எபிரேயருக்கு எழுதிய திருமுகம் - 7

அதிகாரங்கள்



1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13

அதிகாரம் 7

1 இந்த மெல்கிசதேக்கு சாலேம் நகரின் அரசர்: உன்னத கடவுளின் குரு. இவர் அரசர்களை முறியடித்துத் திரும்பியபொழுது ஆபிரகாமை எதிர்கொண்டு போய் அவருக்கு ஆசி அளித்தார்.

2 ஆபிரகாம் தம்மிடமிருந்த எல்லாவற்றிலிருந்தும் பத்தில் ஒரு பங்கை இவருக்குக் கொடுத்தார். நீதியின் அரசர் என்பது இவர் பெயரின் முதற்பொருள். மேலும், இவர் சாலேமின் அரசர். அமைதியின் அரசர் என்பது இதற்குப் பொருள்.

3 இவருக்குத் தந்தை இல்லை, தாய் இல்லை: தலைமுறை வரலாறு இல்லை: இவரது வாழ்நாளுக்குத் தொடக்கமும் இல்லை: முடிவும் இல்லை. இவர் கடவுளின் மகனுக்கு ஒப்பானவர்: குருவாக என்றும் நிலைத்திருப்பவர்.

4 நம் குலமுதல்வர் ஆபிரகாமே தாம் போரில் கைப்பற்றிய பொருள்களுள் பத்தில் ஒரு பகுதியை இவருக்கு அளித்தார் என்றால் இவர் எத்துணை பெரியவர் என்பதை எண்ணிப் பாருங்கள்.

5 லேவியின் குலத்தவருள் குருத்துவப் பணி ஏற்பவர்கள் மக்களிடமிருந்து திருச்சட்டபடி பத்தில் ஒரு பங்கு பெற வேண்டும் என்ற ஒரு கட்டளை உண்டு. அம்மக்கள் ஆபிரகாமின் மரபில் தோன்றிய தம் சகோதரர் சகோதரிகளாயிருந்தும் அவர்களிடமிருந்தும் இதைப் பெறுகின்றனர்.

6 ஆனால், அவர்களுடைய தலைமுறையைச் சாராத மெல்கிசதேக்கு ஆபிரகாமிடமிருந்து பத்தில் ஒரு பங்கைப் பெற்றார். வாக்குறுதிகளைப் பெற்றிருந்த ஆபிரகாமுக்கே அவர் ஆசி அளித்தார்.

7 பெரியோர் சிறியோருக்கு ஆசி அளிப்பதே முறை. இதற்கு யாரும் எதிர்ப்புத் தெரிவிக்க முடியாது.

8 மேலும் பத்தில் ஒரு பங்கு பெறும் லேவியர்கள் மாண்டுபோகும் மனிதர்கள்: மெல்கிசதேக்கோ, “வாழ்பவர்” எனச் சான்றுபெற்றவர்.

9 அன்றியும், பத்தில் ஒரு பங்கு பெறும் லேவியும் கூட, ஆபிரகாமின் வழி, பத்தில் ஒரு பங்கைக் கொடுத்தார் என்று சொல்லலாம்.

10 ஏனெனில், மெல்கிசதேக்கு ஆபிரகாமை எதிர்கொண்டபோது, லேவி தம் மூதாதையாகிய ஆபிரகாமுக்குள் இருந்தார் எனலாம்.

11 லேவியரின் குருத்துவமுறை வழியே இஸ்ரயேல் மக்கள் சட்டத்தைப் பெற்றவர்கள். அதன் வழியாக அவர்கள் நிறைவு அடையக்கூடுமாயின், ஆரோனின் முறையிலன்றி மெல்கிசதேக்கின் முறையில் வேறொரு குருவை ஏற்படுத்த வேண்டிய தேவை என்ன?

12 ஏனெனில் குருத்துவமுறை மாற்றம் அடையும்போது, திருச்சட்டமும் கட்டாயமாக மாற்றப்பட வேண்டும் அல்லவா?

13 இவையெல்லாம் யாரைக் குறித்துச் சொல்லப்பட்டனவோ, அவர் வேறொரு குலத்தைச் சேர்ந்தவர். அக்குலத்தைச் சேர்ந்த எவருமே பலிபிடத்தில் பணி செய்யத் தம்மை அர்ப்பணித்தது இல்லை.

14 நம் ஆண்டவர் யூதாவின் குலத்தில் தோன்றினார் என்பது தெளிவாகத் தெரிந்தது தானே? குருக்களைப் பற்றிப் பேசியபோது, மோசே அக்குலத்தைக் குறித்து ஒன்றுமே குறிப்பிடவில்லை.

15 மெல்கிசதேக்குக்கு ஒப்பான வேறொரு குரு தோன்றியிருப்பதால் நாம் மேற்கூறியது இன்னும் அதிகத் தெளிவாகிறது.

16 இவர் திருச்சட்டத்தின் கட்டளைப்படி மனித இயல்புக்கு ஏற்ப அல்ல, அழியாத வாழ்வின் வல்லமையால் குருவாகத் தோன்றினார்.

17 இவரைப் பற்றி, “மெல்கிசதேக்கின் முறைப்படி நீர் என்றென்றும் குருவே” என்னும் சான்று உரைக்கப்பட்டுள்ளது.

18 இவ்வாறு, முந்திய கட்டளை வலிமையும் பயனும் அற்றுப் போனதால், அது நீக்கப்பட்டு விட்டது.

19 ஏனெனில், திருச்சட்டம் எதையும் முழு நிறைவுள்ளதாய் ஆக்கவில்லை. இப்போதோ, அதைவிடச் சிறந்ததொரு எதிர்நோக்கு அளிக்கப்படுகிறது. இந்த எதிர்நோக்கு வழி நாம் கடவுளை அணுகிச் செல்கிறோம்.

20 இவரது குருத்துவப் பணியோ ஆணையிட்டு அளிக்கப்பட்டு ஒன்று: லேவியர் குருக்கள் ஆனபோது ஆணை எதுவும் இடப்படவில்லை.

21 “நீர் என்றென்றும் குருவே என்று ஆண்டவர் ஆணையிட்டுச் சொன்னார். அவர் தம் மனத்தை மாற்றிக் கொள்ளார்” என்று கடவுள் அவரிடம் ஆணையிட்டுக் கூறினார் அன்றோ!

22 இவ்வாறு இயேசு எவ்வளவு சிறந்த உடன்படிக்கைக்குக் காப்புறுதி அளிப்பவராயிருக்கிறார்!

23 மேலும், அந்தக் குருக்கள் சாவுக்கு ஆளானவர்களாய் இருந்ததால் தம் பணியில் நிலைத்திருக்க முடியவில்லை. வேறு பலர் தொடர்ந்து குருக்களாயினர்.

24 இவரோ, என்றென்றும் நிலைத்திருப்பதால், மாறாத குருத்துவப் பணியைப் பெற்றுள்ளார்.

25 ஆதலின், தம் வழியாகக் கடவுளிடம் வருபவரை அவர் முற்றும் மீட்க வல்லவராயிருக்கிறார்: அவர்களுக்காகப் பரிந்து பேசுவதற்கென என்றுமே உயிர் வாழ்கிறார்.

26 இத்தகைய தலைமைக் குருவே நமக்கு ஏற்றவராகிறார். இவர் தூயவர், கபடற்றவர், மாசற்றவர், பாவிகளிடமிருந்து பிரித்தெடுக்கப்பட்டு, வானங்களுக்கு மேலாக உயர்த்தப்பட்டவர்.

27 ஏனைய தலைமைக் குருக்கள் செய்வது போல, முதலில் தம்முடைய பாவங்களுக்காகவும் பின்னர் மக்களுடைய பாவங்களுக்காகவும் இவர் நாள்தோறும் பலி செலுத்தத் தேவையில்லை. ஏனெனில் தம்மைத் தாமே பலியாகச் செலுத்தி இதை ஒரே ஒருமுறைக்குள் செய்து முடித்தார்.

28 திருச்சட்டப்படி வலுவற்ற மனிதர்கள் குருக்களாக ஏற்படுத்தப்படுகிறார்கள். ஆனால் அத்திருச்சட்டத்திற்குப் பின்னர், ஆணையிட்டுக் கூறப்பட்ட வாக்கின் மூலம் என்றென்றும் நிறைவுள்ளவரான மகனே குருவாக ஏற்படுத்தப்படுகிறார்.

 மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு  திருவிவிலியம்

A Tamil Catholic website based on the scripture hebrews 4:20 to share your experience in Jesus and Mary with everyone.
anbinmadal.org | 2002-2019 | Email ID: anbinmadal at gmail.com