1 இக்கோனியாவிலும் இப்படியே நிகழ்ந்தது. பவுலும் பர்னபாவும் யூதருடைய தொழுகைக் கூடத்திற்குச் சென்று இவ்வாறே பேசியபோது, யூதரிலும், கிரேக்கரிலும் பெருந் திரளானோர் நம்பிக்கை கொண்டனர்.
2 ஆனால் நம்பாத யூதர், சகோதரருக்கு எதிராகப் பிற இனத்தவரைத் தூண்டிவிட்டு அவர்கள் உள்ளத்தைக் கெடுத்தனர்.
3 ஆயினும் அவர்கள் அங்குப் பல நாள் தங்கி ஆண்டவரைப்பற்றித் துணிவுடன் பேசினார்கள். ஆண்டவரும் தம் அருள் செய்திக்குச் சான்றாகப் பல அடையாளங்களையும் அருஞ்செயல்களையும் அவர்கள் வழியாகச் செய்தார்.
4 திரண்டிருந்த நகரமக்கள் இரண்டாகப் பிரித்தனர். ஒரு பிரிவினர் யூதரோடும், மற்றப் பிரிவினர் திருத்தூதரோடும், சேர்ந்துகொண்டனர்.
5 பிற இனத்தாரும் யூதரும் தம் தலைவர்களுடன் சோந்து திருத்தூதரை இழிவுபடுத்தி, கல்லால் எறியத் திட்டமிட்டனர்.
6 இதை அவர்கள் அறிந்து லிக்கவோனியாவிலுள்ள நகரங்களான லிஸ்திராவுக்கும் தெருபைக்கும் அவற்றின் சுற்றுப்புறங்களுக்கும் தப்பிச் சென்றார்கள்.
7 அங்கெல்லாம் அவர்கள் நற்செய்தியை அறிவித்தார்கள்.
8 லிஸ்திராவில் கால் வழங்காத ஒருவர் இருந்தார். பிறவிலேயே கால் ஊனமுற்றிருந்த அவர் ஒருபோதும் நடந்ததில்லை. அவர் அமர்ந்து
9 பவுல் பேசியதைக் கேட்டுக்கொண்டிருந்தார். அவரிடம் நலம் பெறுவதற்கான நம்பிக்கை இருப்பதைக் கண்டு பவுல் அவரை உற்றுப்பார்த்து
10 உரத்த குரலில், “நீர் எழுந்து காலூன்னறி நேராக நில்லும்” என்றார். அவர் துள்ளி எழுந்து நடக்கத் தொடங்கினார்.
11 பவுல் செய்ததைக் கூட்டத்தினர் கண்டு லிக்கவோனிய மொழியில், “தெய்வங்கள் மனித உருவில் நம்மிடம் இறங்கி வந்திருக்கின்றன” என்று குரலெழுப்பிக் கூறினர்.
12 அவர்கள் பர்னபாவைச் “சேயுசு” என்றும், அங்குப் பவுலே பேசியபடியால் அவரை “எர்மசு” என்றும் அழைத்தார்கள்.
13 நகருக்கு எதிரிலுள்ள சேயுசு கோவில் அர்ச்சகர் காளைகளையும் பூமாலைகளையும் கோவில் வாயிலுக்குக் கொண்டு வந்து கூட்டத்தினருடன் சோந்து பலியிட விரும்பினார்.
14 இதைக் கேள்வியுற்ற திருத்தூதர் பர்னபாவும் பவுலும் தங்கள் மேலுடைகளைக் கிழித்துக்கொண்டு கூட்டத்துக்குள் பாய்ந்து சென்று உரக்கக் கூறியது:
15 “மனிதர்களே, ஏன் இவ்வாறு செய்கிறீர்கள்? நாங்களும் உங்களைப் போன்ற மனிதர்கள்தாம்; நீங்கள் இந்தப் பயனற்ற பொருள்களை விட்டுவிட்டு, விண்ணையும் மண்ணையும் கடலையும் அவற்றிலுள்ள அனைத்தையும் உண்டாக்கிய வாழும் கடவுளிடம் திரும்புங்கள் என்ற நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறோம்.
16 கடந்த காலங்களில் அவர் அனைத்து மக்களினங்களையும் அவரவர் வழிகளில் நடக்கும்படி விட்டிருந்தார்;
17 என்றாலும் அவர் தம்மைப் பற்றிய சான்று எதுவும் இல்லாதவாறு விட்டுவிடவில்லை. ஏனெனில் அவர் நன்மைகள் பல செய்கிறார்; வானிலிருந்து உங்களுக்கு மழையைக் கொடுக்கிறார்; வளமிக்க பருவ காலங்களைத் தருகிறார்; நிறைவாக உணவளித்து உங்கள் உள்ளங்களை மகிழ்ச்சி பொங்கச் செய்கிறார்.”
18 இவற்றை அவர்கள் சொன்னபின்பு கூட்டத்தினர் தங்களுக்குப் பலியிடுவதை ஒருவாறு தடுக்க முடிந்தது.
19 அப்போது அந்தியோக்கியாவிலிருந்தும் யூதர்கள் வந்து மக்களைத் தூண்டிவிட்டு, பவுல் மேல் கல் எறிந்தார்கள்; அவர் இறந்து விட்டார் என்று எண்ணி நகருக்கு வெளியே அவரை இழுத்துப்போட்டார்கள்.
20 சீடர்கள் அவரைச் சூழ்ந்து நின்றபோது அவர் எழுந்து நகரினுள் சென்றார். மறுநாள் அவர் பர்னபாவுடன் தெருபைக்குப் புறப்பட்டுச் சென்றார்.
21 அந்த நகரில் அவர்கள் நற்செய்தி அறிவித்துப் பலரைச் சீடராக்கிய பின் லிஸ்திரா, இக்கோனியா, அந்தியோக்கியா ஆகிய நகரங்களுக்குத் திரும்பி வந்தார்கள்.
22 அங்குள்ள சீடர்களின் உள்ளத்தை அவர்கள் உறுதிப்படுத்தி, “நாம் பலவேதனைகள் வழியாகவே இறையாட்சிக்கு உட்பட வேண்டும்” என்று கூறி நம்பிக்கையில் நிலைத்திருக்கும்படி அவர்களை ஊக்குவித்தார்கள்.
23 அவர்கள் ஒவ்வொரு திருச்சபையிலும் மூப்பர்களைத் தேர்ந்தெடுத்து நோன்பிருந்து இறைவனிடம் வேண்டித் தாங்கள் நம்பிக்கை கொண்டிருந்த ஆண்டவரிடம் அவர்களை ஒப்படைத்தார்கள்;
24 பின்பு பிசிதியா வழியாகப் பம்பிலியா வந்தார்கள்.
25 பெருகை நகரில் இறைவார்த்தையை அறிவித்தபின் அத்தாலியா வந்தார்கள்;
26 அங்கிருந்து கப்பலேறி அந்தியோக்கியா வந்தார்கள்; அங்குதான் அவர்கள் அருள் வழங்கும் கடவுளின் பணிக்கென்று அர்ப்பணிக்கப்பட்டார்கள். இப்போது அப்பணியைச் செய்து முடித்துவிட்டார்கள்.
27 அவர்கள் அங்கு வந்ததும் திருச்சபையைக் கூட்டி, கடவுள் தங்கள் வழியாகச் செய்த அனைத்தையும், அவர் பிற இனத்தவர்க்கு நம்பிக்கை கொள்ளும் வாய்ப்பைக் கொடுத்ததையும் அறிவித்தார்கள்.
28 அங்கே அவர்கள் சீடர்களுடன் பல நாள்கள் தங்கினார்கள்.