எபிரேயருக்கு எழுதிய திருமுகம் - 6

அதிகாரங்கள்



1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13

அதிகாரம் 6

1 ஆதலின், கிறிஸ்துவைப் பற்றிய படிப்பினையின் தொடக்க நிலையிலேயே நின்றுவிடாமல், நாம் முதிர்ச்சி நிலையை அடைய வேண்டும்.

2 சாவுக்கு அழைத்துச் செல்லும் செயல்களிலிருந்து மனம்மாற்றம், கடவுள் மீது நம்பிக்கை, முழுக்குகள், கையமர்த்தல் பற்றிய படிப்பினை, இறந்தோரின் உயிர்ப்பு, என்றும் நிலைக்கும் தீர்ப்பு ஆகிய தொடக்க நிலைப் படிப்பினைகளைக் கற்பித்து மீண்டும் அடித்தளம் இடத் தேவையில்லை.

3 கடவுள் திருவுளம் கொள்வாராயின் இம்முதிர்ச்சிநிலைப் படிப்பினையை இனித் தொடர்வோம்.

4 ஏனெனில் ஒரு முறை ஒளியைப் பெற்று, விண்ணகக் கொடையைச் சுவைத்தவர்கள், தூய ஆவியைப் பெற்றவர்கள் ஆவர்.

5 கடவுளின் நல்ல வார்த்தையையும் வரவிருக்கும் உலகின் வல்லமையையும் சுவைத்த இவர்கள் நெறி பிறழ்ந்துவிடின், இவர்களை மனம் மாற்றி, மீண்டும் புத்துணர்வு பெறச் செய்வது அரிது.

6 ஏனெனில், இவர்கள் இறைமகனைத் தாங்களே சிலுவையில் அறைந்து, வெளிப்படையாக இழிவுபடுத்துகிறவர்கள் ஆவர்.

7 நிலம், அதன்மீது அடிக்கடி பெய்யும் மழைநீரை உறிஞ்சி, வேளாண்மை செய்வோருக்குப் பயன்தரும் வகையில் பயிரை வினைவிக்குமாயின் அது கடவுளின் ஆசி பெற்றதாகும்.

8 மாறாக, முட்செடிகளையும் முட்புதர்களையும் முளைப்பிக்குமாயின், அது பயனற்றுச் சாபத்திற்குள்ளாகும். முடிவில் அது தீக்கு இரையாக்கப்படும்

9 அன்பார்ந்தவர்களே, இவ்வாறு நாங்கள் பேசினாலும், உங்களைப் பொறுத்தவரையில், நீங்கள் மேலான வழியில் நடந்து, மீட்புக்குரியவர்களாய் இருக்கிறீர்கள் என நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.

10 ஏனெனில், கடவுள் நீதியற்றவர் அல்ல. இறைமக்களுக்கு நீங்கள் முன்பு தொண்டாற்றி வந்தீர்கள்: இப்போதும் தொண்டு செய்துவருகின்றீர்கள். எனவே கடவுள் பெயரால் நீங்கள் காட்டிய அன்பையும் உழைப்பையும் அவர் மறக்க மாட்டார்.

11 நீங்கள் எதிர்நோக்குவது முழு உறுதிபெறும்பொருட்டு, உங்களுள் ஒவ்வொருவரும் முன்பு காட்டிய அதே ஆர்வத்தையே இறுதி வரை காட்ட வேண்டும் என மிகவும் விரும்புகிறோம்.

12 இவ்வாறு நீங்கள், தளர்ச்சிக்கு இடம் கொடாமல், நம்பிக்கையாலும் பொறுமையாலும் இறைவாக்குறுதிகளை உரிமைப்பேறாகப் பெற்றவர்களைப் போல் வாழுங்கள்.

13 ஆபிரகாமுக்குக் கடவுள் வாக்குறுதி அளித்தபோது, தம்மைவிடப் பெரியவர் எவர் பெயராலும் ஆணையிட்டுக்கூற இயலாததால் தம் மீதே ஆணையிட்டு,

14 “நான் உன்மீது உண்மையாகவே ஆசிபொழிந்து, உன்னைப் பல்கிப் பெருகச் செய்வேன்” என்றார்.

15 இதன்படி அவரும் பொறுமையோடு காத்திருந்து, பின் கடவுள் வாக்களித்ததைப் பெற்றுக்கொண்டார்.

16 தங்களைவிடப் பெரியவர் ஒருவர் பெயரால்தான் மக்கள் ஆணையிடுவர். எல்லாச் சச்சரவுகளிலும் ஆணையிட்டே முடிவு கட்டுவர். அம்முடிவை ஆணை உறுதிப்படுத்தும்.

17 அவ்வாறே, கடவுளும் தம் வாக்குறுதியை உரிமைப்பேறாகப் பெற்றோருக்குத் தம் திட்டத்தின் மாறாத் தன்மையை மிகவும் தெளிவாகக் காட்ட விரும்பி, ஓர் ஆணையால் தம் வாக்கை உறுதிபடுத்தினார்.

18 மாறாத் தன்மையுடைய இவை இரண்டையும் பொறுத்தவரையில் கடவுள் உரைத்தது பொய்யாயிருக்க முடியாது. அடைக்கலம் தேடும் நாம், நம் கண்முன் எதிர்நோக்கியுள்ளதை விடாமல் பற்றிக்கொள்வதற்குத் தளரா ஊக்கம் கொண்டிருக்கவேண்டும்.

19 இந்த எதிர்நோக்கே நம் உள்ளத்திற்குப் பாதுகாப்பான, உறுதியான, நங்கூரம் போன்றுள்ளது. இது கோவிலின் திரைச்சீலைக்கு அப்பால் சென்று சேர்ந்திருக்கிறது.

20 நமக்கு முன்னோடியாய் அந்தத் திரைச்சீலையைக் கடந்து இயேசு அங்குச் சென்று சேர்ந்திருக்கிறார். மெல்கிசதேக்கு முறைப்படி என்றென்றும் தலைமைக் குரு என்னும் நிலையில் நம் சார்பாக அவர் அங்குச் சென்றிருக்கிறார்.

 மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு  திருவிவிலியம்

A Tamil Catholic website based on the scripture hebrews 4:20 to share your experience in Jesus and Mary with everyone.
anbinmadal.org | 2002-2019 | Email ID: anbinmadal at gmail.com