கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் திருமுகம் - 6

அதிகாரங்கள்1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13

அதிகாரம் 6

1 நீங்கள் கடவுளிடமிருந்து பெற்றுக் கொண்ட அருளை வீணாக்க வேண்டாம் என அவரோடு இணைந்து உழைக்கும் நாங்கள் கேட்டுக் கொள்கிறோம்.

2 ‘தகுந்த வேளையில் நான் உமக்குப் பதிலளித்தேன்: விடுதலை நாளில் உமக்குத் துணையாய் இருந்தேன்’ எனக் கடவுள் கூறுகிறார். இதுவே தகுந்த காலம்! இன்றே மீட்பு நாள்!

3 எவரும் குறைகூறா வண்ணம் எங்கள் திருப்பணியை ஆற்ற விரும்புகிறோம். எனவே நாங்கள் எவருக்கும் இடையூறாக இருப்பதில்லை.

4 மாறாக அனைத்துச் சூழ்நிலைகளிலும் நாங்கள் கடவுளின் பணியாளர்கள் என்பதை எங்கள் நடத்தையால் காட்டுகிறோம்: வேதனை, இடர், நெருக்கடி ஆகியவற்றை மிகுந்த மன உறுதியோடு தாங்கி வருகிறோம்.

5 நாங்கள் அடிக்கப்பட்டோம்: சிறையில் அடைக்கப்பட்டோம்: குழப்பங்களில் சிக்கினோம்: பாடுபட்டு உழைத்தோம்: கண்விழித்திருந்தோம்: பட்டினி கிடந்தோம்:

6 தூய்மை, அறிவு, பொறுமை, நன்மை, தூய ஆவியின் கொடைகள், வெளிவேட மற்ற அன்பு ஆகியவற்றைக் கொண்டிருக்கிறோம்:

7 உண்மையையே பேசி வருகிறோம்: கடவுளின் வல்லமையைப் பெற்றிருக்கிறோம். நேர்மையே எங்கள் படைக்கலாம். அதை வலக்கையிலும் இடக்கையிலும் நாங்கள் தாங்கியுள்ளோம்.

8 போற்றுவார் போற்றலும் தூற்றுவார் தூற்றலும் எங்களுக்கு ஒரு பொருட்டல்ல: புகழுவார் புகழலும் இகழுவார் இகழலும் எங்களைப் பாதிப்பதில்லை. ஏமாற்றுவோர் என அவர்களுக்குத் தோன்றினாலும் நாங்கள் உண்மையான பணியாளர்கள்.

9 அறிமுகமில்லாதோர் எனத் தோன்றினாலும் எல்லாரும் எங்களை அறிவர். செத்துக் கொண்டிருப்பவர்கள் எனத் தோன்றினாலும் நாங்கள் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். கொடுமையாகத் தண்டிக்கப்பட்டோர் எனத் தோன்றினாலும் நாங்கள் கொல்லப்படவில்லை.

10 துயருற்றோர் எனத் தோன்றினாலும் நாங்கள் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கிறோம். ஏழையர் எனத் தோன்றினாலும் நாங்கள் பலரைச் செல்வராக்குகிறோம். எதுவும் இல்லாதவர் எனத் தோன்றினாலும் நாங்கள் எல்லாவற்றையும் பெற்றிருக்கிறோம்.

11 கொரிந்தயரே, நாங்கள் உங்களிடம் மனம் விட்டுப் பேசுகிறோம். எங்கள் இதயத்தில் ஒளிவு மறைவு என்பதே இல்லை.

12 நீங்கள் உங்கள் இதயக் கதவை அடைத்து வைத்திருக்கிறீர்கள்: எங்கள் இதயக்கதவு எப்போதும் திறந்தே இருக்கிறது.

13 பிள்ளைகளுக்குச் சொல்வதைப் போல் சொல்லுகிறேன்: எங்களைப் போலவே நீங்களும் உங்கள் இதயக் கதவுகளைத் திறந்து வையுங்கள்.

14 நம்பிக்கை கொண்டிராதவரோடு உங்களைப் பிணைத்துக் கொள்ள வேண்டாம். இறைவனுக்கு ஏற்புடைய நெறிக்கு, நெறிகேட்டோடு என்ன உறவு? ஒளிக்கு இருளோடு என்ன பங்கு?

15 கிறிஸ்துவுக்கும் சாத்தானுக்கும் என்ன உடன்பாடு? நம்பிக்கை கொண்டோர்க்கு நம்பிக்கை கொண்டிராதவரோடு என்ன தொடர்பு?

16 கடவுளின் கோவிலுக்கும் சிலைவழிபாட்டுக் கோவிலுக்கும் என்ன இணக்கம்? வாழும் கடவுளின் கோவில் நாமே. ‘என் உறைவிடத்தை அவர்கள் நடுவில் நிறுவுவேன். அவர்கள் நடுவே நான் உலவுவேன். நானே அவர்கள் கடவுள்! அவர்கள் என் மக்கள்! ‘ என்று கடவுளே சொல்லியிருக்கிறார் அன்றோ!

17 எனவே, ‘அவர்கள் நடுவிலிருந்து வெளியேறுங்கள்: அவர்களை விட்டுப் பிரிந்து செல்லுங்கள்’ என்கிறார் ஆண்டவர். ‘தீட்டானதைத் தொடாதீர்கள். அப்பொழுது நான் உங்களை ஏற்றுக் கொள்வேன்.

18 மேலும் நான் உங்களுக்குத் தந்தையாயிருப்பேன்: நீங்கள் எனக்குப் புதல்வரும் புதல்வியருமாயிருப்பீர்கள்’ என்கிறார் எல்லாம் வல்ல ஆண்டவர்.

 மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு  திருவிவிலியம்

A Tamil Catholic website based on the scripture 2corinthians 4:20 to share your experience in Jesus and Mary with everyone.
anbinmadal.org | 2002-2019 | Email ID: anbinmadal at gmail.com