பாலன் பிறப்பு

பாலன் பிறப்பால் உலகம் பெற்ற உன்னத மீட்புத் திருநாளே கிறிஸ்துமஸ் எனவே கொண்டாடி மகிழ்ந்து நாமோ பரமன் பிறப்பை பாருக்குச் சொல்லியே எல்லாரும் ஒன்றாய் இணைந்து இனிதே பாடிப் போற்றிடுவோம். நம்மீட்பர் இயேசு சர்வவல்லவர் தன்னிகரில்லாத் தலைவன் எளிமையின் உருவெடுத்த ஏற்றமிகு அரசர் அன்பின் மேலிட்டால் அவரோ அடிமையின் கோலமே பூண்டு நல்கினார். நமக்குப் புதுவாழ்வு... அத்தகு புனிதநாளே கிறிஸ்து பிறப்பின் மாட்சிமிகு நன்னாள்!

எனவே....
நாமும் புனிதப் பண்டிகை கொண்டாடியே மகிழும் இந்நாளினில் புது இதயம் பெற்றுப் பூரிப்புடன் பாடல்கள் பாடித் துதித்துப் பரமனைப் போற்றிப் புகழ்ந்து உவகை பொங்கிடவே எம் பெருமான் இயேசுவைப் போற்றிப் பாடுவோம்!

அவரின் புகழினை இப்பாரினில் பறைசாற்றி பரமன் இயேசுவே உயிர்தரும் ஒப்பற்ற தெய்வம் என்றே நாமும் புகழ்ந்துபாடி அவரின் சாட்சியாளர்களாய் வாழ்வதே கிறிஸ்துமஸ் பிறப்பு உணர்த்தும் மாபெரும் நற்செய்தி என்பதை இதயத்தில் ஏற்போம்!

இதை ஏற்று மனதில் ஏற்று நாமோ எல்லாரும் இன்புற்று வாழ்ந்திடப் பகிர்வோம். பரிவுப் பொருட்களைத் தந்தே உவகையூட்டும் நிக்கோலஸ் தாத்தாவைப் போன்று அனைவரும் மகிழ்ச்சி அடைந்திட அள்ளிக் கொடுப்போம்!

அப்போது....
நமது கிறிஸ்துமஸ் விழாவானது அர்த்தமுள்ளதாய் அமைதி நல்கிடும் தூதர்களின் வாழ்த்தொலி நமது உள்ளத்தில் ஒலித்திட பரிசுத்த தேவன் நம் இயேசு பாலகன் என்றே பாடித் துதித்து நானிலம் அமைதி பெற்றிட அன்பர் இயேசுவிடம் செபித்து அன்புமிகு சமுதாயம் உருவாகிட உருக்கமாய் மன்றாடி இதயம் மகிழ உறவுகள் மலர்ந்திட பாலகன் இயேசு விடத்து கொஞ்சும் மொழியில் உறவாடி அவரின் பிள்ளைகளாய் அகிலமதில் வாழ்ந்திட எம்பிரான் இயேசு பாலனின் நல்அருள் வேண்டுவோமே!

ஆம்....

அந்த அன்பு தேவன் அகிலத்தில் பிறந்ததே! நமக்கு மீட்பு நல்கியே புதுப்படைப் புக்களாய் மக்கள் மனம்மாறி பரம தந்தையின் சித்தத்தை வாழ்வாக்கி பரிசுத்தமாய் வாழ்ந் திடவே எம்பெருமான் இயேசு மண்ணகம் இறங்கி வந்தார்!

அந்த நாளினில்
நாமோ பாலகனை வணங்கி ஆராதித்து மரியின் மைந்தனே ஆரிரோ ஆரிரோ என்று ஆர்ப்பரித்துப் பாடியே போற்றி இயேசு பாலகனே! இயேசு பாலகனே!!


விண்ணகம் விட்டு இறங்கி வந்த மீட்பரே இயேசுவே ஆரிரோ ஆரிரோ என்று ஆர்ப்பரித்துப் பாடியே அவரை போற்றி வணங்கியே கிறிஸ்துமஸ் பண்டிகை வாழ்த்தினைச் சொல்லி இயேசுவைப் போற்றி குடும்ப உணர்வுடன் கோவிலில் கூடியே செபித்து வீட்டில் நாட்டில் அமைதி மிகுந்திட அன்பர் இயேசுவின் பாதமே அமர்ந்து அவரின் அருளை வேண்டுவோம்!