்திலும் காண வேண்டிய உடனிருப்பில் திளைத்து, தந்தையாம் கடவுளுக்கு நன்றி கூறும் வழிபாட்டுச் சூழலில் பிரிவினை, சுயநலம், ஏற்றத்தாழ்வுப் போன்றவைகளைக் களைய வேண்டும். இந்த இயலாமைகள் ஒழிக்கப்பட வேண்டும்.
இறைமக்கள், மொழி, இனம், நாடு இவைகளைக் கடந்து உண்மையான அரசக் குருத்துவத் திருக்கூட்டமாகவும், அவாரின் உரிமைக் குடிமக்கள் என்னும் உணர்வைப் பெறவேண்டும்.
நம்மிடையே நிலவும் வேற்றுமைகளைப் பெரிதுபடுத்தி, ஆண்டவரின் திருவிருந்தைக் கொண்டாடி மகிழ்வது வெறும் சடங்குத் தான். இது உண்மையான வழிபாடு அல்ல. கடமைக்காகவும், வெற்றுச் சடங்காகவும், நாம் வழிபாடு நிறைவேற்றும் போது, கடவுளின் கோபத்திற்குத் தான் நாம் ஆளாகின்றோம்.
உங்களைக் கழுவி தூய்மைப்படுத்துங்கள் என்று கடவுள் இஸ்ராயேல் மக்களுக்குக் கூறியதையும், என் தந்தையின் இல்லத்தைச் சந்தை ஆக்காதீர்கள் என்று ஆண்டவர் இயேசு கூறிய எச்சாரிக்கையையும் இத்தருணத்தில் நாம் நினைவுகூறுவோம். (யோவான்.2:16)
பொருளுள்ள கிறிஸ்தவ வாழ்வில் தான் ஆண்டவரின் திருவிருந்து அறிக்கையிடப்படுகிறது.
இருந்தோம்பி இல் வாழ்வதெல்லாம் விருந்தோம்பி
வேளாண்மை செய்தற் பொருட்டு (குறள்: 81)
பொருளைப் பேணி இவ்வுலகில் இல்வாழ்க்கை நடத்துவதெல்லாம் விருந்தினைப் போற்றி உதவுதலே ஆகும். இவ்வாறே நமது நற்கருணை வழிபாடு நம்மை மற்றவரோடு உறவு கொள்ளவும், கடவுளோடும், மனிதரோடும் இணைக்க வேண்டும்.
உறவு வாழ்வுக்கான அழைப்பு:
•இயேசு தனது பணி வாழ்வில் உறவையும், மனித நேயத்தையும், தோழமையையும் உருவாக்கி வளர்த்தார். சிறப்பாக ஒடுக்கப்பட்டவர்களோடும், பாவிகளோடும் தம் உறவை வளர்த்துக் கொண்டார். இவற்றையெல்லாம் அவர் தம் உணவுச் சூழலில் வெளிப்படுத்தினார்.
(லேவி வீட்டில்) (லூக்.15:1-3) (மாற்: 1:29-31)
லூக்.9:10-13 பரிசேயரான சீமோன் வீட்டில்
லூக்.19:1-10- சக்கேயு வீட்டில் இவ்வாறு சமுதாயத்தில் பல்வேறு நபர்களோடு உறவு கொண்டு, அவர் தம் உறவை வளர்த்துக்கொண்டார்.
•இந்தப் பின்னனியில் தான் தன் சீடர்களோடு உறவு, உணவு உட்கொண்ட இயேசு புசிக்கவோ அல்லது உடலை வளர்த்துக்கொள்ளவோ அல்லாமல் கடவுளோடும், மனிதரோடும் தமக்குள்ள உறவை வளர்த்துக்கொள்ளத் தன் எண்ணத்தை வெளிப்படுத்தும் விதத்தில் இரவு உணவு உட்கொண்டார்.
•மேலும் அன்றையசூழலில் கொரிந்து நகரக் கிறிஸ்தவர்களுக்கு இயேசு கொண்டாடியத் திருவிருந்தின் மேலான்மையைப் பவுல் வெளிப்படுத்த விரும்பினார்.
•வெற்றுச்சடங்கு என்ற எண்ணத்துடன் திருவழிபாட்டில் பங்கெடுக்கும் நமக்கு இஃது ஒரு சிறந்த பாடம்.
•நற்கருணைக்கொண்டாட்டம் என்பது நமது அன்புறவையும், நட்புறவையும் வெளிப்படுத்தும் அடையாளமாகவும் மட்டுமல்ல, மாறாக அவற்றை வளர்த்தெடுக்கும் அடையாளமாகத் திகழ வேண்டும்.
•அன்றையக் கொரிந்திய மக்களின் சமூக, சமயப் பலவீனங்களைப் பெரிதுபடுத்தியதைப் போல் நமது வழிபாடும், நம்மிடையே உள்ளச் சமூக, சமயப் பாவங்களையும், இயலாமைகளையும் வெளிப்படுத்தும் சூழலாகச் சில வேளைகளில் அமைந்துவிடுகின்றது.
•நமது சாதி, வேற்றுமைகள், பணக்காரர், ஏழை என்ற பாகுபாடு அதிகாரம், செல்வம் படைத்தோர், ஏழை எளியவர் என்ற ஏற்றத்தாழ்வுகள் நம் வழிபாடுகளில் தேர் திருவிழாக்கள் கொண்டாட்டங்களில் மிகவே அதிகமாக வெளிப்படுத்தப்படுகின்றது.
•அப்போதெல்லாம் நாம் கொண்டாடுவது ஆண்டவாரின் திருவிருந்து அல்ல. மாறாகப் பேயின் திருவிருந்தையே கொண்டாடுகின்றோம். (1கொரி.10:21)
•தமிழில் நாம் நன்மை வாங்குதல், ஆங்கிலத்தில் கம்யூனியன் (communion)என்றும் அழைக்கின்றோம். இவை இரண்டு சொற்களுமே, நாம் கடவுளோடும், பிற மனிதரோடும் நல் உறவை ஏற்படுத்தவே என்பதனைக் குறிக்கின்றது. அதாவது நற்கருணை உட்கொள்ளுதல் மூலம் நாம் கடவுளோடும், மனிதரோடும் நல் உறவை ஏற்படுத்த அழைப்புவிடுக்கின்றார் என்பதே இதன் மையப்பொருள்.
நற்கருணைக் கொண்டாட்டத்தின் மையம்:
தகுதியற்ற நிலையில் நாம் இத்திருவிருந்தில் பங்கெடுக்கும் போது, குளிக்கப்போய்ச் சேற்றைப் பூசிக்கொண்ட கதையாய், நம்மீது தண்டனைத் தீர்ப்பையே நாம் வருவித்துக்கொள்கின்றோம் என்று தூய பவுல் நம்மைத் தெளிவாக எச்சாரிக்கின்றார். (1கொரி.11:29) “ஆண்டவாரின் திருவிருந்தில் உள்ள அப்பமும், ரசமும் ஆண்டவரின் தெய்வீகப் பிரசன்னத்தைக் கொண்டிருக்கிறது என்ற அடிப்படை உண்மையில் இத்தகைய எச்சாரிக்கை நமக்கு வெளிப்படுத்துகின்றது.
எனவே தான் ‘கொல்லும் நஞ்சைக் குடித்தாலும் அது அவர்களுக்குத் தீங்கிழைக்காது என்பது கி.பி.2-ம் நூற்றாண்டில் எழுதப்பட்ட திருத்தூதர் மரபு என்ற நூல் கூறுகின்றது. இந்த நம்பிக்கையின் வெளிப்பாடாகத் தான் 1) நற்கருணை வழிபாடு, 2) நற்கருணைப்பவனி, 3) நற்கருணை அரியணை வெளியேற்றம், 4) நற்கருணைச் சந்திப்பு, 5) நற்கருணை ஆசீர் போன்றவை நம் திருச்சபையின் வழக்கத்தில் உள்ளது. இவையாவும் நற்கருணைப் பக்தியை வளர்த்து, நம்மிடையே இறைப் பிரசன்ன உறவை வெளிப்படுத்துகின்றது.
எனவே சிலைகளுக்குப் படைக்கப்பட்டதை உண்ணும்போது நாம் பேய்களோடு உறவுக் கொள்கின்றோம். மாறாக ஆண்டவாரின் கிண்ணத்தில் பருகும் போது நாம் ஆண்டவருடன் உறவுக் கொள்கின்றோம்.
இயேசுவை தம் வீட்டில் வரவேற்கத் தகுதியற்றத் தம் நிலையை உணர்ந்து அதைச் சரிசெய்துக்கொள்ள முன்வந்த சக்கேயுவைப் போல் (லூக்.19:1-10). இயேசு தம் வீட்டில் வருவதற்குத் தாம் தகுதியற்றவார் என்று தாழ்ச்சியோடு தம்நிலை உணர்ந்த நூற்றுவத்தலைவர் போல் (மத்.8:8) நற்கருணைத் திருவிருந்தில் பங்கேற்கும் யாவரும் தமது தகுதியற்ற நிலையை உணர வேண்டும். கிறிஸ்துவை நம்மில் வரவேற்கும் மனநிலையை உருவாக்கிக் கொள்ள வேண்டும். இத்தகைய உண்மையான மனநிலையோடு திருவிருந்திலும், திருவழிபாட்டு நிகழ்ச்சிகளிலும் நாம் முழுமனதோடு பங்கேற்போம்.