திருத்தூதர் பணிகள் - 23

அதிகாரங்கள்



1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28

அதிகாரம் 23

1 பவுல் தலைமைச் சங்கத்தாரை உற்றுப் பார்த்து, “சகோதரரே! நான் இந்நாள்வரை கடவள் முன்னிலையில் என் மனச்சான்றுக்கிசைய முற்றிலும் நேர்மையாக வாழ்ந்து வந்தேன்” என்றார்.

2 அப்பொழுது தலைமைக் குரவாகிய அனனியா அவரது வாயில் அடிக்கும்படியாக அருகில் நிற்பவர்களைப் பணித்தார்.

3 பவுல் அவரிடம், “வெள்ளையடிக்கப்பட்ட சுவரே! கடவுள் உம்மை அடிப்பார். திருச்சட்டத்தின்படி எனக்குத் தீர்ப்பளிக்க அமர்ந்திருக்கும் நீர் அச்சட்டத்துக்கு முரணாக என்னை அடிக்க எப்படி ஆணை பிறப்பிக்கலாம்?” என்று கேட்டார்.

4 அருகில் நின்றவர்கள், “கடவுளின் தலைமைக் குருவைப் பழிக்கிறாயே? என்று கேட்டார்கள்.

5 அதற்குப் பவுல், “சகோதரரே! இவர் தலைமைக் குரு என்று எனக்குத் தெரியாது. ஏனெனில் “உன் மக்களின் தலைவரைச் சபிக்காதே” என மறைநூலில் எழுதியுள்ளதே” என்றார்.

6 அவர்களுள் ஒரு பகுதியினர் பரிசேயர் என்றும், மறுபகுதியினர் பரிசேயர் என்றும் பவுல் அறிந்து, “சகோதரரே! நான் ஒரு பரிசேயன். பரிசேய மரபில் பிறந்தவன்: இறந்தோர் உயிர்த்தெழுவர் என்னும் எதிர்நோக்கின் பொருட்டு விசாரிக்கப்படுகிறேன்” என்று தலைமைச் சங்கத்தின் முன் உரத்த குரலில் கூறினார்.

7 அவர் இப்படிச் சொன்னபோது பரிசேயருக்கும் சதுசேயருக்குமிடையே வாக்குவாதம் எழுந்தது. எனவே அங்குத் திரண்டிருந்தோர் இரண்டாகப் பிரிந்தனர்.

8 சதுசேயப் பிரிவினர் வானதூதரும் உயிர்த்தெழுதல், ஆவிகள் ஆகியனவும் இல்லை என்று கூறி வந்தனர்: பரிசேயர் இவையனைத்தும் உண்டென ஏற்றுக் கொண்டனர்.

9 அங்குப் பெருங்கூச்சல் எழுந்தது. பரிசேயப் பிரிவினைச்சேர்ந்த மறைநூல் அறிஞருனள் சிலர் எழுந்து, “இவரிடம் தவறொன்றையும் காணோமே! வானதூதர் ஒரவரோ, ஓர் ஆவியோ இவரோடு பேசிடயிருக்கலாம் அல்லவா!” என வாதாடினர்.

10 வாக்குவாதம் முற்றவே அவர்கள் பவுலைப் பிய்த்தெறிந்து விடுவர் என ஆயிரத்தவர் தலைவர் அஞ்சி படைவீரரை வரச்சொல்லி அவரை அவர்கள் நடுவிலிருந்து பிடித்துக் கோட்டைக்குள் கூட்டிக்கொண்டு செல்லுமாறு ஆணை பிறப்பித்தார்.

11 மறுநாள் இரவு ஆண்டவர் அவரருகில் நின்று, “துணிவோடிரும்: எருசலேமில் என்னைப்பற்றி சான்று பகர்ந்தது போல உரோமையிலும் நீர் சான்றுபகர வேண்டும்” என்றார்.

12 பொழுது விடிந்ததும் யூதர்கள் ஒன்று கூடி, “நாங்கள் பவுலைக் கொல்லும் வரை உண்ணவோ, குடிக்கவோ மாட்டோம்” எனத் தங்களிடையே சூளுரைத்துக் கொண்டார்கள்.

13 இவ்வாறு, சூழ்ச்சி செய்தவர்கள் எண்ணிக்கை நாற்பதுக்குக் கூடுதல் இருக்கும்.

14 அவாகள் தலைமைக் குருவிடமும் மூப்பரிடமும் சென்று, “நாங்கள் பவுலைக் கொல்லும் வரை எதுவும் உண்ண மாட்டோம் என்று ஆணையிட்டு சூளுரைத்துள்ளோம்.

15 எனவே இப்போது நீங்களும் தலைமைச் சங்கத்தாரும் மிகக் கருத்தாய் விசாரிக்கும் நோக்குடன் அவரை உங்களிடம் கூட்டிக்கொண்டு வருவதாக ஆயிரத்தவர் தலைவரிடம் தெளிவுபடுத்துங்கள். அவர் உங்களிடம் வந்து சேருமுன் அவரைக் கொன்றுவிட நாங்கள் ஆயத்தமாயிருப்போம்” என்றார்கள்.

16 இச் சூழ்ச்சியைப் பற்றிப் பவுலின் சகோதரி மகன் கேள்விப்பட்டு, கோட்டைக்குள் சென்று இதனைப் பவுலிடம் அறிவித்தார்.

17 பவுல் நூற்றுவர் தலைவர்களுள் ஒருவரை வரவழைத்து, “இந்த இளைஞரை ஆயிரத்தவர் தலைவரிடம் கூட்டிச் செல்லுங்கள். அவரிடம் இவர் ஏதொ ஒன்று அறிவிக்க வேண்டுமாம்” என்றார்.

18 அவரும் அந்த இளைஞரை ஆயிரத்தவர் தலைவரிடம் கூட்டிச் சென்று அவரிடம், “கைதியான பவுல் என்னை வரவழைத்து இந்த இளைஞரை உம்மிடம் கூட்டிக் கொண்டு வருமாறு என்னிடம் கேட்டுக்கொண்டார். இவர் ஏதோ ஒன்று உம்மிடம் சொல்ல வேண்டுமாம்” என்றார்.

19 ஆயிரத்தவர் தலைவர் அவர் கையைப் பிடித்துத் தனியே கூட்டிச் சென்ற, “நீ என்னிடம் என்ன அறிவிக்க வேண்டும்?” என்று வினவினார்.

20 அவர், “யூதர்கள் பவுலை மிகக் கருத்தாய் விசாரிக்கும் நோக்கம் உடையவர்கள் போல் அவரைத் தலைமைச் சங்கத்திற்கு நாளை கொண்டுவர உம்மைக் கேட்டுக் கொள்ள வேண்டுமென உடன்பாடு செய்து கொண்டுள்ளார்கள்.

21 நீர் அவர்களுக்கு இணங்க வேண்டாம். ஏனெனில் அவர்களுள் நாற்பதுக்கும் அதிகமானோர் சூழ்ச்சி செய்து நாங்கள் பவுலைக் கொல்லும் வரை உண்ணவும், குடிக்கவும் மாட்டோம் எனச் சூளுரைத்துள்ளனர். உம்முடைய முடிவை அறிந்து கொள்ளத் தகுந்த ஏற்பாடுகளுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள்” என்று சொன்னார்.

22 அப்போது ஆயிரத்தவர் தலைவர் இளைஞரிடம், “இவற்றை என்னிடம் தெரிவித்ததாக நீர் எவருக்கும் சொல்லாதீர்” என்று கூறி அவரை அனுப்பிவிட்டார்.

23 பின்பு ஆயிரத்தவர் தலைவர் நூற்றுவர் தலைவருள் இருவரை வரவழைத்து, “இருநூறு படை வீரருடனும் எழுபது குதிரை வீரருடனும் இரவு ஒன்பது மணிக்குச் செசரியா செல்லுவதற்கு ஏற்பாடு செய்யுங்கள்.

24 பவுலை ஏற்றிச் செல்ல விலங்குகளையும் பார்த்து வையுங்கள். அவரை ஆளுநர் பெலிக்சிடம் பாதுகாப்பாகக் கொண்டு சேர்க்க வேண்டும்” என்றார்.

25 அவர் பெலிக்சுக்குப் பின்வருமாறு ஒரு கடிதத்தையும் எழுதினார்:

26 26”மாண்புமிகு ஆளுநர் பெலிக்சு அவர்களுக்குக் கிலவுதியு லீசியாவின் வாழ்த்துக்கள்.

27 யூதர்கள் இம்மனிதரைப் பிடித்துக் கொல்லவிருந்த நேரத்தில், இவர் ஒரு உரோமைக் குடிமகன் என்பதை அறிந்து படைவீரர்களுடன் சென்று இவரை நான் விடுவித்தேன்.

28 அவர்கள் இனிமேல் குற்றம் சாட்டக் காரணம் என்ன என்று அறிந்து கொள்ள நான் இவரைத் தலைமைக் சங்கத்துக்குக் கூட்டிச் சென்றேன்.

29 அவர்களுடைய திருச்சட்டம் சார்ந்த கருத்து வேறுபாடுகளின் காரணமாகத்தான் இவர் குற்றம் சாட்டப்பட்டிருக்கிறார். சாவுக்கோ சிறைத் தண்டனைக்கோ உரிய குற்றம் எதையும் இவரிடத்தில் நான் காணவில்லை.

30 இவருக்கு எதிராக யூதர்கள் சூழ்ச்சி செய்திருக்கிறார்கள் என்னும் செய்தி எனக்கு தெரிவிக்கப்பட்ட உடனே இவரை உம்மிடம் அனுப்பி வைக்கிறேன். இவருக்கு எதிராக குற்றம் சாட்டியோர் கூற வேண்டியவற்றை உம்முன் வந்து கூறவும் கட்டளையிட்டுள்ளேன். ”

31 படைவீரர்கள் தங்களுக்குப் பணிக்கப்பட்டவாறே இரவிலேயே பவுலைக் கூட்டிக் கொண்டு அந்திப் பத்திரிக்குப் போனார்கள்.

32 மறுநாள் குதிரை வீரரைப் பவுலுடன் அனுப்பி விட்டு மற்றவர்கள் கோட்டைக்குத் திரும்பினார்கள்.

33 அவர்கள் செசரியா வந்தபோது அக்கடிதத்தை ஆளநரிடம் கொடுத்துப் பவுலையும் அவர்முன் நிறுத்தினார்கள்.

34 ஆளுநர் கடிதத்தை வாசித்தபின் பவுல் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவரெனக் கேட்டு அவர் சிலிசியாவைச் சேர்ந்தவரென அறிந்து கொண்டார்.

35 பின்பு “உன்னைக் குற்றம் சாட்டுபவர்கள் இங்கு வந்து சேர்ந்ததும் நான் உன் வழக்கைக் கேட்பேன்” என்று கூறி ஏரொதின் மாளிகையில் அவரைக் காவலில் வைக்குமாறு ஆணை பிறப்பித்தார்.

 மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு  திருவிவிலியம்

A Tamil Catholic website based on the scripture ACTS 4:20 to share your experience in Jesus and Mary with everyone.
anbinmadal.org | 2002-2019 | Email ID: anbinmadal at gmail.com