எபிரேயருக்கு எழுதிய திருமுகம் - 9

அதிகாரங்கள்



1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13

அதிகாரம் 9

1 முன்னைய உடன்படிக்கையின்படி வழிபாட்டுக்குரிய ஒழுங்குகளும் மண்ணுலகைச் சார்ந்த திருஉறைவிடமும் இருந்தன.

2 அத்திரு உறைவிடத்தில் முன்கூடாரம் ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. அங்கே ஒரு விளக்குத் தண்டும் ஒரு மேசையும் படையல் அப்பங்களும் இருந்தன. இவ்விடத்திற்குத் “தூயகம்” என்பது பெயர்.

3 இரண்டாம் திரைக்குப் பின், “திருத்தூயகம்” என்னும் கூடாரம் இருந்தது.

4 அதில் பொன்தூபப் பீடமும், முழுவதும் பொன் தகடு வேய்ந்த உடன்படிக்கைப் பேழையும் இருந்தன. இப்பேழையில் மன்னா வைக்கப்பட்டிருந்த பொற்சாடியும் ஆரோனின் தளிர்த்த கோலும் உடன்படிக்கையின் கற்பலகைகளும் இருந்தன.

5 பேழையின்மேலே மாட்சிமிகு கெருபுகள் இரக்கத்தின் இருக்கைக்கு நிழலிட்டுக் கொண்டிருந்தன. இவை பற்றி இப்போது விரிவாய்க் கூற இயலாது.

6 இவை இவ்வாறு அமைந்திருக்க, குருக்கள் தங்கள் வழிபாட்டுப் பணிகளை நிறைவேற்ற முன்கூடாரத்தில் மட்டுமே எப்போதும் நுழைவார்கள்.

7 இரண்டாம் கூடாரத்தில் தலைமைக் குரு மட்டுமே ஆண்டுக்கு ஒருமுறை செல்வார். அப்போது அவர் தமக்காகவும் மக்கள் அறியாமையால் செய்த பிழைக்காகவும் இரத்தத்தைக் கொண்டு போய்ப் படைப்பார்.

8 மேற்கூறியவற்றின்மூலம் தூய ஆவியார், முன்கூடாரம் நீடித்து இருக்கும்வரை, தூயகத்திற்குச் செல்லும் வழி இன்னும் வெளிப்படுத்தப்படவில்லை என்பதை காட்டுகிறார்.

9 இக்கூடாரம் இக்கால நிலையை சுட்டிக் காட்டுகிறது. ஏனெனில் இக்காலத்தில் செலுத்தப்படும் காணிக்கைகளும் பலிகளும் வழிபடுகிறவரின் மனச்சான்றை நிறைவுக்குக் கொண்டுவர இயலாதனவாகும்.

10 இவை உடலைச் சார்ந்த ஒழுங்குகளே. உண்பது பற்றியும் குடிப்பது பற்றியும் பல்வேறு வகையான தூய்மைப்படுத்தும் சடங்குகள் பற்றியும் எழுந்த இவை சீரமைப்புக் காலம் வரைதான் நீடிக்கும்.

11 ஆனால், இப்போது கிறிஸ்து தலைமைக் குருவாக வந்துள்ளார். அவர் அருளும் நலன்கள் இப்போது நமக்குக் கிடைத்துள்ளன. அவர் திருப்பணி செய்யும் கூடாரம் முன்னதை விட மேலானது, நிறைவு மிக்கது. அது மனிதர் கையால் அமைக்கப்பட்டது அல்ல: அதாவது, படைக்கப்பட்ட இவ்வுலகைச் சார்ந்தது அல்ல.

12 அவர் பலியாகப் படைத்த இரத்தம் வெள்ளாட்டுக் கிடாய்கள், கன்றுக்குட்டிகள் ஆகியவற்றின் இரத்தம் அல்ல, அவரது சொந்த இரத்தமே. அவர் ஒரே ஒருமுறை தூயகத்திற்குள் சென்று எக்காலத்திற்குமென அதைப் படைத்து நமக்கு என்றுமுள்ள மீட்பு கிடைக்கும்படி செய்தார்.

13 வெள்ளாட்டுக்கிடாய்கள், காளைகள் இவற்றின் இரத்தமும் கிடாரியின் சாம்பலும் தீட்டுப்பட்டவர்கள்மீது தெளிக்கப்படும்போது, சடங்கு முறைப்படி அவர்கள் தூய்மை பெறுகிறார்கள்.

14 ஆனால் கிறிஸ்துவின் இரத்தம், வாழும் கடவுளுக்கு நாம் வழிபாடு செய்யுமாறு, சாவுக்கு அழைத்துச் செல்லும் செயல்களிலிருந்து நம் மனச்சான்றை எத்துணை மிகுதியாய்த் தூய்மைப்படுத்துகிறது! ஏனெனில் என்றுமுள்ள தூய ஆவியினால் தம்மைத்தாமே கடவுளுக்கு மாசற்ற பலியாகக் கொடுத்தவர் அவரே.

15 இவ்வாறு அவர் புதிய உடன்படிக்கையின் இணைப்பாளராயிருக்கிறார். கடவுளால் அழைக்கப்பட்டவர்கள் அவரால் வாக்களிக்கப்பட்ட என்றும் நிலைக்கும் உரிமைப்பேற்றைப் பெறுவதற்கென்று இந்த உடன்படிக்கை உண்டானது. இது ஒரு சாவின் மூலம் ஏற்படுத்தப்பட்டது. இந்தச் சாவு முந்திய உடன்படிக்கையை மீறிச் செய்த குற்றங்களிலிருந்து மீட்பளிக்கிறது.

16 ஏனெனில் விருப்ப ஆவணம் ஒன்று இருக்கிறது என்றால் அதனை எழுதியவர் இறந்துவிட்டார் என்பது மெய்ப்பிக்கப்பட வேண்டும்.

17 சாவுக்குப் பின்னரே விருப்ப ஆவணம் உறுதிபெறும். அதை எழுதியவர் உயிரோடு இருக்கும்வரை அது செல்லுபடியாகாது.

18 அதனால்தான் முன்னைய உடன்படிக்கையும் இரத்தம் சிந்தாமல் தொடங்கப்படவில்லை.

19 திருச்சட்டத்திலுள்ள கட்டளைகளையெல்லாம் மக்கள் அனைவருக்கும் மோசே எடுத்துரைத்தபின், கன்றுக்குட்டிகளே, வெள்ளாட்டுக்கடாக்கள் இவற்றின் இரத்தத்தைத் தண்ணீரோடு கலந்து கருஞ்சிவப்புக் கம்பளி நூலால் கட்டிய ஈசோப்புச் செடியால் உடன்படிக்கை ஏட்டின்மீதும் மக்கள் அனைவர்மீதும் தெளித்தார்:

20 தெளிக்கும்போது, “கடவுள் உங்களோடு செய்துள்ள உடன்படிக்கையின் இரத்தம் இதோ” என்றார்.

21 அவ்வாறே, கூடாரத்தின் மீதும் வழிபாட்டுக் கலன்கள் அனைத்தின்மீதும் அவர் இரத்தத்தைத் தெளித்தார்.

22 உண்மையில் திருச்சட்டத்தின்படி ஏறக்குறைய எல்லாமே இரத்தத்தினால் தூய்மையாக்கப்படுகின்றன. இரத்தம் சிந்துதல் இன்றி பாவமன்னிப்பு இல்லை.

23 ஆதலின், விண்ணகத்தில் உள்ளவற்றின் சாயல்களே இத்தகைய சடங்குகளால் தூய்மை பெறவேண்டுமென்றால், மண்ணகத்தில் உள்ளவை இவற்றிலும் சிறந்த பலிகளால் அல்லவா தூய்மை பெறவேண்டிருக்கும்!

24 அதனால்தான் கிறிஸ்து மனிதரின் கையால் அமைக்கப்பட்டதும் உண்மையான தூயகத்திற்கு முன்னடையாளமாய் இருப்பதுமான இவ்வுலகத் தூயகத்திற்குள் நுழையாமல் விண்ணுலகிற்குள்ளேயே நுழைந்திருக்கிறார். அங்கே இப்போது நம் சார்பாகக் கடவுளின் திருமுன் நிற்கிறார்.

25 தலைமைக்குரு விலங்குகளின் இரத்தத்துடன் ஆண்டுதோறும் தூயகத்திற்குள் செல்வார். அதற்கு மாறாக, கிறிஸ்து தம்மையே ஒரே முறை பலியாகக் கொடுத்தார். அதை மீண்டும் மீண்டும் செய்யவில்லை.

26 அவ்வாறு செய்திருப்பாரென்றால், உலகம் தோன்றிய காலந்தொட்டு, அவர் மீண்டும் மீண்டும் துன்புற்றிருக்கவேண்டும். அதற்கு மாறாக, உலகம் முடியும் காலமான இப்போது தம்மையே பலியாகக் கொடுத்து, பாவங்களைப் போக்குவதற்காக ஒரே முறை உலகில் வெளிப்படுத்தப்பட்டார்.

27 மனிதர் ஒரே முறை சாவுக்கு உட்படுகின்றனர். பின்னர் இறுதித் தீர்ப்பு வருகிறது. இதுவே அவர்களுக்கெனவுள்ள நியதி.

28 அவ்வாறே, கிறிஸ்துவும் பலரின் பாவங்களைப் போக்கும் பொருட்டு, ஒரேமுறை தம்மைத்தாமே பலியாகக் கொடுத்தார். அவர் மீண்டும் ஒருமுறை தோன்றுவார். ஆனால், பாவத்தின் பொருட்டு அல்ல, தமக்காகக் காத்திருப்பவர்களுக்கு மீட்பு அருளும் பொருட்டே தோன்றுவார்.

 மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு  திருவிவிலியம்

A Tamil Catholic website based on the scripture hebrews 4:20 to share your experience in Jesus and Mary with everyone.
anbinmadal.org | 2002-2019 | Email ID: anbinmadal at gmail.com