அன்னையின் ஆற்றல்!
இயேசுவின் நாமத்தில் என் நெஞ்சுக்கினிய உள்ளங்களே, வணக்கம்.
கிறிஸ்துமஸ் பிறப்பு விழா சமயத்தில் மீண்டும் ஒருமுறை உங்களைச் சந்திப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகின்றேன்.
கிறிஸ்துமஸ் பிறப்பு விழா சமயத்தில் பல குடில்களைப் பார்த்து பரவசமடைவது பலருக்கு வழக்கமாக இருக்கும். அந்தக் குடிலில் இயேசுவை மட்டுமல்ல, அன்னை மரியாவையும், புனித யோசேப்பையும் கண்டு மகிழ்கின்றோம். குழந்தையைக் கையிலேந்தி நிற்கும் காட்சியைவிட அழகிய காட்சி வேறெதுவும் இல்லை என்பார்கள். மகன் வழியாகத் தாயிடம் நாம் பெறும் அருள் வளங்களை எண்ண முடியாது. ஆகவேதான் கிறிஸ்தவர்கள் அல்லாதவர்கள்கூட அன்னை மரியாவின் திருத்தலங்களைத் தரிசித்துப் பல அருள் வளங்களைப் பெற்று மகிழ்ச்சியில் திளைக்கின்றனர். கடவுள்மீது நம்பிக்கை இல்லாதவர்களைக்கூட மனம் மாற்றி இயேசுவிடம் கொண்டு வரக்கூடிய ஆற்றலை அன்னை மரியா கொண்டிருக்கிறார். இதை விளக்கிக்கூற இதோ ஒருநிகழ்ச்சி:
டக் ஹைடு என்பவர் இங்கிலாந்து நாட்டில் பொதுவுடமைக் கட்சியின் செய்தித்தாள் ஒன்றின் ஆசிரியராகப் பணியாற்றி வந்தார். இவர் கடவுள் நம்பிக்கையற்ற ஒரு நாத்திகர். ஒரு நாள் இவர் வீதியில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, ஒரு பெண்மணி கண்ணீரும் கம்பலையுமாக அழுது கொண்டு மாதா கெபிக்குச் செல்வதைக் கண்டார். அழுதுகொண்டு அன்னையின் கெபிக்குச் சென்ற அந்த மாது, அகமகிழ்ச்சியோடு கெபியிலிருந்து திரும்பி வருவதை நாத்திகரான டக் ஹைடு கண்டார். எனவே, அவர் அந்தப் பெண்மணியைப் பார்த்து “நீ எதற்காகக் கெபிக்குச் சென்றாய்?” என்று கேட்டார். அதற்கு அந்த மாது, “அந்தக் கெபியில் எனக்கு ஓர் அன்பு அன்னை இருக்கிறார். அந்த அன்னையிடம் என்னுடைய வியாகுலங்களையெல்லாம் எடுத்துரைக்கச் சென்றேன்” என்றாள். இப்பெண்மணியின் சொல்லும், செயலும், உருமாற்றமும் டக் ஹைடை சிந்திக்கச் செய்தன.
மனித ஆற்றலுக்கு அப்பாற்பட்ட ஓர் ஆற்றல் தான் அப்பெண்மணிக்கு இப்படிப்பட்ட ஆறுதலைக் கொடுத்திருக்க வேண்டும் என்ற முடிவுக்கு டக்ஹைடு வந்தார். அதன் விளைவு? இன்று டக்ஹைடு விசுவாசமிக்க ஓர் உத்தம கிறிஸ்தவராக, எடுத்துக்காட்டான வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்! என்னே தாய் (அன்னை மரியா) அன்பின் ஆற்றல்!
ஆம், அன்பார்ந்தவர்களே, கிறிது பிறப்பு விழா சமயத்தின்போது குடிலில் இருக்கும் இயேசுவை மட்டுமல்லாது புனித யோசேப்பையும், அன்னை மரியாவையும் சந்தித்து அவர்களின் பரிந்துரை செப வல்லமையைப் பெற்று மகிழ்வோம். விசுவாசத்தின் தந்தையான புனித யோசேப்பு இறைவனின் சித்தத்தை அறிந்து எவ்வாறு செயல்படுவது என்று நமக்குக் கற்றுக்கொடுப்பார். பற்றாக்குறையை நீக்கும் அன்னை மரியா இயேசுவின் உள்ளத்தை அறிந்து அவர் சொல்வதையெல்லாம் செய்யுங்கள் என்று கூறி அந்தத் திருமண விழாவில் வந்த பற்றாக்குறையை நீக்கிப் புது இரசத்தை வார்த்து, மகிழ்ச்சியால் அக்குடும்பத்தை நிரப்பியதுபோல் நம் வாழ்வில் வரும் பற்றாக்குறைகளை நீக்கி மகிழ்ச்சி, அன்பு, அமைதி என்ற ஆவியின் கனிகளைப் பொழிந்திடுவார்.
இயேசுவின் பிஞ்சுக் கரங்கள் உங்கள் அனைவரையும் ஆசீர்வதிப்பதாக! அனைவருக்கும் எனது அன்பும், பாசமும், மன்றாட்டும் கலந்த கிறிஸ்து பிறப்பு விழா நல்வாழ்த்துக்கள்!
உங்கள் அன்புப் பணியாளன்
தந்தை தம்புராஜ் சே.ச.