நான், பெத்லகேம் விடுதி காப்பாளன் பேசுகிறேன்..
வணக்கம்.. நண்பர்களே! என் பெயர் தாதன். முதன்முறையாக மக்கள் தொகை கணக்கிடும்படி சிரியாவின் ஆளுநராக இருந்த குரேனியு கட்டளையிட்ட காலத்தில், நான் பெத்லகேமில் குடியிருந்தேன். என்னுடைய வாழ்நாளின் அந்தக் கட்டத்தில் தான் அந்த சம்பவம் நடந்தது. பின்வரும் நாள்களில் நேரிலே பார்த்திராதவர்கள் கூட (இரண்டாயிரம் ஆண்டுகள் கழிந்த பிறகும்) என்னை வசைபாடும் அளவுக்கு அவப்பெயர் எனக்குக் கிடைத்தது.
என்னைப் பற்றி நீங்கள் தெரிந்து கொண்டதெல்லாம் உத்தேசமான யூகங்களும், கட்டுக் கதைகளுமே. என்னைக் குறித்து உங்களுக்குத் தெரிந்த விவரங்களை நீங்கள் திருவிவிலியத்தில் படித்து அறிந்துகொண்டதாக நினைக்கிறீர்கள். ஆனால் என்னைப் பற்றி அந்த மறைநூல் எதையுமே சொல்லவில்லை என்பதே உண்மை. "நான் ஒரு ஈவிரக்கமற்ற மனிதன்", "யோசேப்பு-மரியா என்ற இளம் தம்பதியர் தங்குவதற்கு இடமளிக்காமல், மனிதாபிமானமற்ற முறையில் சத்திரத்தின் கதவை மூடியவன்" என்று என்னைப் பற்றி நீங்கள் முடிவு செய்திருப்பீர்கள். ஆனால், அன்று இரவு நிகழ்ந்ததைக் குறித்து உங்கள் புனிதநூல் சொல்வதென்ன? …."அவர்கள் அங்கு இருந்தபொழுது மரியாவுக்குப் பேறுகாலம் வந்தது. அவர் தம் தலைமகனைப் பெற்றெடுத்தார். விடுதியில் அவர்களுக்கு இடம் கிடைக்கவில்லை. எனவே பிள்ளையைத் துணிகளில் பொதிந்து தீவனத் தொட்டியில் கிடத்தினார்". இதில் இந்த பாவப்பட்ட விடுதிக் காப்பாளனைப் பற்றி ஏதாவது தவறாக சொல்லப்பட்டுள்ளதா? இல்லைதானே? ஆனாலும், பல நூற்றாண்டுகளாக கிறிஸ்துமஸ் விழா தொடர்பான நிகழ்வுகளில் "மகா கருமி"யாகவும், "மோசமான கஞ்சப்பிசினாறி"யாகவும் நான் சித்தரிக்கப்படுகிறேன்.
நிஜத்தை சொல்வதென்றால், அந்நாள்களில் நான் பெத்லகேம் ஊரில் ஒரு விடுதி காப்பாளனாக இருந்தேன். இக்காலத்தில் நீங்கள் "ஹோட்டல்" "மோட்டல்" "லாட்ஜ்" என்றெல்லாம் சொல்லுகிறீர்களே, அவற்றைப் போல வசதியான விடுதி அல்ல அது. தனித் தனி அறைகள், இணைக்கப்பட்ட குளியலறை, எந்நேரமும் வெந்நீர், கட்டில், மெத்தை, நீச்சல் குளம் - இவை போன்ற வசதிகள் எதுவும் என் சிறிய சத்திரத்தில் இல்லை. ஊருக்கு வெளியே சாலையோரத்தில் இருந்ததால், பயணம் செய்வோரும், அவர்களுடைய பரிவாரங்களும், குதிரை, ஒட்டகம் ஆகிய கால்நடைகளும் இரவு நேரத்தில் தங்கி இளைப்பாற அனுகூலமாக இருந்தது. பெரிய அளவிலான வருமானம் ஏதும் இல்லையென்றாலும், அந்த விடுதியினால் என் வாழ்க்கை ஓடிக் கொண்டிருந்தது.
"மக்கள் தொகை கணக்கிடப்பட வேண்டும்" என்று சிரியாவின் ஆளுநர் குரேனியு ஆணையிட்டதையடுத்து, அந்த சிற்றூரில் எல்லாமே மாறிப் போயின. தத்தம் பெயரை பதிவு செய்வதற்காக மக்களெல்லாரும் அவரவர் சொந்த ஊருக்கு போக வேண்டியதாயிற்று. பேரரசர் தாவீதின் சொந்த ஊராகிய பெத்லகேம் மிகவும் பழைமையான ஊர். பல்லாண்டுகளுக்கு முன்பாக அங்கிருந்து யூதேயா நாட்டின் பல இடங்களுக்கும் குடிபெயர்ந்து சென்றிருந்த குடும்பத்தார் எல்லாரும் அங்கே வந்து குவிந்தனர். ஒரு சிற்றூரில் திடீரென ஏராளமான ஜனங்கள் ஒன்றுகூடியதால், எங்குநோக்கினும் ஒரே கூச்சலும், குழப்பமும் நிலவியது.
எல்லா இடத்திலும் மனிதத் தலைகள். அளவுக்கு அதிகமான இவ்வளவு ஜனங்களை பெத்லகேமில் முன்னெப்போதும் நாங்கள் கண்டதில்லை. வருடத்திற்கொரு முறை நடைபெறும் "ஹனூக்கா" (Hanukkah) பண்டிகை பேரணியின் போது கூட பார்த்ததில்லை. இதன் விளைவாக என்னுடைய சத்திரத்தைச் சுற்றிலும் ஏகப்பட்ட ரகளை. எந்தவொரு இரவை "புனிதமான இரவு" என்று நீங்கள் கொண்டாடுகிறீர்களோ, அந்த இரவில் என்னுடைய சத்திரம் நிரம்பி வழிந்தது. நடக்கக் கூட இடமில்லாத வகையில் ஜனக்கூட்டம் நிறைந்திருந்தது. அந்த இரவில் இடம் கேட்டு வந்த பலரை நான் திருப்பி அனுப்பியதை போலவே, யோசேப்பு-மரியா என்னும் அந்த இளம் தம்பதியரையும் திருப்பி அனுப்பினேன்.
"மரியாவைப் போன்ற ஒரு நிறைமாத கர்ப்பிணிப் பெண்ணை திருப்பி அனுப்ப உனக்கு எப்படி மனம் வந்தது?" என்று தானே கேட்கிறீர்கள்? சொல்கிறேன்... முதலில், அந்த இளம்பெண் கர்ப்பிணி மட்டுமல்ல; என்னுடைய சத்திரத்திற்கு வந்தபோது அநேகமாக அவள் பேறுகால வேதனையில் இருந்தாள். "ஜனங்கள் ஒருவரையொருவர் இடித்துத் தள்ளிக் கொண்டு நடமாடுகின்ற ஒரு பழுதடைந்த சத்திரம், ஒரு இளம் பெண்ணின் பிரசவத்திற்கு எந்த வகையிலும் ஏற்ற இடமல்ல" என்பதை ஒத்துக்கொள்வீர்கள், அல்லவா? மேலும், அன்றைக்கு அந்த விடுதியில் தங்கியிருந்தவர்கள் தங்கள் இரவுநேர உறக்கமும், ஓய்வும் அமைதியாகக் கழிந்திடும் என்ற நம்பிக்கையில் நிறையவே கட்டணம் செலுத்தியிருந்தார்கள். ஒரு பெண்ணின் பிரசவ ஓலமும், பிறந்த குழந்தையின் அழுகையும் அந்த நம்பிக்கையை குலைத்திட அனுமதிக்க முடியுமா?
இப்போது சிலர் கேட்கிறார்கள்: "உலகின் மீட்பரான மெசியாவுக்கு இடமில்லை என்றுச் சொல்லி திருப்பி அனுப்பலாமா?" என்று. "அந்த இரவில் பிறக்கப் போகிற குழந்தை தான் பிற்காலத்தில் இயேசு என்ற பெயரில் பிரபலமான 'ரபி'யாகப் போகிறார்" என்று அப்போது எனக்குத் தெரியாதே! மேலும், நான் நல்ல முறையில் யூதமதத்தின் நெறிகளை பின்பற்றிவந்தேன். திருநூல் சுவடிகளையும் தவறாமல் வாசித்து வந்தேன். "ஆட்சிப்பொறுப்பு அவர் தோள்மேல் இருக்கும்; அவர் திருப்பெயரோ வியத்தகு ஆலோசகர், வலிமைமிகு இறைவன், என்றுமுள தந்தை, அமைதியின் அரசர்".. இப்படித்தான் மெசியாவைக் குறித்து எங்கள் இறைவாக்கினர் எசாயா சொல்லியிருக்கிறார். அப்படியிருக்க, ஒரு ஏழைப் பெண்ணிடம் பிறக்கப் போகின்ற பச்சிளம் பாலகன் தான் இத்தகைய மேன்மையான இறைவாக்கு முன்னறிவிப்பை நிறைவேற்றுவார் என்று நான் எவ்வாறு எதிர்பார்க்கக் கூடும்? அரசகுமாரனாக மெசியா வருவார் என்று தான் எல்லோரும் காத்திருந்தோமே அன்றி, ஒரு ஏழைப் பெற்றோருக்கு மகனாகப் பிறப்பார் என்று நாங்கள் கற்பனைக் கூட செய்து பார்க்கவில்லை.
"இக்கட்டான நேரத்தில் உதவி கேட்டு வருவோருக்கு கைகொடுத்திருக்க வேண்டும்" என்று சிலர் கூறுவது எனக்குக் கேட்கிறது. நான் ஒன்று கேட்கிறேன்: "நீங்கள் ஒருவரையொருவர் எவ்வாறு நடத்துகிறீர்கள்? உங்களிடம் அன்பாயிருப்பவர்களுக்குத் தான் நீங்கள் அன்பு காட்டுகிறீர்கள். உங்களுக்குத் பரிசு தருபவர்களுக்குத் தான் நீங்கள் பரிசு தருகிறீர்கள். உங்களுக்கு உதவி செய்பவர்களுக்குத் தான் நீங்கள் உதவி செய்கிறீர்கள். ஆக, எல்லாமே ஒரு வகையான 'கொடுக்கல்-வாங்கல்' போன்றது தானே? நான் மட்டும் எப்படி வித்தியாசமாக இருக்க முடியும்? நெருக்கடியான நேரத்திற்கு தகுந்தாற் போல அதிக கட்டணம் தந்தவர்களுக்கு என் சத்திரத்தின் கதவுகளை திறந்தது எப்படி தவறாகும்?"
"கடவுளை வரவேற்காமல் கதவை சாத்திவிட்டேன்" என்று கூட சிலர் நினைக்கலாம். ஆனால், ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும் விழாக்காலங்களில் "ஷாப்பிங்' என்ற பெயரில் கடைவீதிகளிலும், வணிக மையங்களிலும் நீங்கள் மூச்சிரைக்க ஏறி இறங்குவதை பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன். இத்தகைய விழாக்கால "ஷாப்பிங்" எல்லாம் கடவுளுக்காக செய்யப்படுபவைதானா? இறைமகன் என்று நீங்கள் சொல்லுகின்ற இயேசு, "இதோ, நான் கதவு அருகில் நின்று தட்டிக்கொண்டிருக்கிறேன்" என்று உங்களுக்கு கூறியிருக்கிறாரே, நினைவிருக்கிறதா? உங்களில் எத்தனை பேர் அவருடைய கோரிக்கைக்கு செவிசாய்க்கிறீர்கள்? அவருடைய முகத்திலறைந்தது போல கதவை சாத்துபவர்களும், அவரது கோரிக்கையை நிராகரிப்பவர்களுமே உங்களில் அதிகம் அன்றோ? அவர் மெசியா என்று தெரியாமல் தான் நான் கதவை மூடினேன். ஆனால், அவர் கடவுள், இறைமகன் என்று தெரிந்தும் நீங்கள் கதவைத் திறக்க மறுக்கிறீர்களே?
மன்னிக்க வேண்டும், நண்பர்களே... உங்கள் மேல் குற்றம் சுமத்துவதோ அல்லது உங்களுக்கு போதனை செய்வதோ என் நோக்கமல்ல. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் பெத்லகேம் புறவெளியை ஒரு வால் நட்சத்திரம் ஒளிமயமாக்கிய அந்த இரவில், நான் என் மனதார எந்தத் தவறும் செய்யவில்லை என்பதை உங்களிடம் சொல்லிவிட்டு போகவே வந்தேன். விடைபெறுவதற்கு முன், உங்களிடம் ஒரு சமாச்சாரம் சொல்லிவிடுகிறேன்… உங்களைத் தேடி அவர் வரும்போது, நீங்கள் எப்படி செயல்பட போகிறீர்கள்? காலம் கடந்து நான் வருந்துவது போல, நீங்களும் வருத்தப்படக் கூடாதல்லவா? எனவே, அவர் வந்து கதவைத் தட்டும்போது, கவனத்தை சிதறவிடாமல், அவருக்கு உங்கள் இதயக் கதவுகளைத் திறந்து விடுங்கள். பின்னாளில் நீங்கள் வருத்தப்பட அவசியமிருக்காது.
இத்தனை நேரம் நான் சொன்னதை கவனித்துக் கேட்டதற்கு நன்றி, நண்பர்களே, வருகிறேன்.