திருத்தூதர் பணிகள் - 19

அதிகாரங்கள்



1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28

அதிகாரம் 19

1 அப்பொல்லோ கொரிந்தில் இருந்தபோது பவுல் மலைப்பாங்கான பகுதி வழியாக எபேசு வந்தார். அங்கு அவர் சில சீடர்களைக் கண்டு,

2 அவர்களை நோக்கி, “நீங்கள் நம்பிக்கை கொண்டபோது தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டீர்களா?” என்று கேட்டார். அதற்கு அவர்கள், “தூய ஆவி என்னும் ஒன்று உண்டு என்று கூட நாங்கள் கேள்விப்பட்டதில்லையே” என்றார்கள்.

3 “அவ்வாறெனில் நீங்கள் எந்தத் திரமுழுக்கைப் பெற்றீர்கள்?” எனப் பவுல் கேட்க, அவர்கள், “நாங்கள் யோவான் கொடுத்த திருமுழுக்கைப் பெற்றோம்” என்றார்கள்.

4 அப்பொழுது பவுல், “யோவான் மனம் மாறிய மக்களுக்குத் திருமுழுக்குக் கொடுத்து, தமக்குப் பின் வரும் இயேசுவிடம் நம்பிக்கை கொள்ளுமாறு கூறினார்” என்றார்.

5 இதைக் கேட்ட மக்கள் ஆண்டவராகிய இயேசுவின் பெயரில் திருமுழுக்குப் பெற்றனா.

6 பவுல் அவர்கள் மீது கைகளை வைத்ததும், தூய ஆவி அவர்கள் மேல் இறங்கியது. அப்பொழுது அவர்கள் பரவசப்பேச்சு பேசினர்: இறைவாக்கும் உரைத்தனர்.

7 அங்கு ஏறக்கறைய பன்னிரண்டு பேர் இருந்தனர்.

8 பின்பு பவுல் தொழுகைக்கூடம் சென்றார். அங்கு அவர் மூன்று மாதங்கள் இறையாட்சிபற்றித் துணிவுடன் மக்களோடு பேசி அவாகளோடு விவாதித்து அவர்களை நம்பச் செய்தார்.

9 சிலர் கடின உள்ளத்தோராய் நம்ப மறுத்து, திரண்டிருந்த மக்கள்முன்னால் இந்நெறியை இகழ்ந்து பேசினா. அவர் அவர்களைவிட்டு விலகித் தம் சீடரைத் தனியே அழைத்துக்கொண்டு “திரன்னு” மன்றத்தில் நாள்தோறும் விவாதித்து வந்தார்.

10 இரண்டு ஆண்டுகளாக இவ்வாறு நிகழ்ந்தது. ஆசியாவில் வாழ்ந்த யூதர், கிரேக்கர் அனைவரும் ஆண்டவரின் வார்த்தையைக் கேட்டனர்.

11 பவுல் வழியாய்க் கடவுள் அரும் பெரும் வல்ல செயல்களைச் செய்து வந்தார்.

12 அவரது உடலில் பட்டகைக்குட்டைகளையும் துண்டுகளையும் கொண்டு வந்து நோயுற்றோர் மீது வைத்ததும் பிணிகள் அவர்களை விட்டு நீங்கும்: பொல்லாத ஆவிகளும் வெளியேறும்.

13 சுற்றித் திரிந்து பேயோட்டும் யூதர் சிலர் பொல்லாத ஆவி பிடித்திருந்தவர்கள்மீது ஆண்டவராகிய இயேசுவின் பெயரைப் பய்னபடுத்த முயன்றனர். “பவுல் அறிவிக்கின்ற இயேசுவின் பெயரால் நான் உங்களுக்கு ஆணையிடுகிறேன்” என்று அவர்கள் கூறிவந்தார்கள்.

14 ஸ்கேவா என்னும் யூதத் தலைமைக் குருவுக்கு ஏழு மைந்தர்கள் இருந்தார்கள். அவர்கள் இவ்வாறு கூறியபோது

15 பொல்லாத ஆவி அவர்களிடம் மறுமொழியாக, “இயேசுவை எனக்குத் தெரியும்: ஆனால் நீங்கள் யார்?” என்று கேட்டது.

16 பொல்லாத ஆவி பிடித்தவர் அவர்கள்மீது துள்ளிப் பாய்ந்து அவர்களைத் தாக்கி அனைவரையும் திணறடிக்கவே, அவர்கள் அந்த வீட்டைவிட்டுக் காயமுற்றவராய் ஆடையின்றித் தப்பியோடினர்.

17 எபேசில் குடியிருந்த யூதர், கிரேக்கர் அனைவருக்கும் இது தெரியவந்தது. யாவரையும் அச்சம் ஆட்கொண்டது. அவர்கள் ஆண்டவர் இயேசுவின் பெயரைப் போற்றிப் பெருமைப்படுத்தினார்கள்.

18 நம்பிக்கை கொண்டோர் பலரும் தாங்கள் செய்த தவற்றை ஒப்புக்கொண்டு அறிக்கையிட்டனர்.

19 மாயவித்தைகளைச் செய்துவந்த பலரும் தங்கள் நூல்களைக் கொண்டு வந்து அனைவர் முன்பாகவும் அவற்றைச் சுட்டெரித்தனர்: அவற்றின் விலை ஐம்பதினாயிரம் வெள்ளிக்காசு என்று கணக்கிட்டனர்.

20 இவ்வாறு ஆண்டவரின் வார்த்தை ஆற்றல் பொருந்தியதாய்ப் பரவி வல்லமையுடன் செயல்பட்டது.

21 இவை நடந்தபின்பு பவுல் மாசிதோனியா, அக்காயா வழியாக எருசலேமுக்குச் செல்லவேண்டும் என்று தீர்மானித்தார்: அதன்பின் உரோமையையும் பார்க்கவேண்டும் என்று தமக்குள் சொல்லிக் கொண்டார்.

22 எனவே தம் தொண்டர்களுள் திமொத்தேயு, எரஸ்து என்னம் இருவரையும் மாசிதோனியாவுக்கு அனுப்பிவிட்டு அவர் ஆசியாவில் சிறிது காலம் தங்கினார்.

23 அக்காலத்தில் கிறிஸ்தவ நெறியைக் குறித்து எபேசில் பெருங்கலகம் ஏற்பட்டது.

24 தெமேத்திரியு என்னும் பெயருடைய தட்டான் ஒருவர் அங்கே இருந்தார். அவர் அர்த்தமி கோவிலின் வடிவத்தை வெள்ளியில் செய்வித்து அதனால் கைவினைஞர்களுக்கு மிகுந்த வருவாய் கிடைக்கச் செய்தார்.

25 இதே தொழில் செய்யும் அனைவரையும் அவர் ஒருங்கிணைத்து, “தோழர்களே, இந்தத் தொழில் நமக்கு நல்ல வருவாயைத் தருகிறது என்பது உங்களுக்குத் தெரியும்.

26 எபேசில் மட்டுமின்றி ஏறக்குறைய ஆசியா முழுவதிலுமே, “மனித கையால் செய்யப்பட்டவை தெய்வய்களல்ல” என்று தவறாகக் கூறித் திரளான மக்களை இந்தப் பவுல் நம்பச் செய்து வருகிறார் என்பதை நீங்கள் கேட்கவில்லையா? பார்க்கவில்லையா?

27 இது நமக்கு ஆபத்து விளைவிக்கும்: நம் தொழிலும் மதிப்பற்றுப்போகும். அதோடு பெருந்தேவதையான அர்த்தமியின் கோவில் கூடத் தன் பெயரை இழந்துவிடும். அதுமட்டுமின்றி, ஆசியா முழுவதும், ஏன் உலகமுழுவதுமே, வழிபடுகின்ற நம் தேவதையின் மாண்பும் மங்கிப் போகுமே!” என்றார்.

28 இதைக் கேட்டவர்கள் சீற்றம் நிறைந்தவர்களாய், “எபேசின் அர்த்தமி வாழ்க!” என்று குரலெழுப்பினார்கள்.

29 நகர் முழுவதும் குழப்பம் ஏற்பட்டது. மக்கள் அனைவரும் பவுலின் வழித்துணைவர்களாகிய காயு, அரிஸ்தர்க்கு என்னும் மாசிதோனியரைப் பிடித்திழுத்துக்கொண்டு ஒருமிக்க அரங்கத்தை நோக்கிப் பாய்ந்தோடிச் சென்றனர்.

30 பவுல் மக்கள் கூட்டத்துக்கள் செல்ல விரும்பியும், சீடர்கள் அவரைப் போகவிடவில்லை.

31 அவருக்கு நண்பராயிருந்த ஆசிய ஆட்சியாளருள் சிலர் அவரிடம் ஆள் அனுப்பி அரங்கத்திற்குள் செல்லத் துணிய வேண்டாமெனக்கேட்டுக் கொண்டனர்.

32 சபையில் குழப்பம் ஏற்பட்டிருந்ததால் சிலர் இப்படியும் சிலர் அப்படியுமாகக் கத்திக் கொண்டிருந்தனர். எதற்காகக் கூடி வந்திருக்கிறோம் என்றே பலருக்குத் தெரியவில்லை.

33 கூடியிருந்தவர்கள் அலக்சாந்தரிடம் இது பற்றிப் பேசினர். யூதர்கள் அவரை முன்னுக்குத் தள்ள, அலக்சாந்தர் கையால் சைகை காட்டி மக்களிடம் நிலைமையை விளக்க விரும்பினார்.

34 அவர் ஒரு யூதர் என்பதை அறிந்து மக்கள் அனைவரும் ஒரே குரலில் இரண்டு மணி நேரம் “எபேசின் அர்த்தமி வாழ்க” எனக் கத்தினர்.

35 நகர ஆணையர் மக்கள் கூட்டத்தினரை அமைதிப்படுத்தி, “எபேசியரே! பெருந்தேவதையான அர்த்தமியின் கோவிலும் வானிலிருந்து விழுந்த அதன் சிலையம் எபேசு நகரில்தான் பாதுகாப்பாக இருக்கிறது என்பதை அறியாதோர் யார்?

36 இதை எவரும் மறுக்க முடியாது. எனவே நீங்கள் அமைதியாயிருக்க வேண்டும், கண் மூடித்தனமாக எதையும் செய்து விடாதீர்கள்.

37 ஏனென்றால் நீங்கள் இழுத்து வந்திருக்கும் இவர்கள் கோவில் கொள்ளைக்காரர்களோ நம்முடைய தேவதையைப் பழித்துரைப்பவர்களோ அல்ல.

38 எனவே தெமேத்திரியுக்கும் அவரோடுள்ள கைவினைஞர்களுக்கும் யார் மீதாவது வழக்கு உண்டானால் அவர்கள் நீதிமன்றம் கூடும் நாள்களில் ஆட்சியாளரிடம் அவர்களை அழைத்துச்சென்று, அவர்களைப்பற்றி முறையிடட்டும்.

39 இதற்கு மேல் எதாவது நீங்கள் விரும்பினால் சட்டத்தின் அடிபடையில் கூடுகின்ற சபையில் அதற்கான விளக்கம் பெறலாம்.

40 இன்று நடந்ததைப் பார்த்தால் இக்கலகத்தை நாம் செய்ததாக நம்மீது குற்றம் சுமத்தப்படும் ஆபத்து உள்ளது. மேலும் இந்த கலகத்துக்குக் காரணம் எதுவுமில்லை: காரணம் காட்டவும் நம்மால் முடியாது” என்று கூறி சபையைக் கலைத்து விட்டார்.

 மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு  திருவிவிலியம்

A Tamil Catholic website based on the scripture ACTS 4:20 to share your experience in Jesus and Mary with everyone.
anbinmadal.org | 2002-2019 | Email ID: anbinmadal at gmail.com