எபிரேயருக்கு எழுதிய திருமுகம் - 11

அதிகாரங்கள்



1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13

அதிகாரம் 11

1 நம்பிக்கை என்பது நாம் எதிர்நோக்கி இருப்பவை கிடைக்கும் என்னும் உறுதி: கண்ணுக்குப் புலப்படாதவை பற்றிய ஐயமற்ற நிலை.

2 இந்த நம்பிக்கையால்தான் நம் மூதாதையர் நற்சான்று பெற்றனர்.

3 உலகம் முழுமையும் கடவுளின் சொல்லால் உருவாக்கப்பட்டது என்றும் காணப்படாதவற்றினின்று காணப்படுகிறவை உண்டாயின என்றும் நம்பிக்கையாலேயே புரிந்து கொள்கிறோம்.

4 நம்பிக்கையினால்தான் ஆபேல் காயினுடைய பலியைவிட மேலான பலியைக் கடவுளுக்குச் செலுத்தினார். அதனால் அவர் நேர்மையானவர் எனக் கடவுளிடமிருந்து நற்சான்று பெற்றார். அவருடைய காணிக்கைகளைக் குறித்துக் கடவுளே சான்று பகர்ந்தார். இறந்துபோன போதிலும் இந்த ஆபேல் நம்பிக்கையின் மூலம் இன்னும் பேசிக் கொண்டேயிருக்கிறார்.

5 நம்பிக்யையாலேயே ஏனோக்கு சாவுக்குட்படாதபடி கடவளால் எடுத்துக் கொள்ளப்பட்டார். கடவுள் காணாமற் போய் விட்டார். அவர் மேலே எடுத்துக் கொள்ளப்படும் முன்பே கடவுளுக்கு உகந்தவர் என்று நற்சான்று பெற்றவரானார்.

6 நம்பிக்கையினாலன்றி எவரும் கடவுளுக்கு உகந்தவராயிருக்க இயலாது. ஏனெனில், கடவுளை அணுகிச் செல்வோர் அவர் இருக்கிறார் என்பதையும் அவரைத் தேடிச் செல்வோருக்குத் தக்க கைம்மாறு அளிக்கிறார் என்பதையும் நம்பவேண்டும்.

7 நோவா கண்ணுக்குப் புலப்படாதவை குறித்துக் கடவுளால் எச்சரிக்கப்பட்டபோது, தம் குடும்பத்தைக் காப்பாற்ற, கவனத்தோடு ஒரு பேழையை அமைத்தது நம்பிக்கையினால்தான். அதன் வழியாய் அவர் உலகைக் கண்டித்து இறைவனுக்கு ஏற்புடையவர் என்னும் உரிமைப் பேறு பெற்றதும் நம்பிக்கையினால்தான்.

8 ஆபிரகாம் தாம் அழைக்கப்பட்டபோது கீழ்ப்படிந்து, உரிமைப்பேறாகப் பெறவிருந்த இடத்திற்குச் சென்றதும் நம்பிக்கையினால்தான். தாம் எங்கே போக வேண்டும் என்று தெரியாதிருந்தும் அவர் புறப்பட்டுச் சென்றார்.

9 வாக்களிக்கப்பட்ட நாட்டில் அவர் குடியேறி ஒர் அன்னியரைப் போல் வாழ்ந்தது நம்பிக்கையினாலேயே. அதே வாக்குறுதிக்கு உடன் உரிமையாளர்களான ஈசாக்குடனும், யாக்கோபுடனும் அவர் கூடாரங்களில் குடியிருந்தார்.

10 ஏனெனில், அவர் அசையாத அடித்தளமுள்ள ஒரு நகரை எதிர்நோக்கியிருந்தார். அதைத்திட்டமிட்டவரும் கட்டியவரும் கடவுளே.

11 ஆபிரகாம் வயது முதியவராயும் சாரா கருவுற இயலாதவராயும் இருந்தபோதிலும், அவர் ஒரு தந்தையாவதற்கான ஆற்றல் பெற்றதும் நம்பிக்கையினால்தான். ஏனெனில் வாக்களித்தவர் நம்பிக்கைக்குரியவர் என அவர் கருதினார்.

12 இவ்வாறு, உயிரற்றவர் போலிருந்த இந்த ஒருவரிடமிருந்து வானத்திலுள்ள திரளான விண்மீன்களைப் போலவும் கடற்கரையிலுள்ள எண்ணிறந்த மணலைப் போலவும் கணக்கற்ற மக்கள் பிறந்தனர்.

13 இவர்கள் எல்லாம் நம்பிக்கை கொண்டவர்களாய் இறந்தார்கள்: வாக்களிக்கப்பட்டவற்றை அவர்கள் பெறவில்லையெனினும், தொலையில் அவற்றைக் கண்டு மகிழ்ந்தார்கள்: இவ்வுலகில் தாங்கள் அன்னியர் என்பதையும் தற்காலிகக் குடிகள் என்பதையும் ஏற்றுக் கொண்டார்கள்.

14 இவ்வாறு ஏற்றுக் கொள்வோர் தம்முடைய தாய்நாட்டைத் தேடிச் செல்வோர் என்பது தெளிவு.

15 தாங்கள் விட்டுவந்த நாட்டை அவர்கள் நினைத்துக் கொண்டிருக்கவில்லை. அப்படி நினைத்திருந்தால் திரும்பிச் செல்ல அவர்களுக்கு வாய்ப்புக் கிடைத்திருக்கும்.

16 ஆனால், அவர்கள் சிறப்பான ஒரு நாட்டை, அதாவது, விண்ணக நாட்டையே நாடுகிறார்கள். அதனால்தான் கடவுளும் தம்மை, “அவர்களுடைய கடவுள்” என்று அழைத்துக்கொள்ள வெட்கப்படவில்லை. அவர்களுக்கென அவர் ஒருநகரை ஆயத்தப்படுத்தியுள்ளார்.

17 ஆபிரகாம் சோதிக்கப்பட்டபோது ஈசாக்கைப் பலியிடத் துணிந்தது நம்பிக்கையினால்தான்.

18 “ஈசாக்கின் மூலமே, உன் வழிமரபு விளங்கும்” என்ற வாக்குறுதியை அவர் பெற்றிருந்தபோதிலும், அவர் தம் ஒரே மகனைப் பலியிட முன் வந்தார்.

19 ஏனெனில், இறந்தோரைக் கடவுள் உயிரோடு எழுப்ப வல்லவர் என்பதை அவர் உணர்ந்திருந்தார். எனவே, அவர் தம் மகனை மீண்டும் பெற்றுக் கொண்டார். பின்பு நடக்கவிருந்ததற்கு இது ஓர் அறிகுறி.

20 ஈசாக்கு, பிற்காலத்தில் நிகழவிருந்தவற்றைக் குறிப்பிட்டு, யாக்கோபுக்கும் ஏசாவுக்கும் ஆசி வழங்கியது நம்பிக்கையினால்தான்.

21 யாக்கோபு தாம் இறக்கும்முன் யோசேப்பின் மக்கள் ஒவ்வொருவருக்கும் ஆசி வழங்கியதும் தம் ஊன்றுகோலின்மேல் சாய்ந்து கடவுளைத் தொழுததும் நம்பிக்கையினால்தான்.

22 இஸ்ரயேல் மக்கள் எகிப்து நாட்டைவிட்டு வெளியேறுவர் என்று இறக்கும் தவறாயிலிருந்த யோசேப்பு குறிப்பிட்டதும் தம் எலும்புகளை என்ன செய்ய வேண்டும் என்று பணித்ததும் நம்பிக்கையினால்தான்.

23 மோசே பிறந்தபோது, குழந்தை அழகாய் இருக்கக்கண்டு, அவருடைய பெனற்றோர் அரசனுடைய ஆணைக்கும் அஞ்சாது, மூன்று மாதம் அவரை ஒளித்து வைத்திருந்ததும் நம்பிக்கையினால்தான்.

24 மோசே பெரியவரான பின்பு பார்வோனுடைய மகளின் மகன் என அழைக்கப்பட மறுத்ததும் நம்பிக்கையினாலேதான்.

25 பாவத்தில் சிறிது காலம் இன்புறுவதைவிட, கடவுளுடைய மக்களோடு சேர்ந்து துன்புறுவதையே அவர் தேர்ந்து கொண்டார்.

26 ஏனெனில், தமக்குக் கிடைக்கவிருந்த கைம்மாறு ஒன்றையே கண்முன் இருத்தி, அவர் எகிப்தின் செல்வங்களைவிட, “மெசியாவின்” பொருட்டு இகழ்ச்சியுறுவதே மேலான செல்வம் என்று கருதினார்.

27 அரசனுடைய சீற்றத்திற்கு அஞ்சாது, அவர் எகிப்தைவிட்டு வெளியேறியதும் நம்பிக்கையினால்தான்: கண்ணுக்குப் புலப்படாதவரைக் கண்ணால் பார்ப்பவர் போன்று உறுதியாய் இருந்தார்.

28 அவர் பாஸ்காவைக் கொண்டாடியதும் தலைப்பேறானவர்களை அழிக்க வந்தவன் இஸ்ரயேலரைத் தீண்டாதபடி இரத்தத்தைத் தெளித்ததும் நம்பிக்கையினால்தான்.

29 இஸ்ரயேலர் கட்டாந்தரையைக் கடப்பது போன்று செங்கடலைக் கடந்து சென்றது நம்பிக்கையினால் தான். ஆனால் எகிப்தியர் அதைக் கடக்க முயன்றபோது மூழ்கிவிட்டனர்.

30 இஸ்ரயேலர் ஏழுநாள் வலம் வந்த பின்னர், எரிகோவின் மதில்கள் விழுந்ததும் நம்பிக்கையினால்தான்.

31 விலைமகளான இராகாபு ஒற்றர்களை நன்கு வரவேற்று, கீழ்ப்படியாதவரோடு அழியாது தப்பித்துக் கொண்டதும் நம்பிக்கையினால்தான்.

32 இன்னும் கூறவேண்டுமா? கிதியோன், பாராக்கு, சிம்சோன், இப்தாகு தாவீது, சாமுவேல் ஆகியோர்பற்றியும், இறைவாக்கினர் பற்றியும் எடுத்துரைக்க எனக்கு நேரமில்லை.

33 நம்பிக்கையினாலேயே இவர்கள் அரசுகளை வென்றார்கள்: நேர்மையாகச் செயல்பட்டார்கள்: கடவுள் வாக்களித்தவற்றைப் பெற்றார்கள்: சிங்கங்களின் வாய்களை அடைத்தார்கள்:

34 தீயின் கொடுமையைத் தணித்தார்கள்: வாள் முனைக்குத் தப்பினார்கள்: வலுவற்றராயிருந்தும் வலிமை பெற்றார்கள்: போரில் வீரம் காட்டினார்கள்: மாற்றார் படைகளை முறியடித்தார்கள்.

35 பெண்கள் இறந்த தம் உறவினரை உயிர்த்தெழுந்தவராய்ப் பெற்றுக்கொண்டார்கள். உயிர்த்தெழுந்து சிறப்புறும் பொருட்டு, சிலர் விடுதலை பெற மறுத்து வதையுண்டு மடிந்தனர்.

36 வேறு சிலர் ஏளனங்களுக்கும் கசையடிகளுக்கும் ஆளாயினர்: விலங்கிடப்பட்டுச் சிறையில்கூட அடைக்கப்பட்டனர்.

37 சிலர் கல்லெறிபட்டனர்: இரண்டாக அறுக்கப்பட்டனர்: வாளுக்கு இரையாகி மடிந்தனர்: செம்மறியின் தோலையும் வெள்ளாட்டுத் தோலையும் போர்த்துக்கொண்டு அலைந்து திரிந்தனர்: வறுமையுற்று வாடினர்: துன்புறுத்தப்பட்டனர்: கொடுமைக்கு உள்ளாயினர்.

38 அவர்களை ஏற்க இவ்வுலகுக்குத் தகுதியில்லாமல் போயிற்று. மலைகளிலும் குகைகளிலும் நிலவெடிப்புகளிலும் பாலை வெளிகளிலும் அவர்கள் அலைந்து திரிந்தார்கள்.

39 இவர்கள் அனைவரும் தம் நம்பிக்கையினாலே நற்சான்று பெற்றார்கள். ஆயினும் கடவுள் வாக்களித்ததை அவர்கள் பெறவில்லை.

40 ஏனெனில், நம்மோடு இணைந்துதான் அவர்கள் நிறைவு பெற முடியும் என்பதைக் கடவுள் கருத்தில்கொண்டு நமக்காகச் சிறந்த திட்டம் ஒன்றை வகுத்திருந்தார்.

 மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு  திருவிவிலியம்

A Tamil Catholic website based on the scripture hebrews 4:20 to share your experience in Jesus and Mary with everyone.
anbinmadal.org | 2002-2019 | Email ID: anbinmadal at gmail.com