இம்மாதம் கிறிஸ்து பிறந்த மிகப்பெரிய நிகழ்வைக் கொண்டாடுகின்றோம். இயேசு பிறந்த பொழுது எளிய மக்கள், மனம் திறந்து நேர்மையான வாழ்க்கை நடத்தியவர்கள் இயேசுவைச் சந்திக்க முடிந்தது. ஆனால் குறுகிய மனப்பான்மை உள்ளவர்கள், மற்றவர்களை வெறுத்து மற்றவர்களுக்குத் தீங்கு இழைக்க வேண்டுமென்ற மனநிலையில் இருந்தவர்களுக்கு இயேசுவைக் காணும் பாக்கியம் கிடைக்கவில்லை.
உதாரணமாக, வெகுத்தொலைவிலிருந்து வந்த ஞானிகள் இயேசுவைக் காணமுடிந்தது. ஆனால் எருசலேம் நகரிலிருந்த ஏரோதுக்கோ இந்த அரிய வாய்ப்புக் கிடைக்கவில்லை. ஏனென்றால், அவன் எண்ணமெல்லாம் தன்னைச் சுற்றியே வட்டமிட்டது. பதவி ஆசை, பண ஆசை போன்றவற்றால் அவன் கட்டப்பட்டு அடிமை வாழ்க்கை வாழ்ந்து வந்தான். விடுதலை அளிக்கும் இயேசுவை பார்க்க அவனுக்கோ வாய்ப்புக் கிடைக்கவில்லை.
இயேசுவைக் காண வேண்டுமென்றால் தன்னலம் என்ற குறுகிய வட்டத்திலிருந்து வெளியேறி, பிறரை அன்பு செய்து, பிறருக்காக வாழ வேண்டுமென்ற கனவுகளை நம் வாழ்வில் நனவாக மாற்றவேண்டும்.
இக்கருத்தை விளக்க இதோ ஒரு சிறுகதை:
ஒரு பாலைவனத்தில் ஒரு ஒட்டகக் கூட்டம் வாழ்ந்து வந்தது. உண்ண உணவு ஏராளம் இருந்தது. குடிப்பதற்குத் தண்ணீர் தட்டுபாடும் இல்லை. ஆகவே, அந்த ஓட்டகங்களில் ஒன்றுகூட பூமிலிருந்து தனது கண்களை உயர்த்தி வானத்தைப் பார்க்கவில்லை.
ஒரு நாள் ஓர் ஒட்டகம் அண்ணார்ந்துப் பார்த்து விட்டது. அதன் கண்களை அதனால் நம்பவே முடியவில்லை. ஒரு வால் நட்சத்திரம் வானத்திலே நகர்ந்து கொண்டிருந்தது. அதுவரை உணவிலும், தண்ணீரிலும் அதற்குக் கிடைக்காத ஏதோ ஒரு இனம் புரியாத சுகம், மகிழ்ச்சி மனதிற்குள் புகுந்தது.
தான் கண்டதை அந்த ஒட்டகம் மற்ற ஒட்டகங்களிடம் கூறியது. அவற்றில் சில அந்த ஒட்டகம் கூறியதைக் கேட்கவே இல்லை.
சில ஒட்டகங்கள் 'எல்லா வசதிகளும் இங்கே இருக்கும்போது ஏன் நட்சத்திரத்தை வந்து பார்க்கச் சொல்கிறாய்? அதனால் நமக்கு என்ன பயன் விளையப் போகிறது?" என்று கூறிவிட்டன.
ஆனால் நட்சத்திரத்தைக் கண்ட ஒட்டகம் நட்சத்திரத்தின் பின்னால் சென்றது. வழியில் எத்தனையோ வேதனைகளும், சோதனைகளும். ஆயினும் அது பயணத்தைத் தொடர்ந்தது. இறுதியாக இந்த சட்சத்திரம் இயேசு பிறந்த குடிலுக்கு மேல் போய் நின்றது.
ஒட்டகம் இதுவரை வாழ்க்கையில் காணாத காட்சியைக் கண்டது. இதுவரை அடையாத மகிழ்ச்சியை அடைந்தது.
ஆம் அன்பார்ந்தவர்களே! நாம் பாவம் என்ற பாலைவனத்திலிருந்து, தன்னலம், சுயநலம் என்ற குட்டையிலிருந்து வெளியேறி உண்மையை நோக்கிக் திருப்பயணம் மேற்கொண்டால் கட்டாயம் இயேசுவைக் காண முடியும். அருளாதார வாழ்வைச் சுவைக்கமுடியும். புறப்படுவோம், தடைகளைத் தகர்தெறிந்து முன்னேறுவோம். உண்மையின், வாழ்வின், அமைதியின் ஊற்றாகிய இயேசுவோடு இரண்டறக்கலப்போம். உங்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த, மன்றாட்டு கலந்த கிறிஸ்மஸ் விழா வாழ்த்துக்கள். இறையாசீர் என்றும் உங்களோடு!
A Tamil Catholic website based on the scripture ACTS 4:20 to share your experience in Jesus and Mary with everyone.
anbinmadal.org | 2002-2019 | Email ID: anbinmadal at gmail.com