கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகம் - 1

அதிகாரங்கள்



1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16

அதிகாரம் 1

1 கொரிந்து நகரிலுள்ள கடவுளின் திருச்சபைக்கு அவர் திருவுளத்தால் கிறிஸ்து இயேசுவின் திருத்தூதனாக அழைக்கப்பட்ட பவுலும் சகோதரராகிய சொஸ்தேனும் எழுதுவது;

2 இயேசு கிறிஸ்துவோடு இணைக்கப்பெற்றுத் தூயோராக்கப்பட்டு இறைமக்களாக இருக்க அழைக்கப்பட்டுள்ள உங்களுக்கும், எல்லா இடங்களிலும் நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை அறிக்கையிடும் யாவருக்கும்,

3 நம் தந்தையாம் கடவுளிடமிருந்தும் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவிடமிருந்தும் அருளும் அமைதியும் உரித்தாகுக! இயேசு கிறிஸ்து நமக்குமட்டும் அல்ல, அனைவருக்கும் ஆண்டவர்.

4 கிறிஸ்து இயேசுவின் வழியாக நீங்கள் பெற்றுக்கொண்ட இறையருளை முன்னிட்டு உங்களை நினைத்து என் கடவுளுக்கு என்றும் நன்றி செலுத்துகிறேன்.

5 ஏனெனில் நீங்கள் கிறிஸ்துவுடன் இணைக்கப்பெற்றுச் சொல்வன்மையும் நிறையறிவும் பெற்று, எல்லா வகையிலும் செல்வர்களானீர்கள்.

6 மேலும் கிறிஸ்துவைப்பற்றிய சான்று உங்களால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

7 ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து வெளிப்படுவதற்காகக் காத்திருக்கும் உங்களுக்கு அருள்கொடை எதிலும் குறையே இல்லை.

8 நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து வெளிப்படும் நாளில் நீங்கள் குறைச் சொல்லுக்கு ஆளாகாதிருக்க அவர் உங்களை இறுதிவரை உறுதிப்படுத்துவார்.

9 கடவுள் நம்பிக்கைக்குரியவர்; தம் மகனும் நம் ஆண்டவருமாகிய இயேசு கிறிஸ்துவின் நட்புறவில் பங்குபெற உங்களை அவர் அழைத்துள்ளார்.

10 சகோதர சகோதரிகளே, நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் பெயரால் நான் உங்களைக் கெஞ்சிக் கேட்டுக்கொள்வது இதுவே; நீங்கள் ஒத்தக் கருத்துடையவர்களாய் இருங்கள். உங்களிடையே பிளவுகள் வேண்டாம். ஒரே மனமும் ஒரே நோக்கமும் கொண்டிருங்கள்.

11 என் அன்பர்களே, உங்களிடையே சண்டை சச்சரவுகள் இருப்பதாகக் குலோயி வீட்டார் எனக்குத் தெரிவித்துள்ளனர்.

12 நான் இதைச் சொல்லக் காரணம், உங்களுள் ஒவ்வொருவரும் "நான் பவுலைச் சார்ந்துள்ளேன்" என்றோ "நான் அப்பொல்லோவைச் சார்ந்துள்ளேன்" என்றோ "நான் கேபாவைச் சார்ந்துள்ளேன்" என்றோ, "நான் கிறிஸ்துவைச் சார்ந்துள்ளேன்" என்றோ சொல்லிக் கொள்கிறீர்களாம்.

13 கிறிஸ்து இப்படிப் பிளவுபட்டுள்ளாரா? அல்லது பவுலா உங்களுக்காகச் சிலுவையில் அறையப்பட்டான்? அல்லது பவுலின் பெயரிலா நீங்கள் திருமுழுக்குப் பெற்றுக்கொண்டீர்கள்?

14 கிறிஸ்பு, காயு ஆகியோரைத் தவிர உங்களுள் வேறு எவருக்கும் நான் திருமுழுக்குக் கொடுக்கவில்லை. இதற்காகக் கடவுளுக்கு நன்றி செலுத்துகிறேன்.

15 ஆகவே என் பெயரால் திருமுழுக்குப் பெற்றதாக யாரும் சொல்ல முடியாது.

16 ஸ்தேவனா வீட்டாருக்கும் நான் திருமுழுக்குக் கொடுத்துள்ளேன். மற்றபடி வேறு எவருக்கும் திருமுழுக்குக் கொடுத்ததாக எனக்கு நினைவு இல்லை.

17 திருமுழுக்குக் கொடுப்பதற்கு அல்ல, நற்செய்தியை அறிவிக்கவே கிறிஸ்து என்னை அனுப்பினார். மனித ஞானத்தின் அடிப்படையிலான சொற்களில் இந்நற்செய்தியை அறிவித்தலாகாது. அவ்வாறு அறிவித்தால் கிறிஸ்துவின் சிலுவை பொருளற்றுப் போய்விடும்.

18 சிலுவை பற்றியச் செய்தி அழிந்து போகிறவர்களுக்கு மடமையே. ஆனால், மீட்புப் பெறும் நமக்கோ அது கடவுளின் வல்லமை.

19 ஏனெனில், "ஞானிகளின் ஞானத்தை அழிப்பேன், அறிஞர்களின் அறிவை வெறுமையாக்குவேன்" என்று மறைநூலில் எழுதியுள்ளது.

20 இவ்வுலகைச் சார்ந்த ஞானி எங்கே? அறிவாளி எங்கே? வாதிடுவோர் எங்கே? இவ்வுலக ஞானம் மடமை எனக் கடவுள் காட்டிவிட்டாரல்லவா?

21 கடவுளுடைய ஞானத்தால் அவரை அறிந்து கொள்ளமுடியும். ஆனால் உலகினர் தம் ஞானத்தால் கடவுளை அறிந்து கொள்ளவில்லை. எனவே மடமை என்று கருதப்பட்ட நற்செய்தியைப் பறைசாற்றியதன் வழியாக நம்பிக்கை கொண்டோரை மீட்கக் கடவுள் திருவுளம் கொண்டார்.

22 யூதர்கள் அரும் அடையாளங்களை வேண்டும் என்று கேட்கிறார்கள்; கிரேக்கர் ஞானத்தை நாடுகிறார்கள்.

23 ஆனால் நாங்கள் சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவைப்பற்றிப் பறைசாற்றுகிறோம். அச்சிலுவை யூதருக்குத் தடைக்கல்லாகவும் பிற இனத்தாருக்கு மடமையாயும் இருக்கிறது.

24 ஆனால் அழைக்கப்பட்டவர்கள், யூதரானாலும் கிரேக்கரானாலும், அவர்களுக்குக் கிறிஸ்து கடவுளின் வல்லமையும் ஞானமுமாய் இருக்கிறார்.

25 ஏனெனில் மனித ஞானத்தைவிட கடவுளின் மடமை ஞானம் மிக்கது; மனித வலிமையைவிட அவருடைய வலுவின்மை வலிமை மிக்கது.

26 எனவே, சகோதர சகோதரிகளே, நீங்கள் அழைக்கப்பட்ட நிலையை எண்ணிப் பாருங்கள். மனிதக் கணிப்பின்படி உங்களுள் ஞானிகள் எத்தனைபேர்? வலியோர் எத்தனை பேர்? உயர்குடி மக்கள் எத்தனை பேர்?

27 ஆனால் கடவுள் ஞானிகளை வெட்கப்படுத்த, மடமை என உலகம் கருதுபவற்றைத் தேர்ந்து கொண்டார். அவ்வாறே, வலியோரை வெட்கப்படுத்த, வலுவற்றவை என உலகம் கருதுபவற்றைத் தேர்ந்துகொண்டார்.

28 உலகம் ஒரு பொருட்டாகக் கருதுபவற்றை அழித்து விட அது தாழ்ந்ததாகக் கருதுபவற்றையும் இகழ்ந்து தள்ளுபவற்றையும் கடவுள் தேர்ந்தெடுத்தார்.

29 எவரும் கடவுள் முன் பெருமைபாராட்டாதபடி அவர் இப்படிச் செய்தார்.

30 அவரால்தான் நீங்கள் கிறிஸ்துவுடன் இணைக்கப்பட்டிருக்கிறீர்கள். கிறிஸ்துவே கடவுளிடமிருந்து நமக்கு வரும் ஞானம். அவரே நம்மை ஏற்புடையவராக்கித் தூயவராக்கி மீட்கின்றார்.

31 எனவே மறைநூலில் எழுதியுள்ளவாறு, "பெருமை பாராட்ட விரும்புகிறவர் ஆண்டவரைக் குறித்தே பெருமை பாராட்டட்டும்.

 மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு  திருவிவிலியம்

A Tamil Catholic website based on the scripture 1corinthians 4:20 to share your experience in Jesus and Mary with everyone.
anbinmadal.org | 2002-2019 | Email ID: anbinmadal at gmail.com