1 மீண்டும் நாங்கள் எங்களைப்பற்றி நற்சான்று அளிக்கத் தொடங்குகிறோமா? சிலரைப் போல நற்சான்றுக் கடிதங்களை உங்களுக்குக் காட்டவோ அல்லது உங்களிடமிருந்து பெறவோ எங்களுக்குத் தேவை உண்டா?
2 யாவரும் வாசித்து அறிந்து கொள்ளும் முறையில் எங்கள் இதயத்தில் எழுதப்பட்ட நற்சான்றுக் கடிதம் நீங்களே.
3 எங்கள் பணியின் வாயிலாகக் கிறிஸ்து எழுதிய கடிதம் நீங்களே என்பது வெளிப்படை. அது மையினால் எழுதப்பட்டது அல்ல: மாறாக வாழும் கடவுளின் ஆவியால் எழுதப்பட்டது. கற்பலகையில் அல்ல, மாறாக மனித இதயமாகிய பலகையில் எழுதப்பட்டது.
4 கிறிஸ்துவின் வழியாய் நாங்கள் கடவுள்மேல் வைத்துள்ள உறுதியான நம்பிக்கையால்தான் இவ்வாறு சொல்லுகிறோம்.
5 நாங்களே செய்ததாக எதன் மேலும் உரிமைபாராட்டிக் கொள்ள எங்களுக்குத் தகுதி இல்லை. எங்கள் தகுதி கடவுளிடமிருந்தே வருகிறது.
6 அவரே புதிய உடன்படிக்கையின் பணியாளராகும் தகுதியை எங்களுக்குத் தந்தார். அவ்வுடன்படிக்கை, எழுதப்பட்ட சட்டத்தைச் சார்ந்ததல்ல: தூய ஆவியையே சார்ந்தது. ஏனெனில் எழுதப்பட்ட சட்டத்தால் விளைவது சாவு: தூய ஆவியால் விளைவது வாழ்வு.
7 கற்களில் பொறிக்கப்பட்ட அச்சட்டம் சார்ந்த திருப்பணி சாவை விளைவிப்பதாயிருந்தும் அது மாட்சியுடன் அருளப்பட்டது. விரைவில் மறையவேண்டியதாயிருந்த அம்மாட்சி மோசேயின் முகத்தில் இஸ்ரயேல் மக்கள் பார்க்க முடியாத அளவுக்கு ஒளிவீசியது.
8 அதுவே அப்படியிருந்தது என்றால் தூய ஆவிசார்ந்த திருப்பணி எத்துணை மாட்சி பொருந்தியதாயிருக்கும்!
9 தண்டனைத் தீர்ப்பு அளிக்கும் திருப்பணியே இத்துணை மாட்சி பொருந்தியதாயிருந்தது என்றால் விடுதலைத் தீர்ப்பு அளிக்கும் திருப்பணி எத்துணை மாட்சி நிறைந்ததாயிருக்கும்!
10 அன்றைய மாட்சியை ஒப்புயர்வற்ற இன்றைய மாட்சியோடு ஒப்பிட்டால் அது மாட்சியே அல்ல.
11 மறையப்போவது மாட்சி உடையதாயிருந்தால் நிலையாக இருப்பது எத்துணை மாட்சி மிகுந்ததாயிருக்கும்!
12 இவ்வாறு நாங்கள் எதிர்நோக்கி இருப்பதால்தான் மிகுந்த துணிச்சலோடு செயல்படுகிறோம்.
13 மறைந்துபோகும் மாட்சியை இஸ்ரயேல் மக்கள் காணாதவாறு தம் முகத்தை முக்காடிட்டு மறைத்துக் கொண்ட மோசேயைப்போல் நாங்கள் செய்வது இல்லை.
14 அவர்களின் உள்ளம் மழுங்கிப் போயிற்று. இன்றுவரை அந்தப் பழைய உடன்படிக்கை நூல்களை அவர்கள் வாசிக்கும்போது அதே முக்காடு இன்னும் அகற்றப்படாமல் இருக்கிறது. கிறிஸ்துவின் வழியாய்த்தான் அது அகற்றப்படும்.
15 இன்றுவரை மோசேயின் திருச்சட்டம் வாசிக்கப்படும்போதெல்லாம் அவர்களின் உள்ளத்தை ஒரு திரை மூடி இருக்கிறது.
16 ஆனால் ஆண்டவர்பால் திரும்பினால் அந்தத் திரை அகற்றப்படும்.
17 இங்கே ஆண்டவர் என்பது தூய ஆவியாரைக் குறிக்கிறது. ஆண்டவரின் ஆவியார் இருக்குமிடத்தில் விடுதலை உண்டு.
18 இப்போது நாம் அனைவரும் முக்காடு இல்லா முகத்தினராய் ஆண்டவரின் மாட்சியைப் பிரதிபலிக்கிறோம். இவ்வாறு மேன்மேலும் மாட்சிபெற்று, அவர் சாயலாக மாற்றமடைகிறோம். இவையெல்லாம் ஆவியாம் ஆண்டவரின் செயலே.