யுகம் யுகமாக கடவுள் பிறப்பெடுத்து வருகிறார் என்று மறைகள் காலம்காலமாக நம்பிவந்திருக்கின்றன. இந்த உலகுக்கும் கடவுளுக்கும் உறவு உண்டு. கடவுளுக்கு இந்த உலகின்மீது அக்கறை உண்டு என்பதைத் தான் கடவுளின் பிறப்புகள் நமக்கு உணர்த்துகின்றன. அப்படி கடவுள் உலகில் இயேசுவாக பிறப்புக் கொண்ட ஒரு நிகழ்வைத் தான் கிறித்தவர்கள் கிறிஸ்துமஸ் பெருவிழாவாகக் கொண்டாடுகின்றனர். இதனைக் குறித்து திருவிவிலியம்: ‘எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு தன் மகனையே அளிக்கும் அளவுக்கு கடவுள் உலகின்மேல் அன்பு கூர்ந்தார்’ என்று கூறுகிறது. ஆம், பொதுவாக கடவுள் பிறந்து வருவது மக்களையும் படைப்பனைத்தையும் அழிவினின்று காக்கவும், அவையனைத்தும் நிறைவான நிலையான வாழ்வைக் கொண்டிருக்கவேண்டும் என்ற காரணத்திற்காகவே.
கடவுளின் ஒவ்வொரு பிறப்பும் ஒரு குறிப்பிட்ட பேருண்மையை நமக்கு உணர்த்துகிறது. இயேசு கிறிஸ்துவின் பிறப்பின் நிகழ்வுகளை உற்றுக் கவனித்தால் அவை இன்று வசதியும் செல்வமும் பணபலமும் படைபலமும் ஆயுதபலமும் அறிவியல் வளர்ச்சியும் தொழில்நுட்பத்திரனும் மிக்க நமது சமுதாயத்திற்கு தேவையான பல பேருண்மைகளை தாங்கியனவாக உள்ளன.
அவருடைய பிறப்பு மின்விளக்குகளும் மீடியாவெளிச்சமும் நிறைந்த சூழலிலோ, படிப்பறிவு நிறைந்த அறிஞர்களின் மத்தியிலோ, செல்வம் கொழித்த வசதிகள் மலிந்த குடியிருப்பிலோ நிகழாமல், ஆள் அரவமற்ற இருளான இடத்தில், கண்டுக்கொள்ளப்படாத இடையர்கள் மத்தியில், அசிங்கங்கமும் அழுக்குமான மாட்டுக் குடிலில் நிகழ்ந்தது. கடவுள் இவ்வாறு பிறந்தது, வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் அவர் எதிரானவர் அல்ல. மாறாக, அவற்றில் மறைந்திருக்கும் முரண்பாடுகளையும், அவலங்களையும் சுட்டிக்காட்டி வாழ்வின் அவசியங்களின் மட்டில் நமது கவனத்தைத் திருப்புவதற்காகவே அவ்வாறு பிறந்தார் எனலாம்.
புதிய பொருளாதாரப் புரட்சியாக இருக்கின்ற உலகமயமாக்குதல் பல வளர்ச்சிகளை வென்றெடுத்துள்ளது. வசதிகளையும் வருவாயையும் பெருக்கித் தந்திருக்கின்றது. ஆனால் அவற்றின் பின்னணியில் உள்ள தளர்ச்சிகள், புறக்கணிப்புகள், மறுக்கப்படுதல்கள், மறக்கப்படுதல்கள் மற்றும் வேரறுக்கப்படுதல் பெரும்பாலும் வெளிச்சத்திற்கு வருவதில்லை. ஆடம்பரங்களும், சொகுசு சாதனங்களும், தொலைத்தொடர்பு சாதனங்களும் அக்கறைக் காட்டப்பட்டு அத்தியாவசிங்கள், இன்றியமையாதவைகள் கண்டுக்கொள்ளப்படாமல் விடப்பட்டுவிட்டன. இதற்கு எடுத்துக்காட்டு இன்னும் சிறிது காலத்தில் ஒரு பெரிய உணவு பற்றகுறை வரப்போவதாக உலகளவில் பேசப்படுகிறது. இது உணவோடு நின்றிருந்தால் பரவாயில்லை, குடும்ப உறவிலும் பாதிப்பு ஏற்படுத்திவிட்டுள்ளது. கணவனும் மனைவியுமாக கை நிறைய சம்பாதிக்க முடிகிறது. ஆனால் விவாகரத்து அதிகரித்துக் கொண்டேபோகிறது. பல அறைகள் கொண்ட மாளிகைப் போன்ற வீடுகள் மலிந்துக் கொண்டிருக்கின்றன, ஆனால் அதில் வாழத்தான் போதிய மனிதர்கள் இல்லை. ஒற்றைக் குழந்தைக்கு கேட்டதெல்லாம் கிடைத்துவிடுகிறது, ஆனால் பெற்றோரின் உடனிருப்பு கிடைப்பதில்லை. உயரமான கட்டிடங்கள், ஆனால் தாழ்வான எண்ணங்கள். வகைவகையான உணவுகள், ஆனால் அவை ஊட்டச்சத்து குன்றிப்போனவை. தொலைத்தூரங்களை இணைக்க கம்பளம் விரித்தாற்போல நெடுஞ்சாலைகள், ஆனால் அண்டைவீட்டார் கண்டுக்கொள்ளப்படுவதில்லை. அலைபேசிக்கொண்டு யாரோடுயெல்லாமோ எங்கங்கோ இருப்பவர்களோடு பேசமுடிகிறது, ஆனால் அடுத்திருப்பவரோட உரையாட மனமில்லை.
இப்படிப்பட்ட இன்றைய உலகிற்கு இயேசுபிரான் ‘உணவின் கூடை’ (Bread Basket)என்று பொருள்படும் பெத்தலகேம் என்ற குக்கிராமத்தில் பிறந்தது ஒரு எதேச்சையான செயலாகமட்டும் கொள்ளமுடியுமா? உணவுக் கூடை என்ற இடத்தில் இயேசு பிறந்து, கால்நடைகளில் தீவனத்தொட்டியில் வளர்த்தப்படுதல் ஓர் அர்த்தமுள்ள செயல் அல்லவா? இப்படியாக வசதிகளையும் சொகுசையும் மையப்படுத்திய ஒரு நுகர்வு கலாச்சாரத்திற்கும் பயன்பாட்டு கலாச்சாரத்திற்கும் மாற்றாக இன்றியமையாதவைகளும் அத்தியாவசியங்களும் சாமானியர்களும் உறவுகளும் மையப்படுத்தப்படும் ஒரு கலாச்சாரத்தை அறிமுகம் செய்து வைக்கிறார். நமது இந்தியா 2020 யில் வல்லரசாகும் போது எல்லோரும் எல்லாமே பெற்று இல்லாமை இல்லாத நிலை இருக்குமா? அல்லது இன்றுபோல் ஒரு சிறுபான்மையினரையே மையப்படுத்திய வளர்ச்சிக் கொண்டதாக தான் இருக்குமா?
இப்படி இயேசுவாக பிறந்த கடவுளின் நிலைப்பாடு நம்முடையதாக மாற இந்த கிறிஸ்துமஸ் பெருவிழா நம்மை பயிற்றுவிக்கட்டும்.
உங்கள் அனைவருக்கும் மங்களகரமான கிறிஸ்த்துமஸ் பெருவிழா வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்
A Tamil Catholic website based on the scripture ACTS 4:20 to share your experience in Jesus and Mary with everyone.
anbinmadal.org | 2002-2019 | Email ID: anbinmadal at gmail.com