1 வாரத்தின் முதல் நாள் விடியற் காலையிலேயே தாங்கள் ஆயத்தம் செய்திருந்த நறுமணப் பொருள்கள் எடுத்துக் கொண்டு அப்பெண்கள் கல்லறைக்குச் சென்றார்கள்:
2 கல்லறை வாயிலிருந்து கல்புரட்டப்பட்டிருப்பதைக் கண்டார்கள்.
3 அவர்கள் உள்ளே நுழைந்தபோது அங்கே ஆண்டவர் இயேசுவின் உடலைக் காணவில்லை.
4 அதைக் குறித்து அவர்கள் குழப்பமுற்றார்கள். அப்போது திடீரென, மின்னலைப் போன்று ஒளிவீசும் ஆடை அணிந்த இருவர் அவர்களுக்குத் தோன்றினர்.
5 இதனால் அப்பெண்கள் அச்சமுற்றுத் தலைகுனிந்து நின்று கொண்டிருந்தனர். அவர்கள் அப்பெண்களை நோக்கி, “உயிரோடு இருப்பவரைக் கல்லறையில் தேடுவதேன்?
6 அவர் இங்கே இல்லை. அவர் உயிருடன் எழுப்பப்பட்டார். கலிலேயாவில் இருக்கும்போது அவர் உங்களுக்குச் சொன்னதை நினைவுப்படுத்திக் கொள்ளுங்கள்.
7 மானிடமகன் பாவிகள் கையில் ஒப்புவிக்கப்பட்டுச் சிலுவையில் அறையப்படவேண்டும்: மூன்றாம் நாளில் உயிர்த்தெழ வேண்டும் என்று சொன்னாரே” என்றார்கள்.
8 அப்போது அவர்கள் அவருடைய வார்த்தைகளை நினைவிற்கொண்டு
9 கல்லறையைவிட்டுத் திரும்பிப் போய் இவை அனைத்தையும் பதினொருவருக்கும் மற்ற அனைவருக்கும் அறிவித்தார்கள்.
10 அவர்கள் மகதலா மரியா, யோவன்னா, யாக்கோபின் தாய் மரியா என்பவர்களும் அவர்களோடு இருந்த வேறு சில பெண்களும் ஆவர். அவர்கள் நிகழ்ந்தவற்றைத் திருத்தூதர்களுக்குக் கூறினார்கள்.
11 அவர்கள் கூற்றுவெறும் பிதற்றலாகத் தோன்றியதால் திருத்தூதர்கள் அவர்களை நம்பபில்லை.
12 ஆனால் பேதுரு எழுந்து கல்லறைக்கு ஓடினார். அங்கு அவர் குனிந்து பார்த்தபோது உடலைச் சுற்றியிருந்த துணிகளை மட்டுமே கண்டார்: நிகழ்ந்ததைக் குறித்துத் தமக்குள் வியப்புற்றவராய்த் திரும்பிச் சென்றார்.
13 அதே நாளில் சீடர்களுள் இருவர் எருசலேமிலிருந்து ஏறத்தாழ பதினொரு கிலோ மீட்டர் தொலையிலுள்ள ஓர் ஊருக்குச் சென்று கொண்டிருந்தனர். அவ்வூரின் பெயர் எம்மாவு.
14 அவர்கள் இந்நிகழ்ச்சிகள் அனைத்தையும் குறித்து ஒருவரோடு ஒருவர் உரையாடிக் கொண்டே சென்றார்கள்.
15 இப்படி அவர்கள் உரையாடிக் கொண்டும் வினவிக்கொண்டும் சென்றபோது, இயேசு நெருங்கி வந்து அவர்களோடு நடந்து சென்றார்.
16 ஆனால் அவர் யார் என்று அறிந்து உணர முடியாதவாறு அவர்கள் கண்கள் மறைக்கப்பட்டிருந்தன.
17 அவர் அவர்களை நோக்கி, “வழிநெடுகிலும் நீங்கள் ஒருவரோடு ஒருவர் பேசிக்கொண்டிருப்பது என்ன?” என்று கேட்டார். அவர்கள் முகவாட்டத்தோடு நின்றார்கள்.
18 அவர்களுள் கிளயோப்பா என்னும் பெயருடைய ஒருவர் அவரிடம் மறுமொழியாக, “எருசலேமில் தங்கியிருப்பவர்களுள் உமக்குமட்டும்தான் இந்நாள்களில் நிகழ்ந்தவை தெரியாதோ!” என்றார்.
19 அதற்கு அவர் அவர்களிடம், “என்ன நிகழ்ந்தது?” என்று கேட்டார். அவர்கள் அவரிடம், “நாசரேத்து இயேசுவைப் பற்றியேதான் பேசுகின்றோம். அவர் கடவுளுக்கும் மக்கள் எல்லாருக்கும் முன்பாகச் சொல்லிலும் செயலிலும் வல்ல இறைவாக்கினராகத் திகழ்ந்தார்.
20 அவர் இஸ்ரயேலை மீட்கப் போகிறார் என்று நாங்கள் எதிர்பார்த்து இருந்தோம். ஆனால் தலைமைக் குருக்களும் ஆட்சியாளர்களும் அவருக்கு மரணதண்டனை விதித்துச் சிலுவையில் அறைந்தார்கள்.
21 இவையெல்லாம் நிகழ்ந்து இன்றோடு மூன்று நாள்கள் ஆகின்றன.
22 ஆனால் இன்று எங்களைச் சேர்ந்த பெண்களுள் சிலர் எங்களை மலைப்புக்குள்ளாக்கினர்: அவர்கள் விடியற்காலையில் கல்லறைக்குச் சென்றார்கள்:
23 அவருடைய உடலைக் காணாது திரும்பி வந்து, வானதூதர்களைக் கண்டதாகவும் இயேசு உயிரோடியிருக்கிறார் என்று அவர்கள் கூறியதாகவும் சொன்னார்கள்.
24 எங்களோடு இருந்தவர்களுள் சிலரும் கல்லறைக்குச் சென்று, அப்பெண்கள் சொன்னவாறே இருக்கக் கண்டனர். ஆனால் அவர்கள் இயேசுவைக் காணவில்லை” என்றார்கள்.
25 இயேசு அவர்களை நோக்கி, “அறிவிலிகளே! இறைவாக்கினர்கள் உரைத்த எல்லாவற்றையும் நம்ப இயலாத மந்த உள்ளத்தினரே!
26 மெசியா தாம் மாட்சி அடைவதற்குமுன் இத்துன்பங்களைப் பட வேண்டுமல்லவா!” என்றார்.
27 மேலும் மோசேமுதல் இறைவாக்கினர்வரை அனைவரின் நூல்களிலும் தம்மைக் குறித்து எழுதப்பட்ட யாவற்றையும் அவர் அவர்களுக்கு விளக்கினார்.
28 அவர்கள் தாங்கள் போக வேண்டிய ஊரை நெருங்கி வந்தார்கள். அவரோ அதற்கு அப்பால் போகிறவர் போலக் காட்டிக் கொண்டார்.
29 அவர்கள் அவரிடம், “எங்களோடு தங்கும்: ஏனெனில் மாலை நேரம் ஆயிற்று: பொழுதும் போயிற்று” என்று கூறிக் கட்டாயப்படுத்தி அவரை இணங்கவைத்தார்கள். அவர் அங்குத் தங்குமாறு அவர்களோடு சென்றார்.
30 அவர்களோடு அவர் பந்தியில் அமர்ந்திருந்தபோது அப்பத்தை எடுத்து, கடவுளைப் போற்றி, பிட்டு அவர்களுக்குக் கொடுத்தார்.
31 அப்போது அவர்கள் கண்கள் திறந்தன. அவர்களும் அவரை அடையாளம் கண்டுகொண்டார்கள். உடனே அவர் அவர்களிடமிருந்து மறைந்துபோனார்.
32 அப்போது, அவர்கள் ஒருவரையொருவர் நோக்கி, “வழியிலே அவர் நம்மோடு பேசி, மறைநூலை விளக்கும்போது நம் உள்ளம் பற்றி எரியவில்லையா?” என்று பேசிக் கொண்டார்கள்.
33 அந்நேரமே அவர்கள் புறப்பட்டு எருசலேமுக்குத் திரும்பிப் போனார்கள். அங்கே பதினொருவரும் அவர்களோடு இருந்தவர்களும் குழுமியிருக்கக் கண்டார்கள்.
34 அங்கிருந்தவர்கள், “ஆண்டவர் உண்மையாகவே உயிருடன் எழுப்பப்பட்டார். அவர் சீமோனுக்குத் தோற்றம் அளித்துள்ளார்” என்று சொன்னார்கள்.
35 அவர்கள் வழியில் நிகழ்ந்தவற்றையும் அவர் அப்பத்தைப் பிட்டுக் கொடுக்கும்போது அவரைக் கண்டுணர்ந்துகொண்டதையும் அங்கிருந்தவர்களுக்கு எடுத்துரைத்தார்கள்.
36 சீடர்கள் இவ்வாறு பேசிக்கொண்டிருந்தபோது இயேசு அவர்கள் நடுவில் நின்று, “உங்களுக்கு அமைதி உரித்தாகுக!” என்று அவர்களை வாழ்த்தினார்.
37 அவர்கள் திகிலுற்று, அச்சம் நிறைந்தவர்களாய், ஓர் ஆவியைக் காண்பதாய் நினைத்தார்கள்.
38 அதற்கு அவர், “நீங்கள் ஏன் கலங்குகிறீர்கள்? ஏன் இவ்வாறு உங்கள் உள்ளத்தில் ஐயம் கொள்ளுகிறீர்கள்?
39 என் கைகளையும் என் கால்களையும் பாருங்கள், நானே தான். என்னைத் தொட்டுப் பாருங்கள்: எனக்கு எலும்பும் சதையும் இருப்பதைக் காண்கிறீர்களே: இவை ஆவிக்குக் கிடையாதே” என்று அவர்களிடம் கூறினார்:
40 இப்படிச் சொல்லித் தம் கைகளையும் கால்களையும் அவர்களுக்குக் காண்பித்தார்.
41 அவர்களோ மகிழ்ச்சி மேலிட்டு, நம்பமுடியாதவர்களாய், வியப்புக்குள்ளாகி இருந்தார்கள். அப்போது அவர் அவர்களிடம், “உண்பதற்கு இங்கே உங்களிடம் ஏதேனும் உண்டா?” என்று கேட்டார்.
42 அவர்கள் வேக வைத்த மீன்துண்டு ஒன்றை அவரிடம் கொடுத்தார்கள்.
43 அதை அவர் எடுத்து அவர்கள்முன் அமர்ந்து உண்டார்.
44 பின்பு அவர் அவர்களைப் பார்த்து, “மோசேயின் சட்டத்திலும் இறைவாக்கினர் நூல்களிலும் திருப்பாடல்களிலும் என்னைப் பற்றி எழுதப்பட்டுள்ள அனைத்தும் நிறைவேற வேண்டும் என்று நான் உங்களோடு இருந்தபோதே உங்களுக்குச் சொல்லியிருந்தேனே” என்றார்:
45 அப்போது மறைநூலைப் புரிந்து கொள்ளுமாறு அவர்களுடைய மனக்கண்களைத் திறந்தார்.
46 அவர் அவர்களிடம், “மெசியா துன்புற்று இறந்து மூன்றாம் நாள் உயிர்த்தெழ வேண்டும் என்றும்,
47 47”பாவமன்னிப்புப் பெற மனம் மாறுங்கள்” என எருசலேம் தொடங்கி அனைத்து நாடுகளிலும் அவருடைய பெயரால் பறைசாற்றப்படவேண்டும் என்றும் எழுதியுள்ளது.
48 இவற்றுக்கு நீங்கள் சாட்சிகள்.
49 இதோ, என் தந்தை வாக்களித்த வல்லமையை நான் உங்களுக்கு அனுப்புகிறேன். நீங்கள் உன்னதத்திலிருந்து வரும் அவ்வல்லமையால் ஆட்கொள்ளப்படும்வரை இந்நகரத்திலேயே இருங்கள்” என்றார்.
50 பின்பு இயேசு பெத்தானியா வரை அவர்களை அழைத்துச் சென்று தம் கைகளை உயர்த்தி அவர்களுக்கு ஆசி வழங்கினார்.
51 அவர்களுக்கு ஆசி வழங்கிக்கொண்டிருந்தபோதே அவர் அவர்களிடமிருந்து பிரிந்து விண்ணேற்றம் அடைந்தார்.
52 அவர்கள் அவரை வணங்கிவிட்டுப் பெரு மகிழ்ச்சியோடு எருசலேம் திரும்பிச் சென்றார்கள்.
53 அவர்கள் கோவிலில் எப்போதும் கடவுளைப் போற்றியவாறு இருந்தார்கள்.