கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகம் - 3

அதிகாரங்கள்



1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16

அதிகாரம் 3

1 சகோதர சகோதரிகளே, ஆவிக்குரியவர்களிடம் பேசுவதுபோல நான் உங்களிடம் பேசமுடியவில்லை. மாறாக, நீங்கள் ஊனியல்பு கொண்டவர்கள் எனவும், கிறிஸ்துவோடுள்ள உறவில் குழந்தைகள் எனவும் எண்ணிப் பேசுகிறேன்.

2 நான் உங்களுக்குத் திட உணவை அல்ல, பாலையே ஊட்டினேன். ஏனெனில், திட உணவை உங்களால் உண்ண முடியவில்லை. இப்போதும் அதே நிலையில்தான் இருக்கிறீர்கள்.

3 நீங்கள் இன்னும் உங்கள் ஊனியல்புக்கேற்பவே நடக்கிறீர்கள். ஏனெனில், பொறாமையும், சண்டை சச்சரவும் உங்களிடையே உள்ளன. நீங்கள் ஊனியல்புக்கேற்ப நடந்து மனிதப் போக்கில்தானே வாழ்கிறீர்கள்?

4 ஏனெனில், ஒருவர் “நான் பவுலைச் சார்ந்துள்ளேன் “ என்றும் வேறொருவர் “நான் அப்பொல்லோவைச் சார்ந்துள்ளேன் “ என்றும் உங்களிடையே சொல்லிக் கொள்ளும்போது நீங்கள் மனிதப்போக்கில்தானே நடக்கிறீர்கள்?

5 அப்பொல்லோ யார்? பவுல் யார்? நீங்கள் நம்பிக்கை கொள்ளக் காரணமாயிருந்த பணியாளர்கள்தானே! ஆண்டவர் ஒவ்வொருவருக்கும் அருளியவாறு அவர்கள் தொண்டாற்றுகிறார்கள்.

6 நான் நட்டேன்: அப்பொல்லோ நீர் பாய்ச்சினார்: கடவுளே விளையச் செய்தார்.

7 நடுகிறவருக்கும் பெருமை இல்லை: நீர் பாய்ச்சுபவருக்கும் பெருமை இல்லை: விளையச் செய்யும் கடவுளுக்கே பெருமை.

8 நடுகிறவரானாலும் நீர் பாய்ச்சுகிறவரானாலும் ஒன்றுதான். தாம் செய்த வேலைக்கு ஏற்ப ஒவ்வொருவரும் தம் கூலியைப் பெறுவர்.

9 நாங்கள் கடவுளின் உடன் உழைப்பார்கள். நீங்கள் கடவுள் பண்படுத்தும் தோட்டம். நீங்கள் அவர் எழுப்பும் கட்டடம்.

10 கடவுள் எனக்கு அளித்த அருளின்படியே, நான் கைதேர்ந்த கட்டடக் கலைஞர் போல அடித்தளம் இட்டேன். அதன்மேல் வேறொருவர் கட்டுகிறார். ஒவ்வொருவரும் தாம் கட்டும் முறையைக் குறித்துக் கவனமாக இருக்க வேண்டும்.

11 ஏற்கெனவே அடித்தளம் இட்டாயிற்று. இவ்வடித்தளம் இயேசு கிறிஸ்துவே. வேறோர் அடித்தளத்தை இட எவராலும் முடியாது.

12 அந்த அடித்தளத்தின்மேல் ஒருவர் பொன், வெள்ளி, விலையுயர்ந்த கற்கள், மரம், புல், வைக்கோல் ஆகியவற்றுள் எதையும் வைத்துக் கட்டலாம்.

13 ஆனால், அவரவருடைய வேலைப்பாடு தெரிந்துவிடும்: தீர்ப்பு நாள் அதைத் தெளிவுப்படுத்தும். அந்நாள் நெருப்பு மயமாய் வெளிப்படும். அந்நெருப்பு அவரவருடைய வேலை எத்தகையது என்பதைக் காட்டும்.

14 ஒருவர் கட்டியது நிலைத்து நின்றால் அதற்கான கூலியை அவர் பெறுவார்.

15 ஒருவர் கட்டியது தீக்கிரையாகுமானால் அவர் இழப்புக்குள்ளாவார். ஆனால் நெருப்பில் அகப்பட்டுத் தப்பியவர்போல் அவர் மீட்கப்படுவார்.

16 நீங்கள் கடவுளுடைய கோவிலென்றும் கடவுளின் ஆவியார் உங்களில் குடியிருக்கிறார் என்றும் உங்களுக்குத் தெரியாதா?

17 ஒருவர் கடவுளின் கோவிலை அழித்தால் கடவுள் அவரை அழித்துவிடுவார். ஏனெனில் கடவுளின் கோவில் தூயது: நீங்களே அக்கோவில்.

18 எவரும் தம்மைத்தாமே ஏமாற்றிக்கொள்ள வேண்டாம். இவ்வுலகில் தங்களை ஞானிகள் என்று கருதிக் கொள்வோர் தாங்களே மடையராகட்டும். அப்போது அவர்கள் ஞானிகள் ஆவார்கள்.

19 இவ்வுலக ஞானம் கடவுள்முன் மடமையாய் உள்ளது. ஏனெனில் மறைநூலில் எழுதியுள்ளவாறு, “ஞானிகளைக் கடவுள் அவர்களது சூழ்ச்சியில் சிக்க வைப்பர். “

20 மேலும் “ஞானிகளின் எண்ணங்கள் வீணானவை என ஆண்டவர் அறிவார். “

21 எனவே மனிதரைக் குறித்து யாரும் பெருமை பாராட்டலாகாது. பவுல், அப்பொல்லோ, கேபா, ஆகிய அனைவரும் உங்களுக்குரியவர்களே.

22 அவ்வாறே உலகம், வாழ்வு, சாவு, நிகழ்காலம், எதிர்காலம் இவை அனைத்தும் உங்களுக்குரியவைகளே.

23 ஆனால் நீங்கள் கிறிஸ்துவுக்குரியவர்கள்: கிறிஸ்து கடவுளுக்குரியவர்.

 மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு  திருவிவிலியம்

A Tamil Catholic website based on the scripture 1corinthians 4:20 to share your experience in Jesus and Mary with everyone.
anbinmadal.org | 2002-2019 | Email ID: anbinmadal at gmail.com