தமிழகத் தொலைக்காட்சி அலைவரிசை ஒன்றில், குரல்வளம் தேடும் ஓர் இன்னிசை நிகழ்ச்சியில், தமிழக பிரபல இசையமைப்பாளர் ஒருவரிடம், நடத்துனர் ஒரு கேள்வி கேட்டார். சார், நீங்க வாழ்க்கையில நன்றி சொல்லணும்னா யாருக்குச் சொல்வீங்க என்று. 'முதலில் என் அம்மாவுக்கு' என, சட்டென அவர் பதில் சொன்னார். இதற்குக் காரணமும் சொன்னார் அவர். நான் தொழில்நுட்பம் படித்தவன். 31 ஆண்டுகளுக்கு முன்பு, துபாயில் வேலை செய்வதற்காகப் பணமெல்லாம் செலுத்தி, சென்னை விமான நிலையம் வரை சென்றேன். என்னோடு புறப்பட வேண்டியவர்கள் எல்லாம் விமான நிலையத்திற்குள் சென்று விட்டனர். ஆனால் எனக்கு அங்குச் செல்லவே பிடிக்கவில்லை. தமிழ் நாட்டிலே தங்கி சாதிக்க வேண்டுமென்று என் மனது சொல்லிக்கொண்டிருந்தது. அதனால் வீடு திரும்பி, என் அம்மாவிடம் எனது விருப்பத்தைச் சொன்னேன். சரிப்பா என்றார்கள். ஆனால் என் அப்பாவுக்கு கடும் கோபம். இவ்வளவு கஷ்டப்பட்டு, பணம் கட்டி, வேலை வாங்கினேன், கடைசி நேரத்தில், போகமாட்டேன் என்றால் எப்படி? என மிகவும் கவலைப்பட்டு திட்டினார். அப்போது என் அம்மா, சும்மா இருங்க, எம் பிள்ளை பெரிய ஆளா வருவான் என்று, என் அப்பாவைத் தேற்றி, சமாதானப்படுத்தினார். அன்று என் அம்மா கொடுத்த ஆதரவும், ஊக்கமும்தான், இன்று நான் இந்நிலைக்கு உயரக் காரணம் என்றார், அந்த இசை அமைப்பாளர்.
மகரிஷி வேதாத்திரி அவர்களும், தன் அன்னையின் அருமையை, ஒரு கூட்டத்தில் இவ்வாறு தெரிவித்திருக்கிறார். அப்போது எனக்கு மூன்று வயது இருக்கும். நான் தரையில் படுத்துத் தூங்கினால் எறும்பு கடிக்குமோ என்று, என் அன்னை, என்னை, தன் வயிற்றின் மீது போட்டுக்கொண்டே தூங்கினார்கள். வயிற்றின் மீது இருந்த நான், முன்னோக்கி நகர்ந்து, என் அன்னையின் வாயை, தலையால் மோதி விட்டேன். அன்னையின் வாயிலிருந்து இரத்தம் கொட்டிக் கொண்டிருந்தது. ஆனால், என் அன்னை, தன் வாயிலிருந்து இரத்தம் கொட்டுவதை கையால் பொத்திக்கொண்டு, குழந்தையின் தலையில் அடிபட்டிருக்குமோ? குழந்தைக்கு எவ்வளவு வலிக்குமோ என்று கதறி அழுதார்கள்.
ஒரு நல்ல தாய், நூறு ஆசிரியர்களுக்குச் சமம் என்று, George Herbert Palmer அவர்கள் கூறியுள்ளார். ஆம். வாழும் மானுடத்தின் வணக்கத்துக்குரியவர் அன்னை. தாய்மை, தியாகக் களஞ்சியம்.
நெருப்பிலும், நெஞ்சில் ஈரம்...
பிப்ரவரி 25
பெருநகர் ஓரத்தில் இருந்த அந்தச் சேரியில் தீப்பிடித்தது. அனைவரும், அவரவர் குடிசையில் இருந்தவற்றைக் காப்பாற்ற முயன்றனர். கைம்பெண் கமலா, தன் வீட்டுப் பொருள்களைக் காப்பாற்றுவதற்குப் பதில், பக்கத்து வீட்டு மல்லிகாவுடன் சேர்ந்து, அவர்கள் வீட்டில் இருந்த அனைத்து பொருள்களையும் காப்பதற்கு பெரும் முயற்சிகள் எடுத்தார். கமலாவும், மல்லிகாவும் சேர்ந்து பெருமளவு காப்பாற்றிவிட்டனர். ஆனால், கமலாவின் குடிசை முற்றிலும் எரிந்து, சாம்பலானது. அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள், கமலா, ஏன் தன் வீட்டுப் பொருள்களைக் காப்பாற்றவில்லை என்று கேட்டனர். அப்போது, கமலா, "நான் தனிக்கட்டை. மல்லிகா வீட்டுல நாலு பேர். அடுத்த மாசம் அவ மகளுக்கு கல்யாணம். மல்லிகா, இந்தக் கல்யாணத்துக்கு எவ்வளவு கஷ்டப்பட்டு சேத்து வைச்சான்னு எனக்குத் தெரியும். இந்த கல்யாணம் நல்லபடியா நடந்தா அதுவே எனக்கு ரொம்ப மகிழ்ச்சி" என்று கூறினார்.
வாழ்வு என்ற நெருப்பில் புடமிடப்பட்ட வெகு சிலரில், கைம்பெண் கமலாவும் ஒருவர்.
நினைவுகள் என்றும் நிலையானவை, சுகமானவை.
பிப்ரவரி 24
அந்த ஏழு வயது சிறுவன், அந்த சந்தையில் எதை வாங்க இவ்வளவு அவசரமாகச் செல்கிறான் என அவனை ஆச்சரியமாகப் பார்த்தேன். ஒவ்வொரு கடையாக வெளியில் நின்று பார்த்துக் கொண்டேச் சென்றவன், மீண்டும் அதே வழியில் திரும்பி வந்தான். அவன் தேடியது கிடைக்கவில்லை போலும். அவனை நிறுத்திக் கேட்டேன், 'என்ன தம்பி என்ன வாங்க வந்தாய்?' என்று. 'பனம்பழம் வாங்க வந்தேன்' என்றான். 'யாருக்காக பனம்பழம் வாங்க வந்தாய்' என்று கேட்க, 'என் அம்மாவுக்கு', என்றான் அவன். அந்த சந்தையில் பனம்பழம் விற்பனைக்கு வராது என்ற உண்மையை அவனிடம் சொல்லாமல், பக்கத்திலிருந்த என் வீட்டிற்கு அழைத்துச் சென்று என் வீட்டிலிருந்த ஒரு பனம்பழத்தைக் கொடுத்தேன். ஆசையாய் வாங்கிக்கொண்ட அவன், கண்களில் ஆவலுடன் நின்றான். 'உனக்கு பனம்பழம் பிடிக்குமா? இதை நீ சாப்பிட்டுவிட்டு, அதை அம்மாவுக்குக் கொடு' என இன்னொன்றை நீட்டினேன். 'எனக்கும் பனம்பழம் ரொம்பப் பிடிக்கும். இதை நான் அம்மாவுக்குக் கொடுத்தனுப்பப் போகிறேன்' என்றான் சிறுவன். 'கொடுத்தனுப்பப் போகிறாயா? அம்மா இங்கு உன்னோடு இல்லையா?' எனக் கேட்டபோது அவன் சொன்னான், 'இல்லை அங்கிள், போன வாரம் வயல் வேலைக்குப் போய்விட்டு அம்மாவும் அப்பாவும் சாலையோரமாக திரும்பி வந்து கொண்டிருந்தபோது, ஒரு லாரி மோதி அம்மா இறந்து விட்டார்கள். அரசு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்ட அப்பா, நேற்றிரவுதான் இறந்து போனார். அப்பாவின் பெட்டியில் இந்த பழத்தை வைத்து அனுப்பினால் அம்மாவை அப்பா சந்திக்கும்போது இதைக் கொடுப்பாரல்லவா அதுதான் பனம்பழம் வாங்க வந்தேன்' என்றான் சிறுவன். பக்கத்து ஊரிலிருந்து வந்திருந்த அந்த சிறுவனின் முகவரியை வாங்கிக் கொண்டு அவனை அனுப்பி வைத்தேன். கண்கள் குளமாக, அவன் செல்வதையே பார்த்துக் கொண்டிருந்தேன். ஒரு மணி நேரத்தில் நான் அங்குச் சென்றபோது, தந்தையின் உடல் பெட்டியில் வைக்கப்பட்டிருக்க, அச்சிறுவனை அவன் பாட்டி அணைத்தவாறு அழுது கொண்டிருந்தார்கள். கிடத்தப்பட்டிருந்த தந்தையின் உடலைப் பார்த்தேன். அவர் கையருகே இரண்டு பனம்பழங்கள் வைக்கப்படிருந்தன.
தனக்காக துடிக்காத அம்மாவின் இதயம்
பிப்ரவரி 23
தன் அப்பாவுடன், காரில் சென்றுகொண்டிருந்த கல்லூரி மாணவி ஒருவர், தனது படிப்பு சார்ந்த ஒரு திட்டத்திற்காக, அப்பாவிடம் சில கேள்விகளைக் கேட்டார். அப்பா, உங்களின் முழுப் பெயர் என்ன? உங்களுக்கு எத்தனை நண்பர்கள்? நீங்கள் உடல்நலத்தை எப்படி பேணுகின்றீர்கள்? நம் வீட்டில் எத்தனை ஆண்டுகளாக வாழ்கிறீர்கள்?... இப்படி சில கேள்விகள். தினமும் காலையில் நடக்கப்போவது, தினமும் நண்பர்களைச் சந்தித்துப் பேசுவது, மூன்று தலைமுறையாக ஒரே வீட்டில் வாழ்வது என, தன்னைப் பற்றிச் சொன்னார் அப்பா ராஜன் தினேஷ். அப்போது அந்த மாணவி, அப்பா, இதே கேள்விகளை இன்னொருவரிடமும் கேட்டுப் பதிவு செய்துள்ளேன், அதைக் கேளுங்கள் என்று, அதை ஒலிக்கச் செய்தார்.
அம்மா.. உங்களின் முழுப் பெயர்.. கல்யாணத்துக்கு முன், செல்வி ஆகாஷ். கல்யாணத்துக்குப் பின் செல்வி தினேஷ். அம்மா.. உங்களுக்கு எத்தனை நண்பர்கள்? திருமணத்திற்குமுன் பள்ளி, கல்லூரி, வீட்டுப் பக்கம் என நிறைய நண்பர்கள். ஆனால் இப்போது, உன் அப்பாவின் நண்பர்களில் மூவரின் மனைவிகள் மட்டுமே. அம்மா.. உங்கள் உடல்நலனை எப்படி பேணுகின்றீர்கள்? நேரம் இருந்தால் இதில் கவனம் செலுத்தலாம். ஆனால், காலையில் உன்னைக் கல்லூரிக்கும், உன் தம்பியை பள்ளிக்கும், உன் அப்பாவை அலுவலகத்திற்கும் அனுப்ப வேண்டும், பிறகு, வீட்டுவேலை. இதில் எப்படி உடல்நலத்தைக் கவனிப்பது, அதனால்தான், நீயும், உன் தம்பியும் சிசேரியனில் பிறந்தீர்கள். அம்மா.. உங்களுக்குப் பிடிக்காத விடயத்தை யாருக்காகவாவது செய்ததுண்டா? கல்யாணத்துக்கு முன்னாள் நான் சுத்த சைவம். பள்ளியில் என் நண்பர்கள் அசைவம் கொண்டு வந்திருந்தால் தள்ளிப் போயிடுவேன், அதைப் பார்க்கவே பிடிக்காது.. ஆனால், கல்யாணத்துக்குப் பிறகு, உன் அப்பாவுக்காக அசைவம் சமைக்கிறேன்... இதுவரை அந்த ஒலிப்பதிவைத் கேட்டு வந்த அப்பா, அதற்கு மேல் கேட்க முடியாமல் காரை நிறுத்தினார்.
அம்மாவின் வாழ்வில், வாழ்ந்த வீட்டிற்கும், வாழ்க்கைப்பட்ட வீட்டிற்கும் இடையில், எல்லாமே மாறிப்போய் விடுகின்றன. அம்மாவின் ஒரு கண்ணில் சூரியன், இன்னொரு கண்ணில் நிலவு. அவர் இரண்டு விழிகளையும் மூடி உறங்கியதே இல்லை. அவரது பெயரில் பாதி, கணவருடையது, அவரது உடலில் பாதி, குழந்தைகளுடையது. குடும்பம், அவரின்றி ஒரு நிமிடமும் அசையாது. ஆம். அம்மாவின் இதயம், தனக்காக என்றுமே துடித்தது கிடையாது.
உணர்வுகளாலேயே உருவாக்கப்பட்ட மனிதர்
பிப்ரவரி 22
ஒரு பொருளின், நபரின் அருமை, அது, அல்லது, அவர் இல்லாதபோதுதான் அதிகம் அதிகமாக உணரப்படுகிறது. ஒரு தாயின் அருமை, ஒரு மகனுக்கோ, மகளுக்கோ, அவர்களின் வயதான காலத்தில்தான் அதிகம் அதிகமாக மனதில் வருகின்றது. இளம்வயதில், ஓடி, ஓடி சம்பாதித்ததும், தாய்க்கு நேரம் ஒதுக்காமல், ஏன், பலவேளைகளில் தாய் வீட்டிற்குச் சென்று சந்திக்கக்கூட நேரமில்லாமல் சேமித்ததும், கடைசி காலத்தில் ஒன்றுமில்லாமையாகத் தெரிகின்றன. தாய்ப் பறவை, ஊர் ஊராகப் பறந்து சென்று, பூச்சிகளையும் புழுக்களையும் கொத்திக் கொண்டு வந்து, தன் குஞ்சுகளுக்கு உணவூட்டுகிறது. ஆனால், எங்காவது, என்றாவது, எந்தப் பறவையாவது, தன் வயது முதிர்ந்த தாய்ப் பறவைக்கு அவ்வாறு கொண்டு வந்ததாக கேள்விப்பட்டிருக்கிறோமா? இல்லவே இல்லை. ஆனால், அதே குஞ்சுப்பறவை, வளர்ந்து பெரிதாகும்போது, தன் குஞ்சுகளுக்கு உணவு ஊட்ட மறப்பதுமில்லை, மறுப்பதுமில்லை.
ஆம். தாய்ப்பாசம் என்பது அதுதான். பிள்ளையின் பாசம், அந்த அளவு ஈடு இணையானதல்ல. தாய்ப் பறவையும், தன் குஞ்சுகளுக்கு உணவூட்டுமேயொழிய, குஞ்சுகளிடமிருந்து அதே செயலை, தனக்கென எதிர்பார்ப்பதில்லை. தன் பெற்றோரைக் காக்கவேண்டும் என்ற நிலை, விலங்கினங்களிடம் இல்லை. அத்தகைய உணர்வு, அவைகளிடம் எழுவதில்லை. ஆனால், அவைகளிடம் இல்லாத அறிவு, பாசம், கடமையுணர்வு ஆகியவை, மனிதரிடம் உள்ளன. ஏனெனில், அவன் மட்டும்தான் ஆறறிவு படைத்தவன், பாச உணர்வுகளில் இன்பம் காண்பவன்.
இளம்பெண் விட்டுச்சென்ற பாடம்
பிப்ரவரி 21
இளம்பெண் ஒருவர், வயதான தன் தாயை அழைத்துக்கொண்டு, ஓர் உணவகத்திற்குச் சென்றார். அவர்கள் கேட்ட உணவு பரிமாறப்பட்டது. வயதான தாய், தளர்ந்த நிலையில் இருந்ததால், அவர் உண்ணும்போது, உணவை, தன் உடையின் மீது சிந்திக்கொண்டிருந்தார். உணவகத்திலிருந்த ஏனையோர், வயதான அந்தத் தாயை அருவருப்புடன் பார்த்தனர். அவருடைய மகளோ, சிறிதும் கவலைப்படாமல், தன் தாயுடன் பேசி, சிரித்துக்கொண்டிருந்தார்.
உணவு முடிந்தபின், அந்த இளம்பெண், தன் அம்மாவை அங்கிருந்த கழிவறைக்கு அழைத்துச் சென்றார். அங்கு, தன் அன்னையின் உடையில் சிந்தியிருந்த உணவுத் துகள்களையெல்லாம் அகற்றினார். அன்னையின் முகத்தை நீரால் கழுவி, துடைத்து, அவரது தலைமுடியையும் சீராக்கினார். அவர்கள் இருவரும் கழிவறையை விட்டு வெளியே வந்தபோது, வயதான அந்தத் தாயிடம் காணப்பட்ட அழகும், கம்பீரமும் அங்கிருந்தோரை வியக்கவைத்தன.
உணவுக்குரிய தொகையை செலுத்திவிட்டு, இருவரும் கிளம்பிய வேளையில், உணவகத்திலிருந்த வயதான ஒருவர், "நீங்கள் ஏதோ ஒன்றை விட்டுச்செல்கிறீர்களே!" என்று சொன்னார்.
அந்த இளம்பெண், தாங்கள் அமர்ந்திருந்த மேசையைப் பார்த்துவிட்டு, "நாங்கள் எதையும் விட்டுச்செல்லவில்லையே!" என்று பதில் சொன்னார்.
வயதான அந்த மனிதர் எழுந்து நின்று, "இல்லை மகளே, இங்கிருக்கும் ஒவ்வொரு மகனுக்கும், மகளுக்கும், நல்லதொரு பாடத்தையும், இங்கிருக்கும் வயதான பெற்றோருக்கு, நம்பிக்கையையும், நீ விட்டுச்செல்கிறாய்!". என்று சப்தமாகக் கூறினார்
அன்பே தாய்
பிப்ரவரி 20
தாயின் தியாகத்தைக் காலம் கடந்து தெரிந்துகொண்ட மகன் சொல்கிறான்...
கைம்பெண்ணான என் தாய்க்கு நான் ஒரே மகன். பாசிகள் பொறுக்கி, அதைத் தினமும் சந்தையில் விற்று என்னைக் காப்பாற்றி வந்தார் என் தாய். ஒரு கண்ணை மட்டுமே கொண்டிருந்த என் தாயைப் பார்க்கவே எனக்குப் பிடிக்காது. நான் ஆரம்பப் பள்ளி படித்த சமயம், ஒருநாள், எங்கள் பள்ளியில் இசை நிகழ்ச்சி நடந்தது. அதற்கு என் தாய் வந்தார். வெறுப்புப் பார்வையாலே அந்த இடத்திலிருந்து அவரை நான் விரட்டி விட்டேன். மறுநாள் என் வகுப்பு மாணவர்கள், உன் தாய்க்கு ஒரு கண் என்று, கிண்டலடித்தார்கள். அன்று வீட்டிற்கு வந்த நான், "அம்மா, நீ ஏன் இன்னொரு கண்ணையும் கொண்டிருக்கக் கூடாது? நீ செத்தால் என்ன?" என கோபமாகச் சொன்னேன். என் தாய் பதிலே சொல்லவில்லை. அன்று இரவு தண்ணீர் குடிக்க சமையல் கட்டுக்குச் சென்றேன். எனது உறக்கம் கலைந்துவிடும் என்று நினைத்தாரோ என்னவோ, சப்தமின்றி கண்ணீர் வடித்துக்கொண்டிருந்தார் என் தாய். எனது ஒற்றைக் கண் தாயையும், எனது கடும் வறுமையையும் வெறுத்ததால், அன்று ஒரு சபதம் எடுத்தேன். கஷ்டப்பட்டு படித்தேன். வீட்டை விட்டு வெளியேறி வேறு நாடு சென்றேன். உயர்கல்வி படித்தேன். நல்ல வேலையும் கிடைத்தது. சொந்தமாக வீடு வாங்கினேன். திருமணமும் செய்துகொண்டேன். குழந்தைகளும் பிறந்தனர். தாயின் நினைப்பே இல்லாமல், வெற்றிபெற்ற மனிதனாக, மகிழ்வாக வாழ்ந்துகொண்டிருந்தேன்.
திடீரென ஒருநாள், நான் எதிர்பாராத நேரத்தில், என் தாய் என்னைப் பார்க்க வந்தார். அவரைப் பார்த்ததும், என் பிள்ளைகள் பயந்து ஓடி ஒளிந்தனர். "யார் நீ? எதற்காக இங்கு வந்தாய்?" என, கோபக் கேள்விகளால் விளாசினேன். அப்போது அவர் அமைதியாக, "மன்னிக்கவும், நான் முகவரி தவறி வந்துவிட்டேன்" என்று சொல்லிச் சென்று விட்டார். பின்னர் ஒருநாள், பழைய மாணவர் சங்க விழாவுக்கு. எனது ஊர் பள்ளியிலிருந்து அழைப்பு வந்தது. தொழில் சம்பந்தமாக வெளியூர் செல்கிறேன் என்று என் மனைவியிடம் பொய் சொல்லிவிட்டு எனது சொந்த ஊர் சென்று நிகழ்விலும் கலந்துகொண்டேன். பின்னர், எனது பழைய வீட்டுப் பக்கம் வேண்டா வெறுப்போடு சென்றேன். அங்கே தரையில் என் தாயின் உடலைக் கண்டேன். என்னைப் பார்த்ததும், எனது உறவினர் ஒருவர், கடிதம் ஒன்றைக் கொடுத்தார். தான் இறந்த பின்னர், மகன் வந்தால் மட்டும், இக்கடிதத்தைக் கொடுக்குமாறு, என் தாய் சொல்லியதாகவும் அறிந்தேன். அதைப் பிரித்து வாசித்தேன். "அன்பின் மகனே!.. எனக்கு ஒரு வாழ்க்கை வேண்டும் என்று நினைத்திருந்தால், நான் இன்னொரு திருமணம் முடித்து நன்றாக வாழ்ந்திருப்பேன். உனக்காகவே நான் வாழ்ந்தேன். நீ என்னிடம் வெறுப்புடன் நடந்துகொண்டபோதெல்லாம், உனது உள்ளத்தின் உணர்வுகளைப் புரிந்துகொண்டேன். நீ பள்ளிக்கு வருகிறாய் என்று தெரிந்தும், என்னைப் பார்க்க உனக்குப் பிடிக்காது என்பதால், அங்கு நான் வரவில்லை. நான் ஒற்றைகண் பெண். ஏன் தெரியுமா? என் மகனே, நீ, சிறு பருவத்தில், விளையாடிக்கொண்டிருந்த நேரத்தில், ஒரு விபத்தில், உனது ஒரு கண்ணின் பார்வைபோய் விட்டது. இன்னொரு வெண்படலம் இருந்தால் மட்டுமே, உனக்குப் பார்வை மீண்டும் கிடைக்கும் என மருத்துவர்கள் சொன்னார்கள். அதனால், என் ஒரு கண்ணை, உடனடியாக உனக்குத் தானம் செய்தேன். என் கண்மணியே, இன்று நீ இந்த உலகத்தைப் பார்ப்பதும், இந்த வாழ்வை வாழ்வதும் என் கண்ணாலேயே. உனக்கு இதுவும் அவமானம் என்றால், உனது வலது கண்ணைப் பிடுங்கி எறிந்துவிடு. மனமிருந்தால் அப்படியே விட்டுவிடு. அந்தக் கண்களால் நான் உன்னை என்றென்றும் பார்த்துகொண்டிருப்பேன். இப்படிக்கு, என்றுமே அன்புள்ள, உன் ஒற்றைக்கண் அம்மா".
இது ஓர் உண்மை நிகழ்வாக, இணையதளத்தில் பதிவுசெய்யப்பட்டுள்ளது. அன்பே தாய் என்பது, எவ்வளவு நிதர்சமான உண்மை! நினைத்தபோது இறைவனைக் காணத்தான், இறைவன் தாயைப் படைத்தார்.
மன்னிப்பினால் மட்டுமே நம்பிக்கை வளரும்
பிப்ரவரி 18
இவ்வுலகை, ஒரு கல்லறைக்காடாக மாற்றிவரும் பழிக்குப் பழி என்ற உலக மந்திரத்திற்கு எதிரான ஒரு நிகழ்வு, இந்தியாவில் நடந்தது. ஆஸ்திரேலியாவிலிருந்து இந்தியாவுக்கு வந்து, முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக, ஒடிஸ்ஸா மாநிலத்தில் பழங்குடியினரிடையே, குறிப்பாக, தொழுநோயாளர்கள் மத்தியில் உழைத்து வந்தவர், Graham Staines என்ற கிறிஸ்தவப் போதகர். அவரையும், Philip, Timothy என்ற, அவரது இரு மகன்களையும் 1999ம் ஆண்டுச் சனவரி மாதம் உயிரோடு எரித்துக்கொன்ற தாரா சிங்கிற்கு மரணதண்டனை விதிக்கப்பட்டது. அந்தத் தீர்ப்பை இரத்துச் செய்யுமாறு, கொல்லப்பட்ட போதகரின் மனைவி, Gladys Staines அவர்கள் இந்தியப் பிரதமருக்கும், ஒடிஸ்ஸா மாநில முதல்வருக்கும் விண்ணப்ப மடல் அனுப்பி, மரணதண்டனையை, ஆயுள் தண்டனையாக மாற்றச் செய்தார். "மன்னிப்பினால் மட்டுமே நம்பிக்கை வளரும்" என்பது, Gladys அவர்களின் நம்பிக்கை.
பாசத்திற்கு எதிர்பார்ப்புகள் குறைவே
பிப்ரவரி 17
இரவில் திடீரென்று, மகன் வீறிட்டு அழுதான். பக்கத்திலேயே கண்விழித்து பார்த்திருந்த தாய் கோசலை, அவனை அணைத்தவாறே நெற்றியைத் தொட்டுப் பார்த்தார். இரண்டு நாட்களாக இருந்த காய்ச்சல் இப்போது விட்டிருந்தது. 'என்ன மோகன், ஏதாவது கனவு, கினவு கண்டாயா', என கேட்டார் தாய். 'ஆமாம்மா, பாட்டியை யாரோ கிணற்றில் தள்ளி விடுவதுபோல் கனவு கண்டேன், அதுதான் பயந்து முழித்து விட்டேன்', என்றான் மகன். கடந்த மாதம்தான் கோசலையின் மாமியாரை முதியோர் இல்லத்தில் சேர்த்திருந்தார்கள். கடந்த மூன்று நாட்களாக கணவரும் வீட்டிலில்லை. அலுவலகம் தொடர்பாக மும்பைக்கு பயணம் சென்றிருக்கிறார்.
இதற்கிடையில், மறு நாள், மகனுக்கு 10வது பிறந்த நாள். மகனின் பிறந்த நாளைக் கொண்டாட வேண்டுமே என தாய் மனது துடித்தது. மறு நாள் காலையில் மகனையும் அழைத்துக்கொண்டு, மாமியாரிடம் ஆசீர்வாதம் வாங்க ஆட்டோவில் முதியோர் இல்லத்திற்கு சென்றார் கோசலை. முதியோர் இல்லத்தில் கணவனின் தாயில்லை. அங்கிருந்தவர் சொன்னார், 'அம்மா! உங்கள் மாமியார் விடியற்காலையிலேயே எழுந்து, தன் பேரனின் பிறந்த நாள் எனக்கூறி, வேண்டுதலாக, பழநிக்கு நடைபயணமாகச் சென்றுவிட்டார்' என்று. 'ஐயயோ, அப்படியா? நாங்கள் இன்று வந்தால், எங்களிடம் ஏதாவது சொல்லச் சொல்லியுள்ளார்களா?', என்று கேட்டார் கோசலை. "இல்லையம்மா, ஒருவேளை, உங்களை அவர்கள் இன்று எதிர்பார்க்கவில்லையோ என்னவோ!" என்றார் விடுதி காப்பாளர்.
அம்மாவைவிட்டுப் பிரிய யாருக்குத்தான் மனம் வரும்?
பிப்ரவரி 16
ஒரு சமயம், ஒரு சிறுமி, வானம்பாடி தாய்ப் பறவையிடம் சென்று, உங்களுக்கு சிறு குழந்தைகள் உள்ளனரா? என்று கேட்டார். அதற்கு அப்பறவை, இருக்கிறார்கள், உண்மையிலே அவர்கள் மிகவும் அழகானவர்கள் என்றது. பின்னர், தன் மூன்று குழந்தைகளையும் சுட்டிக்காட்டி, இந்த முதல் குழந்தைக்கு, மின்னும் இறக்கைகள், இரண்டாவது குழந்தைக்கு மிக மிகச் சிறிய அலகு, மூன்றாவது குழந்தைக்கு சுடர்விடும் கண்கள் என்றும் வர்ணித்தது தாய்ப் பறவை. அப்போது அச்சிறுமி, எங்கள் வீட்டில், நாங்கள் மூவர். எனக்கு இரு சகோதரிகள் உள்ளனர், நாங்கள் மிகவும் அழகானவர்கள் என்று எங்கள் அம்மா சொல்வார்கள், எங்கள் மீது மிகவும் அன்பு வைத்திருக்கின்றார்கள் என்றார். உடனே, அந்தப் பறவைக் குஞ்சுகளும், எங்கள் அம்மாவும் எங்கள் மீது மிகவும் அன்பு வைத்திருக்கின்றார் என்றன. அப்போது அச்சிறுமி, தாய்ப் பறவையிடம், சிறிய அலகு கொண்ட உங்கள் குழந்தை, இன்று, எங்கள் வீட்டிற்கு வந்து விளையாடுவதற்கு என்னோடு அதை அனுப்புவீர்களா? என்று கேட்டது. தாய்ப் பறவை பதில் சொல்வதற்கு முன்னதாகவே, சுடர்விடும் கண்கள் கொண்ட பறவைக் குஞ்சு அச்சிறுமியிடம், உங்களின் சிறிய சகோதரியை, எங்களது கூட்டில் விளையாடுவதற்கு அனுப்பினால், நாங்களும் அனுப்புகிறோம் என்று சொன்னது. அதற்கு சிறுமி, என் சகோதரி, எங்கள் அம்மாவைப் பிரிந்து இருக்கமாட்டாள் என்றார். சிறிய அலகு கொண்ட எங்கள் உடன்பிறப்பும், எங்கள் அம்மாவைப் பிரிந்து இருக்காது என்றது, சுடர்விடும் கண்கள் கொண்ட குஞ்சுப் பறவை. பின்னர் தன் வீட்டுக்குச் சென்ற அச்சிறுமி, தன் அம்மாவிடம், அம்மா, ஒவ்வொருவரும், அவரவர் அம்மாவைவிட்டுப் பிரியமாட்டேன் என்று சொல்கிறார்கள் எனக் கூறினார்.
ஆம். அம்மாவை, அன்பு இவளென்பர், இயற்கைக் கொடை என்பர், இறைவன் அருளென்பர், பாசப்பேழை என்பர், தியாகச் சுடரென்பர், பேசும் தெய்வமென்பர், இரக்கம் இவளென்பர்.... அத்தனை புகழுக்கும் உரிய அம்மாவைவிட்டுப் பிரிய யாருக்குத்தான் மனம் வரும்?
கனவை நனவாக்கிய பிள்ளைப் பாசம்
பிப்ரவரி 15
இது, 2012ம் ஆண்டு சீனாவில் நடந்த ஒரு சம்பவம். இது, தாய்-சேய் பாசத்திற்கு, என்றும் ஓர் எடுத்துக்காட்டு.
சீனத் தலைநகர் பீஜிங்கைச் சேர்ந்தவர் 26 வயது பான் மெங்க். இவரது தாய் கோவ் மின்ஜூன் என்பவர், பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு நடக்க முடியாமல் போனார். பல ஆண்டுகளாக சக்கர நாற்காலியில் காலத்தை கழித்து வந்த இவருக்கு, யுனான் மாநிலத்தில், இயற்கையின் சொர்க்கமாக விளங்கும், ஜிஸ்ஹூவாங்பனா பகுதியை சுற்றிப் பார்க்க வேண்டும் என்று நெடுநாளாக ஓர் ஆசை இருந்தது. புத்த மதம் இங்கிருந்துதான் சீனா முழுவதும் பரவியதாக நம்பிக்கை உள்ளது. இந்த அற்புதமான இடத்தை சுற்றிப் பார்க்க வேண்டும் என்பது கோவ் மின்ஜூனின் ஆசை. பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டதால் அந்த கனவு நிறைவேறாது என்று நினைத்தார். ஆனால், 26 வயது மகன் பான் மெங்க், தாயின் கனவை நிறைவேற்ற முடிவெடுத்தார். சக்கர நாற்காலியில் இருக்கும் தாயை, பேருந்து, இரயில், அல்லது, விமானத்தில் அழைத்துச் செல்வது பெரும் சிக்கலாக இருந்தது. கடைசியில் துணிந்து சக்கர நாற்காலியிலேயே தாயை அழைத்துக்கொண்டு கிளம்பினார். ஒருநாள், இரண்டு நாள்கள் அல்ல.. 100 நாள்களில், 3,500 கி.மீ. தூரம் கடந்து, அம்மாவும் மகனும் அந்த அற்புத இடத்துக்கு வந்தடைந்தனர். ஜிஸ்ஹூவாங்பனா பகுதியின் இயற்கை எழிலை பார்த்ததும், அம்மா கோவ் மின்ஜூனின் கண்ணில் ஆனந்த கண்ணீர். மகன் தன் மீது வைத்திருக்கும் பாசத்தை நினைத்து நெகிழ்ந்தார். பத்து ஆண்டுகளுக்கு முன்பு, கணவர், விவாகரத்து பெற்று சென்றபின், ஒரே மகனுடன் வாழ்ந்துவரும் கோவ், தன் கனவை நிறைவேற்ற தன் வேலையையும் விட்டுக்கொடுத்த மகனை நெகிழ்ச்சியுடன் பாராட்டுகிறார். தாயை மகிழ்விக்க எந்தத் தியாகத்தையும் ஆற்றலாம் என்பது, அந்தச் சீன இளைஞர் கற்றுத்தரும் பாடம்.
அன்னை என்ற அற்புதப் படைப்பு
பிப்ரவரி 14
"கடவுள் அன்னையரைப் படைத்தபோது" (When God Created Mothers) என்ற தலைப்பில், எழுத்தாளர், Erma Bombeck அவர்கள் எழுதிய அழகிய வரிகள் இதோ:
நன்மையே உருவான ஆண்டவன், அன்னையரை படைத்தபோது, ஆறு நாள்களாக ஓய்வின்றி உழைத்ததைப் பார்த்த வானதூதர், "இந்த படைப்பை உருவாக்க அதிகமாகவே உழைக்கிறீர்கள்" என்று சொன்னார்.
"இந்தப் படைப்பிற்கென நான் வகுத்துள்ள குறிப்புக்களைப் பார்த்தாயா?" என்று கேட்ட இறைவன், தானே விளக்கம் அளித்தார்: "இந்தப் படைப்பிற்கு நூற்றுக்கும் மேற்பட்ட பாகங்கள் தேவை. ஒவ்வொன்றும் தேய்ந்தாலோ, உடைந்தாலோ, அவற்றை மீண்டும் தானே உருவாக்கிக் கொள்ளவேண்டும். மீதமிருக்கும் உணவில், தன் பசியைப் போக்கிக்கொள்ளவேண்டும். காயப்பட்ட காலிலிருந்து, காதல் தோல்வியால் உடைந்துபோன உள்ளம் வரை, அனைத்தையும், ஒரு முத்தத்தால் குணமாக்கவேண்டும். ஆறு கரங்கள் கொண்டிருக்கவேண்டும்" என்று தன் படைப்பின் விவரங்களை விளக்கினார், இறைவன்.
"ஆறு கரங்களா?" என்று வியந்த வானதூதரிடம், "அது அவ்வளவு கடினமல்ல, இந்த படைப்புக்கு, மூன்று ஜோடி கண்களும் இருக்கவேண்டும்" என்று கூறினார், இறைவன். "மூடப்பட்ட கதவுகளுக்குப் பின் தன் குழந்தைகள் செய்வதைக் காணக்கூடிய ஒரு ஜோடி கண்கள்; நேரில் கண்டதையும், காணாததுபோல் நடந்துகொள்ளத் தெரிந்த ஒரு ஜோடி கண்கள்; தவறு செய்த குழந்தையிடம், 'நடந்தது போகட்டும், என் அன்பு எப்போதும் உனக்குண்டு' என்று தன் பார்வையாலேயே சொல்லக்கூடிய ஒரு ஜோடி கண்கள் என்று, மூன்று ஜோடிக் கண்கள் வேண்டும்" என்று விளக்கம் தந்தார், இறைவன்.
"இந்தப் படைப்பு, பார்ப்பதற்கு மிக மென்மையாக உள்ளதே" என்று கூறிய வானதூதரிடம், "இந்த மென்மைக்குள், அனைத்தையும் தாங்கும் உறுதி உள்ளது" என்று ஆண்டவன் பதில் தந்தார்.
- படைப்பின் அருகே சென்று, கன்னங்களைத் தடவிப் பார்த்த வானதூதர், "இந்தப் படைப்பின் கண்களில் நீர்க்கசிவு உள்ளதே" என்று சுட்டிக்காட்டினார்.
- "அது நீர்க்கசிவு இல்லை. கண்ணீர்" என்று சொன்ன இறைவன், "மகிழ்வு, துக்கம், வெற்றி, தோல்வி, தனிமை, இனிமை, என்ற அனைத்துச் சூழல்களிலும், கண்ணீர் வெளியாகும். இதை, நான் படைக்கவில்லை, தானாகவே அது உருவானது" என்று விளக்கமும் தந்தார்.
இவ்வாறு, இறைவன், அன்னையரை படைத்து முடித்தார்.
தாயுமான ஆசிரியர்
பிப்ரவரி 13
ஐந்தாம் வகுப்பு ஆசிரியரான திருமதி தாம்சன் (Thompson), தனது வகுப்பில் நுழைந்தவுடன், “நான் உங்கள் எல்லாரையும் அன்புகூர்கிறேன்” என்று மாணவர்களை வாழ்த்துவது வழக்கம். அப்புதிய கல்வியாண்டில் தனது வகுப்புக்கு முதல் நாள் சென்ற அவர், வழக்கம்போல் வாழ்த்தினார். ஆனால் அவரின் வாழ்த்தில் உண்மையில்லை என்பது அவருக்குத் தெரியும். ஏனென்றால் அந்த வகுப்பில் முதல் பெஞ்சில், டெடி ஸ்டோடார்ட் (Teddy Stoddard) என்ற மாணவன், அழுக்கான உடையணிந்து, பார்ப்பதற்கே அசிங்கமாக அமர்ந்திருந்தான். அன்றிலிருந்தே, டெடி மீது ஒருவித எதிர்மறை உணர்வை வளர்த்துக் கொண்டிருந்த ஆசிரியர் தாம்சன், வகுப்பில், எதிர்மறையாக எதையாவது சொல்ல நேரிட்டால், டெடியையே எடுத்துக்காட்டாகச் சொல்வார். காலாண்டு தேர்வு முடிந்து, மாணவர்களின் முன்னேற்ற அறிக்கையை தலைமை ஆசிரியரிடம் சமர்ப்பித்தார் தாம்சன். அவ்வறிக்கையில், டெடி பற்றி வாசித்த தலைமை ஆசிரியர், தனது பணியாளரை அழைத்து, டெடியின் முந்திய வகுப்புகள் அறிக்கைகளை ஆசிரியர் தாம்சனிடம் கொடுக்கச் சொன்னார். “டெடி மிகத் திறமையான, ஒழுக்கமான மாணவன், மாணவர்களுக்கு இவனை மிகவும் பிடிக்கும்” என்று, முதல் வகுப்பு ஆசிரியரும், “டெடி மிகவும் திறமையானவன், நல்ல சிறுவன், ஆனால் இவனின் அம்மா கடும் புற்றுநோயால் துன்புறுவதால், இவன் பாதிக்கப்பட்டுள்ளான்” என, இரண்டாம் வகுப்பு ஆசிரியரும், “டெடியின் அம்மா இறந்து விட்டார், அவனின் அப்பா அவனுக்குப் போதிய ஊக்கம் தரவில்லை, அவனின் குடும்ப நிலைமை அவனை விரைவில் பாதிக்கும்” என, மூன்றாம் வகுப்பு ஆசிரியரும், “டெடி சோர்வாக உள்ளான், நண்பர்கள் இல்லை, ஒதுங்கி வாழ்கிறான், சிலநேரங்களில் வகுப்பில் தூங்கி விடுவான்” என, நான்காம் வகுப்பு ஆசிரியரும் எழுதி இருந்தனர். அதை வாசித்த தாம்சனின் கண்களில் நீர். அதன்பின் டெடியிடம் அவரின் அணுகுமுறை தலைகீழாக மாறியது.
தாம்சனின் செல்ல மாணவரானார் டெடி. அந்த ஆண்டு கிறிஸ்மசுக்கு, மாணவர்கள், ஆசிரியர் தாம்சனுக்கு பரிசுகள் வழங்கினர். அதில் ஒரு பரிசு, பழைய தினத்தாளில் பொதியப்பட்டிருந்தது. இது டெடியின் பரிசாகத்தான் இருக்கும் என்று நினைத்து அதைப் பிரித்தார் ஆசிரியர். அதில் பயன்படுத்தப்பட்ட வாசனைத் திரவிய பாட்டில் ஒன்றும், பழைய வளையல் ஒன்றும் இருந்தன. வளையலில் சில கற்கள் விழுந்திருந்தன. இந்தப் பரிசைப் பார்த்து மாணவர்கள் சிரித்தனர். ஆனால், தாம்சனோ, என்ன அழகான வளையல் என்று சொல்லி, அதை உடனே தனது கையில் போட்டு, வாசனைத் திரவியத்தையும் உடலில் தடவினார். வகுப்பு முடிந்து மாணவர்கள் சென்றவுடன், டெடி, தாம்சனிடம், இவை என் அம்மா பயன்படுத்தியவை. என் அம்மாவை சவப்பெட்டியில் வைக்குமுன், இந்த வளையலைக் கழற்றினார்கள். நீங்கள் என் அம்மா போன்று இருக்கிறீர்கள் என்று சொன்னான். ஆண்டுகள் உருண்டோடின. “உங்களைப் போன்ற சிறப்பான ஆசிரியரை இதுவரை நான் சந்தித்ததே இல்லையென”, டெடி தனது கல்வியாண்டை முடிக்கும்போதெல்லாம், தனது ஐந்தாம் வகுப்பு ஆசிரியருக்கு கடிதம் எழுதி வந்தார். ஆசிரியர் தாம்சன் பணி ஓய்வில் இருந்த காலத்தில், ஒருநாள், Dr.Theodore F. Stoddard, M.D. எனக் கையெழுத்திட்டு, ஒரு கடிதம் வந்தது. எனக்குத் திருமணம், கட்டாயம் நீங்கள் வரவேண்டும் என்று எழுதி, அதில் விமானப் பயணச்சீட்டும் இருந்தது. தாம்சனும், டெடி கொடுத்த பழைய வளையலை அணிந்து கொண்டு, திருமணம் நடந்த நகரின் ஆலயம் சென்று கடைசி இருக்கையில் அமர்ந்தார். ஆனால், முதல் இருக்கையில், “அம்மா” என்று எழுதப்பட்டிருந்த நாற்காலியில், அவரை அழைத்துச் சென்று அமர வைத்தனர். திருமணம் முடிந்து டெடி தனது மனைவியிடம், இவர் என் அன்னையைப் போன்றவர், இவரில்லாமல் இன்று நான் இந்த நிலைமையை எட்டியிருக்க முடியாது என, தன் ஆசிரியரை அறிமுகப்படுத்தினார். அப்போது ஆசிரியர், தாம்சன், ஓர் ஆசிரியர், ஒவ்வொரு மாணவருக்கும், முதலில் தாயாக, அன்னையாக இருக்க வேண்டுமென்பதை, எனக்கு உணர்த்தியவர் டெடிதான் என்றார்.
துன்புறுவோர் அருகே நிற்கும் லூர்து அன்னை
பிப்ரவரி 11
ஒவ்வோர் ஆண்டும், பிப்ரவரி 11ம் தேதி கொண்டாடப்படும் லூர்து நகர் அன்னைமரியாவின் திருநாளை, திருத்தந்தை புனித 2ம் ஜான்பால் அவர்கள், நோயுற்றோருக்காகச் செபிக்கும் உலக நாளாகச் சிறப்பிக்குமாறு அழைப்பு விடுத்தார்.
1993ம் ஆண்டு, இந்த உலக நாள் முதன்முறையாகச் சிறப்பிக்கப்பட்ட வேளையில், புனித 2ம் ஜான்பால் அவர்கள் வெளியிட்ட ஒரு மடலில் கூறப்பட்டுள்ள சில வரிகள், நம்மைச் சிந்திக்கத் தூண்டுகின்றன:
நோயுற்றோருக்கென பணியாற்றுவோர் அனைவருக்கும், இவ்வுலக நாளையொட்டி, சிறப்பான விண்ணப்பம் ஒன்றை விடுக்கிறேன். நோயுற்றோருக்கு பணி செய்வோர், மனித உணர்வும், ஈடுபாடும் அற்ற இயந்திரங்களைப்போல் இயங்கவேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.
ஒரு சமுதாயம், கலாச்சாரத்தில் எவ்வளவு தூரம் முன்னேறியுள்ளது என்பதைத் தீர்மானிக்க, நோயுற்றோர் மீது காட்டப்படும் அக்கறை, ஓர் அளவுகோலாக விளங்குகிறது.
கல்வாரி மலையில், சிலுவையடியில் நின்று, தன் மகனின் துன்பங்களில் பங்கேற்ற அன்னை மரியா, பிரனீஸ் (Pyerenees) மலையடிவாரத்தில் உள்ள லூர்து நகரில் தோன்றி, நம் துன்பங்களில் பங்கேற்கிறார்.
நோயுற்றோருக்காகச் செபிக்கும் உலக நாள், இவ்வாண்டு 25வது முறையாகச் சிறப்பிக்கப்படுகிறது.
ஆரோக்கியம் தரும் லூர்து அன்னை
பிப்ரவரி 10
அன்னையை நோக்கி இறைஞ்சும் பக்தர்களின் குறை தீர்க்கும் அன்னை மரியா அவர்கள், அடைக்கல மாதா, பனிமய மாதா, வேளாங்கண்ணி மாதா, வியாகுல மாதா, காணிக்கை மாதா, அமலோற்பவ மாதா, பூண்டி மாதா என்னும் பல பெயர்களில் அழைக்கப்படுகிறார். அவற்றுள் ஒன்றுதான் லூர்து மாதா.
வேளாங்கண்ணியைப் போலவே, சாதி, மதம், இன பேதங்களைக் கடந்து, மக்கள் திரளாக லூர்து நகருக்கு வருவதற்குக் காரணங்கள் இரண்டு.
160 ஆண்டுகளுக்கு முன்னர் மசபியேல் என்ற குகையில் அன்னை மரியா பெர்னதெத் சூபிரு (Bernadette Soubirous) என்ற சிறுமிக்குப் பதினெட்டு முறை காட்சி தந்தது.
இரண்டாவது, அதன் பின் இன்று வரை அங்கே நடைபெற்றுக் கொண்டிருக்கும் எண்ணற்ற புதுமைகள்.
சிறுமி பெர்னதெத் சூபிரு, அன்னையை நோக்கி, ""அம்மா, உம் பெயர் என்ன?‘' என்று கேட்டபோது, "நாமே அமல உற்பவம்', அதாவது, மாசு மருவின்றி பிறந்த அன்னை என்று கூறினார். உலகிலேயே அதிக திருப்பயணிகள் செல்லும் திருத்தலமாக இன்று லூர்துநகர் காட்சியளிக்கிறது. அங்கு சென்றோர் யாருமே அன்னையின் ஆசியைப் பெறாமல் திரும்புவதில்லை.
நோயாளியின் பாதுகாவலாகத் திகழும் லூர்து அன்னை, அங்கே பொங்கிப் பெருகி வரும் அற்புத ஊற்றுத் தண்ணீரை நம்பிக்கையுடன் குடிக்கும் எண்ணற்ற நோயாளிகளுக்கு உடல் நலமும், உள்ள நலமும் கொடுத்து வருகிறார். எண்ணற்ற புதுமைகள் தினந்தோறும் நடந்து வருகின்றன.
தமிழகமெங்கும் லூர்து அன்னையின் புகழுக்குப் பெருமை சேர்க்கும் ஏராளமான கோயில்கள் உள்ளன. அநேக தேவாலயங்களில், கோயில் வளாகத்துக்குள்ளேயே சிறுமி பெர்னதெத்துக்கு அன்னை காட்சியளிக்கும் வண்ணம் திகழும் கெபிகள் அமைக்கப்பட்டிருக்கும்.
நம்பிக்கையுடன் தன்னை நாடி வரும் பக்தர்களை இறை அன்னை என்றுமே கைவிடுவதில்லை.
உடல், உள்ள மருத்துவர் அன்னை மரியா
பிப்ரவரி 9
இயேசு சிலுவையில் தொங்கி உயிர்விட்ட அந்த இறுதி மூன்று மணி நேரங்கள் பற்றிய செபத்தில், ”கிறிஸ்துவே, நீர் என்னை அழைக்கும் வேளையில், உம் அன்னை எனக்குப் பாதுகாவலராக நிற்பாராக” என, நம் மகிழ்வான மரணத்திற்காகச் செபிக்கும் வரிகள் உள்ளன. எனவே, அன்னை மரியா, உடலுக்கு மட்டுமல்ல, உள்ளத்துக்கும் மருத்துவர். அன்னை மரியாவை, நோயுற்றோரின் நலமே என்று, பாமாலையில் நாம் செபிக்கும்போது, நமக்கு உடல்நலத்தை மட்டுமல்ல, நமக்கு மீட்பையும் பெற்றுத் தருமாறு அன்னையிடம் மன்றாடுகிறோம். இயேசு, நம் உடலுக்கும், ஆன்மாவுக்கும் குணமளிக்கும் விண்ணக மருத்துவர். இதற்கு நற்செய்தியில் பல எடுத்துக்காட்டுகள் உள்ளன. இயேசு முடக்குவாதமுற்றவரைக் குணமாக்கியபோது, மகனே உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன என்று முதலில் சொன்னார். பின்னர், நீ எழுந்து உன்னுடைய படுக்கையை எடுத்துக்கொண்டு, உனது வீட்டுக்குப் போ என்றார். (மாற்.2:5,10). அன்னை மரியா, இயேசுவின் எடுத்துக்காட்டைப் பின்பற்றுபவர் என்பதால், அன்னை, நோயுற்றோர் மீது சிறப்பான அன்பு கொண்டுள்ளார். வேளாங்கன்னி, மடு, லூர்து, பாத்திமா என, அன்னை மரியா திருத்தலங்களில் நடைபெறும் எண்ணற்ற அரும்செயல்கள் இதற்கு எடுத்துக்காட்டுகள். புனித குழந்தை தெரேசா சிறுமியாக இருந்தபோது, கடும் நோயால் தாக்கப்பட்டு இறக்கும் நிலையில் இருந்தார். அப்போது அவரின் படுக்கையருகில் இருந்த அன்னை மரியா திருவுருவம், அவரைப் பார்த்து புன்முறுல் பூத்தது. அவரும் நலமடைந்தார். “ஓ அன்னையே! தீராத கடும் நோய்களின் மருத்துவரே, எனது ஆன்மாவின் பல புண்களைக் குணமாக்கு” என புனித சமைன் ஸ்டாக் செபித்தார். இவ்வாறு, பல புனிதர்கள் அன்னை மரியாவை, உடலுக்கும், உள்ளத்திற்கும் நலமளிக்கும் தாய் என்று சொல்லியுள்ளனர். கி.பி.593ம் ஆண்டில் உரோம் நகரம் கொள்ளை நோயால் (Black Plague) தாக்கப்பட்டபோது, உரோம் மேரி மேஜர் பசிலிக்காவிலுள்ள அன்னை மரியா திருவுருவப் படத்தை, திருத்தந்தை புனித கிரகரி அவர்கள், நகரைச் சுற்றி பக்தியோடு எடுத்துச் சென்றார். கொள்ளை நோயும் நீங்கியது. எனவே, மரியா உரோம் நகருக்குச் சுகம் தந்தவர் என்ற பொருளில் மரியா சாலுஸ் ரோமானி (Maria Salus Populi Romani) என்று, இப்படம் தனி மரியாதை பெற்றுள்ளது. அதேபோல், லெப்பாந்தோ போரின்போது, 1571ம் ஆண்டில், திருத்தந்தை 5ம் பத்திநாதரும் இதேபோல் இப்படத்தை நகரைச் சுற்றி பக்தியோடு எடுத்துச் சென்றார். போரில் வெற்றியும் கிடைத்தது.
ஆம். அன்னை மரியா, உடலுக்கும், உள்ளத்திற்கும் நலமளிக்கும் மருத்துவர்.
தன்னலம் தொடாத அன்பு தாயன்பு
பிப்ரவரி 8
கடவுளின் படைப்பில் தன்னலத்தின் நிழல்கூடப் படாதது, தாயின் படைப்பு ஒன்றுதான்.
ஒரு குழந்தை தன் வாழ்வில் ‘குன்றின் மேலிட்ட விளக்கைப் போல்’ ஒளிரவோ, அல்லது ‘குடத்திலிட்ட விளக்கைப் போல்’ மங்கிவிடவோ அச்சாணி ஆகிறார், தாய். இதுதான் வாழ்க்கை, இப்படித்தான் வாழவேண்டும் என்று, தன் பிள்ளைக்கு எடுத்துக்காட்டாக இருப்பவரும் தாய்தான். இதற்குக் காரணம், ஒரு குழந்தை பிறந்தது முதல், தாயின் பேச்சு, செயல், வேலை, கவனிப்பு ஆகியவற்றைத் தினமும் பார்ப்பதால், அந்நடவடிக்கைகளே அக்குழந்தையின் மனதில் ‘பசுமரத்தாணிபோல்’ பதிகின்றன.
தாயின் வார்த்தைகளைக் கேட்டு, பின்பற்றினால் நமது வாழ்வு வளம் பெறுவது உறுதி.
தாய், நமக்கு, சிறந்ததொரு தோழியாகவும், சகோதரியாகவும், ஆசிரியையாகவும், ஆலோசகராகவும் திகழ்கிறார்.
'என்னுடைய நல்ல குணங்கள் எல்லாவற்றுக்கும், என் தாய்க்கு நான் கடன்பட்டவன்' என்றார் ஆபிரகாம் லிங்கன். 'பிரெஞ்சு நாட்டில் நல்ல குடிமக்கள் உருவாக, நல்ல தாய்மார்கள் பெருக வேண்டும்' என்றார் நெப்போலியன். 'அன்னையின் செல்வாக்கில்தான் என் பண்புகள் சிறந்தன. அவரால்தான் என் இலக்கிய இரசனையும் வளர்ந்தது' என்று நன்றி செலுத்தினார், இரஸ்கின்.
மறைந்த காஞ்சி மகாப் பெரியவர் சொல்கிறார், "தாயன்பு போன்ற கலப்படமற்ற அன்பு இந்த உலகில் வேறு எதுவுமில்லை" என்று.
லூர்து அன்னை | நூற்றில் ஒரு புதுமை
பிப்ரவரி 6
1858ம் ஆண்டு, பிப்ரவரி 11ம் தேதி, பிரான்ஸ் நாட்டின் லூர்து நகரில், அன்னை மரியா, புனித பெர்னதெத் அவர்களுக்குக் காட்சியளித்ததைத் தொடர்ந்து, லூர்து நகர் திருத்தலம் உலகெங்கும் புகழ் அடைந்துள்ளது. அத்திருத்தலத்தையும், குறிப்பாக, அங்குள்ள மசபியேல் கெபியையும், குளியல் தொட்டிகளையும் நம்பிக்கையுடன் அணுகிச்சென்ற ஆயிரக்கணக்கானோர், இறைவனின் புதுமைகளைப் பெற்றுள்ளனர். இதுவரை, அங்கு நிகழ்ந்துள்ள புதுமைகளில், 7000த்திற்கும் அதிகமானவை, அத்திருத்தலத்தின் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன. அப்பதிவுகள் மீது ஆழமான மருத்துவ ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, இதுவரை, 69 புதுமைகள் மட்டுமே, அதாவது, நூற்றில் ஒன்று மட்டுமே, அதிகாரப்பூர்வ புதுமைகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.
69வது புதுமையால் பலனடைந்தவர், தானிலா காஸ்தெல்லி (Danila Castelli) என்ற இத்தாலியப் பெண்மணி. 1982ம் ஆண்டு, 36 வயது நிறைந்த தானிலா அவர்களுக்கு, கர்ப்பப்பையிலும் அதன் சுற்றுப்பகுதிகளிலும் கட்டிகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பல அறுவைச் சிகிச்சைகள் செய்தும், சரியான பலன் கிடைக்கவில்லை. எனவே, தானிலா அவர்களும், மருத்துவரான அவரது கணவரும், 1988ம் ஆண்டு, அமெரிக்க ஐக்கிய நாட்டில், தங்கள் மருத்துவச் சிகிச்சையைத் தொடர தீர்மானித்தனர். இதற்கிடையே, லூர்து நகர் திருத்தலம் செல்லவேண்டும் என்ற எண்ணம், தானிலா அவர்களின் மனதில் சில ஆண்டுகளாக ஓடிக்கொண்டிருந்தது. எனவே, தானிலாவும், அவரது கணவரும் அத்திருத்தலம் சென்றனர்.
1989ம் ஆண்டு, மே மாதம் 4ம் தேதி, தானிலா அவர்கள், அத்திருத்தலத்தின் குளியல் தொட்டியில் இறங்கி வெளியேறியபோது, தனக்குள் ஒரு புதுவகை சக்தி தோன்றியதை உணர்ந்தார். தனக்குள் ஏற்பட்ட மாற்றத்தை, தானிலா அவர்கள், அத்திருத்தலத்தின் அலுவலகத்தில், பதிவு செய்தார். அன்று முதல், அந்த அலுவலகம், தன் ஆய்வுப்பணிகளை ஆரம்பித்தது. 23 ஆண்டுகள் நிகழ்ந்த இந்த ஆய்வின் இறுதியில், 2013ம் ஆண்டு, ஜூலை மாதம், தானிலா அவர்கள் அடைந்த உடல்நல மாற்றம், ஒரு புதுமையென அறிவிக்கப்பட்டது.
லூர்து நகர் அன்னை மரியாவின் திருநாள், பிப்ரவரி 11, வருகிற சனிக்கிழமை சிறப்பிக்கப்படுகிறது. 1993ம் ஆண்டு, திருத்தந்தை புனித 2ம் ஜான்பால் அவர்கள், லூர்து அன்னை திருநாளை, நோயாளர் உலக நாளென சிறப்பித்தார். இவ்வாண்டு, 25வது நோயாளர் உலக நாள் சிறப்பிக்கப்படுகிறது.
என் அன்னை எனக்கு ஒரு தேவதை
பிப்ரவரி 5
என் அன்னை சொன்ன எட்டுப் பொய்கள் என, ஓர் ஆப்ரிக்கர் (Reunion), இணையத்தில் இவ்வாறு பகிர்ந்து கொண்டுள்ளார்.
1. நான் குழந்தையாக இருந்தபோது எங்களுக்குப் போதுமான உணவு இல்லை. வீட்டில் சிறிதளவு உணவு இருந்தபோதெல்லாம், என் அன்னை, தனக்கிருந்த சிறிதளவு உணவையும், எனது உணவு தட்டில் போட்டு, "மகனே, எனக்குப் பசி இல்லை, இதையும் சாப்பிடு" என்று சொல்வார். 2. நான் வளர்ந்த பிறகு, எனக்குச் சத்துணவு கொடுக்க வேண்டுமென்பதற்காக, நேரம் கிடைத்தபோதெல்லாம், என் வீட்டிற்கு அருகிலிருந்த ஆற்றுக்குச் சென்று மீன்பிடித்து வந்து சமைத்துக் கொடுப்பார் என் அன்னை. ஒரு சமயம் இரண்டு மீன்கள் பிடித்து வந்து சமைத்தார். ஒரு மீனை நான் சாப்பிட்டு முடித்த பின், அந்த மீனின் முள்ளில் ஒட்டிக்கொண்டிருந்த சதையை எடுத்துச் சாப்பிட்டார். இதைப் பார்த்த நான், இரண்டாவது மீனை அவர் தட்டில் வைத்தேன். ஆனால் என் அன்னையோ, எனக்கு உண்மையிலேயே மீன் பிடிக்காது மகனே. எனவே இதையும் நீ சாப்பிடு என்று கொடுத்தார். 3. என் படிப்பிற்கு உதவும் நோக்கத்தில், தீப்பெட்டி தொழிற்சாலை சென்று, காலிப் பெட்டிகளை வாங்கி வந்து, இரவில், மெழுகுதிரி வெளிச்சத்தில், தூங்காமல், தீப்பெட்டிக் குச்சிகளை அடுக்கினார். அம்மா, நேரம் ஆகிறது, படுக்கச் செல்லுங்கள், நாளைக்குத் தொடர்ந்து செய்யலாம் என்று நான் சொன்னபோது, சிரித்துக்கொண்டே, மகனே, நீ தூங்கு, எனக்குக் களைப்பாக இல்லை என்று சொன்னார். 4. நான் எனது கடைசித் தேர்வுக்குப் படித்தபோதெல்லாம் அவர்களும் கண்விழித்தார்கள். தேர்வு எழுதிவிட்டு நான் வெளியே வந்தபோது, கொளுத்தும் வெயிலில் காத்திருந்து, எனக்குத் தேநீர் கொடுத்தார்கள். என் அன்னை வியர்வையால் நனைந்திருப்பதைப் பார்த்து, எனது தேநீர் கப்பைக் கொடுத்தபோது, எனக்குத் தாகமாக இல்லை மகனே, நீ குடி என்றார்கள்.
5. என் தந்தை இறந்தபின், நாங்கள் மிகவும் கஷ்டப்பட்டோம். எல்லாரும் என் அன்னையை மறுதிருமணம் செய்யச் சொன்னார்கள். ஆனால் என் அன்னையோ, எனக்கு அன்பு தேவையில்லை என்று சொல்லி, அதை மறுத்து விட்டார்கள். 6. நான் எனது படிப்பை முடித்து வேலைக்குச் சென்றேன். அப்போதும், என் அன்னை, ஒவ்வொரு நாள் காலையில் சந்தைக்குச் சென்று காய்கறிகள் விற்று வந்தார். நான் என் அன்னையின் செலவுக்குப் பணம் அனுப்பிக்கொண்டே இருந்தேன். ஆனால் அவர்களோ, எனக்குப் போதுமான பணம் உள்ளது எனச் சொல்லி, அந்த பணத்தைத் திருப்பி அனுப்பி விடுவார்கள். 7. நான் பகுதிநேர வேலை செய்துகொண்டே முதுகலைப் பட்டப்படிப்பைத் தொடர்ந்தேன். எனது கல்விக்கு, ஓர் அமெரிக்க நிறுவனத்தின் உதவி கிடைத்து, அமெரிக்கா சென்றேன். எனது ஊதியமும் உயர்ந்தது. எனவே என் அன்னையை, அமெரிக்காவுக்கு அழைத்தேன் அதற்கு அவர்கள், இப்படி, உயர்தர வாழ்வில் எனக்குப் பழக்கமில்லை என்று சொல்லி, அமெரிக்கா வர மறுத்துவிட்டார்கள். 8. இறுதியில், என் அன்னை புற்றுநோயால் தாக்கப்பட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருந்தார். நான் அவரை அமெரிக்காவிலிருந்து பார்க்கச் சென்றேன். படுக்கையிலிருந்த என் அன்னையின் உருவத்தைப் பார்த்ததும், கதறி அழுதேன். அப்போது என் அன்னை, அழாதே மகனே, எனக்கு வலி இல்லை என்றார்கள். இந்த எட்டாவது பொய்யைச் சொல்லிவிட்டு, என் அன்னை இறந்து விட்டார்கள்.
ஆம். என் அன்னை எனக்கு ஒரு தேவதை. இப்பூமியில், உங்கள் அன்னை இன்னும் உயிரோடு இருந்தால், நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள், இல்லையென்றாலும், மேலும் நீங்கள் பேறுபெற்றவர்கள் என்று, அந்த ஆப்ரிக்கர் பதிவு செய்திருக்கிறார். வாழ்க அன்னையர்!
தாய்மையை நீ தேர்ந்தெடுக்கிறாய்
பிப்ரவரி 4
அன்னையரைப் பற்றி சில அழகிய எண்ணங்கள்...
முழுமையான, கலப்படமற்ற உண்மைகளைச் சொல்வதற்குத் தகுந்தவர்கள் அன்னையர் மட்டுமே - Margaret Dilloway
என் அன்னை வெளிப்புறத்தில் மென்மையாகவும், உள்ளுக்குள், வைரம் பாய்ந்த உறுதியோடும் இருப்பவர். நான் வளர்ந்தபின், என் அன்னையைப்போல இருக்க விழைகிறேன் - Jodi Picoult
தாய்மை என்பது, நீ தினமும் தேர்ந்தெடுக்கக் கூடிய பண்பு... உன்னுடைய மகிழ்வுக்கு முன்னதாக மற்றவரின் மகிழ்வை நீ வைக்கும்போது, கடினமான பாடங்களைச் சொல்லித்தரும்போது, நீ செய்வது சரியானதா என்று தெளிவாகத் தெரியாதபோதும், சரியானதைச் செய்ய விரும்பும்போது, மீண்டும், மீண்டும் உன்னையே நீ மன்னித்துக்கொள்ளும்போது, தாய்மையை நீ தேர்ந்தெடுக்கிறாய் - Donna Ball
அம்மாவில் இருந்து பிறந்த சொல் ‘அன்பு’
பிப்ரவரி 3
தமிழில், அம்மா என்ற சொல் எப்படி வந்ததென்று தெரியாது, ஆனால், அன்பு என்ற சொல் நிச்சயம் அம்மாவில் இருந்துதான் வந்திருக்க வேண்டும் என்பர். அந்த அன்பு தாய், நம்மை சிரிக்க வைப்பதற்காக, எத்தனை ஆயிரம் முறை, கண்ணீர்களை மறைத்திருப்பார், எண்ணிப்பாருங்கள். ஒவ்வொருவருக்கும் ஓய்வுபெறும் வயதென்று ஒன்று உண்டு, தாயைத்தவிர.
தன் மகவுக்காக மரண வலியையொத்த பிரசவ வலியை தாங்கிக்கொண்ட தாயால், தன் மகனின் கண்ணீர் வலியை தாங்கிக்கொள்ள முடிவதில்லை. வார்த்தைகள் இன்றி உணர்வுகளில் உரையாடும் இரு தெய்வங்கள், அம்மாவும் குழந்தையும்.
நெஞ்சினில் ஈரத்தையும், கண்களில் கருணையையும், கைகளில் ஆதரவையும், சொல்லில் கனிவையும் என்றும் கொண்டிருப்பவர் தாய்.
முகத்தைப் பார்ப்பவர்களும், அகத்தைப் பார்ப்பவர்களும் உள்ள உலகில், வயிற்றைப் பார்ப்பவர்கள் அன்னையர் மட்டுமே.
ஒரு காலத்தில் கணவனுக்குத் தெரியாமல் மகனுக்கு பணம் கொடுத்த தாய்க்கு, மனைவிக்குத் தெரியாமல் பணம் கொடுக்கிறார்கள் மகன்கள் இன்று.
'அப்பா அடிப்பாருடா', 'அப்பாகிட்ட சொல்லிருவேண்டா', என்று பயமுறுத்தி, பயமுறுத்தியே, எல்லா அன்பையும் தங்களிடமே தக்கவைத்துக் கொள்பவர், அன்னையர்.
எத்தனை உறவுகள் இருந்தாலும், தன் தாயை இழக்கும்போதுதான், ஒருவன் அனாதையாகிறான்.
தாய் நமக்கு கொடுக்கும் சுதந்திரம், நம்பிக்கையின் பெயரில்; கொடுக்க மறுக்கும் சுதந்திரமோ, அக்கறையின் மிகுதியால்.
முதியோர் இல்லத்தில் வாழும் ஒவ்வோர் அன்னையும் தினமும் செபிக்கும் செபம் என்னவென்றால், 'கடவுளே, என் குழந்தைக்கு ஒரு நாளும் இந்நிலை வரக்கூடாது' என்பதே.
தாழ்மையைக் கற்றுத் தரும் தாய்
பிப்ரவரி 2
ஆண்மகவைப் பெற்றெடுத்த ஒரு பெண், நாற்பது நாள்கள் வரை, ஆலயம் செல்லக் கூடாது. அதன் பின்னர், ஆலயம் சென்று, தன் தகுதிக்கேற்ப காணிக்கை செலுத்தி, தூய்மைச் சடங்கை நிறைவேற்ற வேண்டும், தனது மகனை ஆண்டவருக்கு அர்ப்பணிக்க வேண்டும் என்பது, அக்கால யூத மதச் சட்டம். ஆனால், உலகெல்லாம் ஆள்பவரைப் பெற்றெடுத்த அன்னை மரியாவும், அவரின் திருமகன் இயேசுவும் இச்சட்டத்திற்கு உட்பட்டவர்களா? இவர்கள் இச்சட்டத்தை, கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டுமா? நிச்சயமாக இல்லை. ஆயினும், மற்ற யூதத் தாய்மார் போன்று, இயேசுவின் தாயும், இயேசு பிறந்த நாற்பதாம் நாள், ஆலயம் சென்று, அச்சட்டத்தை நிறைவேற்றினார். தமது கன்னிமை, மற்றவரின் கண்களுக்குப் புதிராகத் தெரியாமல் இருப்பதற்காக, தூய்மைச் சடங்கை நிறைவேற்றினார். ஆலயத்தையே ஆலயத்திற்குக் கொண்டு சென்று, அர்ப்பணமாக்கினார். இந்நிகழ்வில், தாயும், சேயும் தங்களையே தாழ்த்தினர். தங்களைப் பெருமைப்படுத்தும் மனிதருக்கு, இவர்கள், அன்றைய நாளில், சிறந்த பாடத்தைக் கற்றுக் கொடுத்தனர். இறைவனின் எண்ணங்கள், மனிதரின் எண்ணங்கள் அல்ல என்பதை, உலகுக்கு உணர்த்தினர். அன்னை மரியா தூய்மைச் சடங்கை நிறைவேற்றி, இயேசுவை அர்ப்பணித்த இந்நிகழ்வையே, பிப்ரவரி 2, இவ்வியாழனன்று, திருஅவை சிறப்பித்தது.
இறுமாப்பு ஒருவரைத் தாழ்த்தும். தாழ்மை உள்ளம் ஒருவரை உயர்த்தும். அன்னை மரியாவிடமிருந்து பாடம் கற்போம். “அன்புப் பிள்ளைகளே! நான் ஒரு தாயைப்போல உங்களிடம் வருகின்றேன். உங்களுக்குத் தாயாக இருப்பதை நான் விரும்புகின்றேன். ஆகவே தாழ்மையான அர்ப்பணிப்போடும், கீழ்ப்படிதலோடும், இறைத்தந்தையிடம் முழுமையான நம்பிக்கையோடும் செபியுங்கள். நான் கடவுளுக்கு முன்பாக உங்களுக்காகப் பரிந்து பேசுகின்றேன் என நம்புங்கள்” என்று, ஒரு காட்சியில் அன்னை மரியா சொல்லியிருக்கிறார்.
நல்லவை அனைத்தும் அம்மாவே
பிப்ரவரி 1
தாயை மட்டும் குறிப்பதற்கு பயன்படுத்தப்படும் சொல் அல்ல 'அம்மா'. பெண்களை பாசமாகவும், மரியாதையாகவும் அழைக்கவும் 'அம்மா' என்ற சொல் பயன்படுகிறது. அதாவது, பாசத்தோடும் மரியாதையோடும் இணைந்துச் செல்லும் வார்த்தை, 'அம்மா' . குழந்தையாக பிறந்தவுடனேயே நாம் ஒட்டிக்கொள்வது அம்மாவிடம்தான். அங்கிருந்து தொடரும் 'தாயன்பு', சுடுகாடு வரை, கூட வரும். 'அம்மா' என, குழந்தையில் துவங்கும் முதல் வார்த்தை, எல்லாச் சூழல்களுக்கும், அதாவது, துன்பத்திற்கும் இன்பத்திற்கும், கருணைக்கும் கவலைக்கும், ஏன், தர்மத்திற்கும் என, அனைத்திற்கும் பொருந்துவதாக உள்ளது. காலில் அடிபட்டால்கூட 'அம்மா' என்றுதான் அலறுகிறோம். ஏனெனில், அர்த்தம் தெரியாத காலத்திலேயே வாயில் நுழைந்த வார்த்தை அது. உயர்வான எப்பொருளுக்கும் பொருந்திப்போகும் 'அம்மா' என்ற வார்த்தையின் அர்த்தம் உணர்ந்து செயல்படுவோம்.