திருத்தூதர் பணிகள் - 8

அதிகாரங்கள்



1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28

அதிகாரம் 8

1 ஸ்தேவானைக் கொலை செயவதற்குச் சவுலும் உடன்பட்டிருந்தார். அந்த நாள்களில் எருசலேம் திருச்சபை பெரும் இன்னலுக்குள்ளாகியது. திருத்தூதர்களைத் தவிர மற்ற அனைவரும் யூதேயா, சமாரியாவின் நாட்டுப் புறமெங்கும் சிதறடிக்கப்பட்டுப் போயினர்.

2 இறைப்பற்று உள்ள மக்கள் ஸ்தேவானை அடக்கம்செய்து, அவருக்காக மாரடித்துப் பெரிதும் புலம்பினர்.

3 சவுல் வீடுவீடாய் நுழைந்து ஆண்களையம் பெண்களையும் இழுத்துக்கொண்டுபோய், அவர்களைச் சிறையிலடைக்கச் செய்தார். இவ்வாறு அவர் திருச்சபையை அழித்துவந்தார்.

4 சிதறிய மக்கள் தாங்கள் சென்ற இடமெல்லாம் நற்செய்தியை அறிவித்து வந்தனர்.

5 பிலிப்பு சமாரியா நகர் சென்று அங்குள்ள மக்களுக்கு மெசியாவைப்பற்றி அறிவித்தார்.

6 பிலிப்பு சொன்னவற்றைக் கேட்டும் அவர் செய்த அரும் அடையாளங்களைக் கண்டும் வந்த திரளான மக்கள் ஒரு மனத்தோடு அவருக்குச் செவிசாய்த்தனர்.

7 ஏனெனில் பலரைப் பிடித்திருந்த தீய ஆவிகள் அவர்களிடமிருந்து உரத்தக் குரலுடன் கூச்சலிட்டுக் கொண்டே வெளியேறின. முடக்குவாதமுற்றோர், கால் ஊனமுற்றோர் பலரும் குணம் பெற்றனர்.

8 இதனால் அந்நகரில் பெரும் மகிழ்ச்சி உண்டாயிற்று.

9 அந்நகரில் சீமோன் என்னும் பெயருள்ள ஒருவன் இருந்தான். அவன் தன் மாயவித்தைகளால் சமாரியாவின் மக்கள் எல்லாரையும் மலைப்புக்குள்ளாக்கித் தன்னை ஒரு பெரிய மனிதனாகக் காட்டிவந்தான்.

10 சிறியோர்முதல் பெரியோர்வரை அனைவரும், “மாபெரும் வல்லமையாம் கடவுளின் வல்லமை இவரிடம் உள்ளது” என்று கூறி அவனுக்குச் செவிசாய்த்தனர்.

11 அவன் தன் மாய வித்தைகளால் நெடுங்காலமாக அவர்களை மலைப்புக்குள்ளாக்கியதால் அவர்கள் அவனுக்குச் செவிசாய்த்தார்கள்.

12 ஆயினும் இறையாட்சியையும், இயேசு கிறிஸ்துவின் திருப்பெயரையும்பற்றிய நற்செய்தியைப் பிலிப்பு அறிவித்தபோது பல ஆண்களும் பெண்களும் நம்பிக்கைக்கொண்டு திருமுழுக்குப் பெற்றார்கள்.

13 சீமோனும் நம்பிக்கைகொண்டவனாய்த் திருமுழுக்குப் பெற்று, பிலிப்புடன் கூடவே இருந்தான்; அவர் செய்த அரும் அடையாளங்களையும் வல்ல செயல்களையும் கண்டு மலைத்து நின்றான்.

14 சமாரியர் கடவுளின் வார்த்தையை ஏற்றுக்கொண்டனர் என்பதை எருசலேமிலுள்ள திருத்தூதர்கள் கேள்விப்பட்டு, பேதுருவையும் யோவானையும் அவர்களிடம் அனுப்பி வைத்தார்கள்.

15 அவர்கள் சென்று சமாரியர் தூய ஆவியால் ஆட்கொள்ளப்படுமாறு இறைவனிடம் வேண்டினார்கள்.

16 ஏனெனில் அதுவரை அவர்களுள் யாருக்கும் தூய ஆவி அருளப்படவில்லை. ஆண்டவராகிய இயேசுவின் பெயரால் அவர்கள் திருமுழுக்கு மட்டுமே பெற்றிருந்தார்கள்.

17 பின்பு பேதுருவும் யோவானும் தங்கள் கைகளை அவர்கள்மீது வைக்கவே அவர்கள் தூய ஆவியைப் பெற்றார்கள்.

18 திருத்தூதர் கைகளை வைத்ததும் அவர்கள் தூய ஆவியைப் பெற்றுக் கொண்டதைச் சீமோன் கண்டபோது,

19 “நான் யார்மீது கைகளை வைப்பேனோ அவரும் தூய ஆவியைப் பெற்றுக் கொள்ளும்படி எனக்கும் இந்த அதிகாரத்தைக் கொடுங்கள்” என்று கூறி, அதற்காகப் பணம் கொடுக்க முன்வந்தான்.

20 அப்போது பேதுரு அவனிடம், “கடவுளது கொடையைப் பணம் கொடுத்து வாங்க எண்ணியதால் நீயும் உன் பணத்தோடு நாசமாய்ப் போ.

21 உன் உள்ளம் கடவுளின்முன் நேர்மையற்றதாய் இருப்பதால், இதில் உனக்குப் பங்குமில்லை, உரிமையுமில்லை.

22 இப்போதே உனது தீய போக்கைவிட்டு நீ மனம் மாறி ஆண்டவரிடம் மன்றாடு. ஒருவேளை உன் உள்ளத்தில் எழுந்த இந்த எண்ணம் மன்னிக்கப்படலாம்.

23 ஏனென்றால் நீ கசப்பு நிறைந்த உள்ளத்தினனாய் தீவினைக்கு அடிமையாயிருப்பதை நான் காண்கிறேன்” என்று கூறினார்.

24 சீமோன் அதற்கு மறுமொழியாக, “நீங்கள் கூறிய கேடு எதுவும் எனக்கு நேரிடாதவாறு எனக்காக ஆண்டவரிடம் மன்றாடுங்கள்,” என்றான்.

25 பிறகு அவர்கள் ஆண்டவரின் வார்த்தையை எடுத்துக் கூறிச் சான்று பகர்ந்தவாறே எருசலேமுக்குத் திரும்பினார்கள்; சமாரியாவின் பல ஊர்களிலும் நற்செய்தியை அறிவித்தார்கள்.

26 பின்பு ஆண்டவரின் தூதர் பிலிப்பிடம், “நீ எழுந்து எருசலேமிலிருந்து காசாவுக்குச் செல்லும் வழியாகத் தெற்கு நோக்கிப் போ” என்றார். அது ஒரு பாலைநிலப் பாதை.

27 பிலிப்பு அவ்வாறே புறப்பட்டுப்போனார். அப்போது எத்தியோப்பிய அரச அலுவலர் ஒருவர் எருசலேம் சென்று, கடவுளை வணங்கி விட்டுத் திரும்பிச் சென்று கொண்டிருந்தார். அவர் ஓர் அலி; எத்தியோப்பிய அரசியான கந்தகியின் நிதியமைச்சர்.

28 அவர் தமது தேரில் அமர்ந்து எசாயாவின் இறைவாக்கு நூலைப் படித்துக் கொண்டிருந்தார்.

29 தூய ஆவியார் பிலிப்பிடம், “நீ அந்தத் தேரை நெருங்கிச் சென்று அதனோடு கூடவே போ” என்றார்.

30 பிலிப்பு ஓடிச் சென்று, அவர் எசாயாவின் இறைவாக்கு நூலை வாசிப்பதைக் கேட்டு, “நீர் வாசிப்பதின் பொருள் உமக்குத் தெரிகின்றதா?” என்று கேட்டார்.

31 அதற்கு அவர், “யாராவது விளக்கிக்காட்டாவிட்டால் எவ்வாறு என்னால் தெரிந்துகொள்ள முடியும்?” என்று கூறித்தேரில் ஏறித் தன்னோடு அமருமாறு பிலிப்பை அழைத்தார்.

32 அவர் வாசித்துக்கொண்டிருந்த மறைநூல் பகுதி பின்வருமாறு; “அடிப்பதற்கு இழுத்துச்செல்லப்பட்ட ஆட்டுக்குட்டிபோலும், உரோமம் கத்தரிப்போன் முன்னிலையில் கத்தாத செம்மறி போலும் அவர்தம் வாயைத் திறவாதிருந்தார்.

33 தாழ்வுற்ற நிலையில் அவருக்கு நீதி வழங்கப்படவில்லை. அவருடைய தலைமுறையைப் பற்றி எடுத்துரைப்பவன் யார்? ஏனெனில் அவருடைய உயிர்தான் எடுக்கப்பட்டுவிட்டதே!”

34 அவர் பிலிப்பிடம், “இறைவாக்கினர் யாரைக்குறித்து இதைக் கூறுகிறார்?தம்மைக் குறித்தா, அல்லது மற்றொருவரைக் குறித்தா? தயவுசெய்து கூறுவீரா?” என்று கேட்டார்.

35 அப்போது பிலிப்பு, இந்த மறைநூல் பகுதியிலிருந்து தொடங்கி, இயேசுவைப்பற்றிய நற்செய்தியை அவருக்கு அறிவித்தார்.

36 அவர்கள் போய்க் கொண்டிருந்தபோது வழியில் தண்ணீர் இருந்த ஓர் இடத்துக்கு வந்தார்கள். அப்போது அவர், “இதோ, தண்ணீர் உள்ளதே, நான் திருமுழுக்குப்பெற ஏதாவது தடை உண்டா?” என்று கேட்டார்.

37 ‘அதற்குப் பிலிப்பு, “நீர் முழு உள்ளத்தோடு நம்பினால் தடையில்லை” என்றார். உடனே அவர், “இயேசு கிறிஸ்து இறைமகன் என்று நம்புகிறேன்” என்றார்.’

38 உடனே அமைச்சர் தேரை நிறுத்தக் கூறினார். பிலிப்பு, அமைச்சர் ஆகிய இருவரும் தண்ணீருக்குள் இறங்கினர். பிலிப்பு அவருக்குத் திருமுழுக்குக் கொடுத்தார்.

39 அவர்கள் தண்ணீரிலிருந்து வெளியேறினவுடனையே ஆண்டவரின் ஆவியார் பிலிப்புவை எடுத்துச் சென்றுவிட்டார். அமைச்சர் அதன்பின் அவரைக் காணவில்லை; அவர் மகிழச்சியோடு தம் வழியே சென்றார்.

40 பின்பு பிலிப்பு ஆசோத்து என்னும் இடத்தில் காணப்பட்டார். செசரியா போய்ச் சேரும்வரை அவர் சென்ற நகரங்களிலெல்லாம் நற்செய்தியை அறிவித்தார்.

 மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு  திருவிவிலியம்

A Tamil Catholic website based on the scripture ACTS 4:20 to share your experience in Jesus and Mary with everyone.
anbinmadal.org | 2002-2019 | Email ID: anbinmadal at gmail.com