கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகம் - 12

அதிகாரங்கள்



1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16

அதிகாரம் 12

1 சகோதர சகோதரிகளே, தூய ஆவியார் அருளும் கொடைகளைக் குறித்துப் பார்ப்போம். அவற்றைப் பற்றி நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்பதே என் விருப்பம்.

2 நீங்கள் பிற இனத்தவராயிருந்தபோது ஊமைச் சிலைகள்பால் ஈர்க்கப்பட்டுத் தவறாக வழிநடத்தப்பட்டீர்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள்.

3 கடவுளின் ஆவியால் ஆட்கொள்ளப்பட்டுப் பேசும் எவரும் “இயேசு சபிக்கப்பட்டவர் “ எனச் சொல்ல மாட்டார். தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டடவரன்றி வேறு எவரும் “இயேசுவே ஆண்டவர் “ எனச் சொல்ல முடியாது. இதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

4 அருள்கொடைகள் பலவகையுண்டு: ஆனால் தூய ஆவியார் ஒருவரே.

5 திருத் தொண்டுகளும் பலவகையுண்டு: ஆனால் ஆண்டவர் ஒருவரே.

6 செயல்பாடுகள் பலவகையுண்டு: ஆனால் கடவுள் ஒருவரே. அவரே எல்லாரிடமும் எல்லாவற்றையும் செயல்படுத்துபவர்.

7 பொது நன்மைக்காகவே தூய ஆவியாரின் செயல்பாடுகள் ஒவ்வொருவரிலும் வெளிப்படுகிறது.

8 தூய ஆவியார் ஒருவருக்கு ஞானம் நிறைந்த சொல்வளத்தை அருளுகிறார். இன்னொருவருக்கோ அதே ஆவியார் அறிவுசெறிந்த சொல்வளத்தை அளிக்கிறார்.

9 அதே ஆவியார் வேறொருவருக்கு நம்பிக்கை அருளுகிறார். அந்த ஒரே ஆவியார் மற்றொருவருக்குப் பிணிதீர்க்கும் அருள் கொடையையும் அளிக்கிறார்.

10 தூயஆவியார் ஒருவருக்கு வல்ல செயல் செய்யும் ஆற்றலையும் இன்னொருவருக்கு இறைவாக்குரைக்கும் ஆற்றலையும் வேறொருவருக்கு ஆவிக்குரியவற்றைப் பகுத்தறியும் ஆற்றலையும் மற்றொருவருக்குப் பல்வகை பரவசப் பேச்சு பேசும் ஆற்றலையும் பிறிதொருவருக்கு அப்பேச்சை விளக்கும் ஆற்றலையும் அருளுகிறார்.

11 அந்த ஒரே ஆவியாரே இவற்றையெல்லாம் செயல்படுத்துகிறார்: அவரே தம் விருப்பம்போல் ஒவ்வொருவருக்கும் இவற்றைப் பகிர்ந்தளிக்கிறார்.

12 உடல் ஒன்றே: உறுப்புகள் பல. உடலின் உறுப்புகள் பலவாயினும் உடல் ஒன்றாயிருப்பதுபோல கிறிஸ்துவும் இருக்கிறார்.

13 ஏனெனில், யூதரானாலும் கிரேக்கரானாலும், அடிமைகளானாலும் உரிமைக் குடிமக்களானாலும் நாம் எல்லாரும் ஒரே தூய ஆவியால் ஒரே உடலாய் இருக்கும்படி திருமுழுக்குப் பெற்றோம். அந்த ஒரே ஆவியையே பானமாகவும் பெற்றோம்.

14 உடல் ஒரே உறுப்பால் ஆனது அல்ல: பல உறுப்புகளால் ஆனது.

15 “நான் கை அல்ல: ஆகவே இவ்வுடலைச் சேர்ந்தவன் அல்ல “ எனக் கால் சொல்லுமானால், அது அவ்வுடலைச் சேர்ந்ததில்லை என்றாகிவிடுமா?

16 “நான் கண் அல்ல: ஆகவே இவ்வுடலைச் சேர்ந்தவன் அல்ல “ எனக் காது சொல்லுமானால், அது அவ்வுடலைச் சேர்ந்ததில்லை என்றாகிவிடுமா?

17 முழு உடலும் கண்ணாயிருந்தால் கேட்பது எப்படி? முழு உடலும் காதாயிருந்தால் முகர்வது எப்படி?

18 உண்மையில் கடவுள் ஒவ்வோர் உறுப்பையும் தாம் விரும்பியவாறே உடலில் அமைத்தார்.

19 அவை யாவும் ஒரே உறுப்பாயிருந்தால் உடல் என ஒன்று இருக்குமா?

20 எனவேதான் பல உறுப்புகளை உடையதாய் இருந்தாலும் உடல் ஒன்றே.

21 கண் கையைப்பார்த்து, “நீ எனக்குத் தேவையில்லை “ என்றோ தலை கால்களைப் பார்த்து, “நீங்கள் எனக்குத் தேவையில்லை “ என்றோ சொல்ல முடியாது.

22 மாறாக, உடலில் மிக வலுவற்றனவாய்த் தோன்றும் உறுப்புகளே மிகவும் தேவையானவையாய் இருக்கின்றன.

23 உடலின் மதிப்புக் குறைவான உறுப்புகள் என நமக்குத் தோன்றுபவற்றிற்கே நாம் மிகுந்த மதிப்புக் கொடுக்கிறோம். நம் மறைவான உறுப்புகளே மிகுந்த மதிப்புப் பெறுகின்றன.

24 மறைந்திராத நம் உறுப்புகளுக்கு அது தேவையில்லை. மாறாக, மதிப்புக் குறைந்த உறுப்புகளுக்கு மிகுந்த மதிப்புக் கொடுத்தே கடவுள் உடலை ஒன்றித்து உருவாக்கினார்.

25 உடலில் பிளவு ஏற்படாமல், ஒவ்வொரு உறுப்பும் மற்ற உறுப்புகளின் மீது ஒரேவிதக் கவலை கொள்ளவேண்டுமென்றே இப்படிச் செய்தார்.

26 ஓர் உறுப்பு துன்புற்றால் அதனுடன் மற்ற எல்லா உறுப்புகளும் சேர்ந்து துன்புறும். ஓர் உறுப்பு பெருமை பெற்றால் அதனுடன் மற்ற எல்லா உறுப்புகளும் சேர்ந்து மகிழ்ச்சியுறும்.

27 நீங்கள் கிறிஸ்துவின் உடல்: ஒவ்வொருவரும் அதன் தனித்தனி உறுப்புகள்.

28 அவ்வாறே திருச்சபையிலும் கடவுள் முதலாவது திருத்தூதர்களையும், இரண்டாவது இறைவாக்கினர்களையும், மூன்றாவது போதகர்களையும், பின்னர் வல்லசெயல் செய்வோர்களையும், அதன்பின் பிணி தீர்க்கும் அருள்கொடை பெற்றவர்கள், துணைநிற்பவர்கள், தலைமையேற்று நடத்துபவர்கள், பல்வகை பரவசப்பேச்சு பேசுகிறவர்கள் ஆகியோரையும் ஏற்படுத்தினார்.

29 எல்லாருமே திருத்தூதர்களா? எல்லாருமே இறைவாக்கினர்களா? எல்லாருமே போதகர்களா? எல்லாருமே வல்ல செயல் செய்பவர்களா? இல்லை.

30 எல்லாருமே பிணி தீர்க்கும் அருள்கொடையைப் பெற்றவர்களா? எல்லாருமே பரவசப் பேச்சுப் பேசுகிறவர்களா? எல்லாருமே விளக்கம் அளிப்பவர்களா? இல்லையே!

31 எனவே நீங்கள் மேலான அருள் கொடையையே ஆர்வமாய் நாடுங்கள். எல்லாவற்றையும்விடச் சிறந்த நெறி ஒன்றை நான் உங்களுக்கு எடுத்துக் காட்டுகிறேன்.

 மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு  திருவிவிலியம்

A Tamil Catholic website based on the scripture 1corinthians 4:20 to share your experience in Jesus and Mary with everyone.
anbinmadal.org | 2002-2019 | Email ID: anbinmadal at gmail.com