உரோமையருக்கு எழுதிய திருமுகம் - 8

அதிகாரங்கள்



1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16

அதிகாரம் 8

1 ஆகவே, கிறிஸ்து இயேசுவோடு இணைந்திருப்போருக்கு இனித் தண்டனைத் தீர்ப்பே கிடையாது.

2 ஏனெனில், கிறிஸ்து இயேசுவோடு இணைந்திருப்போருக்கு வாழ்வு தரும் தூய ஆவியின் சட்டம் பாவம், சாவு என்பவற்றுக்கு உள்ளாக்கும் சட்டத்தினின்று என்னை விடுவித்துவிட்டது.

3 ஊனியல்பின் காரணமாய் வலுவற்றிருந்த திருச்சட்டம் செய்ய முடியாத ஒன்றைக் கடவுள் செய்தார். அதாவது, ஊனியல்பு கொண்ட மனிதரைப் போன்றவராய்த் தம் சொந்த மகனை அனுப்பி மனிதரிடமுள்ள பாவத்திற்கு முடிவு கட்டினார்.

4 ஊனியல்புக்கேற்ப நடவாமல், ஆவிக்குரிய இயல்புக்கேற்ப நடக்கும் நாம் திருச்சட்டத்தின் நெறிகளை நிறைவேற்ற வேண்டும் என்று அவ்வாறு செய்தார்.

5 ஏனெனில், ஊனியல்புக்கேற்ப வாழ்வோரின் நாட்டமெல்லாம் அந்த இயல்புக்கு உரியவற்றின்மீதே இருக்கும்: ஆனால் ஆவிக்குரிய இயல்புக்கேற்ப வாழ்வோரின் நாட்டம் ஆவிக்கு உரியவற்றின் மீதே இருக்கும்.

6 ஊனியல் மனநிலை கொண்டிருப்போருக்கு வருவது சாவே: ஆவிக்குரிய மனநிலை கொண்டிருப்போருக்கு வருவது வாழ்வும் அமைதியும் ஆகும்.

7 ஏனெனில் ஊனியல் மனநிலை கடவுளுக்குப் பகையானது: அது கடவுளின் சட்டத்திற்குக் கட்டுப்பட்டிருப்பதில்லை, இருக்கவும் முடியாது.

8 ஊனியல்புக்கு ஏற்ப வாழ்வோர் கடவுளுக்கு உகந்தவர்களாய் இருக்க முடியாது.

9 ஆனால் கடவுளின் ஆவி உங்களுக்குள் குடிகொண்டிருந்தால், நீங்கள் ஊனியல்பைக் கொண்டிராமல், ஆவிக்குரிய இயல்பைக் கொண்டிருப்பீர்கள். கிறிஸ்துவின் ஆவியைக் கொண்டிராதோர் அவருக்கு உரியோர் அல்ல.

10 பாவத்தின் விளைவாக உங்கள் உடல் செத்ததாயினும், கிறிஸ்து உங்களுள் இருந்தால், நீங்கள் கடவுளுக்கு ஏற்புடையவர்கள் ஆக்கப்படுவீர்கள்: அதன் பயனாகத் தூய ஆவி உங்களுக்குள் உயிராய் இருக்கும்.

11 மேலும், இறந்த இயேசுவை உயிர்த்தெழச் செய்தவரின் ஆவி உங்களுள் குடிகொண்டிருந்தால், கிறிஸ்துவை உயிர்த்தெழச் செய்த அவரே உங்களுள் குடிகொண்டிருக்கும் தம் ஆவியினாலே சாவுக்குரிய உங்கள் உடல்களையும் உயிர் பெறச் செய்வார்.

12 ஆகையால் சகோதர சகோதரிகளே, நாம் ஊனியல்புக்குக் கடமைப்பட்டிருக்கவில்லை: அவ்வியல்பின்படி வாழவேண்டியதில்லை.

13 நீங்கள் ஊனியல்புக்கு ஏற்ப வாழ்ந்தால், சாகத்தான் போகிறீர்கள்: ஆனால், தூய ஆவியின் துணையால், உடலின் தீச்செயல்களைச் சாகடித்தால், நீங்கள் வாழ்வீர்கள்.

14 கடவுளின் ஆவியால் இயக்கப்படுகிறவர்களே கடவுளின் மக்கள்.

15 மீண்டும் அச்சத்திற்கு உள்ளாக்கும் மனப்பான்மையை நீங்கள் பெற்றுக்கொள்ளவில்லை: மாறாகக் கடவுளின் பிள்ளைகளுக்குரிய மனப்பான்மையையே பெற்றுக் கொண்டீர்கள். அதனால் நாம், “அப்பா, தந்தையே” என அழைக்கிறோம்.

16 நாம் இவ்வாறு அழைக்கும்போது நம் உள்ளத்தோடு சேர்ந்து தூய ஆவியாரும் நாம் கடவுளின் பிள்ளைகள் என்பதற்குச் சான்று பகர்கிறார்.

17 நாம் பிள்ளைகளாயின், உரிமைப் பேறு உடையவர்களாய் இருக்கிறோம். ஆம், நாம் கடவுளிடமிருந்து உரிமைப் பேறு பெறுபவர்கள், கிறிஸ்துவின் பங்காளிகள். அவருடைய துன்பங்களில் நாம் பங்கு பெற வேண்டும்: அப்போதுதான் அவரோடு மாட்சியிலும் பங்கு பெறுவோம்.

18 இக்காலத்தில் நாம் படும் துன்பங்கள் எதிர்காலத்தில் நமக்காக வெளிப்படப் போகிற மாட்சியோடு ஒப்பிடத் தகுதியற்றவை என நான் எண்ணுகிறேன்.

19 இம்மாட்சியுடன் கடவுளின் மக்கள் வெளிப்படுவதைக் காண்பதற்காகப் படைப்பே பேராவலோடு காத்திருக்கிறது.

20 ஏனெனில், படைப்பு பயனற்ற நிலைக்கு உட்பட்டுள்ளது: தானே விரும்பியதால் அப்படி ஆகவில்லை: அதை உட்படுத்தினவரின் விருப்பத்தால் அவ்வாறு ஆயிற்று: எனினும் அது எதிர்நோக்கை இழந்த நிலையில் இல்லை.

21 அது அழிவுக்கு அடிமைப்பட்டிருக்கும் நிலையிலிருந்து விடுவிக்கப்பட்டு, கடவுளின் பிள்ளைகளுக்குரிய பெருமையையும் விடுதலையையும் தானும் பெற்றுக்கொள்ளும் என்கிற எதிர்நோக்கோடு இருக்கிறது.

22 இந்நாள்வரை படைப்பு அனைத்தும் ஒருங்கே பேறுகால வேதனையுற்றுத் தவிக்கின்றது என்பதை நாம் அறிவோம்.

23 படைப்பு மட்டும் அல்ல: முதல் கொடையாகத் தூய ஆவியைப் பெற்றுக் கொண்டுள்ள நாமும் கடவுள் நம்மைத் தம் பிள்ளைகளாக்கப்போகும் நாளை, அதாவது நம் உடலை விடுவிக்கும் நாளை எதிர்நோக்கிப் பெருமூச்சு விடுகிறோம்.

24 நமக்கு மீட்புக் கிடைத்துவிட்டது. எனினும், எதிர்நோக்கும் அளவில்தான் அது கிடைத்துள்ளது. கண்ணுக்குத் தெரிகிறதை நோக்குதல் எதிர்நோக்கு ஆகாது. ஏற்கெனவே கண்ணால் காண்கிறதை எவராவது எதிர்நோக்குவாரா?

25 நாமோ காணாத ஒன்றை எதிர்நோக்கி இருக்கும்போது அதற்காக தளராமனத்தோடு காத்திருக்கிறோம்.

26 இவ்வாறு தூய ஆவியார் நமது வலுவற்ற நிலையில் நமக்குத் துணைநிற்கிறார்: ஏனெனில், எதற்காக, எப்படி நாம் இறைவனிடம் வேண்டுவது என்று நமக்குத் தெரியாது: தூய ஆவியார் தாமே சொல்வடிவம் பெற முடியாத நம்முடைய பெருமூச்சுகளின் வாயிலாய் நமக்காகப் பரிந்துபேசுகிறார்.

27 உள்ளங்களைத் துருவி ஆயும் கடவுள் தூய ஆவியாரின் மனநிலையை அறிவார். தூய ஆவியாரும் கடவுளுக்கு உகந்த முறையில் இறைமக்களுக்காகப் பரிந்துபேசுகிறார்.

28 மேலும், கடவுளிடம் அன்புகூர்பவர்களோடு, அதாவது அவரது திட்டத்திற்கேற்ப அழைக்கப்பட்டவர்களோடு, அவர்கள் நன்மைக்கப்பட்டவர்களோடு, அவர்கள் நன்மைக்காகவே ஆவியார் அனைத்திலும் ஒத்துழைக்கிறார் என்பது நமக்குத் தெரியும்.

29 தம்மால் முன்பே தேர்ந்து கொள்ளப்பட்டவர்கள் தம் மகனின் சாயலுக்கேற்றவாறு இருக்க வேண்டுமெனக் கடவுள் முன்குறித்து வைத்தார்: அச்சகோதரர் சகோதரிகள் பலருள் தம் மகன் தலைப்பேறானவராய் இருக்க வேண்டுமென்றே இப்படிச் செய்தார்.

30 தாம் முன்குறித்து வைத்தோரை அவர் அழைத்திருக்கிறார்: தாம் அழைத்தோரைத் தமக்கு ஏற்புடையோராக்கி இருக்கிறார்: தமக்கு ஏற்புடையோரானோரைத் தம் மாட்சியில் பங்கு பெறச் செய்தார்.

31 இதற்குமேல் நாம் என்ன சொல்வோம்? கடவுள் நம் சார்பில் இருக்கும்போது, நமக்கு எதிராக இருப்பவர் யார்?

32 தம் சொந்த மகனென்றும் பாராது அவரை நம் அனைவருக்காகவும் ஒப்புவித்த கடவுள், தம் மகனோடு அனைத்தையும் நமக்கு அருளாதிருப்பாரோ?

33 கடவுள் தேர்ந்து கொண்டவர்களுக்கு எதிராய் யார் குற்றம் சாட்ட இயலும்? அவர்கள் குற்றமற்றவர்கள் எனக் காட்டுபவர் கடவுளே.

34 அவர்களுக்கு யார் தண்டனைத் தீர்ப்பு அளிக்க இயலும்? இறந்து, ஏன், உயிருடன் எழுப்பப்பட்டு கடவுளின் வலப் பக்கத்தில் இருக்கும் கிறிஸ்து இயேசு நமக்காகப் பரிந்து பேசுகிறார் அன்றோ!

35 கிறிஸ்துவின் அன்பிலிருந்து நம்மைப் பிரிக்கப் கூடியது எது? வேதனையா? நெருக்கடியா? இன்னலா? பட்டினியா? ஆடையின்மையா? இடரா? சாவா? எதுதான் நம்மைப் பிரிக்க முடியும்?

36 “உம் பொருட்டு நாள்தோறும் கொல்லப்படுகிறோம், வெட்டுவதற்கென நிறுத்தப்படும் ஆடுகளாகக் கருதப்படுகிறோம்” என மறைநூலில் எழுதியுள்ளது அன்றோ!

37 ஆயினும், நம்மேல் அன்பு கூர்ந்தவரின் செயலால் மேற்கூறியவை அனைத்திலும் நாம் வெற்றிமேல் வெற்றி அடைகிறோம்.

38 ஏனெனில் சாவோ, வாழ்வோ, வானதூதரோ, ஆட்சியாளரோ, நிகழ்வனவோ, வருவனவோ, வலிமை மிக்கவையோ,

39 உன்னதத்தில் உள்ளவையோ, ஆழத்தில் உள்ளவையோ, வேறெந்தப் படைப்பும் நம் ஆண்டவர் கிறிஸ்து இயேசுவின் வழியாய் அருளப்பட்ட கடவுளின் அன்பிலிருந்து நம்மைப் பிரிக்கவே முடியாது என்பது என் உறுதியான நம்பிக்கை.

 மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு  திருவிவிலியம்

A Tamil Catholic website based on the scripture romans 4:20 to share your experience in Jesus and Mary with everyone.
anbinmadal.org | 2002-2019 | Email ID: anbinmadal at gmail.com