நல்லதேவனுக்கு நன்றி கூறுவோம்.
டிசம்பர் மாதம் வந்துவிட்டாலே இத்தனை சீக்கிரம் இந்த வருடம் முடிந்துவிட்டதா? என்ற நினைப்பும் கிறிஸ்மஸ் பெருவிழா வருகிறது என்ற நினைப்பும் வருவது இயற்கை. ஆண்டவரின் இரக்கத்தினால் வருடத்தின் கடைசி நாட்களில் நம்மை நடத்தி வருகிற நல்லதேவனுக்கு நன்றி கூறுவோம்.
ஆனால் அநேக மக்களின் உள்ளத்தில் ஒரு பயம் இருக்கிறது. வருடக்கடைசியில் இன்னும் என்னென்ன நமக்கு காத்திருக்கிறதோ? சுனாமி வந்துவிடுமோ? என்ற கவலை ஒரு சிலருக்கு. கிறிஸ்மஸ் பெருவிழாவை எப்படி கொண்டாட போகிறோமோ? என்று சிலரும் இப்படித்தான் கொண்டாடவேண்டும் என்று சிலரும் எண்ணிக்கொண்டிருக்கிறார்கள்.
இந்த வருடம் முழுமையும நம்மை காத்த நல்ல கடவுள், இனியும் காக்க வலலவர் என்பதை முழுமையயாக நம்புவோம். இதோ! வருடமே முடியப்போகிறது, நாம் எண்ணிய காரியங்கள் நடக்கவேயில்லையே என்று நமக்கு கவலை இருக்கலாம். நாம் நினைத்த நேரத்தில் நடக்காத விஷயங்களை ஆண்டவர் தாம் குறித்த நேரத்தில் மிகநேர்த்தியாக நம் நன்மைக்காகவே செய்து முடிப்பார் என்று நம்புவோம். அவரை நம்பியிருக்கும் நம்மை அவர் ஒருபோதும் கைவிட மாட்டார்.
ஆண்டவருக்காக காத்திருப்போர் ஒருபோதும் வெட்கமடைவதில்லை அவர் முகத்தை நோக்கிப் பார்த்தோர் ஏமாந்து போவதில்லை (ஏசா 49:23 திப 33:5 )என்பதை விசுவாசிப்போம். அவரது வார்த்தை ஒருபோதும் பொய்த்து போகாது. ஆபிரகாம் நினைத்த நேரத்தில் அவர் விருப்பபடி குழந்தை கிடைக்கவில்லை. ஆனால் ஆண்டவர் கணித்த நேரத்தில் அவரது ஆசை நிறைவேறியது. உரிய காலம் என்று ஒன்று உண்டு. முப்பத்தியெட்டு வருடம் ஒருவன் பெதஸ்தா குளத்தருகே நோயோடு காத்திருக்க வேண்டியதாய் இருந்தது. ஆயினும் அவனுடைய வேளை வந்தபோது இரட்டிப்பான ஆசிர் பெற்றான். உடல் நோயிலிருந்தும், பாவமான வாழ்க்கையிலிருந்தும விடுதலை பெற்றான்.
ஆகவே, அன்பனவர்களே! நாம் சோர்ந்து போகாது, நம் தேவைகள் நிறைவேற காத்திருப்போம். ஒன்று கூடி ஒருவருக்கொருவர் ஊக்கமுட்டுவோமாக! இறுதிநாள் நெருங்கி வருகிறதை காண்கிறோம். எனவே இன்னும் அதிகமாய் ஊக்கமுட்டுவோமாக(எபி. 10:25) ஆகவே, முதலாவது நாம் செய்ய வேண்டியது, சோர்ந்து தளர்ந்து, நம்மிடம் வருகிறவர்களுக்கு நம்பிக்கை இழக்காமல் இருக்க ஊக்கமூட்டுவது நமது கடமை.
இரண்டாவதாக, ஆண்டவர் செய்கிற ஒவ்வொரு நன்மைகளுக்காகவும் அவருக்கு நன்றி செலுத்துவோம். ஒவ்வொரு நாளும் நம்மை காத்து வழிநடத்தி வருகிறாரே அந்த நல்ல கடவுள். அவருக்கு நன்றி. நமக்கு நடக்க முடியாத காரியங்களுக்காகவும் கூட நம் நன்மைக்காகவே மௌனமாக இருக்கிறார் என்று நம்பி அவருக்கு நன்றி செலுத்துவோமாக! மூன்றாவதாக, வருடத்தின் இறுதி நாட்களில் இருக்கும் நாம் பாவத்தால் ஏமாற்றப்பட்டு கடின உள்ளத்தினர் ஆகாதவாறு ஒவ்வொரு நாளும் இன்றே என்று எண்ணி ஒருவருக்கொருவர் அறிவுரை கூறுவோம். எபி 3:13
ஆகவே, கிறிஸ்மஸ் பெருவிழா கொண்டாட நாம் செய்கிற எல்லா ஏற்பாடுகளை காட்டிலும் கிறிஸ்து இயேசு நம் உள்ளத்தில் பிறக்க அதிக ஆர்வம் காட்டுவோம். நல்ல பாவசங்கீர்த்தனம் செய்து, அவரை நம் உள்ளத்திலும் இல்லத்திலும் வரவேற்போம். அதுவே உண்மையான கிறிஸ்மஸ் !