1 நான் மானிடரின் மொழிகளிலும் வானதூதரின் மொழிகளிலும் பேசினாலும் அன்பு எனக்கில்லையேல் ஒலிக்கும் வெண்கலமும் ஓசையிடும் தாளமும் போலாவேன்.
2 இறைவாக்கு உரைக்கும் ஆற்றல் எனக்கு இருப்பினும், மறைபொருள்கள் அனைத்தையும் அறிந்தவனாய் இருப்பினும், அறிவெல்லாம் பெற்றிருப்பினும், மலைகளை இடம்பெயரச் செய்யும் அளவுக்கு நிறைந்த நம்பிக்கை கொண்டிருப்பினும் என்னிடம் அன்பு இல்லையேல் நான் ஒன்றுமில்லை.
3 என் உடைமையை எல்லாம் நான் வாரி வழங்கினாலும் என் உடலையே சுட்டெரிப்பதற்கென ஒப்புவித்தாலும் என்னிடம் அன்பு இல்லையேல் எனக்குப் பயன் ஒன்றுமில்லை.
4 அன்பு பொறுமையுள்ளது: நன்மை செய்யும்: பொறாமைப்படாது: தற்புகழ்ச்சி கொள்ளாது: இறுமாப்பு அடையாது.
5 அன்பு இழிவானதைச் செய்யாது: தன்னலம் நாடாது: எரிச்சலுக்கு இடம் கொடாது: தீங்கு நினையாது.
6 அன்பு தீவினையில் மகிழ்வுறாது: மாறாக உண்மையில் அது மகிழும்.
7 அன்பு அனைத்தையும் பொறுத்துக் கொள்ளும்: அனைத்தையும் நம்பும்: அனைத்தையும் எதிர்நோக்கி இருக்கும்: அனைத்திலும் மனஉறுதியாய் இருக்கும்.
8 இறைவாக்கு உரைக்கும் கொடை ஒழிந்துபோம்: பரவசப்பேச்சு பேசும் கொடையும் ஓய்ந்துபோம்: அறிவும் அழிந்துபோம். ஆனால் அன்பு ஒருபோதும் அழியாது.
9 ஏனெனில், நமது அறிவு அரைகுறையானது: நாம் அரைகுறையாகவே இறைவாக்கும் உரைக்கிறோம்.
10 நிறைவானது வரும் போது அரைகுறையானது ஒழிந்துபோம்.
11 நான் குழந்தையாய் இருந்தபோது குழந்தையைப்போலப் பேசினேன்: குழந்தையின் மனநிலையைப் பெற்றிருந்தேன்: குழந்தையைப்போல எண்ணினேன். நான் பெரியவனானபோது குழந்தைக்குரியவற்றை அறவே விட்டுவிட்டேன்.
12 ஏனெனில் இப்போது நாம் கண்ணாடியில் காண்பதுபோல் மங்கலாய்க் காண்கிறோம்: ஆனால் அப்போது நாம் நேரில் காண்போம். இப்போது நான் அரைகுறையாய் அறிகிறேன்: அப்போது கடவுள் என்னை அறிந்துள்ளதுபோல் முழுமையாய் அறிவேன்.
13 ஆக, நம்பிக்கை, எதிர்நோக்கு, அன்பு ஆகிய மூன்றுமே நிலையாய் உள்ளன. இவற்றுள் அன்பே தலைசிறந்தது.