பாசமுள்ள பார்வையில்...

வத்திக்கான் வானொலி நிகழ்ச்சியின் முதல் நிமிட நிகழ்ச்சி




தாயின் ஆழ்ந்த இறை நம்பிக்கை

அக்டோபர் 31

நவம்பர் 1, புனிதர் அனைவரின் திருநாள். நவம்பர் 2, இறந்தோர் அனைவரின் நினைவு நாள். இவ்விரு திருநாட்களும் முன்பின் முரணாக வருகின்றனவோ என்று நினைக்கத் தோன்றுகிறது. இறந்தோரின் நினைவுக்குப்பின்தானே புனிதரின் நினைவைக் கொண்டாட வேண்டும்? இங்கோ, புனிதரின் நினைவுக்குப்பின் இறந்தோரின் நினைவைக் கொண்டாடுகிறோமே!

பொதுவாக, ஒருவர் இறந்ததும், அவரைப்பற்றிய நல்லவையே அதிகம் பேசப்படும். ஒருவர் இறந்தபின், அவரைப்பற்றி நாம் கூறும் நல்லவற்றை, அவர் வாழ்ந்த காலத்திலேயே, அவரது முன்னிலையில், அவர் காதுபடக் கூறியிருந்தால், அவர் இன்னும் நல்லவராக, புனிதராக வாழ்ந்திருப்பாரே!

இறந்தபின் வழங்கப்படும் புகழ் மாலைகளை, மரியாதைகளை, வாழும்போதே ஒவ்வொருவருக்கும் நாம் கொடுத்தால், இவ்வுலகில், வாழும் புனிதர்களின் எண்ணிக்கை அதிகமாகுமே! புனிதர்கள் விண்ணுலகில்தான் இருக்கவேண்டும் என்ற அவசியம் இல்லையே! தாங்கள் நல்லவர்கள் என்று, வாழ்நாள் எல்லாம் உணரும் மனிதர்கள், புனிதர்களாக இவ்வுலகை விட்டு விடைபெற்று போகலாமே!

இறந்தோர்மீது காட்டும் பாசத்தை, அவர்கள் வாழும் நாட்களில் காட்டி, அவர்களை புனிதர்களாக வாழவைக்கலாம் என்பதைச் சொல்லித்தரவே, கத்தோலிக்கத் திருஅவை, புனிதர் அனைவரின் திருநாளுக்குப்பின், இறந்தோர் அனைவரின் நினைவு நாளைக் கொண்டாட நம்மை அழைக்கிறது.




தாயின் ஆழ்ந்த இறை நம்பிக்கை

அக்டோபர் 30

ஆப்ரிக்காவில் அந்தக் குடும்பம் கடும் வறுமையில் உழன்றது. அந்தக் குடும்பத்தின் தாய் கடினமாக உழைத்து குடும்பத்தைப் பராமரித்து வந்தார். ஆனால் குடும்பத்தின் வறுமைநிலை அவரது கடவுள் நம்பிக்கையை ஒருபோதும் அசைத்ததில்லை. ஒருநாள் அந்தத் தாய், உள்ளூர் வானொலி நிலையத்திற்கு, செப நிகழ்ச்சிக்காக அழைக்கப்பட்டார். அவர் தனது ஏழ்மையை, கடவுளிடம் சொல்லி உதவி கேட்டு, செபிக்கச் சொன்னார்கள் நிலையத்தார். வானொலியில் இந்த செப நிகழ்ச்சியைக் கேட்டுவரும் கடவுள் நம்பிக்கையற்ற செல்வந்தர் ஒருவர், இந்தத் தாயின் கடவுள் நம்பிக்கையை கேலிசெய்யத் திட்டமிட்டார். ஆதலால் இந்தத தாயின் முகவரியைப் பெற்றார் அவர். தனது செயலரை அழைத்து, நிறைய உணவுப்பொருள்களை வாங்கி, அந்தப் பெண்ணின் வீட்டில் கொண்டுபோய் கொடுக்குமாறு சொன்னார். இந்த உதவி யாரிடமிருந்து வந்தது என்று அப்பெண் கேட்டால், இது சாத்தானிடமிருந்து வந்தது என்று சொல் எனவும் சொல்லியனுப்பினார் செல்வந்தர். அன்று பொழுது சாய்ந்த நேரத்தில், அந்தச் செயலரும் உணவுப்பொருள்களைக் கொண்டுபோய் அந்தத் தாயிடம் கொடுத்தார். அந்தத் தாயும், மிகுந்த மகிழ்ச்சியோடும், நன்றியோடும் அவற்றைப் பெற்றுக் கொண்டார். பின், செயலர் அந்தத் தாயிடம், இவற்றை அனுப்பியது யார் என்று அறிவதற்கு விருப்பமில்லையா எனக் கேட்டார். அதற்கு அந்தத் தாய், இல்லை. இதை யார் அனுப்பியிருந்தாலும் அவர்களுக்கு நன்றி மட்டும் சொல்கிறேன், யார் அனுப்பியது என்பது பற்றி எனக்கு கவலையில்லை. ஏனென்றால், கடவுள் கட்டளையிடும்போது சாத்தான்கூட கீழ்ப்படியும் என்பது எனக்கு நன்றாகவே தெரியும் என்று பதில் சொன்னார்.




தொடர்ந்து நல்லவராக வாழுங்கள்

அக்டோபர் 28

புனித அன்னை தெரேசா, கொல்கத்தாவில் நடத்திவந்த ஓர் இல்லத்தின் சுவரில் பதிக்கப்பட்டுள்ள பொன் மொழிகள் இவை:
மக்கள் சுயநலம் கொண்டவராய் இருக்கலாம், இருப்பினும், அவர்கள் மீது அன்புகூருங்கள்.
நீங்கள் நல்லது செய்யும்போது, சுயநலம் கொண்டு அதை செய்கிறீர்கள் என்று உங்களைத் தூற்றலாம், இருப்பினும், நல்லது செய்யுங்கள்.
நீங்கள் செய்யும் நல்லவற்றை அடுத்தநாளே அவர்கள் மறந்துபோகலாம், இருப்பினும், தொடர்ந்து நல்லவராக வாழுங்கள்.
நேர்மை உங்களை பலமற்றவர்களாய் மாற்றலாம், இருப்பினும், நேர்மையுள்ளவராய் இருங்கள்.
தேவையில் இருப்போர், உங்களிடம் தேவைகளைப் பெற்றபின், உங்களைத் துன்புறுத்தலாம், இருப்பினும், தேவையில் இருப்போருக்கு உதவுங்கள்.




தாயின் தியாகத்திற்கேது முற்றுப் புள்ளி

அக்டோபர் 27

தன் கீழுள்ள நான்கு தம்பி தங்கைகளும் தரையிலமர்ந்து இரவு உணவு அருந்திக் கொண்டிருந்தார்கள். அம்மாவும் பானையிலிருந்து உணவைப் பகிர்ந்து போட்டுக் கொண்டிருந்தார்கள். தரையில் இவனுக்கான தட்டை எடுத்துவைக்கப் போனபோது இவன் சொன்னான், 'அம்மா, எனக்கு வயிறு சரியில்லை. இன்று இரவு மட்டும் தண்ணீர் குடித்துவிட்டு படுத்துப் பார்க்கலாம் என்று நினைக்கிறேன்' என்று. தாய் சிறிது பதறி விட்டார். ஏம்பா, என்னாச்சு. டீ எதுவும் போட்டுத் தரவா, என்றார். இல்லம்மா, எல்லாம் சரியாகிவிடும். நாளைப் பார்த்துக் கொள்ளலாம், என்று படுக்கப் போய்விட்டான். தரையில் படுத்துக்கொண்டே யோசித்தான் அவன். இவ்வளவு சிரமப்பட்டு கூலி வேலைக்குச் செல்லும் அம்மா, எல்லாரும் சாப்பிட்டபின், தான் சாப்பிடுகிறேன் என ஒவ்வொரு நாளும் சொல்வதன் காரணத்தை நேற்றுதான் தெரிந்து கொண்டான். ஆம், பானையில் இன்னும் இருப்பதுபோல் பாவனை காட்டி அனைவருக்கும் சோறு போட்டுவிட்டு, கடைசியில் வெறும் தண்ணீரைக் குடித்து தூங்கும் அம்மாவை நேற்று அம்மாவுக்குத் தெரியாமலே பார்த்தபோதுதான், உண்மை தெரிந்தது. ‘இன்று பொய் சொல்லி, கொஞ்சம் சோறை அம்மாவுக்கு மிச்சம் பிடித்து விட்டேன். நாளை என்ன பொய் சொல்லி இரவு உணவைத் தவிர்ப்பது’, என சிந்தித்துக் கொண்டிருந்தான் அவன். ஆனால், அவனுக்குத் தெரியாது, இன்றுதான், அவனுடைய 4 உடன் பிறப்புக்களும், வயிறு நிறைய சாப்பிட்டார்கள் என்று.




பொறுமையைக் கற்றுக் கொடுத்த தாய்

அக்டோபர் 26

குட்டிக் குரங்கு ஒன்று, மிகவும் கஷ்டப்பட்டு ஒரு தோட்டம் போட்டது. செடிகள் வளர்ந்து மரமாகிப் பூத்துக் குலுங்கி, காய்கனிகள் கொட்டும், ஆசை ஆசையாய் அள்ளிச் சாப்பிடலாம் என்று கணக்குப் போட்டது. என்ன கொடுமை எதுவுமே முளைக்கவில்லை. அதனுடைய ஆசை நிராசையானது. ஆதலால் ஒரு நாள், அந்தக் குட்டிக் குரங்கு தன் தாய்க் குரங்கிடம் சென்று, அம்மா, நான் போட்ட விதைகள் எதுவுமே முளைக்கவில்லை என்று, ஓவென அழுதது. பிள்ளையைச் சமாதானப்படுத்திய தாய்க் குரங்கு, விதை போட்டா தண்ணீர் ஊற்றனும், நீ தண்ணி ஊத்தியிருக்கமாட்டே, நீதான் படு சுட்டியாச்சே என்றது. இல்லையம்மா, ஒரு விதைக்கு எட்டு பாக்கெட் தண்ணீர் என்று, தினமும், காலையிலும் மாலையிலும் ஊற்றுவேன் என்று, தன் தாயின் குற்றச்சாட்டை மறுத்தது குட்டிக் குரங்கு. அடடா.. எட்டு பாக்கெட் தண்ணீர் விட்டால் விதை என்னவாகும்.. அழுகிப்போயிருக்கும்... அதுதான் முளைக்கவில்லை என்றது தாய்க் குரங்கு. மீண்டும் குட்டிக் குரங்கு தாயிடம், அம்மா ஒரு விதைகூட அழுகவில்லை, அது உறுதி என்று உறுமியது. ஆமா, அதெப்படி உனக்குத் தெரியும் என்றது தாய்க் குரங்கு. நான்தான் விதை முளைத்திருக்கிறதா என்று, ஒவ்வொரு நாளும் அதை மண்ணிலிருந்து தோண்டி எடுத்துப் பார்க்கிறேனே என்றது குட்டிக் குரங்கு. அப்படியா கதை, தினம் தினம் விதையை வெளியே எடுத்துப் பார்த்தால் அது எப்படி முளைக்கும் ஒவ்வொன்றுக்கும் ஒரு காலம் இருக்கின்றது. அந்தக் காலம் வரை காத்திருக்கவேண்டியது அவரவர் கடமை. அதற்குத் தேவை பொறுமை என்று பாடம் சொல்லியது தாய்க் குரங்கு.




சிரமம் தீர்க்கும் தியாக முடிவுகள்

அக்டோபர் 25

திருமணம் முடிந்து பத்து ஆண்டுகளாக அந்த தம்பதிக்கு குழந்தைகள் இல்லை. உறவினர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தே மனது வெறுத்துப் போனது தேவகிக்கு. யாராவது உறவினர் வீட்டிற்கு வந்தாலே பயப்படத் துவங்கி விடுவார் தேவகி. இந்த நிலையில், தேவகியின் கணவர் இராமுவின் அண்ணனுக்கு நான்கு குழந்தைகள். அந்தக் குழந்தைகள் வீட்டிற்கு வந்துவிட்டால் ஒரே கொண்டாட்டம்தான். அதிலும் குறிப்பாக, இராமுவின் அண்ணனின் மூன்றாவது மகன், கேசவனுக்கு சித்தப்பா, சித்தி என்றால் தனிப்பாசம். சனியும் ஞாயிறும் வீடு கலகலப்பாக இருக்கும். பிறகு, குழந்தைகளின் வருகைக்காக ஐந்து நாட்கள் காத்திருக்க வேண்டும். உறவினர்கள் பலர் தேவகியிடம் கேலித்தொனியில் பேசினாலும், இராமுவின் அண்ணி மட்டும் எப்போதும்கூட பிறந்த அக்காவைவிட பாசமாகவே இருந்தது தேவகிக்கு ஆறுதலாக இருந்தது. அன்று புதன்கிழமை. திடீரென்று வீட்டிற்கு வந்தார் பிரேமா. 'என்ன அக்கா, திடீரென்று வந்திருக்கிறீர்கள்’, என தேவகி கேட்க, பிரேமாவோ, 'இல்லை தேவகி. உன்னிடம் ஒரு உதவி கேட்கத்தான் வந்தேன். உனக்குத் தெரியும், எனக்கு நாலு குழந்தைகள். நாங்கள் இருவரும் வேலைக்குப் போகிறோம். பிள்ளைகளைக் கவனிப்பது சிரமமாக இருக்கிறது. அதனால் ஒரு பிள்ளையை, அதாவது, கேசவனை உன் வீட்டில் விட்டு, இங்கு படிக்க வைக்கலாம் என்று இருக்கிறேன். உனக்கு எதுவும் ஆட்சேபனை இருக்கா. இராமுவிடம் பேசிவிட்டு முடிவைச் சொல்’, என்று தயங்கித் தயங்கி கூறினார். தேவகிக்கோ மகிழ்ச்சியில் தலைகால் புரியவில்லை. 'என்ன அக்கா, இதில் இராமுவிடம் கேட்க என்ன இருக்கிறது? எப்போது பிள்ளையைக் கொண்டு வந்து, விடப் போகிறீர்கள் என்று கேட்டார் தேவகி. இந்த வாரக் கடைசியில் நாங்கள் வரும்போது அவனை இங்கேயே விட்டு விட்டுப்போகிறோம், என்றார் பிரேமா. பிரேமாவுக்கும் அவள் கணவனுக்கும்தான் தெரியும், எதற்காக ஒரு பிள்ளையை இவர்களுக்கு விட்டுத்தர முன்வந்தார்கள் என்று. வளர்க்க முடியாத சிரமத்தால் அல்ல, மாறாக, இராமுவும் தேவகியும் படும் மனஉளைச்சலைப் போக்க பிரேமாவும் அவள் கணவரும் பல நாள் சிந்தித்து எடுத்த தியாக முடிவு இது..




ஓர் அம்மாவின் அன்பு

அக்டோபர் 24

அமெரிக்க ஐக்கிய நாட்டில் வாழும் கவிஞரும், இசையமைப்பாளருமான ஜிம் பிரிக்மன் (Jim Brickman) அவர்கள், "ஓர் அம்மாவின் அன்பு" என்ற பெயரில் உருவாக்கிய பாடலிலிருந்து ஒரு சில வரிகள்:
வாழ்வில் நான் உயர்ந்திட படிக்கற்கள் அமைத்தாய்
வீடு திரும்பி வர பாதையைக் காட்டினாய்
என் இதயத்தினுள் நுழைந்து, அதை ஒழுங்குபடுத்த நேரம் ஒதுக்கினாய்
வாழ்வில் நான் வளர்ந்திட வேர்கள் தந்தாய்
வானில் நான் பறந்திட சிறகுகளும் தந்தாய்
நீ என்னை நம்பியதால், கனவு காண நான் கற்றுக்கொண்டேன்
இவ்வுலகில் வேறெந்த சக்தியும் இதற்கிணையில்லை
வேறெந்த கருவூலமும் இதற்கு நிகரில்லை
அதுதான் ஓர் அம்மாவின் அன்பு.




தாயின் கடவுள் பக்தி

அக்டோபர் 23

தன் குழந்தைகளை வளர்த்து அவர்களை உயர்வடையச் செய்வதிலேயே தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்திருந்த அந்த தாய், தன் வாழ்நாளில் தனக்கென்று எதையுமே கேட்டதில்லை. ஆயினும் அவர், வயதுமுதிர்ந்த நிலையில், முதல்முறையாக காசிக்குச் சென்று தன் உடலைவிடும் ஆசையை தெரிவித்தார். தனது தாய் மீது அளவில்லா அன்புகொண்ட மகன், தனது தாயின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்கு ஏற்பாடுகளைச் செய்தார். தனது மனைவி மற்றும் குழந்தைகளை விட்டுவிட்டு, தாயைக் கூட்டிக்கொண்டு பயணத்தை துவக்கினார். கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த அவர்கள் இருவரும், காசிக்கு நடந்தே செல்ல முற்பட்டார்கள். அது ஒரு நீண்ட பயணம். பல வாரங்கள் கடந்த நிலையில் பயணக் களைப்பில், வயது முதிர்ந்த தாய் பலவீனமடைந்தார். அவரால் தொடர்ந்து நடக்க முடியவில்லை. ஆகவே, தனது தாயை தோளில் தூக்கிக்கொண்டு நடக்கத் துவங்கினார் மகன். தனது தாயின் ஆசையை, என்ன விலைகொடுத்தாவது பூர்த்திசெய்துவிட வேண்டுமென்ற முனைப்பு இருந்தது மகனுக்கு. அந்த நீண்ட பயணத்தில் ஒரு காட்டு வழியில் பயணிக்க நேர்கையில், அங்கே ஒரு மணியோசையுடன் ஒற்றை மாடு பூட்டப்பட்ட மாட்டுவண்டி வந்து, மகனின் அருகில் நின்றது. “உள்ளே ஏறுங்கள்” என்றார் மாட்டுவண்டி ஓட்டுநர். ஏறிக்கொண்டனர். தனது தாயை வண்டியினுள்ளே பத்திரமாக அமரவைத்தார் மகன். வண்டி நகரத் துவங்கியது. தனது தாயை வண்டியில் கூட்டிச்செல்வது குறித்து மகிழ்ச்சியுற்ற மகன், சிறிது நேரத்திற்குப் பின் ஒரு விடயத்தைக் கவனித்தார். வழக்கமாக மாட்டு வண்டிகளில் செல்லும்போது பாதையில், மேடுபள்ளங்களில் ஏற்படும் அதிர்வுகள் ஏதும் உணரப்படவில்லை என்பதை உணர்ந்தார். வண்டியின் சக்கரத்தைக் கவனித்தபோது அவை சுழலவில்லை. பின் அவர் காளையினைப் பார்த்தார். அது கால்மடக்கி அமர்ந்தவாறு இருந்தது, ஆனாலும் வண்டி சென்றுகொண்டிருந்தது. பின் அவர் ஓட்டுநரைப் பார்த்தார். அங்கு முகமில்லாத ஒரு மேலாடை மட்டுமே இருந்தது. அது, “வெறுமையான முகம்.” அவர் தனது தாயைப் பார்த்தார். அவர் பிரகாசமாய் மின்னிக்கொண்டிருந்தார். அவரது தாய் உடனே எழுந்து உட்கார்ந்து, “நாம் வந்து சேர்ந்துவிட்டோம்! அவர் இங்குதான் இருக்கிறார். நான் போகும் நேரம் வந்துவிட்டது” என்று சொல்லி, தனது உடலை அங்கேயே துறந்தார்(சத்குரு சொன்ன கதை இது).




மரணப் படுக்கையிலும் மகனின் தேவைகளை...

அக்டோபர் 21

தன் தந்தை இறந்ததும், வயதான தாயை முதியோர் இல்லம் ஒன்றில் சேர்த்துவிட்டார் மகன். சில மாதங்கள் சென்று, அவ்வில்லத்திலிருந்து மகனுக்குச் செய்தி வந்தது. "உங்கள் தாய் மரணத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறார். விரைவில் வந்து அவரைப் பாருங்கள்" என்று அச்செய்தி கூறியது. தாயைச் சந்திக்கச் சென்ற மகன், அவர் மிகவும் தளர்ந்திருப்பதைக் கண்டார். "அம்மா, உங்களுக்கு ஏதாவது வேண்டுமா?" என்று கேட்டார்.

அந்த அன்னை, "மகனே, இந்த முதியோர் இல்லத்தில் மின் விசிறிகள் எதுவும் இல்லை. இங்கு ஒரு சில மின்விசிறிகளாவது வாங்கிக் கொடு. உணவுப் பொருள்களைக் காப்பதற்கு ஒரு 'பிரிட்ஜ்' வாங்கிவை. நான் பல நாட்கள் இரவில், பசியோடு உறங்கியிருக்கிறேன்" என்று கூறினார்.

இதைக் கேட்ட மகனுக்கு சுரீர் என்று உள்ளத்தில் வலித்தது. "அம்மா, இத்தனை நாள்கள் இங்கே இருந்தீர்கள். அப்போதெல்லாம் இவைபற்றி சொல்லாமல், இப்போது சொல்கிறீர்களே. ஏன்?" என்று மகன் கேட்டார். அதற்கு, "மகனே, இந்த வெப்பத்தை, பசியை நான் பொறுத்துக்கொள்வேன். எனக்கு அது பழக்கமாகிவிட்டது. ஆனால், உன் பிள்ளைகள் உன்னை இங்கு வந்து சேர்க்கும்போது, உன்னால் இவற்றையெல்லாம் தாங்க முடியாது என்று தெரியும். உனக்கு இவை தேவைப்படும் என்று தான் உன்னிடம் இதைக் கூறுகிறேன்" என்று அமைதியாகக் கூறினார் அந்த அன்னை.

மரணப் படுக்கையிலும் மகனின் தேவைகளை நிறைவு செய்ய விழைவது, தாயின் உள்ளமே!




பாட்டியின் பாசமும் தாயின் கண்டிப்பும்

அக்டோபர் 20

அவ்வப்போது மாமியாருக்கும் மருமகளுக்கும் உரசல் வருவது உண்டு. தன் மகன், மனைவிக்கு சார்பாகப் பேசினாலும், பேரப்பிள்ளைகள் எப்போதும் தன் பக்கமே நிற்பதைக் கண்டு தேவகிக்கு மகிழ்ச்சிதான். அன்றும் தேவகிக்கும் மருமகளுக்கும் சின்னச் சண்டை. பேரப்பிள்ளைகள் இருவரையும் நண்பர்களுடன் வெளியில் கிரிக்கெட் விளையாட அனுப்பாமல், படிக்கச் சொன்னதால், மாமியார் தேவகி, மருமகளிடம் எரிந்து விழுந்தார். அடுத்த வாரம் தேர்வை வைத்துக்கண்டு எப்படி குழந்தைகளை விளையாட அனுமதிக்க முடியும் என்பது மருமகளின் வாதம். என்ன, பெரிய ஐஏஸ் தேர்வா என்பது மாமியாரின் வாதம். மருமகள் சொன்னார், 'அம்மா, என்னுடைய குழந்தைகளைத் தேவையில்லாமல் கஷ்டப்படுத்த மாட்டேன் என்பது உங்களுக்குத் தெரியும். நான் இந்த வீட்டிற்கு மாட்டுப் பெண்ணாக வந்த இந்த 12 ஆண்டுகளில், இந்த படிப்பு விடயம் தவிர, வேறு எதிலும் நான் கண்டிப்பாக இருந்ததில்லை. நான் வேலைக்குப் போனபோதெல்லாம், இந்த இரு குழந்தைகளையும் வளர்த்ததெல்லாம் நீங்கள்தான். உங்களால்தான் குழந்தைகள் சிறப்பாக ஊர் மெச்ச வளர்ந்திருக்கிறார்கள். இப்போது உங்களுக்கு வயதாக வயதாக, பேரப்பிள்ளைகள் மீது உள்ள பாசம் உங்கள் கண்ணை மறைக்கிறது. நீங்கள் உங்கள் மகனை, அதாவது என் கணவரை, சின்னப் பையனாக வளர்த்தபோது, தேர்வு நேரங்களில் எவ்வளவு கண்டிப்பு காட்டினீர்கள் என எண்ணிப் பாருங்கள், அது போதும். நீங்கள் பாட்டிக்குரிய பாசத்தை இப்போது பொழியும்போது, ஒரு தாய்க்குரிய கடமைகளையும் மதியுங்கள்' என்று.

இவ்வளவு தெளிவான அறிவுடைய மருமகளை ஆண்டவன் கொடுத்ததற்கு இறைவனுக்கு நன்றி கூறினார் அத்தாய்.




சிக்கனத்தைக் கற்றுக்கொடுக்கும் தாய்

அக்டோபர் 19

பிலிப்பைன்ஸில் வாழ்ந்து வருகின்ற யூஃப்ரோசினா என்பவரின் கணவர், சில ஆண்டுகளுக்கு முன்னர், அவரை விட்டுவிட்டுப் போய்விட்டார்; அத்தம்பதியருக்கு மூன்று பிள்ளைகள். ஆகவே தன் பிள்ளைகளுக்காக, கஷ்டப்பட்டு உழைத்து, பணம் சம்பாதித்து, படுசிக்கனமாக வாழவேண்டிய சவாலை எதிர்கொண்டார் யூஃப்ரோசினா. அப்படி சிக்கனமாகச் செலவழித்து குடும்பம் நடத்தி வரும்போது, கையிலிருக்கும் பணத்தை செலவுசெய்யும் விதம் பற்றி பிள்ளைகளுக்கும் கற்றுக் கொடுக்கிறார் அத்தாய். எடுத்துக்காட்டுக்கு ஒன்றைச் சொல்ல வேண்டுமானால், பிள்ளைகள் தங்களுக்குப் பிடித்தமான ஏதோவொன்றைப் பார்த்து அதை வாங்கித் தரும்படி கேட்கும்போது, அது வேண்டாம் என பட்டென்று சொல்லிவிடாமல், “உனக்கு வேண்டுமென்றால் அதை நீ வாங்கிக்கொள்ளலாம், ஆனால் நீ தீர்மானிக்க வேண்டும். நம்முடைய கையில் ஒரு பொருளை மட்டுமே வாங்குவதற்குப் பணம் இருக்கிறது. இந்தப் பணத்தில், நீ கேட்கிற பொருளை வாங்கலாம், இல்லையென்றால் இந்த வாரம், சாதத்தோடு சேர்த்து சாப்பிடுவதற்கு கொஞ்சம் இறைச்சியோ காய்கறியோ வாங்கலாம். இப்போது சொல், உனக்கு எது வேண்டும்?” என அவர்களுக்கு நியாயத்துடன் பேசுவார். இதனால் பிள்ளைகளும், அம்மா சொல்லவந்ததைப் புரிந்துகொண்டு, வேறெதாவது வாங்குவதற்குப் பதிலாக, சாப்பாட்டுக்குத் தேவையானதை வாங்குகிறார்கள்.

பொதுவாக, பணத்தைச் சிக்கனமாகச் செலவு செய்ய வேண்டும் என்று சொல்வது எளிது, செய்வதுதான் கஷ்டம். முக்கியமாக, அப்பா அம்மாவுடன் இருக்கிற ஒருவருக்கு பாக்கெட் மணி கிடைக்கிறதென்றால் அல்லது அவரே சம்பாதிக்கிறவராக இருந்தால் இது மிகவும் கஷ்டமாக இருக்கலாம். ஆனால் சிக்கனமே சிறப்பு தரும்! அதை அம்மாவின் சிக்கனம் கற்றுத் தருகிறது.




தாய்வழி பாசம் எனும் தொடர்கதை

அக்டோபர் 18

அந்தத் தாய் அடிக்கடி தொலைபேசியின் பக்கமே வந்து போய்க்கொண்டிருந்தார். அடுப்பில் ஏதாவது ஒரு வேலையைச் செய்துவிட்டு இடையிடையே, முன்அறைக்கு வந்து தொலைபேசி பக்கம் நிற்பதும், பின், சிறிது நேரத்தில் அடுப்படி வேலையைக் கவனிக்க சமையலறைக்குள் நுழைவதுமாக, கடந்த இரண்டு மணிநேரங்களாக, இப்படியே சென்றுகொண்டிருந்தது. நேரம் கடந்து செல்லச் செல்ல, அந்த தாயின் முகத்தில் கவலை ரேகைகள் படிய ஆரம்பித்தன. அமெரிக்க ஐக்கிய நாட்டில் வாழும் தன் ஒரே மகளுக்கு இன்று தலைப்பிரசவம் என்றால், எந்த தாயால்தான் நிம்மதியாக இருக்க முடியும்!. 'அம்மா, இங்கு பயப்பட ஒன்றுமில்லை, எல்லா வசதிகளும் உள்ளன. நம் ஊரைப்போல் தலைப்பிரசவம் என்றால், பயப்படத் தேவையில்லை' என, மகளே தொலைபேசியில் பலமுறை கூறிவிட்டபோதிலும், அந்தத் தாயால் பொறுமை காக்க முடியவில்லை. ஒரு பத்து நிமிடத்தில், அந்தத் தாயே தொலைபேசியில் தன் மருமகனை அழைத்தார். ஆனால், கைபேசியை எடுத்ததோ, அவரின் மகள்தான். ‘அம்மா, குழந்தை பிறந்து ஒரு மணி நேரம் ஆகிவிட்டது. அவர் குழந்தையின் அருகிலேயே இருந்ததால் உங்களுக்கு செய்தி தெரிவிக்க மறந்துவிட்டார் போல. அவர் தெரிவித்திருப்பார் என்று நினைத்து நானும், பிறகு பேசலாம் என இருந்துவிட்டேன்' என மன்னிப்பு கேட்பதுபோல் கூறினார் மகள். தாய், நினைத்துக்கொண்டார், ‘நம்முடைய படபடப்பு, இனிமேல் அந்தச் சிறு குழந்தையின் அசைவுகளில் தன் மகளுக்கும் பற்றிக்கொள்ளும்’ என்று.




வரவேற்கும் விளக்குகள்

அக்டோபர் 17

தன் பெற்றோருடன் சண்டைபோட்டு, வீட்டை விட்டுச்சென்ற மகன், சில நாட்கள் சென்று வீட்டுக்கு கடிதம் ஒன்றை எழுதினார். "அப்பா, அம்மா, என்னை மன்னித்துவிடுங்கள். நான் என் தவறை உணர்ந்துவிட்டேன். நான் வீட்டுக்குத் திரும்பிவர ஆவலாக இருக்கிறேன். நான் வருகிற ஞாயிறு இரவு 8 மணி அளவில், நம் வீட்டுப் பக்கம் வருவேன். வீட்டின் முன்புறம் உள்ள விளக்கு எரிந்துகொண்டிருந்தால், நீங்கள் என்னை ஏற்றுக்கொண்டதற்கு அதை ஓர் அடையாளமாக நான் எடுத்துக்கொள்வேன். விளக்கு எரியவில்லையென்றால், என்னை வரவேற்க நீங்கள் தயாராக இல்லை என்பதை புரிந்துகொள்வேன்" என்று மடலில் எழுதியிருந்தார் மகன்.

அடுத்த ஞாயிறு மாலை அவர் வீட்டை நெருங்கும்போது, மனம் பதைபதைத்தது. ஒருவேளை, விளக்கு எரியவில்லையென்றால்... என்று உள்ளம் அஞ்சியது. மகன் தெருவோரம் திரும்பியதும், அவரது கண்கள் ஆச்சரியத்தில் மலர்ந்தன. வீட்டுக்கு முன்புறம் ஒரு விளக்கு மட்டுமல்ல, பல வண்ண விளக்குகள் எரிந்துகொண்டிருந்தன. Welcome என்ற சொல், விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு நடுவே வைக்கப்பட்டிருந்தது.




சுயநலம் அகல, பொதுநலன் பெருக தாய்

அக்டோபர் 16

கமலன் ஒரு சுயநலக்காரர். ஒரு நாள் அவர், ஊர் ஓரமாக உள்ள சாலையில் நடந்து வந்து கொண்டிருந்தார். அந்தச் சாலையின் நடுவில் ஒரு முள்செடி கொத்தாகக் கிடந்தது. கமலன், அதை எடுத்து ஓரமாக வீசாமல், முள்செடியைத் தாண்டி வீட்டுக்குச் சென்றார். வீட்டில் நுழைந்த கமலன், காலணிகளைக் கழற்றிக்கொண்டே, "யாராவது முள்செடி குத்தி சாகட்டும்... எனக்கென்ன வந்தது? நல்லவேளை நான் பார்த்துவிட்டேன் என்று சொல்லிக் கொண்டிருந்தார். இந்த முணுமுணுப்பைக் கேட்ட அவரின் மனைவி கமலா, நீங்க, உங்க சுயநலக் குணத்தை விடுவதா இல்லை, நீங்க திருந்துவதற்கு ஏதாவது ஒரு காரியம் நடக்கும், பாருங்களேன் என்று சொல்லி வாய் மூடுவதற்குள், பள்ளியிலிருந்து திரும்பிய மகன் பாலு, நொண்டிக்கொண்டே வீட்டிற்குள் நுழைந்தான். உடனடியாக, கமலா, ஓடிப்போய் மகனின் காலைப் பார்த்தார். அம்மா, பள்ளியில் இருந்து நான் நடந்து வந்துகொண்டிருந்தபோது, அந்தச் சாலையில் கிடந்த முள்செடியில் தெரியாமல் கால் வைத்துவிட்டேன். அந்தச் செடியின் கூர்மையான முள்கள், “நறுக்’ என்று காலில் பாய்ந்துவிட்டன என்று சொன்னான் பாலு. மறுநாள் காலையில், பாலுவின் முள் தைத்த கால் பெரிதாக வீங்கிவிட்டது. வலி பொறுக்க முடியாமல் துடித்தான் பாலு. அவனை உள்ளூர் மருத்துவரிடம் அழைத்துச் சென்று காட்டினர். பாலுவின் பெற்றோர். பாலுவின் காலைச் சோதனை செய்து பார்த்துவிட்டு, ”உங்கள் மகனின் காலில் விஷமுள் குத்தி, விஷம் பாதம்வரை பரவிவிட்டது. நகரத்துக்குப் போய் பெரிய மருத்துவரிடம் காட்டுங்கள்” என்றார் மருத்துவர். உடனே பாலுவைப் நகரத்துக்கு அழைத்துச் சென்று ஒரு பெரிய மருத்துவரிடம் காட்டினார்கள். அவர் பாலுவின் காலைப் பரிசோதித்து விட்டு, ”நல்ல வேளையாக உடனே வந்தீர்கள். சிறிது தாமதித்து வந்திருந்தாலும் பையனின் காலை எடுக்க வேண்டியிருந்திருக்கும்” என்று கூறிவிட்டுச் சிகிச்சை அளித்தார். அப்போது பாலுவின் அம்மா, தன் கணவரை முறைத்துப் பார்த்தார். சாலையின் நடுவில் கொத்தாகக் கிடந்த அந்த முள்செடியை உடனே அகற்றியிருக்கலாம் என்று நினைத்து, தன்னையே நொந்துகொண்டார் பாலுவின் அப்பா. தனது சுயநலத்தையும், தவறையும் எண்ணி மிகவும் வருந்தினார் அவர். அந்த நிகழ்வு, அந்தக் குடும்பத்தையே பொதுநலனில் மிகவும் அக்கறை கொள்ள வைத்தது.




“ஐ லவ் யூ, அப்பா”

அக்டோபர் 14

இளம் தந்தையோருவர், தன் 5 வயது மகனுடன் சேர்ந்து, அவர் புதிதாக வாங்கியிருந்த காரை துடைத்துக்கொண்டிருந்தார். அப்பொழுது அச்சிறுவன் ஒரு சிறிய கல்லை எடுத்து காரின் கதவு பக்கத்தில் சுரண்டிக் கொண்டிருந்தான். சத்தத்தைக் கேட்ட அப்பாவுக்கு கோபம் தலைக்கேறவே, அவர், மகனுடைய கையை பிடித்து, நான்கு முறை உள்ளங்கையில் விளாசிவிட்டார். அப்பொழுதுதான் கவனித்தார், அவர் தன் மகனை அடித்தது, தன் கையில் வைத்திருந்த ஸ்பேனரை (Spanner) கொண்டு என்பதை.

வலியில் துடித்த மகனை மருத்துவ மனைக்கு தூக்கிக்கொண்டு ஓடினார். "பல எலும்புகள் முறிந்துவிட்டதால், இனி விரல்களை குணமாக்க முடியாது. அவற்றை வெட்டியெடுக்க வேண்டும்" என்று மருத்துவர்கள் கூறினர். வலி நிறைந்த கண்களுடன், மகன், அப்பாவை பார்த்து, “அப்பா.. என் விரல்ளுங்க திரும்ப வளர்ந்துடும் இல்லப்பா?” என்று கேட்டவுடன், கண்ணீருடன் மவுனமாக வெளியே வந்தார் தந்தை.

வெளியில் நின்றிருந்த தன் காரை பல முறை எட்டி, எட்டி உதைத்தார். கண்ணீருடன் தலையில் கையை வைத்துக்கொண்டு காரின் முன்புறம் அமர்ந்தபோதுதான் தன் மகன் செய்த கீரல்களை கவனித்தார். அங்கு - “ஐ லவ் யூ அப்பா” என்ற சொற்கள் இருந்தன.

மனிதர்களைப் பயன்படுத்துகிறோம்! பொருட்களை நேசிக்கிறோம்!! எப்பொழுது, மனிதர்களை நேசித்து, பொருட்களைப் பயன்படுத்தப்போகிறோம்?




சுமக்கையில் எடையில்லாதது குழந்தை மட்டுமே

அக்டோபர் 13

லிண்டா பானண் என்பவர் பிறக்கும்போதே கைகளின்றி பிறந்தவர். இளவயதிலேயே இந்த குறையை பெரிதாகப் பொருட்படுத்தாமல், பல்வேறு திறமைகளை தனக்குள்ளேயே வளர்த்துக்கொண்டார். காலால் எழுதுவது, கிட்டார் வாசிப்பது, நீச்சல் அடிப்பது போன்ற பல்வேறு விடயங்களில் ஆர்வமுடன் ஈடுபட்டார். அவருக்கு திருமணமும் முடிந்து, ஒரு மகன் பிறந்தான். அவனும் கைகளின்றியே பிறந்தான். மனம் தளரவில்லை அந்தத் தாய். குழந்தைக்குரிய அனைத்துத் தேவைகளையும் அவரே கவனித்துக்கொண்டார். எவருடைய உதவியையும் அவர் நாடவில்லை. தன் மகனுக்குச் சட்டை போடுவது, உணவூட்டுவது, பள்ளிக்கு அழைத்துச் செல்வது ஆகிய எல்லாவற்றையும் தானே கவனித்துக்கொண்டு, அதில் மகிழ்ச்சி கண்டார். ஒருமுறை ஒரு பத்திரிகையாளர் அவரிடம் கேட்டார், 'கைகள் இல்லாத நீங்கள் உங்கள் மகனுக்காக இவ்வளவு வேலைகளையும் செய்வது சிரமமாக இல்லையா' என்று. லிண்டா சொன்னார், 'என் குழந்தைக்கு இதையெல்லாம் செய்ய முடிந்ததை எண்ணி எனக்கு உண்மையிலேயே மகிழ்ச்சியாக இருக்கிறது, இதில் கிட்டும் திருப்தி வேறு எதிலும் இல்லை' என்று.

ஆம். தாயன்பைத் தாண்டிய அன்பு என்று எதுவும் இல்லை. அதன் வழியாகத்தான் இறையன்பையும் ருசிக்க முடிகிறது.




பாத்திமா அன்னையின் காட்சி

அக்டோபர் 12

போர்த்துக்கல் நாட்டின் பாத்திமாவில், 1917ம் ஆண்டு மே 13ம் தேதி முதல், அக்டோபர் 13ம் தேதி வரை ஒவ்வொரு மாதமும் லூசியா, பிரான்சிஸ், ஜசிந்தா ஆகிய மூன்று ஆடுமேய்க்கும் சிறார்க்கு அன்னை மரியா காட்சியளித்து வந்தார். அக்டோபர் 13ம் தேதியன்று அக்காட்சியைப் பார்ப்பதற்காக, நாட்டின் எல்லாப் பகுதிகளிலிருந்தும் எழுபதாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் குவிந்தனர். அன்று கனமழை பெய்தது. திடீரென கதிரவனின் கதிர்கள், மிகவும் ஒளிமயமாக இருந்தன. மக்கள் வியந்து பார்த்துக்கொண்டிருக்கையில், சிறுமி லூசியா அன்னை மரியிடம் பேசத் தொடங்கினார். அந்த உரையாடலில், அன்னை மரியா, தமக்கென இவ்விடத்தில் ஓர் ஆலயம் கட்ட வேண்டும். நான் செபமாலை அன்னை. மக்கள் ஒவ்வொரு நாளும் செபமாலை செபிக்க வேண்டும். போர் முடியும். படைவீரர்கள் தங்களின் வீடுகளுக்குத் திரும்புவார்கள். மக்கள் தங்கள் பாவங்களுக்காக கடவுளிடம் மன்னிப்புக் கேட்டு, வாழ்வை திருத்தியமைக்க வேண்டும். உலகின் அமைதிக்காவும், பாவிகளின் மனமாற்றத்திற்காகவும் செபமும் தவமும் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று கூறினார். இந்த உரையாடல் முடிந்ததும், அன்னை மரியா கிழக்குநோக்கித் திரும்பினார். விண்ணை நோக்கி அவர் தம் கரங்களை விரித்தார். மழை நின்றது. வானம் இருளாக இருந்தது. அன்னையின் கரங்களிலிருந்து சென்ற ஒளி, கதிரவன்மீது படுவதை அந்த மூன்று சிறாரும் பார்த்தனர். அப்போது கதிரவன் மிகுந்த பிரகாசத்துடன், அங்குமிங்கும் தள்ளாடி, மக்களை நோக்கிப் பாய்ந்துவந்து மேலே சென்றது போன்ற அதிசயத்தை, அங்கு கூடியிருந்த பெருந்திரளான மக்கள் மட்டுமன்றி, அவ்விடத்திற்கு 25 மைல் தூரத்தில் இருந்த மக்களும் கண்டு வியந்தனர். அச்சிறார்க்கு அன்னை மரியா காட்சியளித்தது உண்மையென்பதற்கு, இதுவே முக்கிய சாட்சியாக அமைந்தது. அன்று இதைப் பார்த்த மக்கள், அந்த இடத்திலே தங்கள் பாவங்களுக்காக அழுது கண்ணீர் சிந்தி கடவுளிடம் மன்னிப்பை இறைஞ்சினர் என்று, அந்நிகழ்வைப் பார்த்தவர்கள் சாட்சி சொல்லியுள்ளனர்.




நினைவுகள் இன்னும் தூங்கவில்லை

அக்டோபர் 11

அவருக்கு அழுகை பீறிட்டது. 'அம்மா எங்கு சென்றுவிட்டார்கள்? அம்மா இருந்திருந்தால் நான் இப்படி அநாதையாகப் படுத்திருக்கமாட்டேனே' என எண்ணி அழுதார். சுற்றி நின்ற உறவினர்களுக்கு, இவர் ஏன் அழுகிறார் என புரியவில்லை. எழவோ, பேசவோ முடியாத நிலையில் படுத்திருந்த அவருக்கு, நினைவில் தொக்கி நின்றதெல்லாம் அவர் தாய்தான். தாய் தன்னைக் கைபிடித்து பள்ளிக்கு அழைத்துச் சென்றது, சோறூட்டியது என எல்லாமே நினைவில் வந்து நிழலாடின. அந்த 25 வயது அம்மா எங்கே போய்விட்டார், என்ன நடந்தது, என எதுவுமே அவருக்கு நினைவில்லை. தாயின் உருவமும், தாயோடு தொடர்புடைய ஒரு சில சம்பவங்களும் தவிர, வேறு எதுவும் அவர் நினைவில் இல்லை. அவரின் அழுகை சிறிது சிறிதாக அடங்கியது. 82 வயதான அந்த முதியவரைச் சுற்றி நின்ற பேரப்பிள்ளைகளையே அவருக்கு அடையாளம் தெரியவில்லை. யார் இந்த இளையோர்? நம்மோடு ஒன்றாகப் பள்ளியில் படித்தவர்களா? என்றுகூட மூளையைக் கசக்கிப் பார்த்தார். தன் தாய் இறந்து 40 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டன என்பதுகூட அவருக்கு நினைவில்லை. ஆனால், அவர் மனம் அவருக்குச் சொன்னதெல்லாம், 'என்னைக் கைபிடித்து அழைத்துச் செல்லும் தாய் இருந்திருந்தால், நான் இவ்வளவு கஷ்டப்பட்டிருக்கமாட்டேன்' என்பது மட்டும்தான். அதையே திரும்பத் திரும்ப தனக்குள் சொல்லிக் கொண்டிருந்தார். 'அவருக்கு கடந்தகாலம் முழுவதும் மறந்து விட்டது' என மருத்துவர் சொன்னாலும், தாயின் கைபிடித்து நடந்தது, அவர் நினைவிலிருந்து அழிய மறுத்தது.




இயற்கை சொல்லித்தரும் மன்னிப்பு

அக்டோபர் 10

மன்னிப்பு நம் இயல்பாகவே மாறவேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தும் வண்ணம் பலர் சொன்ன கருத்துக்களில், நம் உள்ளங்களில் ஆழமாய்ப் பதிபவை, Mark Twain அவர்கள் சொன்ன அற்புதமான வார்த்தைகள்: “Forgiveness is the fragrance that the violet sheds on the heel that has crushed it.” அதாவது, தன்னை மிதித்த கால்களில், தன் நறுமணத்தை மலர் பதிக்கிறதே; அதுவே மன்னிப்பு.

நம்மைச் சுற்றியுள்ள இயற்கையில் இதுபோல் பல நூறு உதாரணங்களைக் காணலாம். தன்னைக் கசக்கிப் பிழிபவர் கையில் இனியச் சாராய் மாறுகிறதே கரும்பு... அதுவே மன்னிப்பு. தன்னைச் சுட்டெரித்தாலும் நறுமணம் தருகிறதே சந்தனம்... அதுவே மன்னிப்பு. தங்களை வெட்டுகிறார்கள், விறகாய் எரிக்கிறார்கள் என்பதற்காக மரங்கள் நிழல் தர மறுக்கின்றனவா? இல்லையே. கலீல் கிப்ரான் என்ற கவிஞர் சொன்ன வரிகள் நினைவுக்கு வருகின்றன: கொடுப்பதே மரத்தின் இயல்பு, அழகு. நிழல் கொடுக்க, கனி கொடுக்க, ஒரு மரம் மறுத்தால், அதன் இயல்பு மாறிவிடும், அது இறந்துவிடும்.

வாழ்வில் அன்பையும், மகிழ்வையும் நிறைவாய் உணர்வதற்கு அடித்தளம், மன்னிப்பு. மன்னிப்பு தருவதும், பெறுவதும் முழு மனித நிறைவுக்கு நம்மை இட்டுச் செல்லும்.

அசிசி நகர் புனித பிரான்சிஸ் உருவாக்கிய “அமைதியின் கருவியாய் என்னை மாற்றும்” என்ற அந்த அற்புத செபத்தின் ஒரு பகுதி இதோ:

"மன்னிப்பதாலேயே, மன்னிப்பு பெறுகிறோம்.

கொடுப்பதாலேயே பெறுகிறோம்.

இறப்பதாலேயே நிறைவாழ்வில் பிறக்கிறோம்."




யூத இன ஒழிப்பு சிறாரின் அன்னை

அக்டோபர் 9

1910ம் ஆண்டில் போலந்து நாட்டின் Otwoc எனுமிடத்தில், பிறந்த ஐரீனா ஷென்ட்லர் (Irena Sendler) அவர்கள், மூன்று குழந்தைகளைப் பெற்றெடுத்தவர். ஆயினும், இவர் யூத இன ஒழிப்பு சிறாரின் அன்னை என அழைக்கப்படுகிறார். காரணம், இரண்டாம் உலகப் போரின்போது, ஷின்ட்லர் குழு, வார்சா யூத வதை முகாமிலிருந்து 2,500 யூதக் குழந்தைகள் மற்றும் சிறாரைக் காப்பாற்றியது. இவர்களில் நானூறு பேரை, ஷின்ட்லரே காப்பாற்றினார். இரண்டாம் உலகப் போர் ஆரம்பிப்பதற்கு முன்னதாகவே, வார்சா நகர் சென்று, அங்கு நகராட்சியில் சமூகநலத் துறையில் வேலையில் சேர்ந்தார் ஷென்ட்லர். 1939ம் ஆண்டில் நாத்சி ஜெர்மானியர்கள் போலந்தை ஆக்ரமிக்கத் தொடங்கியவுடன், தன்னுடன் பணியாற்றிய சமூகநல ஆர்வலர்களின் உதவியுடன், யூதக் குடும்பங்களுக்கு உதவுவதற்காக, மூவாயிரத்திற்கு மேற்பட்ட போலி ஆவணங்களை இவர் தயார் செய்தார்.

இது மிகவும் ஆபத்தான வேலை என்பது, ஷென்ட்லருக்குத் தெரியும். ஏனென்றால், ஜெர்மனி ஆக்ரமித்திருந்த போலந்தில், யூதர்களுக்கு, எந்தவித உதவிகளைச் செய்பவர் யாராயிருந்தாலும், அவர் மட்டுமின்றி, அவரின் முழுக்குடும்பமும், குடும்பத்தைச் சார்ந்த அனைவருமே, மரணதண்டனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என, நாத்சி அரசு, 1941ம் ஆண்டு அக்டோபரில் அறிவித்திருந்தது. இவர், யூதர்களுக்கு உதவிசெய்வதற்கென மறைந்துசெயல்படும் Żegota எனப்படும் ஒரு நிறுவனத்தில், யூதச் சிறார் பிரிவுக்கு, 1943ம் ஆண்டில் தலைவராக நியமிக்கப்பட்டார். இவர், சமூகநலவாழ்வுத் துறையில் வேலை செய்ததால், typhus என்ற உயிர்க்கொல்லி நோய், வார்சா யூத வதை முகாமில் பரவியுள்ளதா என்பதைப் பரிசோதிப்பதற்கு சிறப்பு அனுமதி பெற்றிருந்தார். இந்த முகாமில் நான்கு இலட்சத்துக்கு மேற்பட்ட யூதர்கள் சிறைவைக்கப்பட்டிருந்தனர் எனச் சொல்லப்படுகிறது. இந்த முகாமிற்கு ஷென்ட்லர் சென்றபோதெல்லாம், யூதர்களுடன் ஒருமைப்பாட்டுணர்வைத் தெரிவிப்பதன் அடையாளமாக, தாவீதின் விண்மீன் என்ற பதக்கத்தை அணிந்திருந்தார். அங்கு, அம்மக்களின் நலவாழ்வைப் பரிசோதிப்பதுபோல், தன் உடன்பணியாளர்களுடன் சேர்ந்து யூதக் குழந்தைகளையும், இளம்சிறாரையும் கடத்திவந்தார். சிலநேரங்களில், அவசர மருத்துவ வாகனங்களிலும், இரயில் போன்ற சிறிய வண்டிகளிலும், இன்னும் சிலநேரங்களில் பொட்டலங்களிலும், பெட்டிகளிலும், இவைபோன்ற பல்வேறு வழிகளில் அவர்களைக் கடத்திவந்தார். இவ்வாறு கடத்திவந்த குழந்தைகளையும், இளம்சிறாரையும், பல துறவற அருள்சகோதரிகள் இல்லங்களிலும், யூதர்கள் அல்லாத போலந்து கிறிஸ்தவக் குடும்பங்களிலும் கொடுத்து காப்பாற்றச் செய்தார். இவரோடு சேர்ந்து பணியாற்றிய ஏறத்தாழ முப்பது தன்னார்வலர்களில் பெரும்பாலானோர் பெண்கள்.

1943ம் ஆண்டு அக்டோபர் 20ம் தேதி ஷென்ட்லர் அவர்களை நாத்சி அதிகாரிகள் கைது செய்து Pawiak சிறைக்கு அனுப்பினர். சிறையில் அவரோடு தொடர்புடைய ஆட்களின் பெயர்களை அறிவதற்காகச் சித்ரவதைப்படுத்தினர். ஷென்ட்லர் மறுத்ததால் அவருக்கு மரண தண்டனை தீர்ப்பளித்தனர். ஆயினும், Żegota உறுப்பினர்கள், சிறைக் காவலர்களுக்கு இலஞ்சம் கொடுத்து, 1944ம் ஆண்டு பிப்ரவரியில், ஷென்ட்லரை சிறையிலிருந்து வெளிக்கொணர்ந்தனர். ஹிட்லரின் யூத இன ஒழிப்பின்போது, ஐரீனா ஷென்ட்லர் அவர்கள் ஆற்றிய துணிச்சல்மிக்க செயல்களைப் பாராட்டி, 1965ம் ஆண்டில் இஸ்ரேல் அரசு “நாடுகள் மத்தியில் நேர்மையாளர்” என்ற Yad Vashem விருதை வழங்கியது. திருத்தந்தையும் அவருக்குப் பாராட்டு கடிதம் எழுதினார். மேலும் பல விருதுகளையும் பெற்றுள்ள ஐரீனா ஷென்ட்லர் அவர்கள், 2008ம் ஆண்டு மே 12ம் தேதி, தனது 98வது வயதில் வார்சாவில் காலமானார்.




ஆயுதங்களைவிட, அகிம்சை வலிமை மிக்கது

அக்டோபர் 7

'அகிம்சை', அதாவது, வன்முறையின்மை என்ற பண்பை உலகிற்குச் சொல்லித்தந்த மகாத்மா காந்தி அவர்கள், அகிம்சையைப் பற்றி கூறியுள்ள ஒரு சில கருத்துக்கள் இதோ:

"என் மதத்தின் அடித்தளம், உண்மையும், அகிம்சையும். உண்மை, என் கடவுள். அகிம்சை, அந்தக் கடவுளை அடையும் வழி."

"அகிம்சை என்பது, மனித குலத்திடம் உள்ள மாபெரும் சக்தி. அழிப்பதற்கென மனிதர்கள் கண்டுபிடித்துள்ள அத்தனை ஆயுதங்களையும்விட, அகிம்சை வலிமை மிக்கது."

"அகிம்சை என்பது, வேண்டும்போது அணிந்துகொண்டு, வேண்டாதபோது களைந்துவிடும் ஆடையைப்போன்றது அல்ல. அது, நம் உள்ளத்தில் உறைந்து, நம் உயிரின் அங்கமாகவேண்டும்."

"பல கொள்கைகளுக்காக நான் உயிரை இழக்க தயார். ஆனால், எந்த ஓர் கொள்கைக்காவும் அடுத்தவர் உயிரைப் பறிக்கமாட்டேன்."

அகிம்சையின் தந்தை, மகாத்மா காந்தியின் பிறந்தநாளான அக்டோபர் 2ம் தேதி, வன்முறையின்மை உலக நாளென கடைபிடிக்கப்பட்டது.




எதார்த்தத்தை உணர வைத்த தாய்

அக்டோபர் 6

பெரியவர்களாகிவிட்டால், எல்லாவற்றையும் தன் விருப்பம்போல் செய்யலாம் என்ற ஓர் ஆசை, ஒன்பது வயது நிரம்பிய கயல்விழியின் மனதில் அடிக்கடி எழுந்துவந்தது. இதை கயல்விழி, தன் அம்மாவிடம் சொல்லிக்கொண்டே இருப்பாள். மகளுக்கு வாழ்வின் எதார்த்தத்தை புரிய வைக்க விரும்பினார் தாய். அதனால் காலங்களின் தேவதையிடம் மகளின் ஆசை பற்றிச் சொன்னார் தாய். எல்லாப் பிறந்த நாளும் ஒரே நாளில் வரவேண்டும் என கடவுளிடம் வேண்டிக்கொண்டே, அன்று உறங்கச் சென்றாள் கயல்விழி. சில நிமிடங்களில் படுக்கையின் அருகே ஓர் அழகிய பெண், கயல்விழியின் போர்வையை விலக்கியபடி நின்றுகொண்டிருந்தார். அப்பெண் கயல்விழியிடம், `நான்தான் காலங்களின் தேவதை. யாருக்காவது காலம் குறித்த ஆசைகள் இருந்தால் எனக்குத் தெரிந்துவிடும். உன்னைப் பெரிய ஆளாக மாற்றுவதற்குமுன், பெரியவர்கள் மனதுக்குள்ளே உன்னைக் கூட்டிக்கொண்டு போகிறேன். சிறிது நேரம் அங்கே இருந்து பார். அதன்பிறகும் உன் ஆசை அப்படியே இருந்தால், உடனே பெரியவளாக ஆக்கிவிடுகிறேன் என்றார், அத்தேவதை. முதலில், அறையில் உட்கார்ந்திருந்த கயல்விழியின் அப்பாவின் மனதுக்குள் அவளைக் கூட்டிச்சென்றார் தேவதை. அப்பாவின் மனது மிகவும் படபடப்புடன் இருந்தது. நாளைக்குள் இந்த புராஜெக்ட்டை கொடுக்கவில்லை என்றால், அலுவலகத்தில் நிர்வாகி திட்டுவாரே. ச்சே... பேருக்குத்தான் அவர் நிர்வாகி. ஒருமணி நேரம் ஓய்வாக இருக்க முடிகிறதா? எனக்குக் கீழே இருக்கிறவர்களிடம் வேலையை வாங்கி அனுப்புவதற்குள் போதும் போதும் என்றாகி விடுகிறது. பிறர் செய்யும் தவறுகளுக்கெல்லாம் நான் திட்டு வாங்குகிறேன். பத்துமணி நேரம் அலுவலகத்தில் இருந்துவிட்டு வந்தும், வீட்டிலேயும் அதே வேலை. ஞாயிற்றுக்கிழமை கடற்கரைக்குப் போக வேண்டும் என்று, ஒரு மாதமாகத் திட்டம் போட்டும் முடியவில்லை. பழைய நண்பர்கள் வீட்டுக்கு ஒருமணி நேரம் போய் செஸ் விளையாட ஆசைப்பட்டும் நடக்கவில்லை... ச்சே... கயல்விழி மாதிரி குழந்தையாகவே இருந்திருக்கலாம்.. இப்படி அப்பாவின் மனம் புலம்பியதைப் பார்த்து, கயல்விழி சொல்வதறியாது திகைத்துப் போனாள். பின் அம்மாவின் மனதுக்குள்ளும் போய்வர கயல்விழி விரும்பவில்லை.




தாயின் போதனைகள் துணை நிற்கும்

அக்டோபர் 5

இரவில் நிம்மதியாக தூங்கிக் கொண்டிருந்தார் இலாசர். திடீரென அவர் முன் தோன்றிய வானதூதர் அவரை நோக்கி, 'இன்று நீ என்னுடன் சொர்க்கத்திற்கு வருகிறாய். உன்னுடன் யாரையாவது அழைத்துவர விரும்பினால், அவர்களையும் அழைத்துவர உனக்கு அனுமதி தரப்பட்டுள்ளது. உனக்கு மிக வேண்டியவர்கள் யார்? உன் தாயா? மனைவியா? குழந்தைகளா? அல்லது நண்பர்களா?' எனக் கேட்டார். இலாசர் சொன்னார், ' என் நண்பர்கள் வேண்டாம். அவர்கள் இன்னும் பல காலம் உலகில் வாழ்ந்து அனுபவிக்கட்டும். என் குழந்தைகள் இன்னும் அனுபவிக்க வேண்டியது நிறைய இருக்கிறது. என் மனைவியோ, ஒரு நல்ல தாயாக இருந்து என் பிள்ளைகளைக் கவனிக்க வேண்டியிருப்பதால், அவர்களும் வேண்டாம்' என்று. உடனே, அந்த வானதூதர் இலாசரை நோக்கி, 'அப்படியானால் உன் தாயை அழைத்துச் செல்கிறாயா? ஏனெனில் அவர்கள் உன்னைவிட அதிக காலம் உலகில் இருந்தாகிறார் உன் குழந்தைகளைக் கவனிக்க உன் மனைவி இருக்கிறார். உம் அம்மாவை அழைத்துச் செல்வோமா? என்று கேட்டார். இலாசர் அமைதியாகச் சொன்னார், ' என் தாய், இந்த ஊரில் ஆசிரியராக இருக்கிறார். என்னை நரகத்திற்கு அழைக்காமல், சுவர்க்கத்திற்கு நீங்கள் அழைப்பதற்கு, என் தாயின் வளர்ப்ப்பு முறையே காரணம். அவர்கள் இன்னும் சிறிது காலம் உலகில் இருந்தால், இன்னும் நிறைய பிள்ளைகளை நல்லவர்களாக உருவாக்குவார்கள். எனவே, என் தாய் இங்கேயே இருக்கட்டும். என் தாய் இதுவரை எனக்குக் கற்றுத்தந்த நல்ல விடயங்களை மட்டும், எனக்குத் துணை, என்னுடன் எடுத்துச் செல்ல அனுமதியுங்கள்' என்று முடித்தார் இலாசர்.




பார்வையில்......., : அவர்களுக்கு சிரமம் எதற்கு?

அக்டோபர் 4

அந்த வயதான மூதாட்டியைப் பார்க்க அவனுக்கு பாவமாக இருந்தது. சாலையின் மறுபக்கத்தில் எவ்வளவு நேரம்தான் காத்திருப்பார்கள்! எந்த வண்டியும் நிற்பதாகவும் இல்லை. இந்தப் பக்கத்திற்கு வருவதற்காக ஏறத்தாழ இருபது நிமிடங்களுக்கு மேல் தவித்துக் கொண்டிருந்தார் மூதாட்டி. மறுபக்கம் இருந்த கடையில் தேநீர் அருந்திக்கொண்டே இதைப் பார்த்துக் கொண்டிருந்த கேசவனுக்கு மனது வலித்தது. வாகனங்களை கைகாட்டி நிறுத்தி, மெதுவாக சாலையின் மறுபக்கம் சென்று அந்த பாட்டியை இந்தப் பக்கம் கூட்டி வந்தான். 'நீ மகராசனா, நல்லாயிருப்ப' என்றார் அந்த மூதாட்டி. இந்த ஆசீரே வாழ்க்கைக்கும் போதும் என்று மகிழ்ந்தான் கேசவன். அந்தப் பாட்டியிடம் மெதுவாகப் பேச்சுக் கொடுக்க ஆரம்பித்தான். ‘எங்க பாட்டி போறிங்க' என கேட்டான் கேசவன். ‘இல்லப்பா, இந்த ஊரில் இருக்கிற சாமிநாதன் என் பையன்தான். அவனையும், அவன் பிள்ளைகளையும் பார்த்துட்டுப் போகலாம்னு வந்தேன் என்றார் அந்த மூதாட்டி. 'ஏன் பாட்டி, இந்த தள்ளாத வயதில் பயணம் செய்து வரவேண்டுமா, அவர்கள் வந்து உங்களைப் பார்த்திருக்கலாமே' என்று கேசவன் கேட்க, 'ஐயோ, அது எப்படிப்பா முடியும்? என் பையனும் மருமகளும் வேலைக்குப் போகிறார்கள். இரு பிள்ளைகளும் பள்ளியில் படிக்கின்றனர். எல்லாரும் லீவு போட்டுவிட்டு என்னைப் பார்க்க வரமுடியுமா? நான்தான் அவனை வரவேண்டாம் என்று சொல்லியிருக்கிறேன். நான் ஒருத்தி கொஞ்சம் சிரமம் பார்க்காமல் வந்துவிட்டால் நாலுபேரையும் நானும் பார்த்துவிடலாம். அவர்கள் நாலுபேரும் என்னையும் பார்த்த மாதிரி ஆகும்’, என்றார் மூதாட்டி. பேரப்பிள்ளைகளைப் பார்க்கும் ஆசையில், இவ்வளவுதூரம் சிரமம் பார்க்காமல் பயணம் செய்தது மட்டுமல்ல, தன் மகனையும் மருமகளையும் விட்டுக்கொடுக்காமல் பேசியதையும் எண்ணிப் பெருமைப்பட்டான் கேசவன்.




இறைவனின் சமாதானம் உங்களுக்கு உரித்தாகுக

அக்டோபர் 3

கிறிஸ்தவருக்கும், இஸ்லாமியருக்கும் இடையே, பகைமை உணர்வுகள் கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருந்த 13ம் நூற்றாண்டில் வாழ்ந்த அசிசி நகர் புனித பிரான்சிஸ், தன்னால் இயன்ற அளவு, இந்தப் பகைமைத் தீயைத் தணிக்க முயன்றார்.

1219ம் ஆண்டு, எகிப்தில் வாழும் இஸ்லாமியர் மீது கிறிஸ்தவர் மேற்கொண்ட போர், திருத்தந்தையின் ஆசீரோடு நிகழ்ந்து வந்தது. இதையறிந்து வெகுண்டெழுந்த எகிப்திய சுல்தான், மாலிக்-அல்-கமில் (Malik-al-Kamil) அவர்கள், கிறிஸ்தவர்களின் தலைகளைக் கொண்டு வருவோருக்கு, தங்க நாணயங்கள் வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார்.

நைல் நதிக்கரையோரம் திரண்டிருந்த கிறிஸ்தவ வீரர்களுக்குத் தலைமை வகித்த கர்தினால் பெலாஜியுஸ் (Pelagius) அவர்களிடம், போரைக் கைவிடுமாறு சகோதரர் பிரான்சிஸ் அவர்கள் மன்றாடினார். பெலாஜியுஸ் அவர்கள் மறுக்கவே, போர்க்களத்தின் மறுமுனையில் இருந்த சுல்தானைச் சந்திக்கச் சென்றார், பிரான்சிஸ்.

அவர் பகைவரின் உளவாளி என்று எண்ணிய இஸ்லாமிய வீரர்கள், அவரை அடித்து, துன்புறுத்தி, சுல்தான் முன் கொண்டு சென்றனர். சகோதரர் பிரான்சிஸ், சுல்தானைக் கண்டதும், தான் வழக்கமாகக் கூறும், "இறைவனின் சமாதானம் உங்களுக்கு உரித்தாகுக" என்று வாழ்த்தைக் கூறினார். இதைக் கேட்ட சுல்தான், அந்த வாழ்த்து, இஸ்லாமியர் பயன்படுத்தும் வாழ்த்தை ஓத்திருந்ததைக் கண்டு, ஆனந்த அதிர்ச்சியடைந்தார்.

சுல்தானுக்கும், சகோதரர் பிரான்சிஸ் அவர்களுக்கும் இடையே நிகழ்ந்த அந்த அழகான சந்திப்பின் இறுதியில், சுல்தான், அவருக்கு அளித்த பல பரிசுகளை அவர் நிராகரித்தார். இஸ்லாமியரை, தொழுகைக்கு அழைப்பதற்கென பயன்படுத்தப்படும் ஒரு ஊதுகுழலை மட்டும் தன்னுடன் எடுத்துச்சென்றார், பிரான்சிஸ். அன்று முதல், மக்களை வழிபாட்டிற்கு அழைப்பதற்கு அவர் அந்த ஊதுகுழலையே பயன்படுத்தினார்.

அன்றைய திருஅவை, இஸ்லாமியர் மீது காட்டிவந்த பகைமையுணர்வைப் பற்றி சிறிதும் கவலைப்படாமல், சகோதரர் பிரான்சிஸ், தன் துறவு சபையினருக்கு, ஒரு புதிய சட்டத்தைக் கொணர்ந்தார். பிரான்சிஸ்கன் துறவியர், இஸ்லாமியரோடு நல்லுறவை வளர்ப்பதில் அதிக அக்கறை காட்டவேண்டும் என்பதை ஒரு சட்டமாகப் புகுத்தினார், பிரான்சிஸ்.

ஒரு சில இஸ்லாமியரின் தவறான போக்குகளால், உலகெங்கிலும் வாழும் இஸ்லாமியரை சரிவரப் புரிந்துகொள்ளமுடியாமல் தவிக்கும் நம் உலகை, அமைதியின் தூதனாக வாழ்ந்த அசிசி நகர் புனித பிரான்சிஸ், அன்புப் பாதையில் வழிநடத்திச் செல்லட்டும். இப்புனிதரின் திருநாள், அக்டோபர் 4ம் தேதி சிறப்பிக்கப்படுகிறது




அன்னையின் வளர்ப்பினிலே

அக்டோபர் 2

இந்திய தேசத்தந்தை என்று புகழப்படும் மகாத்மா காந்தி அவர்கள், எளிமையைக் கற்றது, அவரின் அம்மா புத்திலிபாய் அவர்களின் வளர்ப்பினில். காந்திஜி அவர்கள், அமைதியை, சாந்தியை, சமாதானத்தை விரும்பியதற்கெல்லாம் காரணம், அவரின் அம்மாதான். புத்திலிபாய் அவர்கள், மிகுந்த கடவுள் பக்தி உடையவர். தன் குழந்தைகளும் கடவுள் மீது மிகுந்த பக்தி கொண்டிருக்க வேண்டும் என்பதில் மிகவும் கவனமாக இருந்தார். மிகவும் எளிமையான வாழ்க்கையையே விரும்பிய புத்திலிபாய் அவர்கள், நகைகளுக்கோ, ஆடை அலங்காரத்துக்கோ ஆசைப்பட்டதே இல்லை. காந்திஜி அவர்கள், சட்டம் படிக்க இங்கிலாந்து செல்லத் தயாராகிக் கொண்டிருந்தவேளையில், அவரின் அம்மா அவரிடம், “வெளிநாட்டுக்குச் செல்பவர்கள் ஒழுக்கம் தவறி நடப்பதாகக் கேள்விப்படுகிறேன். அதனால் உன்னை வெளிநாட்டுக்கு அனுப்பத் தயக்கமாக இருக்கிறது” என்றார். உடனே காந்திஜி அவர்கள், மது அருந்த மாட்டேன், மாமிசம் உண்ண மாட்டேன், பெண்களைத் தீண்ட மாட்டேன் ஆகிய மூன்று சத்தியங்களை, அம்மா புத்திலிபாய். அவர்களுக்குச் செய்துகொடுத்தார். ‘தாய் சொல்லைத் தட்டாதே’ என்ற பழமொழிக்கு ஏற்ப, அந்த மூன்று சத்தியங்களையும் கடைசிவரைத் தவறாமல் கடைப்பிடித்தார் காந்திஜி.

ஒருமுறை காந்திஜி தங்கியிருந்த விடுதி ஒன்றுக்கு, நண்பர் ஒருவர் கூடை நிறைய மாம்பழங்களை அனுப்பியிருந்தார். அதில் சில பழங்களை எடுத்து சாறு புழிந்து கொடுத்தார் ஒரு சீடர். ஒரு மாம்பழத்தின் விலை என்ன? இவ்வளவு சாறு தயாரிக்க எத்தனை ரூபாய் செலவாகியிருக்கும்? இவ்வளவு விலையுயர்ந்த பழச்சாறு எனக்குத் தேவையா? பல மக்கள் பட்டினி கிடக்கும்போது நான் மட்டும் இப்படி மாம்பழச் சாறு குடிப்பது நியாயமா? என்று, கேள்வி மேல் கேள்வி கேட்டார் காந்திஜி. அப்போது ஓர் ஏழைப் பெண் குழந்தையுடன் வருவதைப் பார்த்து, தனக்குக் கொண்டுவரப்பட்ட மாம்பழச் சாற்றினை இரண்டு கோப்பைகளில் ஊற்றி, ஒரு கோப்பையை அந்தப் பெண்ணிடம் கொடுத்துவிட்டு “கடவுளே என் மன வேதனையைக் குறைக்க ஓர் ஏழைப் பெண்ணை அனுப்பியதற்கு நன்றி” என்றார்.

மகாத்மா காந்தி அவர்கள், 1869ம் ஆண்டு அக்டோபர் இரண்டாம் தேதி, குஜராத் மாநிலத்தின் போர்பந்தரில் பிறந்தார். அறவழியை உலகிற்குக் கற்பித்த இவரின் பிறந்த நாள், உலக அகிம்சை தினமாக, ஐ.நா.வால் கடைப்பிடிக்கப்படுகின்றது.