கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் திருமுகம் - 13

அதிகாரங்கள்



1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13

அதிகாரம் 13

1 இதோடு மூன்றாம் முறையாக நான் உங்களிடம் வருகிறேன். இரண்டு அல்லது மூன்று சாட்சிகளின் வாக்குமூலத்தாலே அனைத்துக் குற்றமும் உறுதி செய்யப்பட வேண்டும்.

2 முன்பு பாவம் செய்தோரையும் மற்ற எல்லாரையும் கூட நான் ஏற்கெனவே எச்சரித்தது போலவே மீண்டும் எச்சரிக்கிறேன். இரண்டாம் முறை நான் உங்களிடம் வந்தபோது செய்தது போலவே இப்போதும் நான் இங்கிருந்தே எச்சரிக்கிறேன். நான் மீண்டும் அங்கு வரும்போது அவர்களை நான் எளிதாக விட்டுவிடப் போவதில்லை.

3 கிறிஸ்து என் மூலமாகப் பேசுகிறார் என்பதை மெய்ப்பித்துக்காட்ட வேண்டும் என்கிறீர்கள் அல்லவா? கிறிஸ்து உங்களிடையே என்னைப் போல வலுவற்றவராக இல்லை: மாறாக அவர் வல்லமையோடு செயல்படுகிறார்.

4 ஏனென்றால், அவர் வலுவற்றவராய்ச் சிலுவையில் அறையப்பட்டார். ஆனால் கடவுளின் வல்லமையினால் அவர் உயிர் வாழ்கிறார். அவருடைய வலுவின்மையில் பங்கு பெறும் நாங்களும் உங்கள் பொருட்டு கடவுளின் வல்லமையால் அவரோடு வாழ்வோம்.

5 நீங்கள் நம்பிக்கையில் நிலைத்திருக்கிறீர்களா என உங்களையே சோதித்துப் பாருங்கள். உங்கள் நடத்தையைச் சீர்தூக்கிப் பாருங்கள். இயேசு கிறிஸ்து உங்களுள் செயலாற்றுகிறார் என உணராமலா இருக்கிறீர்கள்? நீங்கள் சீர்தூக்கிப் பார்த்தீர்கள் என்றால் அதை உணர்வீர்கள்.

6 நாங்கள் எங்கள் தகுதியை மெய்ப்பித்துக் காட்டியுள்ளோம் என்பதை நீங்கள் உணர்வீர்கள் என்னும் எதிர்நோக்குடன் இருக்கிறேன்.

7 நீங்கள் தீமை எதுவும் செய்யாதிருக்க உங்களுக்காக நாங்கள் கடவுளிடம் வேண்டுகிறோம். எங்கள் தகைமையை எடுத்துக்காட்ட நாங்கள் விரும்பவில்லை. நாங்கள் தகைமையற்றவர்களாகக் காணப்பட்டாலும் நீங்கள் நன்மையையே செய்யவேண்டும் என்பதே எங்கள் வேண்டல்.

8 ஏனெனில் உண்மைக்கு எதிராக நாங்கள் எதுவும் செய்ய இயலாது. உண்மையின் பொருட்டே அனைத்தையும் செய்கிறோம்.

9 நாங்கள் வலுவற்றவர்களாயிருப்பினும் நீங்கள் வல்லமையுடையவர்களாய் இருப்பது எங்களுக்கும் மகிழ்ச்சியே! நீங்கள் நிறைவடைய வேண்டும் என்றே நாங்கள் இறைவனிடம் வேண்டுகிறோம்.

10 நான் இங்கிருந்தே இதையெல்லாம் எழுதுகிறேன். ஏனெனில் நான் உங்களிடம் வரும்போது என் அதிகாரத்தைப் பயன்படுத்தி உங்களிடம் கண்டிப்பாய் நடந்துகொள்ள விரும்பவில்லை. உங்கள் அழிவுக்காக அல்ல, உங்கள் வளர்ச்சிக்காகவே ஆண்டவர் இந்த அதிகாரத்தை எனக்கு அளித்துள்ளார்.

11 சகோதர சகோதரிகளே, இறுதியாக நான் உங்களுக்குச் சொல்வது: மகிழ்ச்சியாயிருங்கள்: உங்கள் நடத்தையைச் சீர்ப்படுத்துங்கள்: என் அறிவுரைக்குச் செவி சாயுங்கள்: மன ஒற்றுமை கொண்டிருங்கள்: அமைதியுடன் வாழுங்கள்: அப்போது அன்பும் அமைதியும் அளிக்கும் கடவுள் உங்களோடு இருப்பார்.

12 தூயமுத்தம் கொடுத்து ஒருவரை ஒருவர் வாழ்த்துங்கள். இங்குள்ள இறைமக்கள் அனைவரும் உங்களுக்கு வாழ்த்துக் கூறுகிறார்கள்.

13 ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் அருளும் கடவுளின் அன்பும் தூய ஆவியாரின் நட்புறவும் உங்கள் அனைவரோடும் இருப்பதாக!

 மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு  திருவிவிலியம்

A Tamil Catholic website based on the scripture 2corinthians 4:20 to share your experience in Jesus and Mary with everyone.
anbinmadal.org | 2002-2019 | Email ID: anbinmadal at gmail.com