திருத்தூதர் பணிகள் - 22

அதிகாரங்கள்



1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28

அதிகாரம் 22

1 பவுல், “சகோதரரே, தந்தையரே! உங்கள் குற்றச்சாட்டுக்கு நான் கூறப்போகும் விளக்கத்தைக் கேளுங்கள்” என்றார்.

2 அவர் எபிரேய மொழியில் உரையாற்றுவதை அவர்கள் கேட்டபோது இன்னும் மிகுதியான அமைதி உண்டாயிற்று. பவுல் தொடர்ந்து கூறியது:

3 “நான் ஒரு யூதன்: சிலிசியாவிலுள்ள தர்சு நகரத்தில் பிறந்தவன்: ஆனால் இந்த எருசலேம் நகரில் வளர்க்கப்பட்டவன்: கமாலியேலின் காலடியில் அமர்ந்து நம் தந்தையரின் திருச்சட்டங்களில் நுட்பமாகப் பயிற்சி பெற்றவன்: நீங்கள் அனைவரும் இன்று கடவுள் மீது ஆர்வம் கொண்டுள்ளது போன்று நானும் கொண்டிருந்தேன்.

4 கிறிஸ்தவ நெறியைச் சேர்ந்த ஆண்களையும் பெண்களையும் கட்டிச் சிறையிலடைந்தேன்: சாகும் வரை அவர்களைத் துன்புறுத்தினேன்.

5 தலைமைக் குருவும் மூப்பர் சங்கத்தாரும் இதற்குச் சாட்சி. இவர்களிடமிருந்து தமஸ்கு நகரிலுள்ள சகோதரர்களுக்குக் கடிதங்களைப் பெற்றுக் கொண்டு அங்குள்ள கிறிஸ்தவர்களைக் கட்டி எருசலேமுக்குக் கொண்டு வந்து தண்டிப்பதற்காக அங்குச் சென்றேன்.

6 நான் புறப்பட்டுத் தமஸ்கு நகரை நெருங்கியபோது நண்பகல் நேரத்தில் திடீரென வானிலிருந்து ஒரு பேரொளி என்னைச் சூழந்து வீசியது.

7 நான் தரையில் விழுந்தேன். அப்போது, “சவுலே, சவுலே நீ ஏன் என்னைத் துன்புறுத்துகிறாய்?” என்ற குரலைக் கேட்டேன்.

8 அப்போது நான், “ஆண்டவரே நீர் யார்?” என்று கேட்டேன். அவர், “நீ துன்புறுத்தும் நாசரேத்து இயேசு நானே” என்றார்.

9 என்னோடிருந்தவர்கள் ஒளியைக் கண்டார்கள்: ஆனால் என்னோடு பேசியவரது குரலைக் கேட்கவில்லை.

10 ஆண்டவரே, நான் என்ன செய்ய வேண்டும்?” என நான் கேட்க, ஆண்டவர் என்னை நோக்கி, “நீ எழுந்து தமஸ்குவுக்குச் செல். நீ செய்வதற்கென குறிக்கப்பட்டுள்ளவை அனைத்தும் அங்கே உனக்குக் கூறப்படும்” என்றார்.

11 அந்த ஒளியின் மிகுதியால் நான் பார்க்க முடியவில்லை. என்னோடியிருந்தவர்கள் எனது கையைப் பிடித்துத் தமஸ்குவினுள் அழைத்துச் சென்றார்கள்.

12 அங்கு அனனியா என்னும் ஒருவர் இருந்தார். அவர் திருச்சட்டத்தைக் கடைப்பிடித்து கடவுளுக்கு அஞ்சி வாழ்ந்தவர்: அங்கு வாழ்ந்து வந்த யூதர் அனைவரிடமும் நற்சான்று பெற்றவர்.

13 அவர் என்னிடம் வந்து அருகில் நின்று, “சகோதரர் சவுலே, மீண்டும் பார்வையடையும்” என்றார். அந்நேரமே நான் பார்வை பெற்று அவரைப் பார்த்தேன்.

14 அப்போது அவர், “நம் மூதாதையரின் கடவுள் தம் திருவுளத்தை அறியவும் தம் நேர்மையாளரைக் காணவும் தம் வாய்மொழியைக் கேட்கவும் உம்மை ஏற்படுத்தியுள்ளார்.

15 ஏனெனில், நீர் கண்டவைகளுக்கும் கேட்டவைகளுக்கும் அனைவர் முன்பும் நீர் சாட்சியாய் இருக்க வேண்டும்.

16 இனி ஏன் காலம் தாழ்த்த வேண்டும்? எழுந்து அவரது திருப்பெயரை அறிக்கையிட்டு உமது பாவங்களிலிருந்து கழுவப் பெற்றுத் திருமுழுக்குப் பெறும்” என்றார்.

17 பின்பு நான் எருசலேம் திரும்பி வந்தேன். கோவிலில் இறைவனிடம் வேண்டிக்கொண்டிருந்தபோது நான் மெய்ம்மறந்த நிலைக்குள்ளானேன்.

18 ஆண்டவரை நான் கண்டேன், அவர் என்னிடம், “நீ உடனே எருசலேமை விட்டு விரைவாகப் புறப்படு. ஏனெனில் என்னைப் பற்றி நீ அளிக்கும் சான்றை ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்” என்றார்.

19 அதற்கு நான், “ஆம் ஆண்டவரே, உம்மீது நம்பிக்கை கொண்டோரை நான் சிறையிலடைத்தேன்: தொழுகைக் கூடங்களில் அவர்களை நையப் புடைத்தேன்:

20 உம் சாட்சியாம் ஸ்தேவான் கொலை செய்தோரின் மேலுடைகளைக் காவல் செய்து கொண்டிருந்தேன். இவை அனைத்தும் அங்குள்ளோருக்குத் தெரியும்” என்றேன்.

21 அவர் என்னை நோக்கி, “புறப்படு! தொலையிலுள்ள பிற இனத்தவரிடம் நான், உன்னை அனுப்புகிறேன்” என்றார். ”

22 இதுவரைக்கும் பவுல் பேசுவதைக் கேட்டுக்கொண்டிருந்த மக்கள், “இவனை அடியொடு ஒழியுங்கள்: இவன் வாழத் தகுதியற்றவன்” என்று கத்தினார்.

23 இவ்வாறு கூச்சலிட்டுக் கொண்டே தங்கள் மேலுடைகளை வீசி எறிந்து, புழதி வாரி இறைத்தார்கள்.

24 மக்கள் இவ்வாறு கூச்சலிடுவதின் காரணத்தை ஆயிரத்தவர் தலைவர் அறிய விரும்பி அவரைக் கோட்டைக்குள் அழைத்துச் சாட்டைகளால் அடித்து விசாரணை டசெய்ய ஆணை பிறப்பித்தார்.

25 அவர்கள் அவரைச் சாட்டையால் அடிப்பதற்கென்று கட்டியபொழுது பவுல் அங்கு நின்ற நூற்றுவர் தலைவரிடம், “உரோமைக்குடி மகன் ஒருவரைச் சாட்டையால் அடிப்பது, அதுவும் முறையான தீர்ப்பின்றி அடிப்பது சட்டப்படி செல்லுமா?” என்று கேட்டார்.

26 இதைக் கேட்டதும் நூற்றுவர் தலைவர் ஆயிரத்தவர் தலைவரிடம் சென்று பவுல் கூறியதை அறிவித்து, “என்ன செய்யப் போகிறீர்? இவர் ஓர் உரோமைக் குடிமகன் அல்லவா?” என்றார்.

27 ஆயிரத்தவர் தலைவர் பவுலிடம், “நீர் ஓர் உரோமைக் குடிமகன்தானா? கூறும்” என்றார். அவர், “ஆம்” என்றார்.

28 அதற்கு ஆயிரத்தவர் தலைவர் மறுமொழியாக, “நான் இக்குடியுரிமையை ஒரு பெருந்தொகை கொடுத்தல்லவா பெற்றுக் கொண்டேன்” என்றார். அதற்குப் பவுல், “நான் ஓர் உரோமைக் குடிமகனாகவே பிறந்தேன்” என்றார்.

29 உடனே அவரை விசாரணை செய்ய விருந்தவர்கள் அவரைவிட்டு விலகினார்கள். ஆயிரத்தவர் தலைவரோ தாம் கட்டி வைத்திருந்தவர் உரோமைக்குடி மகன் என அறிந்ததும் அச்சமுற்றார்.

30 யூதர்கள் பவுல்மீது என்ன குற்றம் சுமத்துகிறார்கள் என்பதை உறுதியாக அறிய ஆயிரத்தவர் தலைவர் விரும்பினார். எனவே, மறுநாள் தலைமைக் குருக்களும், தலைமைச் சங்கத்தினர் அனைவரும் கூடிவருமாறு அவர் ஆணை பிறப்பித்துப் பவுலை சிறையிலிருந்து கொண்டு வந்து அவர்கள் முன் நிறுத்தினார்.

 மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு  திருவிவிலியம்

A Tamil Catholic website based on the scripture ACTS 4:20 to share your experience in Jesus and Mary with everyone.
anbinmadal.org | 2002-2019 | Email ID: anbinmadal at gmail.com