உரோமையருக்கு எழுதிய திருமுகம் - 1

அதிகாரங்கள்



1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16

அதிகாரம் 1

1 கடவுளின் அன்பைப் பெற்று இறைமக்களாக அழைக்கப்பட்டுள்ள உரோமை நகர மக்கள் அனைவருக்கும் இயேசு கிறிஸ்துவின் பணியாளனும் திருத்தூதனாக அழைப்புப் பெற்றவனும் கடவுளின் நற்செய்திப் பணிக்கென ஒதுக்கி வைக்கப்பட்டவனுமாகிய பவுல் எழுதுவது:

2 நற்செய்தியைத் தருவதாகக் கடவுள் தம் இறைவாக்கினர் வழியாக ஏற்கெனவே திருமறை நூலில் வாக்களித்திருந்தார்.

3 இந்த நற்செய்தி அவருடைய மகனைப்பற்றியதாகும். இவர் மனிதர் என்னும் முறையில் தாவீதின் வழி மரபினர்:

4 தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்ட நிலையில் வல்லமையுள்ள இறைமகன். இவர் இறந்து உயிர்த்தெழுந்ததால் இந்த உண்மை நிலைநாட்டப்பட்டது. இவரே நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து.

5 பிற இனத்தார் அனைவரும் இவர்மீது நம்பிக்கை கொண்டு இவருக்குக் கீழ்ப்படியுமாறு இவர் பெயர் விளங்க இவர் வழியாகவே நாங்கள் திருத்தூதுப்பணி செய்வதற்குரிய அருளைப் பெற்றுக்கொண்டோம்.

6 பிற இனத்தவராகிய நீங்களும் இயேசுகிறிஸ்துவுக்கு உரியவர்களாய் இருக்க அழைப்புப் பெற்றிருக்கிறீர்கள்.

7 நம் தந்தையாம் கடவுளிடமிருந்தும் ஆண்டவராம் இயேசு கிறிஸ்துவிடமிருந்தும் உங்களுக்கு அருளும் அமைதியும் உரித்தாகுக!

8 முதற்கண் உங்கள் அனைவருக்காகவும் நான் இயேசு கிறிஸ்து வழியாய் என் கடவுளுக்கு நன்றி கூறுகிறேன். ஏனெனில் நீங்கள் கொண்டிருக்கும் நம்பிக்கை உலக முழுவதிலும் தெரிந்திருக்கிறது.

9 தம் திருமகனைப்பற்றிய நற்செய்தியை அறிவிக்கும் பணியின் மூலம் நான் உளமார வழிபட்டுவரும் கடவுள் சாட்சியாய்ச் சொல்கிறேன்: உங்களை நினைவுகூர்ந்து,

10 உங்களுக்காக எப்போதும் இறைவனிடம் வேண்டி வருகிறேன். கடவுளின் திருவுளத்தால் நான் உங்களிடம் வருவதற்கு இப்பொழுதாவது இறுதியாக ஒரு வாய்ப்புக் கிடைக்க வேண்டுமென மன்றாடி வருகிறேன்.

11 நான் உங்களைக் காண ஏங்குகிறேன்: அங்கே வந்து உங்களை உறுதிப்படுத்துவதற்காக ஆவிக்குரிய கொடை ஏதேனும் உங்களுக்கு வழங்க வேண்டுமென விழைகிறேன்.

12 நீங்கள் கொண்டுள்ள நம்பிக்கையால் நானும், நான் கொண்டுள்ள நம்பிக்கையால் நீங்களும் ஒருவருக்கொருவர் ஊக்கமூட்டப் பெறவேண்டுமென விழைகிறேன்.

13 பிற மக்களிடையே நான் செய்த பணியால் பயன்விளைந்தது. அதுபோல உங்களிடையேயும் சிறிதளவாவது பயன்விளையும் முறையில் பணியாற்ற விரும்பி உங்களிடம் வர பன்முறை திட்டமிட்டேன்: ஆயினும் இன்று வரை தடைகள் வந்து கொண்டே இருக்கின்றன. சகோதர சகோதரிகளே, இதை நீங்கள் அறியவேண்டுமென விரும்புகிறேன்.

14 கிரேக்கருக்கும் கிரேக்கரல்லாதார்க்கும், அறிவாளிகளுக்கும் அறிவிலிகளுக்கும் நான் கடமைப்பட்டிருக்கிறேன்.

15 ஆதலால்தான் உரோமையராகிய உங்களுக்கும் நற்செய்தி அறிவிக்கவேண்டுமென நான் ஆர்வம் கொண்டுள்ளேன்.

16 நற்செய்தியை முன்னிட்டு வெட்கப்படமாட்டேன்: ஏனெனில், அதுவே கடவுளின் மீட்பளிக்கும் வல்லமை. முதலில் யூதருக்கும், அடுத்துக் கிரேக்கருக்கும்- அதாவது நற்செய்தியை நம்பும் ஒவ்வொருவருக்கும்-அந்த மீட்பு உண்டு.

17 ஏனெனில்”நேர்மையுடையோர் தம் நம்பிக்கையால் வாழ்வு அடைவர்” என மறைநூலில் எழுதியுள்ளது அல்லவா! இவ்வாறு மனிதரைத் தமக்கு ஏற்புடையவராக்கும் கடவுளின் செயல் நற்செய்தியில் வெளிப்படுகிறது. தொடக்கமுதல் இறுதிவரை இந்தச் செயல் நம்பிக்கையின் அடிப்படையில்தான் நிகழ்கிறது.

18 இறைப்பற்று இல்லா மனிதர்களின் எல்லா வகையான நெறிகேடுகளின் மீதும் கடவுளின் சினம் விண்ணினின்று வெளிப்படுகிறது: ஏனெனில், இவர்கள் தங்கள் நெறிகேட்டினால் உண்மையை ஒடுக்கிவிடுகின்றார்கள்.

19 கடவுளைப் பற்றி அறியக்கூடியதெல்லாம் அவர்களுக்குத் தெளிவாக விளங்கிற்று: அதைக் கடவுளே அவர்களுக்குத் தெளிவுறுத்தியிருக்கிறார்.

20 ஏனெனில் கண்ணுக்குப் புலப்படா அவருடைய பண்புகள்-அதாவது, என்றும் நிலைக்கும் அவரது வல்லமையும் கடவுள் தன்மையும்-உலகப் படைப்பு முதல் அவருடைய செயல்களில் மனக் கண்களுக்கு தெளிவாய்த் தெரிகின்றன. ஆகவே அவர்கள் சாக்குப்போக்கு சொல்வதற்கு வழியே இல்லை.

21 ஏனெனில், அவர்கள் கடவுளை அறிந்திருந்தும் கடவுளுக்குரிய மாட்சியை அவருக்கு அளிக்கவில்லை: நன்றி செலுத்தவுமில்லை. அதற்கு மாறாக அவர்கள் எண்ணங்கள் பயனற்றவையாயின. உணர்வற்ற அவர்களது உள்ளம் இருண்டு போயிற்று.

22 தாங்கள் ஞானிகள் என்று சொல்லிக்கொள்ளும் அவர்கள் மடையர்களே.

23 அழிவில்லாக் கடவுளை வழிபடுவதற்குப் பதிலாக அழிந்துபோகும் மனிதரைப்போலவும், பறப்பன, நடப்பன, ஊர்வன ஆகியவற்றைப் போலவும் உள்ள உருவங்களை வழிபட்டனர்.

24 ஆகவே, அவர்களுடைய உள்ளத்தின் இச்சைகளுக்கு ஏற்ப ஒருவரோடொருவர் தங்கள் உடல்களை இழிவுபடுத்துகின்ற ஒழுக்கக்கேடான செயல்களைச் செய்யும்படி கடவுள் அவர்களை விட்டுவிட்டார்.

25 அவர்கள் கடவுளைப் பற்றிய உண்மைக்குப் பதிலாகப் பொய்ம்மையை ஏற்றுக் கொண்டார்கள்: படைக்கப்பட்டவற்றை வழிபட்டு அவற்றுக்குப் பணி செய்தார்கள்: படைத்தவரை மறந்தார்கள்: அவரே என்றென்றும் போற்றுததற்குரியவர். ஆமென்.

26 ஆகையால் கடவுள், கட்டுக்கடங்காத இழிவான பாலுணர்வுகொள்ள அவர்களை விட்டு விட்டார். அதன் விளைவாக, அவர்களுடைய பெண்கள் இயல்பான இன்ப முறைக்குப் பதிலாக இயல்புக்கு மாறான முறையில் நடந்துகொண்டார்கள்.

27 அவ்வாறே ஆண்களும் பெண்களோடு சேர்ந்து இன்பம் பெறும் இயல்பான முறையைவிட்டு தங்களிடையே ஒருவர்மீது ஒருவர் வேட்கை கொண்டு காமத்தீயால் பற்றி எரிந்தார்கள். ஆண்கள் ஆண்களுடன் வெட்கத்திற்குரிய செயல்களைச் செய்து, தாங்கள் நெறி தவறியதற்கான கூலியைத் தங்கள் உடலில் பெற்றுக்கொண்டார்கள்.

28 கடவுளை அறிந்து ஏற்றுக் கொள்ளும் தகுதியை அவர்கள் இழந்து விட்டதால் சீர்கெட்ட சிந்தனையின் விளைவாகத் தகாத செயல்களைச் செய்யுமாறு கடவுள் அவர்களை விட்டு விட்டார்.

29 இவ்வாறு, அவர்கள் எல்லா வகை நெறிகேடுகளும், பொல்லாங்கு, பேராசை, தீமை ஆகியவையும் நிறைந்தவர்களானார்கள். அவர்களிடம் பொறாமை, கொலை, சண்டைச் சச்சரவு, வஞ்சகம், தீவினை முதலியவை மலிந்துவிட்டன. அவர்கள் புறங்கூறுபவர்கள்,

30 அவதூறு பேசுபவர்கள், கடவுளை வெறுப்பவர்கள், இழித்துரைப்பவர்கள், செருக்குற்றவர்கள், வீம்பு பாராட்டுபவர்கள், தீய வழிகளைக் கண்டுபிடிப்பவர்கள், பெற்றோருக்குக் கீழ்ப்படியாதவர்கள்:

31 சொல் தவறுபவர்கள், மதிகெட்டவர்கள், பாசம் அற்றவர்கள், இரக்கம் இல்லாதவர்கள்.

32 இப்படியெல்லாம் நடப்பவர்கள் சாவுக்குரியவர்கள் என்னும் கடவுளின் ஒழுங்கை அறிந்திருந்தும் இவ்வாறு நடக்கின்றார்கள்: தாங்கள் நடப்பது மட்டுமன்று, அப்படி நடப்பவர்களையும் பாராட்டுகிறார்கள்.

 மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு  திருவிவிலியம்

A Tamil Catholic website based on the scripture romans 4:20 to share your experience in Jesus and Mary with everyone.
anbinmadal.org | 2002-2019 | Email ID: anbinmadal at gmail.com