merry christmas to all

உன்னத நாள்


'தோன்றின் புகழோடு தோன்றுக" என்றார் வள்ளுவப் பெருந்தகை. ஆம், மண்ணுலகத்தாரின் பாவத்தைப் போக்கிட விண்ணவர் புகழோடு மண்ணுலகிற்கு மனுவுருவெடுத்து வந்திட்ட உன்னத நாள்தான் கிறிஸ்துபிறப்பு நாள்.

சாமக்காவலில் இடையர்களுக்கு அறிவிக்கப்பட்ட மகிழ்வின் நற்செய்தி, இன்று நமக்கு எடுத்துரைக்கப்படுகிறது. கிறிஸ்து விண்ணக மகிழ்வை மண்ணுலகில் பகிர்ந்து அளித்திடவே வந்தார். அது மட்டுமல்ல, நம் பாவங்களை பகிர்ந்து கொள்ளாமல் அவரே தாங்கி கொண்டார். ஆம், இதுவொரு தியாகத் திருநாள். தியாக உணர்வு நம்மிடையே உருவெடுத்தால் பகிர்வு எண்ணங்கள் மலிந்துவிடும்.

கிறிஸ்துபிறப்பை இல்லத்தில் கொண்டாடிட உயர்ந்த வகை ஆடை ஆபரணங்கள் பண்டம் பலகாரங்கள் என அசத்தி கொள்ளும் இல்லத்தரசிகளான நாம், இல்லாதவர்களை இயலாதவர்களை நினைத்துப் பார்க்க மறந்துவிடுகின்றோம். கிறிஸ்துபிறப்பை இல்லத்தில் கொண்டாடுகிறோமே தவிர, உள்ளத்தில் உவகையோடு கொண்டாட தவறிவிடுகின்றோம். தாகத்தால் தவிக்கும் எத்தனையோ அனாதைகள், உடுக்க உடையின்றி ஏங்கும் ஏழைகள், உண்ண உணவின்றி தடுமாறும் கைவிடப்பட்டோர், இவர்களின் சிரிப்பில் இறைமைந்தனைக் கண்டு அவரை இன்முகத்தோடு வரவேற்றிட தவறிவிடுகின்றோம்.

சின்னஞ்சிறுவன் ஒருவனுக்கு இதனையெல்லாம் செய்தது, எனக்கே செய்தீர்கள் என்று தனது வலபக்க நண்பர்களைப் பார்த்து நியாய தீர்ப்பு நாளில் இயேசு கூறியது போன்ற, சிறுமைப்பட்ட உருவத்தோடு, ஏழை எளிய தோற்றத்தோடு, அனாதையாக, கைவிடப்பட்டவராக, 'அம்மா எனக்கு பசிக்கின்றது. தாகமாக இருக்கின்றது. நான் சிறையில் வாடுகின்றேன். எனக்கு ஆதரவு காட்டுபவர் யாரும் இல்லையா? அடைக்கலம் தருபவர் யாரும் இல்லையா?" என்று கூறும் கூக்குரலை பணம், பதவி, ஆசை, கௌரவம், சுயநலம் போன்ற மாயச் சுவரை ஏமுப்பித் தடுத்து விடுகின்றோம். என்று நாம் இறைகுரலை கேட்டு, அவரது குரலுக்கு செவிசாய்த்து, ஏழையின் சிரிப்பில் இறைவனைக் கண்டு, இருப்பதைப் பகிர்ந்து வாழ்கின்றோமோ, அன்றுதான் நமக்கு உண்மையான கிறிஸ்துபிறப்பு! அதுதான் முழுமையான பகிர்வின் விழா.

ஆதிகிறிஸ்தவர்கள் அப்பத்தைப்பிட்டு செபத்திலும், தவத்திலும் ஒன்றுபட்டதோடு மட்டுமல்லாமல் உடமைகளை ஒன்றுபட்ட உள்ளத்தோடு பகிர்ந்து பண்பட்ட இறை சமூகத்தை கட்டி எழுப்பினர். அத்தகைய பாடுபட்ட இறை உள்ளங்கள் சிந்திய இரத்தம், ஒப்புக் கொடுத்த செபங்கள் இன்று விழழுக்கு இறைத்த நீர் போன்று வீணாகிப் போய் கொண்டிருப்பது மிகவும் வேதனையைத்தான் அளிக்கின்றது. ஆம், நாம் இதோ தீக்குச்சிகளாக தீபம் ஏந்துவோம். எட்டுத்திசை செல்வோம். பகிர்வுதான் இயேசு பிறப்பின் உண்மை அடையாளம் என்பதனை உலகிற்கு எடுத்துரைப்போம். உத்தமர் இயேசுவின் திருச்சபையில் வாழ்ந்துகாட்டும் கிறிஸ்தவர்களாய் வெற்றிக்கொடி நாட்டுவோம்.



கிறிஸ்துமஸ் மடல்-2010

santa
home

வழங்கியவர்:
திருமதி. ரீனாரவி
கன்னியாகுமரி

 

A Tamil Catholic website based on the scripture ACTS 4:20 to share your experience in Jesus and Mary with everyone.
anbinmadal.org | 2002-2019 | Email ID: anbinmadal at gmail.com