பாசமுள்ள பார்வையில்...

வத்திக்கான் வானொலி நிகழ்ச்சியின் முதல் நிமிட நிகழ்ச்சி




தாய் மண்ணுடன் உள்ள உறவு

நவம்பர் 15

மதுசூதனனுக்கு தன் தாய்மண் மீது இருந்த ஆர்வம், கடைசியில் அவனை இராணுவத்தில் சேரவைத்தது. கார்கில் போர் வரும்வரை அவனும் ஒழுங்காக வீட்டோடு தொடர்பு வைத்துக் கொண்டுதானிருந்தான். தன் தந்தையுடன் 15 நாட்களுக்கு ஒருமுறையாவது பேசிவிடுவான். ஆனால், கடந்த ஒரு மாதமாக அவனிடமிருந்து எந்த அழைப்பும் இல்லை. பணியில் தீவிரமாக இருக்கிறான் என்று தந்தை, தன்னைத்தானே தேற்றிக் கொண்டாலும், அவர் மனதிற்குள் ஓர் ஓரத்தில் ஏதோ அச்சம் தலைதூக்கித்தான் இருந்தது. இராணுவத்தில் பணியாற்றி, ஓய்வு பெற்று, தற்போது தன் ஊரில் வாழ்கின்ற கந்தசாமியைப் பார்த்து விவரம் கேட்கச் சென்றார் அந்த முதியவர். 'ஐயா. மன்னிக்கவேண்டும். உங்களுக்கு விவரம் தெரியாதா? இங்கு இரணுவத்தினர் வந்து விவரம் சொன்னதும், மதுசூதனின் பொருட்களை உங்கள் மகளிடம் ஒப்படைத்ததும் உங்களுக்குத் தெரியாதா? இதய நோயாளியான தங்களிடம், உங்கள் மகள் அனைத்தையும் மெதுவாக நேரம் பார்த்து சொல்கிறேன் என்று சொல்லியிருந்தாரே?' என கந்தசாமி கூறியதும், தலை சுற்றுவதுபோல் இருந்தது அவருக்கு. தான் கடந்த வாரம் ஐந்து நாட்களுக்கு இராமேஸ்வரம் சென்று வருவதற்குள் இதெல்லாம் நடந்திருக்கிறது, என எண்ணிக்கொண்ட அவர், ‘என் மகன் எப்படி இறந்தான்’, என கேட்க, 'போர்க்களத்தில் படுகாயமுற்ற மதுசூதனனை மருத்துமனையில் அனுமதித்திருக்கிறார்கள். நல்ல சிகிச்சைகள் வழங்கப்பட்டும் அவனைக் காப்பாற்ற முடியவில்லை. அவன் இறக்கும் தறுவாயில் செய்த ஒரு காரியம்தான் இன்று இராணுவத்தின் மத்தியில் நம் ஊரையே வணங்க வைத்திருக்கிறது. ஆம். அவன் இறக்கும்போது, தன்னை மண் தரையில் படுக்க வைக்கச் சொல்லியிருக்கிறான். ஏன் என்று கேட்டதற்கு, தன் தாயின் மடியில் உயிர்விட ஆசைப்படுகிறேன் என கூறியிருக்கிறான். கடைசி மூச்சுவரை இந்த மண்ணையே தன் தாயாக நேசித்த ஒரு மகனைப் பெற்றதற்கு நீர் மட்டுமல்ல. இந்த ஊரே பெருமைப்படவேண்டும்' என்றார் கந்தசாமி. தன் மகனுக்கு, தாய் நாடு பாசத்தை ஊட்டி, இருபது ஆண்டுகளுக்கு முன் இறந்துபோன தன் மனைவியை நினைத்துக்கொண்ட மதுசூதனின் தந்தை, தன் கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்தார்.

ஒரு தாய்க்கும் மகனுக்கும் இருக்கும் உறவுதான், அவனுக்கும் அவன் பிறந்த மண்ணுக்கும் இருக்கும் உறவு.




மனிதச் சட்டமா? கடவுள் கட்டளையா?

நவம்பர் 14

பாலை நிலத்தில் கடினமான தவ வாழ்வை மேற்கொண்டிருந்த துறவியர், உயிர்ப்புப் பெருவிழாவுக்கு தகுந்த தயாரிப்பாக, புனித வாரம் முழுவதும் உண்ணா நோன்பை கடைபிடிப்பதென, முடிவெடுத்தனர். ஒவ்வொரு துறவியும், அவரவர் அறைக்குள் சென்று, கடும் தவத்திலும், உண்ணா நோன்பிலும் ஈடுபட்டனர்.

புனித வாரத்தின் நடுவில், வேறு ஊரிலிருந்து இரு துறவியர், அத்துறவு மடத்தின் தலைவர், மோசே அவர்களைச் சந்திக்க வந்தனர். அவர்கள், நெடுந்தூரம் பயணம் செய்து வந்ததால், பசியாலும், களைப்பாலும் சோர்ந்திருந்தனர். அவர்களது பரிதாப நிலையைக் கண்ட மோசே அவர்கள், அத்துறவியர் உண்பதற்கு, சிறிது உணவை தயார் செய்தார். தங்களுக்கு மட்டும் உணவு வைக்கப்பட்டுள்ளது என்பதை உணர்ந்த அவ்விரு துறவியரும், உண்பதற்குத் தயங்கினர். உடனே, மோசே அவர்களும், அவர்களோடு சேர்ந்து, சிறிது உணவை சுவைத்தார்.

மோசே அவர்களின் அறையில் சமையல் நடப்பதை அறிந்து அதிர்ச்சியுற்ற துறுவிகள், மோசே அவர்களின் அறைக்கு முன் கூடினர். அவர்கள் முகத்தில் தெரிந்த கோபத்தையும், கண்டனத்தையும் கண்ட இல்லத்தலைவர் மோசே, அவர்களிடம், "மனிதர்களாகிய நாம் விதித்துக்கொண்ட உண்ணா நோன்பு என்ற கட்டளையைப் பின்பற்ற நான் தவறிவிட்டேன். ஆனால், பசியால் வாடியிருந்த சகோதரர் இருவருக்கு உணவளித்ததன் வழியே, இறைவன் வழங்கிய அன்புக் கட்டளைக்கு நான் கீழ்ப்படிந்தேன்" என்று கூறவே, துறவியர், அமைதியாகக் கலைந்து சென்றனர்.

புனிதத்தில் வளரும் ஒரு முயற்சியாக, துறவியர் விதித்துக்கொண்ட உண்ணாநோன்பு சட்டம் பெரிதா? அல்லது, அயலவரின் தேவை உணர்ந்து, அன்பு காட்ட வேண்டுமென்று, ஆண்டவன் வழங்கிய கட்டளை பெரிதா?




மகனுக்காக அம்மாவின் ஆவேசம்

நவம்பர் 13

அந்தச் சிறுவன், சிறுவயதிலே தந்தையை இழந்தான். கைம்பெண்ணான அவனின் ஏழை அம்மாவுக்கு, தன் ஒரே மகனைச் சான்றோன் ஆக்கிவிட வேண்டுமென்ற வெறி.. அதனால், தனக்குத் தெரிந்த நெசவுத் தொழிலில் ஈடுபட்டார். கடினமாக உழைத்து துணிகள் நெய்து, அவற்றை விற்று, தன் மகனைப் படிக்க வைத்தார் அந்தத் தாய். ஆனால் மகனுக்கோ படிப்பில் நாட்டம் இல்லை. பள்ளிக்குச் செல்கிறேன் என்று சொல்லிவிட்டு, ஊர் சுற்றிக் கொண்டிருந்தான் மகன். ஒருநாள் அவன், இனி பள்ளிக்கூடம் போகக்கூடாது என்று முடிவெடுத்து வீடு திரும்பினான். அந்நேரத்தில், அவனது அம்மா, வியர்வைச் சொட்ட சொட்ட, விலையுயர்ந்த துணி ஒன்றை, கஷ்டப்பட்டு நெய்து கொண்டிருந்தார். அழகான அந்தத் துணியை ஆசையாகப் பார்த்தபடி ஓடிவந்து, அம்மாவின் கழுத்தைக் கட்டிக்கொண்டு, "அம்மா... எனக்குப் பள்ளிக்கூடம் போகப் பிடிக்கவில்லை... நானும் உன்னுடன் இருந்து இந்த அழகான துணி நெய்ய உதவுகிறேன்'' என்றான் மகன். அடுத்த நிமிடமே மகனின் கைகளை ஆவேசமாக உதறிவிட்டு, அந்த விலையுயர்ந்த துணியைக் கிழித்து எறிந்தார் தாய். அதோடு அழுகையை அடக்க முடியாமல் கதறி அழுதார் அவர். மகன் பதறிப்போய், "என்னம்மா இப்படிச் செய்துவிட்டாய்... விலையுயர்ந்த துணியாயிற்றே...'' என்றான். பின், தன் அருமை மகனை அணைத்தவாறே அந்தத் தாய் சொன்னார் - "மகனே, விலை மதிப்பில்லாத கல்வியை நீ இழக்கிறாய்... எதிர்காலத்தைப் பாழாக்குகிறாய்! அதைவிடவா இது பெரிய அழிவு!'' என்று. உடனே தனது விரல்களால் அம்மாவின் கண்ணீரைத் துடைத்துக்கொண்டே, அம்மா, அழாதே, நான் பள்ளிக்கூடம் போகிறேன் என்றான் மகன். தனக்காகவே வாழும் தன் தாயின் கடின உழைப்பைப் பார்த்து, பிற்காலத்தில் தாயின் கனவுகளை நனவாக்கினார் அந்த மகன்.

'இளமையிற் கல்' என்றார் அவ்வையார். “இளமையில் கல்வி சிலையில் எழுத்து”என்றும் சொல்வார்கள். அதாவது, நாம் இளவயதிலிருந்தே கல்வியைக் கற்று வந்தால் அது நம் எதிர்காலத்தின் ஆணிவேராக் திகழும். பெற்றோர், தங்கள் பிள்ளைகளுக்கு நல்லதொரு பண்பாட்டை இளவயதிலே ஏற்படுத்திவிட்டால், அது அவர்களது வாழ்நாள் முழுவதும் தொடரும், அதிலிருந்து அவர்கள் மாற மாட்டார்கள்.




நானென்ன கைம்மாறு செய்ய முடியும்?

நவம்பர் 10

ஆரோக்கியதாஸ் என்ற பெயர் கொண்ட எல்லோரும் ஆரோக்கியமாக இருப்பதில்லை என்பது உண்மைதான். நம் கதையில் வரும் ஆரோக்கியதாசும் 4 வயது வரை நன்றாகத்தான் இருந்தார். அதன்பின்தான், போலியோவால் தாக்கப்பட்டு கால்களின் செயல்பாட்டை இழந்தார். கடந்த 45 ஆண்டுகளுக்கு மேல், அவர் தாய்தான் ஆரோக்கிதாசை நன்றாகக் கவனித்து பராமரித்து வந்தார். திடீரென்று ஒரு நாள் இரவு அவருக்கு வியர்த்துக் கொட்ட, நெஞ்சு வலி அதிகரித்தது. அம்மா, என அலறியவரை பக்கத்து வீட்டாரின் உதவியுடன் மருத்துவமனையில் சேர்த்தார் தாய். உடனேயே அவரின் இரத்தக்குழாய் அடைப்பை நீக்கும் அறுவைச்சிகிச்சைக்கு, 6 இலட்சம் ரூபாயைக் கட்டச் சொன்னார்கள். மலைப்பாக இருந்தது, ஆரோக்கியதாசுக்கு. இரண்டு அடைப்பை நீக்க, அதுவும் 3 மணி நேரம் கூட நடக்காத சிகிச்சைக்கு 6 இலட்சம் என்றால், இத்தனை ஆண்டுகள் தன் அருகே இருந்து தன்னை பொன்போல் காப்பாற்றி வரும் தன் தாய்க்கு என்ன கொடுத்து ஈடு செய்ய முடியும் என எண்ணினார் ஆரோக்கியதாஸ். தாயன்பு எதையும் எதிர்பார்ப்பதில்லை என்பது உண்மைதான். ஆனால், தன் தாய்க்கு தன்னால் என்ன கைம்மாறு செய்ய முடியும் என திணறினார். அன்றுதான், முதன்முதலாக, தன் தாயின் நலனுக்காக, இறைவனிடம் செபிக்கத் துவங்கினார், ஆரோக்கியதாஸ்.




வயது முதிர்ந்த தாய் கற்றுத்தரும் பாடம்

நவம்பர் 9

வயது முதிர்ந்த கைம்பெண்ணான அந்த அம்மா, பணம் படைத்தவர். அவரது பிள்ளைகள் அவரது பணத்திலே குறியாக இருந்தார்கள். சில நாட்களாக அவருக்கு ஒரு பிரச்சனை. அவருக்கு காது சரியாகக் கேட்கவில்லை. அவர் ஒரு சிறப்பு மருத்துவரிடம் போனார். அந்த அம்மாவின் காதில், ஒலியைக் கேட்கும் கருவி ஒன்றைப் பொருத்தினால் பிரச்சனை தீர்ந்துவிடும் என்பதைக் கண்டுபிடித்தார் மருத்துவர். அந்த அம்மாவும் அதனைப் பொருத்துவதற்கு சம்மதித்தார். எனவே மருத்துவர், அவருக்கு, வெளிப்பார்வைக்குத் தெரியாமல், காதுக்குப் பின்னால், கூந்தல் மறைக்கும்படி அக்கருவி ஒன்றைப் பொருத்தினார். ஒரு வாரம் கழித்து, அந்த அம்மா பரிசோதனைக்காக அதே மருத்துவரிடம் வந்தார். ‘‘டாக்டர், அற்புதம்... என்னால எல்லாத்தையும் நல்லா கேட்க முடியுது!’’ என்றார் அந்த அம்மா. ‘‘அப்ப உங்க வீட்ல இருக்கறவங்களுக்கும் இதுல மகிழ்ச்சிதானே!’’ என்றார் மருத்துவர். ‘‘டாக்டர், அவங்க யார்கிட்டயும் எனக்கு இந்தக் கருவி மாட்டினதைப் பத்தி நான் சொல்லவே இல்லை. ஆனா, இந்த ஒரு வாரத்துல ரெண்டு தடவை என் உயிலை மாத்தி எழுதிட்டேன்!’’ என்று பெருமையுடன் சொன்னார் அந்த அம்மா.

ஆம். யாரையும் நாம் குறைத்து மதிப்பிடக் கூடாது. ஒருவரின் பலவீனத்தைக் கேலி செய்யக் கூடாது. அதனால் இழப்பே ஏற்படும்.




குழந்தைகளுக்குள் பொறாமையில்லை

நவம்பர் 8

பள்ளிக்குச் சென்றிருந்த 10 வயது மாலாவுக்கு அன்று பள்ளியில் இருப்பு கொள்ளவில்லை. மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த அம்மாவுடன், அப்பாவும் பாட்டியும் இருப்பதால், தன்னை கவனிக்க யாரும் இல்லையென, இன்றும் பள்ளிக்கு அனுப்பிவிட்டார்கள். இல்லையென்றால், தன் அம்மாவின் இரண்டாவது பிரசவத்திற்கு, மாலாவும், கட்டாயம் பக்கத்தில்தான் இருந்திருப்பாள். மாலையில் பள்ளி விட்டதும் ஒரே ஓட்டமாக மருத்துவமனைக்குச் சென்ற மாலா, நேராக அம்மாவின் படுக்கையருகே சென்றுப் பார்த்தபோது, புதிதாகப் பிறந்திருந்த பெண் குழந்தை ஒன்று அம்மாவுக்கருகே தூங்கிக் கொண்டிருந்தது. குழந்தையைப் பார்க்காமல், ஒவ்வொருவரும் மாலாவின் முகத்தையேப் பார்த்தனர். தனக்குப் போட்டியாக இன்னொரு குழந்தை வந்துவிட்டதை மாலா எப்படி எடுத்துக் கொள்ளப் போகிறாள் என அனைவரும் யோசித்துக் கொண்டிருக்க, முகத்தில் பெரு மகிழ்ச்சியை வெளியிட்ட மாலா, 'அம்மா, நான் தங்கச்சி பாப்பாவை தூக்கலாமா?' என்று கேட்டாள். ‘இப்போது வேண்டாம், வீட்டிற்கு போனப் பிறகு நீயே பக்கத்தில் வைத்துப் பார்த்துக்கொள்’, என்று கூறிய தாய், தன் மாமியாரை அர்த்தத்துடன் பார்த்தார். 'இன்னொரு பொம்பளப் பிள்ளையைப் பெற்றுவிட்டாயா!, இப்போதே உன் மூத்த மகளுக்கு பொறாமை தலை தூக்கும் பாரு' என தன் மாமியார் கூறியதும், அதற்கு தான் மறுப்பு தெரிவித்ததும், இப்போது அத்தாயின் நினைவில் வந்தது. 'அத்தை, என்ன இருந்தாலும், பெண் குழந்தைகளுக்கு சிறு வயதிலிருந்தே தாய்மை உணர்வு பிறந்துவிடுகிறது. எந்த ஆண் பிள்ளையாவது, ‘பார்பி’ பொம்மையை வைத்து விளையாடுவதைப் பார்த்திருக்கிறீர்களா, பெண் பிள்ளைகளுக்குத்தான் அது பிடிக்கும். அப்பொம்மைகளைக் குளிப்பாட்டி, சோறூட்டி, உடை உடுத்தி வைப்பதை எந்த ஆண் குழந்தையாவது செய்வதைப் பார்த்திருக்கிறீர்களா? அதனால்தான் சொல்கிறேன், தனக்குப் பின் பிறக்கும் தம்பி தங்கைகளை, பெண் பிள்ளைகள், போட்டியாக ஒரு நாளும் நினைப்பதில்லை. என் மகளும் அப்படி நினைக்க மாட்டாள்' என அந்தத் தாய், தன் மாமியாரிடம் கூறியதை, நிரூபிப்பதாக மாலாவின் செயல்கள் இருந்தன.




நவம்பர் 7

இவ்வாண்டு சூன் மாதம் தன் 80வது வயதில் இவ்வுலகைவிட்டுப் பிரிந்த கவிக்கோ அப்துல் இரகுமான் அவர்கள் எழுதிய ‘கண்ணீரின் இரகசியம்’ என்ற கவிதை:

‘இறைவா எனக்குப்

புன்னகைகளைக் கொடு’ என்று

பிரார்த்தித்தேன்

அவன் கண்ணீரைத் தந்தான்

‘வரம் கேட்டேன்

சாபம் கொடுத்து விட்டாயே’

என்றேன்

இறைவன் கூறினான்:

“‘மழை வேண்டாம்

விளைச்சலை மட்டும் கொடு’ என்று

எந்த உழவனாவது கேட்பானா?

ஆனால் நீ

அப்படித்தான் கேட்கிறாய்

கண்ணிரில் புன்னகையும்

புன்னகையில் கண்ணீரும்

ஒளிந்திருப்பதை

நீ அறிய மாட்டாய்

உண்மையைச் சொல்வதானால்

கண்ணீர், கண்களின் புன்னகை

புன்னகை, இதழ்களின் கண்ணீர்

வைகறைப் பொழுதில் மலர்களின் மீது

பனித்துளிகளை

நீ கண்டதில்லையா?

புன்னகை

தன்னைக் கண்ணீரால்

அலங்கரித்துக் கொள்ளும்

அற்புதம் அல்லவா அது!

மழை மேகங்களில்

மின்னல் உதிப்பதை

நீ பார்த்ததில்லையா?

கண்ணீரில் இருந்து

சிரிப்புப் பிறக்கும்

அழகல்லவா அது?

முத்து என்பது என்ன?

சிப்பிக்குள் இருந்து

தவம் செய்யும் கண்ணீர்த் துளி

புன்னகையாகும் அதிசயம் தானே அது

கன்ணீரில் மலரும்

புன்னகைப் பூக்கள்

வாடுவதில்லை என்பதை

அறிவாயாக!

மேலும்

கண்ணீர்தான்

உன்னைக் காட்டுகிறது

புன்னகையோ

சில நேரங்களில்

உனக்கு திரையாகிவிடுகிறது.”



பிள்ளையின் கேள்வியால் திணறும் தாய்

நவம்பர் 6

குட்டி ஒட்டகம் ஒன்று, தனது தாய் ஒட்டகத்திடம் ஓயாமல் கேள்வி கேட்டுக்கொண்டே இருக்கும். அப்படித்தான் ஒரு மாலைப்பொழுதில் குட்டி ஒட்டகம், தாய் ஒட்டகத்திடம், அம்மா! நமக்கு மட்டும் முதுகில் திமில் இருக்கே, ஏன்? என்றது.

அதற்கு தாய் சொன்னது - நாமெல்லாம் இயல்பாகப் பாலைவனத்தில் வாழ்பவர்கள். நமக்கு தண்ணீர் தினம் தினம் கிடைக்காது. பாலைவனச் சோலைகளில் மட்டும்தான் கிடைக்கும். அதனால், கிடைக்கும் தண்ணீரை முடிந்தளவு நம் உடம்பில் சேமித்துக்கொண்டால் தண்ணீர் கிடைக்காத பாலைவனத்தில் பயன்படுத்திக் கொள்வதற்குத்தான் இயற்கை திமிலைக் கொடுத்திருக்கிறது என்று.

சரி, நமக்கு கண் இமை கெட்டியாக இருக்கிறது, மூக்கை மூடிக்கொள்ள மூடி இருக்கிறது, மற்ற மிருகங்களுக்கு அப்படி ஏன் இல்லை? என்றது குட்டி ஒட்டகம்.

தாய் சொன்னது - பாலைவனத்தில் மணல் புயல் அடிக்கும், கண்ணிலும் மூக்கிலும் மணல் புகுந்துவிடும். அதனால்தான் நமக்கெல்லாம் இப்படி மூடி இருக்கின்றது என்று.

சரி, நமக்கு இவ்வளவு பெரிய கால் குளம்பு எதற்கு? என்று கேட்டது குட்டி ஒட்டகம்.

மணலில் நடக்கும்போது நம் கால் மணலில் புதையாமல் நடக்கத்தான் என்று பொறுமையாகப் பதில் சொன்னது அம்மா ஒட்டகம்.

குட்டி ஒட்டகமும் கேள்வியை நிறுத்தவில்லை. அம்மா, பல்லும், நாக்கும் இவ்வளவு கெட்டியாக நமக்கு இருக்கின்றனவே, ஏன்? என்றது.

அம்மா ஒட்டகம் சொன்னது - பாலைவனத்தில் செடி கொடியெல்லாம் முரட்டுத்தனமாக இருக்கும். அதையெல்லாம் கடித்துச் சவைத்துத் தின்ன வேண்டாமா? அதற்குத்தான் என்றது.

இப்போது குட்டி ஒட்டகம், அம்மா! இவற்றையெல்லாம் வைத்துக்கொண்டு இந்த மிருகக்காட்சி சாலையில், நாம் இருவரும் என்ன செய்துகொண்டிருக்கின்றோம்? என்று கேட்டது.

அப்போது தாய் ஒட்டகம், ஒவ்வொருவரும் அவரவருக்கு உரிய இடத்தில் இருந்தால் எல்லாமே நலமாக அமையும், நமக்கு அது கிடைக்கவில்லை என்று கூறியது.




போர்கள் கொணர்வது, கல்லறைகளே

நவம்பர் 4

இறந்த அனைத்து ஆன்மாக்களின் நினைவு நாளான நவம்பர் 2ம் தேதி நிறைவேற்றிய திருப்பலியில், “கல்லறைகளையும், மரணத்தையும் தவிர, வேறு எதையுமே போர்கள் கொணர்வதில்லை. இதுவரை நிகழ்ந்துள்ள போர்களிலிருந்து மனித சமுதாயம் பாடங்களைக் கற்றுக்கொண்டதாகத் தெரியவில்லை” என்று மறையுரையாற்றினார், திருத்தந்தை பிரான்சிஸ். இலங்கை உள்நாட்டுப் போரில் தன் உறவுகளை இழந்த அன்னையரைப்பற்றி பணிப்புலம் என்ற இணையத்தளத்தில் காணப்படும் கவிதையிலிருந்து சில வரிகள்:

போரினால் தம் பிள்ளைகளைப் பிரிந்து தவிக்கும்

தாய்மையின் தவிப்பை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது...

மூன்று தசாப்தகால யுத்தம் முடிவிற்கு வந்துவிட்டதை

உலகம் அறிவித்துக்கொண்டிருக்கிறது.

பிள்ளைகளைப் பிரிந்த தாய்மாரும் தாய்மாரைத் தேடும் பிள்ளைகளும்

கண்ணீர் தேங்கிய விழிகளுடன் அந்த அறிவிப்பை

வெறித்துப்பார்த்தபடி கடந்து போகின்றார்கள்.

அவர்கள் துயரங்கள் முடியாத போதில் யுத்தம் முடிந்தது பற்றி

அவர்களுக்கு அக்கறை கிடையாது.



பெற்றவர் காட்டும் பாசத்திற்கு இணை

நவம்பர் 3

அடுத்த மாதம் பள்ளியில் நடக்கவிருந்த பேச்சுப்போட்டிக்கு அவனும் பெயர் கொடுத்திருந்தான். ஒவ்வோர் ஆண்டும் பேச்சுப் போட்டியில் கலந்துகொண்டு, முதல் பரிசை தட்டிச்செல்வதை வழக்கமாகக் கொண்டிருக்கும் அவனுக்கு, இந்த ஆண்டு தலைப்புதான், மலைப்பாக இருந்தது. 'தாய்ப் பாசம்' என்பதுதான் தலைப்பாம். எந்தத் தலைப்பாக இருந்தாலும், புத்தகத்தைப் படித்தோ, கணனியை உருட்டியோ கருத்துக்களை சேகரித்து விடுவான். ஆனால், என்னதான் இருந்தாலும் இதில் கொஞ்சமாவது அனுபவத்தையும் கலந்து பேசினால் நன்றாக இருக்கும் என எண்ணினான். பிறந்த உடனேயே தாயை இழந்து, தந்தையாலும் கைவிடப்பட்ட அவன், வாழ்ந்ததெல்லாம் அன்னை தெரேசாவின் சிறார் காப்பகத்தில். அந்த சபை சகோதரிகளிடம் வளர்ந்த தான், எவ்வளவோ பாசத்துடன் வளர்க்கப்பட்டிருந்தாலும், தாய்ப் பாசம் எப்படி இருக்கும் என எப்படி உரை வழங்க முடியும் என சிந்தித்த அவன், போட்டியிலிருந்து விலகிக் கொள்ளலாம் என்ற முடிவுக்கு வந்தான். அன்று மாலையில், தனக்கு பொறுப்பாக அந்த இல்லத்தில் இருக்கும் சகோதரியிடம் சென்று, தாயன்பு குறித்து தான் என்ன பேசமுடியும் என ஆலோசனைக் கேட்டான் அவன். அந்த சகோதரி கூறினார், 'எந்த தலைப்புக் கொடுத்தாலும் அஞ்சாமல் பேசிய என் மகனா இப்படி குழம்புவது? என்று. முதன் முறையாக அந்த சகோதரியை, அம்மா என அழைத்த அவன் சொன்னான், ''இல்லையம்மா, தாய்ப் பாசம் என்றால், பெற்றவரின் பாசம் மட்டும்தான் என்று நான்தான் தவறாக நினைத்துவிட்டேன். தாய்ப் பாசத்தின் ஆழத்தை நான் பேசிக்காட்டி ஜெயித்து வருகிறேன்'' என்று.




நீண்ட காலம் வாழ்வதை உணர்ந்த தாய்

நவம்பர் 2

ஓர் ஊரில் வாழ்ந்துவந்த வீட்டுத் தலைவிக்கு, தனது குடும்பத்தினர் அனைவரும் அதிக ஆண்டுகள் வாழ வேண்டுமென்ற ஆசை. அதனால் தனது குடும்பத்தினர் எப்படிப்பட்ட வாழ்க்கை வாழ வேண்டும் என்கிற கேள்வி அவர் மனதை விடாது அரித்துக்கொண்டிருந்தது. ஒருநாள் அவர், நூறு வயது நிரம்பிய ஒருவரைப் பார்த்து, இத்தனை ஆண்டுகள் வாழ்ந்துவிட்டீர்களே எப்படி?’ என்று கேட்டார். அதற்கு அவர், “நான் புலால் உண்ணமாட்டேன். மதுபானம் அருந்த மாட்டேன். அதனால்தான்!” என்று பதிலளித்தார். இப்படி இவர்கள் பேசிக்கொண்டிருந்தபோது, இலேசான இருமல் சத்தம் கேட்டது. இருமுவது யார்? என்று கேட்டார் அந்தத் தாய். எங்கள் அண்ணன்”என்றார் அந்த நூறாண்டு மனிதர். “உங்களுக்கே வயது நூறாகிறது. உங்களுக்கு ஒரு அண்ணனா? அவரை நான் பார்க்கவேண்டுமே”என்றார் அந்தத் தாய். அவரைச் சென்றும் பார்த்தார் அந்தத் தாய். “எப்படி இத்தனை ஆண்டுகள் வாழ்ந்து வருகிறீர்கள்?” என்று அவரிடமும் கேட்டார் அந்தத் தாய். “நான் தினமும் புலால் உண்ணுவேன், மதுபானம் அருந்துவேன்” என்றார், நூறாண்டு வயதுடையவரின் அண்ணன். அந்தத் தாய்க்கு ஒன்றும் புரியவில்லை. அவர் மனதைப் போட்டுக் குழம்பிக்கொண்டிருக்கையில், அவ்வழியே சென்ற ஒருவர், நமக்கு நல்ல நேரம் என்றால், விஷம் சாப்பிட்டாலும் தப்பித்துவிடுவோம். கெட்ட நேரம் என்றால் பாலும் விஷமாகலாம், எண்ணங்களில், செயல்களில் தூய்மை முக்கியம் என்று சொல்லிக் கொண்டே போனார்.




கேள்விகளுக்குள் அடங்குவதில்லை பாசம்

நவம்பர் 1

அழுது அழுது அவன் கண்களெல்லாம் வீங்கியிருந்தன. ஐம்பது மைல்களுக்கு அப்பாலிருந்து, அந்த ஊர் திருவிழாவுக்கு, அந்த ஐந்து வயது சிறுவன், தன் தாத்தா பாட்டியுடன் வந்திருந்தான். ஒரு சிறு வீட்டில், ஓர் அறையை வாடகைக்கு எடுத்து தங்கியிருந்தார்கள். தாத்தாவோ, திருவிழா வாண வேடிக்கையை அருகில் நின்று பார்க்க, கோவில் பக்கம் சென்றுவிட, இவன் அறையில் தூங்கிக் கொண்டிருந்தான். பாட்டியோ, வீட்டிற்கு வெளியே மண்ணில் அமர்ந்து, அந்த வீட்டுக்கார அம்மாவிடம் உரையாடிக் கொண்டிருந்தார். திடீரென்று விழித்துப் பார்த்த அவனுக்கு, வீட்டிற்குள் யாரும் இல்லாதது, அச்சத்தை எழுப்பியது. பாட்டி, என்று கூப்பிட்டுப் பார்த்தான். பேசிக்கொண்டிருந்த பாட்டியின் காதுகளில் அது விழவில்லை. வீட்டை விட்டு வெளியே வந்த அவன், வழியில் இருந்த ஒவ்வொரு முகமாகப் பார்த்துக்கொண்டே பாட்டியைத் தேடினான். இதைப் பாட்டியும் கவனிக்கவில்லை; வெளியே அமர்ந்திருந்த பாட்டியை அவனும் பார்க்கவில்லை. சிறிது தூரம் சென்ற அவனுக்கு, பயம் பற்றிக் கொண்டது. இந்த இரவில், அதுவும், இந்த பெரிய திருவிழாக் கூட்டத்தில் தாத்தா, பாட்டியை எங்கு போய் தேடுவது என திணறினான். வீட்டுக்கே திரும்பிவிடலாம் என்றால், அதற்கும் வழி தெரியவில்லை. அங்கேயே நின்று, அம்மா, அம்மா, என அழத் தொடங்கினான் அந்த சிறுவன். அழுது அழுது முகம் வீங்கிப்போன நிலையில், அங்கேயே தூங்கிப்போன அவனை இரு கரங்கள் தூக்கின. அவனது பாட்டிக்கு சிறிது தூரத்தில் அவனை படுக்க வைத்துவிட்டு, அமைதியாகச் சென்றன அக்கரங்கள். அவன் கண் விழித்துப் பார்த்தால், அவன் பாட்டிதான் தெரிவார்கள் என்ற நிலையில் அவன் படுக்க வைக்கப்பட்டிருந்தான். திடீரென அழுதுகொண்டே கண்விழித்தான் அவன். அவன் பாட்டியும் அவனைப் பார்த்தார். ஓடிச்சென்று அவனை அரவணைத்துக் கொண்டார். பாட்டிக்கு ஆச்சரியமாக இருந்தது. தான் கண்விழித்து பாட்டியைத் தேடியதையும், கூட்டத்திற்குள் சென்று, அம்மா, அம்மா என அழுது அங்கேயேத் தூங்கி விட்டதையும் சொன்னான் பேரன். தன் பேரன் எப்படி தனக்கு முன் தரையில் வந்து படுத்தான், அல்லது யார் தூக்கி வந்து போட்டார்கள் என்பது, பாட்டிக்கு இன்னும் புரியாத புதிராகவே இருந்தது. இவனைப் பெற்று, தன் கையில் போட்டுவிட்டு இறந்துபோன தன் மகள்தான் இவனைத் தூக்கி, இங்கு கொண்டுவந்து போட்டிருக்க வேண்டும் என இன்னும் நம்புகிறார் அந்த பாட்டி.