கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகம் - 6

அதிகாரங்கள்



1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16

அதிகாரம் 6

1 உங்களுள் ஒருவருக்கு மற்றொருவரோடு வழக்கு இருப்பின், தீர்ப்புக்காக இறைமக்களிடத்தில் போகாமல் நம்பிக்கை கொள்ளாதோரிடம் செல்லத் துணிவதேன்?

2 இறைமக்கள்தான் உலகுக்குத் தீர்ப்பு அளிப்பவர்கள் என்பது உங்களுக்குத் தெரியாதா? உலகுக்கே தீர்ப்பளிக்கப்போகும் நீங்கள் உங்களிடையே உள்ள சின்னஞ்சிறிய வழக்குகளைத் தீர்த்துக் கொள்ளத் தகுதியற்றவர்களாகி விட்டீர்களா?

3 வான தூதர்களுக்கும் தீர்ப்பு அளிப்பது நாம்தான் என்பதும் உங்களுக்குத் தெரியாதா? அப்படியிருக்க அன்றாட வாழ்க்கையில் ஏற்படும் வழக்குகளை நீங்களே தீர்த்துக் கொள்ள முடியாதா?

4 அத்தகைய வழக்குகளைத் தீர்க்கச் சபையினரால் புறக்கணிக்கப்பட்டோரை நடுவர்களாக அமர்த்துவது எப்படி?

5 நீங்கள் வெட்கமடையவே இதைச் சொல்கிறேன். சகோதரர் சகோதரிகளிடையே உள்ள வழக்குகளைத் தீர்க்க உங்களுள் ஞானமுள்ளவர் ஒருவர்கூட இல்லையா?

6 சகோதரர் சகோதரிகளுள் ஒருவர் மற்றவருக்கு எதிராக வழக்குத் தொடரலாமா? அதுவும் நம்பிக்கை கொள்ளாத மக்கள் முன்னிலையிலா?

7 நீங்கள் ஒருவர்மீது மற்றவர் வழக்குத் தொடருவதே உங்களுக்கு ஒரு தோல்வியாகும். உங்களுக்கு இழைக்கப்பட்ட தீங்கை நீங்கள் பொறுத்துக் கொள்ளக்கூடாதா? உங்கள் உடைமைகளை வஞ்சித்துப் பறிக்கும்போது அதை நீங்கள் கண்டுகொள்ளாமல் இருந்துவிடக் கூடாதா?

8 ஆனால் நீங்களே ஒருவருக்கொருவர் தீங்கிழைக்கிறீர்கள்: வஞ்சித்துப் பறிக்கிறீர்கள்: அதுவும் சகோதரர் சகோதரிகளுக்கே இப்படிச் செய்கிறீர்கள்.

9 தீங்கிழைப்போருக்கு இறையாட்சியில் உரிமையில்லை என்று உங்களுக்குத் தெரியாதா? ஏமாந்து போகாதீர்கள்: பரத்தைமையில் ஈடுபடுவோர், சிலைகளை வழிபடுவோர், விபசாரம் செய்வோர், தகாத பாலுறவு கொள்வோர், ஒருபால் புணர்ச்சியில் ஈடுபடுவோர்,

10 திருடர், பேராசையுடையோர், குடிவெறியர், பழிதூற்றுவோர், கொள்ளையடிப்போர் ஆகியோர் இறையாட்சியை உரிமையாக்கிக் கொள்வதில்லை.

11 உங்களுள் சிலர் இவ்வாறுதான் இருந்தீர்கள். ஆனால் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் பெயராலும் நம் கடவுளின் ஆவியாலும் கழுவப்பட்டுத் தூயவரானீர்கள்: கடவுளுக்கு ஏற்புடையவராகவும் இருக்கிறீர்கள்.

12 “எல்லாவற்றையும் செய்ய எனக்கு உரிமையுண்டு “: ஆனால் எல்லாம் நன்மை தரக்கூடியவையல்ல. “எல்லாவற்றையும் செய்ய எனக்கு உரிமை உண்டு “: ஆனால் எதற்கும் நான் அடிமையாகிவிட மாட்டேன்.

13 “வயிற்றுக்கென்றே உணவு, உணவுக்கென்றே வயிறு. “ இவை இரண்டையுமே கடவுள் அழித்து விடுவார். உடல் பரத்தைமைக்கு அல்ல, ஆண்டவருக்கே உரியது. ஆண்டவரும் உடலுக்கே உரியவர்.

14 ஆண்டவரை உயிர்த்தெழச் செய்த கடவுள் தம் வல்லமையால் நம்மையும் உயிர்த்தெழச் செய்வார்.

15 உங்கள் உடல்கள் கிறிஸ்துவின் உறுப்புகள் என்று தெரியாதா? கிறிஸ்துவின் உறுப்புகளை எடுத்து ஒரு விலை மகளின் உறுப்புகளாகும்படி நான் செய்யலாமா? கூடவே கூடாது.

16 விலை மகளுடன் சேர்கிறவன் அவளோடு ஓரடலாகிறான் என்று தெரியாதா? “இருவரும் ஒரே உடலாயிருப்பர் “ என்று மறைநூலில் சொல்லப்பட்டுள்ளதே!

17 ஆண்டவரோடு சேர்ந்திருப்பவர் அவருடன் உள்ளத்தால் ஒன்றித்திருக்கிறார்.

18 எனவே பரத்தைமையை விட்டு விலகுங்கள். மனிதர் செய்யும் எப்பாவமும் உடலுக்குப் புறம்பானது. ஆனால் பரத்தைமையில் ஈடுபடுவோர் தம் சொந்த உடலுக்கு எதிராகவே பாவம் செய்கின்றனர்.

19 உங்கள் உடல் நீங்கள் கடவுளிடமிருந்து பெற்றுக்கொண்ட தூய ஆவி தங்கும் கோவில் என்று தெரியாதா? நீங்கள் உங்களுக்கு உரியவரல்ல.

20 கடவுள் உங்களை விலை கொடுத்து மீட்டுள்ளார். எனவே, உங்கள் உடலால் கடவுளுக்குப் பெருமை சேருங்கள்.

 மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு  திருவிவிலியம்

A Tamil Catholic website based on the scripture 1corinthians 4:20 to share your experience in Jesus and Mary with everyone.
anbinmadal.org | 2002-2019 | Email ID: anbinmadal at gmail.com