உரோமையருக்கு எழுதிய திருமுகம் - 15

அதிகாரங்கள்



1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16

அதிகாரம் 15

1 மன வலிமை கொண்டவர்களாகிய நாம் வலுவற்றவர்களின் குறைபாடுகளைத் தாங்கிக் கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறோம்: நமக்கு உகந்ததையே தேடலாகாது.

2 அடுத்தவருடைய நன்மைக்காகவும் வளர்ச்சிக்காகவும் செயல்பட்டு அவர்களுக்கு உகந்தவர்களாக வாழுங்கள்.

3 கிறிஸ்துவும் தமக்கு உகந்ததைத் தேடவில்லை. “உம்மைப் பழித்துப் பேசினவர்களின் பழிச்சொற்கள் என் மீது விழுந்தன” என்று மறைநூலில் எழுதியுள்ளது அல்லவா!

4 முற்காலத்தில் எழுதப்பட்டவை அனைத்தும் நமக்கு அறிவுரையாகவே எழுதப்பட்டன. மறைநூல் தரும் மன உறுதியினாலும் ஊக்கத்தினாலும் நமக்கு எதிர்நோக்கு உண்டாகிறது.

5 கிறிஸ்து இயேசுவின் முன்மாதிரிக்கேற்ப நீங்கள் ஒரே மனத்தினராய் இருக்குமாறு மன உறுதியையும் ஊக்கத்தையும் தரும் கடவுள் உங்களுக்கு அருள்புரிவாராக!

6 இவ்வாறு நீங்கள் அனைவரும் ஒருமனப்பட்டு, நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் கடவுளும் தந்தையுமானவரை ஒருவாய்ப்படப் போற்றிப் புகழ்வீர்கள்.

7 ஆகையால், கிறிஸ்து உங்களை ஏற்றுக் கொண்டது போல நீங்களும் ஒருவரை ஒருவர் ஏற்றுக்கொள்ளுங்கள். அப்போது கடவுளைப் பெருமைப்படுத்துவீர்கள். என் கருத்து இதுவே.

8 கடவுள் உண்மையுள்ளவர் என்பதைக் காட்டுமாறு கிறிஸ்து விருத்தசேதனம் செய்து கொண்டவர்களுக்குத் தொண்டர் ஆனார். மூதாதையருக்குத் தரப்பட்ட வாக்குறுதிகளை உறுதிப்படுத்தவும்,

9 பிற இனத்தார் கடவுளுடைய இரக்கத்தைப் பார்த்து அவரைப் போற்றிப் புகழவும் இவ்வாறு தொண்டர் ஆனார். ஆகவே, “பிறஇனத்தாரிடையே உம்மைப் போற்றுவேன்: உமது பெயருக்குப் புகழ்மாலை சாற்றுவேன்” என் இதைக் குறித்து மறைநூலில் எழுதியுள்ளது.

10 மேலும், “வேற்றினங்களே, ஆண்டவரின் மக்களோடு மகிழுங்கள்” என்றும்

11 “பிற இனத்தாரே, நீங்கள் அனைவரும் ஆண்டவரைப் போற்றுங்கள்: மக்களினத்தாரே நீங்கள் அனைவரும் அவரைப் புகழுங்கள்” என்றும் எழுதியுள்ளது அல்லவா!

12 இன்னும், “ஈசாயின் குலக்கொழுந்து ஒருவர் வருவார்: மக்களினங்களை ஆளும் தலைவராய் அவர் தோன்றுவார்: மக்களினங்கள் அவரையே எதிர்நோக்கி இருப்பர்” என்று எசாயா கூறுகிறார்.

13 எதிர்நோக்கைத் தரும் கடவுள், நம்பிக்கையால் உண்டாகும் பெருமகிழ்ச்சியாலும், அமைதியாலும் உங்களை நிரப்புவாராக! அவ்வாறு தூய ஆவியின் வல்லமையால் நீங்கள் இன்னும் மிகுதியான எதிர்நோக்குடன் வாழ அருள்புரிவாராக.

14 என் சகோதர சகோதரிகளே, நீங்கள் நன்னயம் நிறைந்தவர்களாயும், எல்லா அறிவும் நிரம்பப் பெற்றவர்களாயும், ஒருவர் மற்றவரை அறிவுறுத்தக் கூடியவர்களாயும் இருக்கிறீர்கள் என நான் உறுதியாக நம்புகிறேன்.

15 ஆயினும் உங்களுக்கு நினைவூட்டும் வகையில் சிலவற்றை இக்கடிதத்தில் மிகத் துணிவோடு எழுதியுள்ளேன். நான் கடவுளின் அருளைப் பெற்றவன் என்பதால் தான் அவ்வாறு எழுதினேன்.

16 அந்த அருள்தான் என்னைப் பிற இனத்தாருக்குப் பணிசெய்யக் கிறிஸ்து இயேசுவின் ஊழியனாக்கிற்று. பிற இனத்தார் தூய ஆவியால் அர்ப்பணிக்கப்பட்ட, கடவுளுக்கு உகந்த காணிக்கையாகும்படி அவர்களுக்கு கடவுளின் நற்செய்தியை அறிவிப்பதே என் குருத்துவப் பணி.

17 ஆகையால், கடவுளுக்காகச் செய்யும் இந்தப் பணியை முன்னிட்டு, கிறிஸ்து இயேசுவுக்குரியவனாகிய நான் பெருமை பாராட்டிக் கொள்ள இடமுண்டு.

18 பிற இனத்தார் தமக்குக் கீழ்ப்படியும் பொருட்டுக் கிறிஸ்து என் வழியாய்ச் சொல்லாலும் செயலாலும், அரும் அடையாளங்கள், அருஞ் செயல்களின் வல்லமையாலும், கடவுளின் ஆவியின் வல்லமையாலும் செய்து முடித்தவற்றைத் தவிர வேறெதைப் பற்றியும் பேச நான் துணியமாட்டேன்.

19 இவ்வாறு, எருசலேம் தொடங்கி இல்லிரிக்கம் மாநிலம் வரை எங்கும் சுற்றிக் கிறிஸ்துவின் நற்செய்தியை அறிவிக்கும் பணியை முடித்துவிட்டேன்.

20 கிறிஸ்துவின் பெயரைக் கேள்விப்படாத இடங்களில் மட்டும் நற்செய்தி அறிவிப்பதே என நோக்கமாய் இருந்தது. ஏனெனில் வேறொருவர் இட்ட அடித்தளத்தின்மேல் கட்டி எழுப்ப நான் விரும்பவில்லை.

21 ஆனால், “தங்களுக்குச் சொல்லப்படாததை அவர்கள் காண்பர்: தாங்கள் கேள்விப்படாததை அவர்கள் புரிந்துகொள்வர்” என்று மறைநூலில் எழுதியுள்ளது அல்லவா!

22 எனவேதான் நான் உங்களிடம் வரப் பலமுறை நினைத்தும் அது தடைப்பட்டது.

23 ஆனால் இப்பொழுது இந்தப் பகுதிகளில் எனக்கு இனி வேலையில்லை. மேலும் நான் ஸ்பெயின் நாட்டுக்குப் போகும்போது உங்களைக் காண வரவேண்டும் என்று பல ஆண்டுகளாகவே ஏங்கிக் கொண்டிருக்கிறேன்.

24 போகும் வழியில் உங்களைக் கண்டு, சில நாள்களேனும் உங்களோடு தங்கி மகிழ்ந்த பின்னர் என்னை அங்கிருந்து நீங்கள் வழியனுப்பி வைப்பீர்கள் என எதிர்பார்க்கிறேன்.

25 எனினும் தற்பொழுது இறைமக்களுக்குச் செய்யப்படவேண்டிய பொருளுதவியை முன்னிட்டு எருசலேமுக்குப் புறப்படுகிறேன்.

26 எருசலேமில் வாழும் ஏழை இறைமக்களுக்கு சிறிது பொருளுதவி செய்ய மாசிதோனியா, அக்காயா மாநிலத்தார் முன்வந்துள்ளனர்.

27 ஆம், மனமுவந்து முன்வந்துள்ளனர். எருசலேமில் வாழும் இறைமக்களுக்கு உண்மையில் பிற இனத்தார் கடன்பட்டவர்களே. எவ்வாறெனில், ஆவிக்குரிய கொடைகளில் இவர்கள் அவர்களின் பங்காளிகள் ஆயினர்: அதற்கேற்ப உடலைச் சார்ந்த தேவைகளில் அவர்களுக்கு ஊழியம் செய்ய இவர்கள் கடமைப்பட்டவர்கள் அல்லவா?

28 எனவே, தண்டல் செய்த தொகையை நானே அவர்களிடம் பொறுப்பாய் ஒப்படைத்துவிட்டு, என் வேலை முடிந்த பின்னர் உங்கள் ஊரின் வழியாக ஸ்பெயினுக்குப் போவேன்.

29 அப்போது, கிறிஸ்துவின் நிறைவான அருளாசியோடு உங்களிடம் வருவேன் என்பது உறுதி.

30 சகோதர சகோதரிகளே, நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை முன்னிட்டும் தூய ஆவி நம் உள்ளத்தில் பொழிந்துள்ள அன்பை முன்னிட்டும் நான் உங்களைக் கேட்டுக்கொள்வது: எனக்காகக் கடவுளிடம் வேண்டி, என் போராட்டத்தில் எனக்குத் துணை செய்யுங்கள்.

31 யூதேயாவில் நற்செய்தியை ஏற்றுக்கொள்ளாதோரிடமிருந்து என்னைக் காப்பாற்றுமாறும் நான் எருசலேமில் செய்யப்போகும் பொருளுதவி இறைமக்களுக்கு உகந்ததாய் இருக்குமாறும் வேண்டுங்கள்.

32 இவ்வாறு, கடவுளின் திருவுளத்தால் மகிழ்ச்சியுடன் நான் உங்களிடம் வந்து ஓய்வு எடுக்க இயலுமாறு எனக்காக வேண்டிக்கொள்ளுங்கள்.

33 அமைதி தரும் கடவுள் உங்கள் அனைவரோடும் இருப்பாராக! ஆமென்.

 மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு  திருவிவிலியம்

A Tamil Catholic website based on the scripture romans 4:20 to share your experience in Jesus and Mary with everyone.
anbinmadal.org | 2002-2019 | Email ID: anbinmadal at gmail.com