1 ஆகையால், பிறர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பு அளிப்போரே, நீங்கள் யாராயினும், சாக்குப் போக்குச்சொல்வதற்கு உங்களுக்கு வழியில்லை. ஏனெனில் பிறருக்கு எதிராகத் தீர்ப்பளிக்கும் போது நீங்கள் உங்களுக்கே தண்டனைத் தீர்ப்பை அளிக்கிறீர்கள். தீர்ப்பளிக்கும் நீங்களே அந்தத் தீர்ப்பைப் பெறுவதற்கான செயல்களைச் செய்கிறீர்களே!
2 இத்தகையவற்றைச் செய்வோருக்குக் கடவுள் அளிக்கும் தீர்ப்பு நீதி வழுவாதது என்பது நமக்குத் தெரியும்.
3 இவற்றைச் செய்வோர் மேல் தீர்ப்பளிக்கும் நீங்களும் இவற்றையே செய்து வருகிறீர்கள்! நீங்கள் மட்டும் கடவுளின் தீர்ப்பிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம் என நினைக்கிறீர்களா?
4 அல்லது, அவரது அளவற்ற பரிவையும் சகிப்புத்தன்மையையும் பொறுமையையும் ஏளனம் செய்கிறீர்களா? உங்களை மனம்மாறச் செய்வதற்கே கடவுள் பரிவுகாட்டுகிறார் என்பது உங்களுக்குத் தெரியாதா?
5 உங்கள் கடின உள்ளம் உங்களை மனம் மாற விடவில்லை: ஆகையால் கடவுளின் சினமும் நீதித் தீர்ப்பும் வெளிப்பட வேண்டிய நாளில் உங்களுக்கு வரப்போகும் தண்டனையைச் சேமித்து வைக்கிறீர்கள்.
6 ஒவ்வொருவருக்கும் அவரவர் செயல்களுக்கேற்பக் கடவுள் கைம்மாறு செய்வார்.
7 மனஉறுதியோடு நற்செயல் புரிந்து மாட்சி, மாண்பு, அழியாமை ஆகியவற்றை நாடுவோருக்கு அவர் நிலைவாழ்வை வழங்குவார்.
8 ஆனால், தன்னலம் நாடுபவர்களாய் உண்மைக்குப் பணியாமல், அநீதிக்குப் பணிபவர்களின் தலைமேல் அவருடைய சினமும் சீற்றமும் வந்து விழும்.
9 முதலில் யூதருக்கும் பிறகு கிரேக்கருக்கும் அதாவது, தீமை செய்யும் எல்லா மனிதருக்குமே வேதனையும் நெருக்கடியும் உண்டாகும்.
10 அவ்வாறே, முதலில் யூதருக்கும் அடுத்துக் கிரேக்கருக்கும் அதாவது, நன்மை செய்யும் அனைவருக்குமே பெருமையும் மாண்பும் அமைதியும் கிடைக்கும்.
11 ஏனெனில் கடவுள் ஆள் பார்த்துச் செயல்படுவதில்லை.
12 திருச்சட்டத்தை அறியாமல் பாவம் செய்யும் எவரும், அந்தச் சட்டத்தின் தீர்ப்புக்கு உட்படாமலேயே அழிவுறுவர்: திருச்சட்டத்துக்கு உட்பட்டு எவரும் பாவம் செய்தால், அச்சட்டத்தாலே தீர்ப்பளிக்கப்படுவர்.
13 ஏனெனில், திருச்சட்டத்தைக் கேட்பதால் மட்டும் யாரும் கடவுளுக்கு ஏற்புடையவர் ஆவதில்லை: அதனைக் கடைப்பிடிப்பவர்களே அவருக்கு ஏற்புடையவர்கள் ஆவார்கள்.
14 திருச்சட்டத்தைப் பெற்றிராத பிற இனத்தார் அதில் உள்ள கட்டளைகளை இயல்பாகக் கடைப்பிடிக்கும்போது, அவர்களுக்குத் திருச்சட்டம் இல்லாத போதிலும் தங்களுக்குத்தாங்களே அவர்கள் சட்டமாய் அமைகிறார்கள்.
15 திருச்சட்டம் கற்பிக்கும் ஒழுக்கநெறி தங்கள் உள்ளத்தில் எழுதப்பட்டிருக்கிறது என்பதை அவர்கள் தங்கள் நடத்தையில் காட்டுகிறார்கள். அவர்களது மனச்சான்றே இதற்குச் சாட்சி. ஏனெனில் அவர்கள் செய்வது குற்றமா குற்றமில்லையா என அவரவர் எண்ணங்களே வெளிப்படுத்துகின்றன.
16 நான் அறிவிக்கும் நற்செய்தியின்படி, மனிதர் உள்ளங்களில் மறைந்திருப்பவற்றைக் குறித்து இயேசுகிறிஸ்துவின் வாயிலாய்க் கடவுள் தீர்ப்பளிக்கும் நாளில் மேற்சொன்னவை நிகழும்.
17 யூதர் என்னும் பெயரைத் தாங்கித் திருச்சட்டத்தின் அடிப்படையில் வாழும் நீங்கள் கடவுளோடு கொண்டுள்ள உறவைப்பற்றிப் பெருமைப்படுகிறீர்கள்:
18 அவருடைய திருவுளத்தை அறிந்திருக்கிறீர்கள்: திருச்சட்டத்தைக் கற்றறிந்துள்ளதால் எது சிறந்தது எனச் சோதித்து அறிகிறீர்கள்.
19 அறிவையும் உண்மையும் தன்னகத்தே கொண்டுள்ள திருச்சட்டம் உங்களிடம் இருக்கிறது என்னும் உறுதியான நம்பிக்கையில் பார்வையற்றோருக்கு வழிகாட்டியாகவும்,
20 இருளில் இருப்போர்க்கு ஒளியாகவும், அறிவிலிகளுக்குக் கல்வி புகட்டுபவராகவும் குழந்தைகளுக்கு ஆசிரியராகவும் இருக்க முற்படுகிறீர்கள்.
21 ஆனால் பிறருக்குக் கற்றுக்கொடுக்கும் நீங்களே கற்றுக் கொள்ளவில்லையே! திருடாதே எனப்பறைசாற்றுகிறீர்கள்: நீங்களே திருடுவதில்லையா?
22 விபசாரம் செய்யாதே எனச் சொல்கிறீர்கள்: நீங்களே விபசாரம் செய்வதில்லையா? தெய்வச் சிலைகளைத் தீட்டாகக் கருதுகிறீர்கள்: நீங்களே அவற்றின் கோவில்களைக் கொள்ளையிடுவதில்லையா?
23 திருச்சட்டத்தைப் பற்றிப் பெருமைப்படுகிறீர்கள்: நீங்களே அச்சட்டத்தை மீறிக் கடவுளை இழிவுபடுத்துவதில்லையா?
24 ஆம், மறைநூலில் எழுதியுள்ளவாறு”உங்களால் கடவுளின் பெயர் பிற இனத்தாரிடையே இகழப்படுகின்றது.”
25 நீங்கள் திருச்சட்டத்தைக் கடைப்பிடித்தால் விருத்தசேதனத்தால் உங்களுக்கு பயனுண்டு: ஆனால் திருச்சட்டத்தை மீறினால் நீங்கள் விருத்தசேதனம் பெற்றிருந்தும் பெறாதவர்களாகவே இருக்கிறீர்கள்.
26 ஆகையால், விருத்தசேதனம் செய்துகொள்ளாத ஒருவர் திருச்சட்டத்தின் ஒழுங்குகளைக் கடைப்பிடித்தால், விருத்தசேதனம் செய்துகொள்ளாவிட்டாலும் விருத்தசேதனம் செய்து கொண்டவராக அவர் கருதப்படலாம் அல்லவா?
27 உடலில் விருத்தசேதனம் செய்யாதிருந்தும் திருச்சட்டத்தை நிறைவேற்றுவோர், எழுதிய சட்டத்தையும் விருத்தசேதனத்தையும் பெற்றிருந்தும் அச்சட்டத்தை மீறும் நீங்கள் குற்றவாளிகளெனத் தீர்ப்பு அளிப்பர்.
28 ஏனெனில், புறத் தோற்றத்தில் மட்டும் யூதராய் இருப்பவர் யூதரல்ல: அவ்வாறே, புறத்தோற்றத்தில், அதாவது உடலில் மட்டும் செய்யப்படும் விருத்தசேதனமும் விருத்தசேதனம் அல்ல.
29 ஆனால் அகத்தில் யூதராய் இருப்பவரே உண்மையான யூதர், உள்ளத்தில் செய்யப்படும் விருத்தசேதனமே உண்மையான விருத்தசேதனம். அது எழுதிய சட்டத்தின்படி செய்யப்படுவது அல்ல, தூய ஆவியால் செய்யப்படுவதாகும். அத்தகையவர் மனிதரிடமிருந்து அல்ல, கடவுளிடமிருந்தே பாராட்டுப் பெறுவர்.