கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் திருமுகம் - 7

அதிகாரங்கள்1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13

அதிகாரம் 7

1 அன்பார்ந்தவர்களே, இத்தகைய வாக்குறுதிகளைப் பெற்றுள்ள நாம் உடலிலும் உள்ளத்திலும் மாசு எதுவுமின்றி நம்மையே தூய்மைப்படுத்துவோம். கடவுளுக்கு அஞ்சித் தூயவாழ்வில் நிறைவடைவோம்.

2 உங்கள் இதயத்தில் எங்களுக்கோர் இடம் வேண்டும். நாங்கள் யாருக்கும் தீங்கிழைக்கவில்லை: யாரையும் வஞ்சிக்கவில்லை.

3 நீங்கள் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிப்பதற்காக நான் இவ்வாறு கூறவில்லை: நான் ஏற்கெனவே கூறியவாறு நீங்கள் எங்கள் நெஞ்சில் நிறைந்திருக்கிறீர்கள். நாம் செத்தால் ஒன்றாய்ச் சாவோம்: வாழ்ந்தால் ஒன்றாய் வாழ்வோம்.

4 உங்கள் மேல் எனக்கு மிகுந்த நம்பிக்கை உண்டு. உங்களைக் குறித்து மிகவும் பெருமைப்படுகிறேன். எல்லா இன்னல்களுக்கு இடையேயும் என் உள்ளத்தில் ஆறுதல் நிறைந்திருக்கிறது. மகிழ்ச்சி பொங்கிவழிகிறது.

5 மாசிதோனியாவிற்கு வந்து சேர்ந்தபோது எங்களிடம் மன அமைதியே இல்லை. வெளியே போராட்டம், உள்ளே அச்சம்: இவ்வாறு எல்லா வகையிலும் துன்புற்றோம்.

6 தாழ்ந்தோருக்கு ஆறுதல் அளிக்கும் கடவுள் தீத்துவின் வரவால் எங்களுக்கும் ஆறுதல் அளித்தார்.

7 அவரது வருகையால் மட்டும் அல்ல: நீங்கள் தீத்துவுக்கு அளித்த ஆறுதலாலும் நாங்கள் ஆறுதல் அடைந்தோம். எங்களைக் காண நீங்கள் கொண்டிருந்த ஏக்கத்தையும் நீங்கள் அடைந்த துயரத்தையும் நீங்கள் என்னிடம் காட்டிய ஆர்வத்தையும் பற்றி அவர் எங்களிடம் சொன்னபோது நாங்கள் மிகுதியான மகிழ்ச்சி அடைந்தோம்.

8 நான் எழுதிய திருமுகம் உங்களை மனவருத்தப்படுத்தியது என்பதை அறிந்தபோது அதுபற்றி நான் வருந்தவில்லை. அத்திருமுகம் உங்களைச் சிறிது காலத்துக்கு மனவருத்தப்படுத்தியது என்பது உண்மைதான். முதலில் அதுபற்றி நான் வருத்தப்பட்டாலும்,

9 இப்போது எனக்கு மகிழ்ச்சிதான். நீங்கள் மனவருத்தம் அடைந்தீர்கள் என்பதற்காக அல்ல, மாறாக உங்கள் மனவருத்தம் மனம்மாறச் செய்தது என்பதற்காகவே மகிழ்ச்சியடைகிறேன். நீங்கள் கடவுளுக்கு ஏற்புடைய முறையில் அந்த மனவருத்தத்தைத் தாங்கிக் கொண்டீர்கள். ஆகவே நாங்கள் உங்களுக்கு எந்த இழப்பையும் வருவிக்கவில்லை.

10 கடவுளுக்கு ஏற்புடைய முறையில் தாங்கிக் கொள்ளப்படும் மனவருத்தம் மீட்பு தரும் மனம்மாற்றத்தை விளைவிக்கிறது. இதில் வருத்தப்படுவதற்கு ஒன்றுமில்லை. ஆனால் உலகப் போக்கிலான மனவருத்தம் சாவை விளைவிக்கும்.

11 கடவுளுக்கு ஏற்புடையமுறையில் நீங்கள் தாங்கிக் கொண்ட மனவருத்தம் உங்களுக்கு எத்துணை ஊக்கத்தை அளித்தது பார்த்தீர்களா? அதுமட்டுமா? நேர்மையைக் காட்ட உங்களுக்கு எத்துணை ஆவல்! எத்துணை உள்ளக் கொதிப்பு! என் மீது எத்துணை அச்சம்! என்னைக் காண எத்துணை ஏக்கம்! எத்துணை ஆர்வம்! எனக்கு மனவருத்தம் அளித்தவனிடம் எத்துணைக் கண்டிப்பு! இவ்வாறு உங்கள் செயல்கள் அனைத்திலும் நீங்கள் நேர்மையாளர்கள் எனக்காட்டிக் கொண்டீர்கள்.

12 ஆக, தீங்கிழைத்தவரை முன்னிட்டோ, தீங்குக்கு உள்ளானவரை முன்னிட்டோ நான் அத்திருமுகத்தை எழுதவில்லை: மாறாகக் கடவுள் திருமுன் நீங்கள் எங்கள் மேல் கொண்டுள்ள ஆர்வம் வெளிப்படுமாறே அதை உங்களுக்கு எழுதினேன்.

13 அதனால் நாங்கள் ஆறுதல் அடைந்தோம். நாங்கள் ஆறுதல் அடைந்தது மட்டுமல்ல, தீத்துவின் மகிழ்ச்சியைக் கண்டபோது மேலும் மிகுதியாக மகிழ்ச்சி அடைந்தோம். ஏனெனில் நீங்கள் அவருக்குப் புத்தெழுச்சி ஊட்டினீர்கள்.

14 நான் உங்களைக் குறித்துத் தீத்துவிடம் பெருமையாய்ப் பேசியது பற்றி வெட்கமடையவில்லை. நாங்கள் உங்களிடம் பேசியதெல்லாம் உண்மையாய் இருப்பதுபோல நாங்கள் தீத்துவிடம் உங்களைக் குறித்துப் பெருமையாய்ப் பேசியதும் உண்மையெனத் தெளிவாயிற்று.

15 நீங்கள் அனைவரும் அவருக்குக் கீழ்படிந்து அவரை அச்சத்தோடும் நடுக்கத்தோடும் ஏற்றுக் கொண்ட முறையை அவர் நினைவு கூரும்போது அவரது உள்ளம் உங்களுக்காக மிகுதியாய் உருகுகிறது.

16 உங்கள் மேல் எனக்கு நம்பிக்கை உண்டு. அதனால் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

 மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு  திருவிவிலியம்

A Tamil Catholic website based on the scripture 2corinthians 4:20 to share your experience in Jesus and Mary with everyone.
anbinmadal.org | 2002-2019 | Email ID: anbinmadal at gmail.com