உரோமையருக்கு எழுதிய திருமுகம் - 9

அதிகாரங்கள்



1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16

அதிகாரம் 9

1 கிறிஸ்துவைச் சார்ந்த நான் சொல்வது உண்மை, பொய்யல்ல. தூய ஆவியால் தூண்டப்படும் என் மனச்சான்றே நான் சொல்வதற்குச் சாட்சி.

2 உள்ளத்தில் உனக்குப் பெருந்துயரமும் இடைவிடாத வேதனையும் உண்டு.

3 என் சொந்த இனத்தைச் சேர்ந்த என் சகோதரர் சகோதரிகளுக்கு மீட்பு கிடைப்பதற்காக நான் கிறிஸ்துவைப் பிரிந்து சாபத்துக்கு உள்ளாகக்கூட விரும்பியிருப்பேன்.

4 அவர்கள்தாம் இஸ்ரயேல் மக்கள்: அவர்களையே கடவுள் தம் மக்களாக ஏற்றுக் கொண்டார். அவர்கள் நடுவில்தான் கடவுள் தம் மாட்சியை விளங்கச் செய்தார். உடன்படிக்கைகளும் திருச்சட்டமும் திருவழிபாடும் வாக்குறுதிகளும் அவர்களிடமே ஒப்படைக்கப்பட்டன.

5 குலமுதல்வர்களின் வழிவந்தவர்கள் அவர்கள்: மனிதர் என்னும் முறையில் கிறிஸ்துவும் அவர்களிடமிருந்தே தோன்றினார். இவரே எல்லாவற்றுக்கும் மேலான கடவுள்: என்றென்றும் போற்றுதற்குரியவர். ஆமென்.

6 கடவுளின் வார்த்தை நிறைவேறவில்லை என்பது என் கருத்து அல்ல. ஏனெனில், இஸ்ரயேல் இனத்தில் தோன்றியதனாலேயே அவ்வினத்தில் பிறந்த அனைவரும் இஸ்ரயேலர் ஆகிவிட மாட்டார்கள்.

7 அவ்வாறே, ஆபிரகாமின் மரபில் தோன்றியவர்கள் அனைவருமே அவருடைய பிள்ளைகள் ஆகிவிடமாட்டார்கள்: ஏனெனில், “ஈசாக்கின் மூலமே உன் வழிமரபு விளங்கும்” என்று ஆபிரகாமுக்குச் சொல்லப்பட்டது.

8 அதாவது இயல்பான முறைப்படி பிறந்த பிள்ளைகளல்ல, வாக்குறுதியின் மூலம் பிறந்த பிள்ளைகளே கடவுளின் பிள்ளைகளாகவும் ஆபிரகாமின் வழிமரபினர்களாகவும் கருதப்படுகின்றனர்.

9 “குறிப்பிட்ட காலத்தில் மீண்டும் உன்னிடம் வருவேன்: அப்போது சாராவுக்கு ஒரு மகன் பிறந்திருப்பான்” என்பதே அந்த வாக்குறுதி.

10 அது மட்டும் அல்ல, நம் மூதாதையாகிய ஈசாக்கு என்னும் ஒரே மனிதர் மூலமாக ரெபெக்கா குழந்தைகளைப் பெற்றார்.

11 குழந்தைகள் பிறக்குமுன்பே, அவர்கள் நன்மையோ, தீமையோ செய்யுமுன்பே, “மூத்தவன் இளையவனுக்குப் பணிந்திருப்பான்” என்று அவருக்குச் சொல்லப்பட்டது.

12 அவ்வாறே, “யாக்கோபுக்கு அன்றோ நான் அன்புகாட்டினேன். ஆனால் ஏசாவை வெறுத்தேன்” என்றும் மறைநூலில் எழுதியுள்ளது.

13 இதிலிருந்து கடவுள் மனிதரைத் தேர்ந்தெடுத்துத் தம் திட்டத்தை நிறைவேற்றுகிறார் என்பது தெளிவாகிறது. இத்திட்டம் மனிதர் செய்யும் செயல்களின்படியன்றி, அழைக்கும் கடவுளுடைய செயலின்படியே நிறைவேறுகிறது என்பதும் தெளிவாகின்றது.

14 அப்படியானால் என்ன சொல்வோம்? கடவுள் நேர்மையற்றவரா? ஒருபோதும் இல்லை.

15 ஏனெனில், அவரே மோசேயிடம், “யார் யாருக்கு இரக்கம் காட்ட விரும்புகிறேனோ, அவர்களுக்கு இரக்கம் காட்டுவேன்: யார் யாருக்குப் பரிவுகாட்ட விரும்புகிறேனா, அவர்களுக்குப் பரிவுகாட்டுவேன்” என்றார்.

16 ஆகவே, மனிதர் விரும்புவதாலோ உழைப்பதாலோ எதுவும் ஆவதில்லை: கடவுள் இரக்கம் காட்டுவதாலேயே எல்லாம் ஆகிறது.

17 பார்வோனுக்கு மறைநூல் கூறுவதும் இதுவே: “உன் வழியாய் என் வல்லமையைக் காண்பிக்கவும் என் பெயரை நாடெங்கும் அறிக்கையிடவுமே நான் உன்னை நிலைக்கச் செய்தேன்.”

18 ஆகவே, கடவுள் தாம் விரும்புவது போலச் சிலருக்கு இரக்கம் காட்டுகிறார்: வேறு சிலரைக் கடின உள்ளத்தினர் ஆக்குகிறார்.

19 “அப்படியானால், கடவுள் மனிதர் மீது எப்படிக் குற்றம் சுமத்தமுடியும்? அவருடைய விருப்பத்தை யாரும் எதிர்க்க முடியாதல்லவா?” என்று நீங்கள் கேட்கலாம்.

20 மனிதர்களே! கடவுளை எதிர்த்துப் பேச நீங்கள் யார்? உருவாக்கப்பட்ட பொருள் தன்னை உருவாக்கியவரிடம், “ஏன் என்னை இவ்வாறு செய்தாய்?” எனக் கேட்குமோ?

21 ஒரே களிமண்ணைப் பிசைந்து மதிப்புள்ள கலனையோ மதிப்பற்ற கலனையோ வனையக் குயவனுக்கு உரிமை இல்லையா?

22 தமது சினத்தைக் காட்டவும் தமது வல்லமையை விளங்கச் செய்யவும் கடவுள் விரும்பியபோதிலும், அழிவுக்கும் அவருடைய சினத்துக்கும் இலக்கான கலன்களைப் பொறுத்தவரையில் அவர் மிக்க பொறுமை காட்டினாராயின், யார் என்ன சொல்ல முடியும்?

23 அவரது இரக்கத்திற்கு உரித்தான கலன்கள் மாட்சி பெறவேண்டும் என்று முன்னேற்பாடு செய்திருந்தார். அக்கலன்களைப் பொறுத்தவரை அவர் தமது அளவற்ற மாட்சியை வெளிப்படுத்த விரும்பினார்.

24 யூதர்கள் நடுவிலிருந்து மட்டுமன்றி, யூதரல்லாதார் நடுவிலிருந்தும் அவரால் அழைக்கப்பட்ட நாமே அந்தக் கலன்கள்.

25 அவ்வாறே, “என் மக்கள் அல்லாதோரை நோக்கி என் மக்கள் நீங்கள் என அழைப்பேன்: கருணைப் பெறாதோருக்குக் கருணை காட்டுவேன்” என்று ஓசேயா நூலில் எழுதப்பட்டுள்ளது அன்றோ!

26 “நீங்கள் என்னுடைய மக்கள் அல்ல” என்று அவர்களுக்குக் கூறப்பட்டதற்கு மாறாக, “வாழும் கடவுளின் மக்கள்” என்று அவர்களுக்குக் கூறப்படும் என்றும் அதில் எழுதியுள்ளது.

27 “இஸ்ரயேலே, உன் மக்கள் கடற்கரை மணலைப்போல் இருப்பினும் அவர்களுள் எஞ்சியிருப்போரே திரும்பிவருவர்:

28 காலம் தாழ்த்தாமல் ஆண்டவர் தாம் தீர்மானித்தபடியே நாடு முழுவதிலும் அனைத்தையும் செய்வார்” என்றும் எசாயா இஸ்ரயேல் மக்களைக் குறித்துக் கூறியுள்ளார்.

29 “படைகளின் ஆண்டவர் நம்மில் சிலரையேனும் எஞ்சியிருக்கச் செய்யாவிடில் சோதோமைப்போல் நாம் ஆகியிருப்போம்: கொமோராவுக்கு ஒப்பாகியிருப்போம்” என்றும் எசாயா முன்னுரைத்துள்ளார்.

30 அப்படியானால் என்ன சொல்வோம்? பிற இனத்தார் கடவுளுக்கு ஏற்புடையவர்கள் ஆவதற்காக முயற்சி செய்யாத போதிலும் அவருக்கு ஏற்புடையவர்கள் ஆக்கப்பட்டார்கள். அப்படி ஆக்கப்பட்டது அவர்கள் கொண்டிருந்த நம்பிக்கையால்தான்.

31 ஆனால், கடவுளுக்கு ஏற்புடையவர்களாகுமாறு இஸ்ரயேல் மக்கள் திருச்சட்டத்தைக் கடைப்பிடிக்க முயற்சி செய்த போதிலும் அவர்கள் வெற்றி பெறவில்லை.

32 இதன் காரணம் என்ன? அவர்கள் நம்பிக்கையை அடிப்படையாகக் கொள்ளாமல் செயல்களின் அடிப்படையில் முயற்சி செய்தார்கள். எனவே “தடைக்கல்லின் மேல்” தடுக்கி விழுந்தனர்.

33 இதைப்பற்றியே, “இதோ தடுக்கி விழச்செய்யும் கற்பாறையையும் இடறச்செய்யும் கல்லையும் சீயோனில் வைக்கிறேன். அதன்மேல் நம்பிக்கை கொண்டோர் வெட்கத்திற்குள்ளாக மாட்டார்” என்று மறைநூலில் எழுதியுள்ளது.

 மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு  திருவிவிலியம்

A Tamil Catholic website based on the scripture romans 4:20 to share your experience in Jesus and Mary with everyone.
anbinmadal.org | 2002-2019 | Email ID: anbinmadal at gmail.com