எபிரேயருக்கு எழுதிய திருமுகம் - 13

அதிகாரங்கள்



1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13

அதிகாரம் 13

1 சகோதர அன்பில் நிலைத்திருங்கள்.

2 அன்னியரை வரவேற்று விருந்தோம்ப மறவாதீர்கள். இவ்வாறு விருந்தோம்பியதால் சிலர் தாங்கள் அறியாமலே வான தூதர்களை மகிழ்ச்சிப்படுத்தியதுண்டு.

3 சிறைப்பட்டவர்களோடு நீங்களும் சிறைப்பட்டருப்பதாக எண்ணி அவர்களை நினைத்துக்கொள்ளுங்கள். துன்புறக்கூடிய உடல் உங்களுக்கும் உள்ளதால், துன்புறுத்தப்படுபவர்களை மறவாதீர்கள்.

4 திருமணத்தை அனைவரும் உயர்வாக மதியுங்கள். மணவறைப் படுக்கை மாசுறாமல் இருக்கட்டும். காமுகரும் விபசாரத்தில் ஈடுபடுவோரும் கடவுளின் தீர்ப்புக்கு ஆளாவர்.

5 பொருளாசையை விலக்கி வாழுங்கள். உள்ளதே போதும் என்றிருங்கள். ஏனெனில்,”நான் ஒருபோதும் உன்னைக் கைவிடமாட்டேன்! உன்னை விட்டு விலகமாட்டேன்” என்று கடவுளே கூறியிருக்கிறார்.

6 இதனால், நாம் துணிவோடு, “ஆண்டவரே எனக்குத் துணை, நான் அஞ்சமாட்டேன்: மனிதர் எனக்கு எதிராக என்ன செய்யமுடியும்?” என்று கூறலாம்.

7 உங்களுக்குக் கடவுளின் வார்த்தையை எடுத்துச்சொன்ன உங்கள் தலைவர்களை நினைவுகூருங்கள். அவர்களது வாழ்வின் நிறைவை எண்ணிப் பார்த்து, நீங்களும் அவர்களைப்போல நம்பிக்கையுடையவர்களாய் இருங்கள்.

8 இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றுமே மாறாதவர்.

9 பல்வேறுவகை நூதனமான போதனைகளால் கவரப்படாதீர்கள். உணவு பற்றிய விதிகளைக் கடைப்பிடித்தல் அல்ல, அருளினால் உள்ளத்தை உறுதிப்படுத்தலே சிறந்தது. உணவு விதிகளைக் கடைப்பிடித்தவர்கள் எப்பயனும் அடைந்ததில்லை.

10 நமக்கு ஒரு பலிபீடம் உண்டு. அதில் படைக்கப்பட்டவற்றை உண்பதற்குக் கூடாரத்தில் திருப்பணி செய்கிறவர்களுக்கு உரிமையில்லை.

11 விலங்ககளின் இரத்தத்தைப் பாவம் போக்குவதற்கென தலைமைக் குரு தூயகத்திற்குள் எடுத்துச் செல்கிறார். ஆனால், அந்த விலங்குகளின் உடல்கள் பாளையத்திற்கு வெளியே சுட்டெரிக்கப்படுகின்றன.

12 இதனால்தான், இயேசுவும், தம் சொந்த இரத்தத்தால் மக்களைத் தூயவராக்க நகரவாயிலுக்கு வெளியே துன்புற்றார்.

13 ஆகவே, நாமும் அவருக்கு ஏற்பட்ட இகழ்ச்சியில் பங்கு கொண்டு, பாளையத்தை விட்டு வெளியேறி அவரிடம் செல்வோம்.

14 ஏனெனில் நிலையான நகர் நமக்கு இங்கே இல்லை: வரப்போகும் நகரையே நாம் நாடிச் செல்கிறோம்.

15 ஆகவே, அவர் வழியாக எப்போதும் நாம் கடவுளுக்குப் புகழ்ச்சிப்பலியைச் செலுத்துவோமாக, அவருடைய பெயரை அறிக்கையிடுவதன் வழியாக நம் உதடுகள் செலுத்தும் காணிக்கையே இப்புகழ்ச்சிப் பலியாகும்.

16 நன்மை செய்யவும் பகிர்ந்து வாழவும் மறவாதீர்கள். இவ்வகைப் பலிகளே கடவுளுக்கு உகந்தவை.

17 உங்கள் தலைவர்களுக்குக் கீழ்ப்படியுங்கள்: அவர்களுக்குப் பணிந்திருங்கள். அவர்கள் உங்களைப்பற்றிக் கணக்கு கொடுக்கவேண்டியிருப்பதால் உங்கள் நலனில் விழிப்பாயிருக்கிறார்கள். இப்பணி அவர்களுக்கு மகிழ்ச்சியுள்ளதாய் இருக்கும்படி நடந்து கொள்ளுங்கள். அவர்களுக்கு மனத்துயர் தராதீர்கள். அவர்களுடைய துயரம் உங்களுக்கு நலம் பயக்காது.

18 எங்களுக்காக இறைவனிடம் வேண்டுங்கள். நாங்கள் நல்ல மனச்சான்று கொண்டுள்ளோம் என உறுதியாக நம்புகிறோம். அனைத்திலும் நன்னடத்தை உடையவர்களாய் இருக்கவே விரும்புகிறோம்.

19 உங்களிடம் நான் மீண்டும் விரைவில் வந்து சேரும்படி நீங்கள் இறைவனை வேண்ட உங்களை வருந்திக் கேட்டுக்கொள்கிறேன்.

20 என்றுமுள்ள உடன்படிக்கையின் இரத்தத்தால், ஆடுகளின் பெரும் ஆயரான நம் ஆண்டவர் இயேசுவை இறந்தோரிடமிருந்து எழுப்பியவர் அமைதியை அருளும் கடவுளே.

21 அவர் தம் திருவுளத்தை நீங்கள் நிறைவேற்றும்படி, எல்லா நன்மையும் செய்வதற்கு உங்களை ஆயத்தப்படுத்தி இயேசு கிறிஸ்து வழியாகத் தமக்கு உகந்ததை நம்மில் செய்தருள்வாராக! இயேசு கிறிஸ்துவுக்கே என்றென்றும் மாட்சி உரித்தாகுக! ஆமென்.

22 சகோதர சகோதரிகளே, நான் உங்களுக்குக் கூறும் இந்த அறிவுரையைப் பொறுமையோடு ஏற்றுக்கொள்ளும்படி உங்களைக் கேட்டுக் கொள்கிறேன். சுருக்கமாகவே உங்களுக்கு எழுதியுள்ளேன்.

23 நம் சகோதரர் திமொத்தேயு விடுதலை பெற்று விட்டார். அவர் விரைவில் வந்து சேர்ந்துவிட்டால் அவரோடு நான் உங்களை வந்து பார்ப்பேன் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

24 உங்கள் தலைவர்கள் அனைவருக்கும் இறைமக்கள் யாவருக்கும் வாழ்த்துக் கூறுங்கள். இத்தாலியா நாட்டிலிருந்து இங்கே வந்திருப்போர் உங்களுக்கு வாழ்த்துக் கூறுகின்றனர்.

25 இறையருள் உங்கள் அனைவரோடும் இருப்பதாக!

 மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு  திருவிவிலியம்

A Tamil Catholic website based on the scripture hebrews 4:20 to share your experience in Jesus and Mary with everyone.
anbinmadal.org | 2002-2019 | Email ID: anbinmadal at gmail.com