லூக்கா நற்செய்தி அதிகாரம் - 17

அதிகாரங்கள்



1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24

அதிகாரம் 17

1 இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: “பாவத்தில் விழுவதைத் தவிர்க்க முடியாது. ஆனால் ஐயோ! அதற்குக் காரணமாய் இருப்பவருக்குக் கேடு!

2 அவர் இச்சிறியோருள் எவரையாவது பாவத்தில் விழச் செய்வதைவிட அவ்வாறு செய்பவரது கழுத்தில் ஒரு எந்திரக் கல்லைக் கட்டி அவரைக் கடலில் தள்ளிவிடுவது அவருக்கு நல்லது.

3 எனவே, நீங்கள் எச்சரிக்கையாய் இருங்கள். உங்களுடைய சகோதரர் சகோதரிகளுள் ஒருவர் பாவம் செய்தால் அவரைக் கடிந்துகொள்ளுங்கள். அவர் மனம் மாறினால் அவரை மன்னியுங்கள்.

4 ஒரே நாளில் அவர் ஏழு முறை உங்களுக்கு எதிராகப் பாவம் செய்து ஏழு முறையும் உங்களிடம் திரும்பி வந்து, “நான் மனம் மாறிவிட்டேன்” என்று சொல்வாரானால் அவரை மன்னித்து விடுங்கள். ”

5 திருத்தூதர்கள் ஆண்டவரிடம், “எங்கள் நம்பிக்கையை மிகுதியாக்கும்” என்று கேட்டார்கள்.

6 அதற்கு ஆண்டவர் கூறியது: “கடுகளவு நம்பிக்கை உங்களுக்கு இருந்தால் நீங்கள் இந்த முசுக்கட்டை மரத்தை நோக்கி, “நீ வேரோடே பெயர்ந்துபோய்க் கடலில் வேரூன்றி நில்” எனக் கூறினால் அது உங்களுக்குக் கீழ்ப்படியும்.

7 “உங்கள் பணியாளர் உழுது விட்டோ மந்தையை மேய்த்துவிட்டோ வயல்வெளியிலிருந்து வரும்போது அவரிடம், “நீர் உடனே வந்து உணவருந்த அமரும்” என்று உங்களில் எவராவது சொல்வாரா?

8 மாறாக, “எனக்கு உணவு ஏற்பாடு செய்யும்: உம் இடையை வரிந்துகட்டிக்கொண்டு, நான் உண்டு குடிக்கும்வரை எனக்குப் பணிவிடை செய்யும்: அதன்பிறகு நீர் உண்டு குடிக்கலாம்” என்று சொல்வாரல்லவா?

9 தாம் பணித்ததைச் செய்ததற்காக அவர் தம் பணியாளருக்கு நன்றி கூறுவாரோ?

10 அது போலவே, நீங்களும் உங்களுக்குப் பணிக்கப்பட்ட யாவற்றையும் செய்தபின், “நாங்கள் பயனற்ற பணியாளர்கள்: எங்கள் கடமையைத்தான் செய்தோம்” எனச் சொல்லுங்கள். ”

11 இயேசு எருசலேமுக்குப் போய்க் கொண்டிருந்தபோது கலிலேய, சமாரியப் பகுதிகள் வழியாகச் சென்றார்.

12 ஓர் ஊருக்குள் வந்தபொழுது, பத்து தொழுநோயாளர்கள் அவருக்கு எதிர்கொண்டு வந்து, தூரத்தில் நின்று கொண்டே,

13 ”ஐயா! இயேசுவே, எங்களுக்கு இரங்கும்” என்று உரக்கக் குரலெழுப்பி வேண்டினார்கள்.

14 அவர் அவர்களைப் பார்த்து, “நீங்கள் போய் உங்களைக் குருக்களிடம் காண்பியுங்கள்” என்றார். அவ்வாறே அவர்கள் புறப்பட்டுப் போகும்போது அவர்கள் நோய் நீங்கிற்று.

15 அவர்களுள் ஒருவர் தம் பிணி தீர்ந்திருப்பதைக் கண்டு உரத்த குரலில் கடவுளைப் போற்றிப் புகழ்ந்துகொண்டே இயேசுவிடம் திரும்பி வந்தார்:

16 அவருடைய காலில் முகங்குப்புற விழுந்து அவருக்கு நன்றி செலுத்தினார். அவரோ ஒரு சமாரியர்.

17 இயேசு, அவரைப் பார்த்து, “பத்துப் பேர்களின் நோயும் நீங்கவில்லையா? மற்ற ஒன்பது பேர் எங்கே?

18 கடவுளைப் போற்றிப் புகழ அன்னியராகிய உம்மைத் தவிர வேறு எவரும் திரும்பிவரக் காணோமே!” என்றார்.

19 பின்பு அவரிடம், “எழுந்து செல்லும், உமது நம்பிக்கை உமக்கு நலமளித்தது” என்றார்.

20 இறையாட்சி எப்போது வரும் என்று பரிசேயர் இயேசுவிடம் கேட்டனர். அவர் மறுமொழியாக, “இறையாட்சி கண்களுக்குப் புலப்படும் முறையில் வராது.

21 இதோ, இங்கே! அல்லது அதோ, அங்கே! எனச் சொல்லமுடியாது. ஏனெனில், இறையாட்சி உங்கள் நடுவேயே செயல்படுகிறது” என்றார்.

22 பின்பு அவர் சீடர்களை நோக்கிக் கூறியது:”ஒரு காலம் வரும்: அப்போது மானிட மகனுடைய நாள்களில் ஒன்றையாவது காண நீங்கள் ஆவலாய் இருப்பீர்கள். ஆனால் நீங்கள் காணமாட்டீர்கள்.

23 அவர்கள் உங்களிடம், “இதோ, இங்கே! அல்லது அதோ, அங்கே!” என்பார்கள். ஆனால் நீங்கள் போக வேண்டாம்: அவர்களைப் பின் தொடரவும் வேண்டாம்.

24 வானத்தில் மின்னல் ஒரு பக்கத்திலிருந்து மறுபக்கம் வரைக்கும் பளீரென மின்னி ஒளிர்வது போல மானிடமகனும் தாம் வரும் நாளில் தோன்றுவார்.

25 ஆனால் முதலில் அவர் பல துன்பங்கள் பட்டு இந்தத் தலைமுறையினரால் உதறித் தள்ளப்பட வேண்டும்.

26 நோவாவின் காலத்தில் நடந்ததுபோலவே மானிட மகனுடைய காலத்திலும் நடக்கும்.

27 நோவா பேழைக்குள் சென்ற நாள்வரை எல்லாரும் திருமணம் செய்து கொண்டும் உண்டும் குடித்தும் வந்தார்கள். வெள்ளப்பெருக்கு வந்து அவர்கள் அனைவரையும் அழித்தது.

28 அவ்வாறே லோத்தின் காலத்திலும் நடந்தது. மக்கள் உண்டார்கள், குடித்தார்கள்: வாங்கினார்கள், விற்றார்கள்: நட்டார்கள், கட்டினார்கள்.

29 லோத்து சோதோமை விட்டுப்போன நாளில் விண்ணிலிருந்து பெய்த தீயும் கந்தகமும் எல்லாரையும் அழித்தன.

30 மானிடமகன் வெளிப்படும் நாளிலும் அப்படியே நடக்கும்.

31 ”அந்நாளில் வீட்டின் மேல் தளத்தில் இருப்பவர் வீட்டிலுள்ள தம் பொருள்களை எடுக்கக் கீழே இறங்க வேண்டாம். அதுபோலவே வயலில் இருப்பவர் திரும்பி வரவேண்டாம்.

32 லோத்தின் மனைவியை நினைத்துக் கொள்ளுங்கள்.

33 தம் உயிரைக் காக்க வழிதேடுவோர் அதை இழந்துவிடுவர்: தம் உயிரை இழப்பவரோ அதைக் காத்துக் கொள்வர்.

34 நான் உங்களுக்குச் சொல்கிறேன்: அந்த இரவில் ஒரே கட்டிலில் இருவர் படுத்திருப்பர். ஒருவர் எடுத்துக் கொள்ளப்படுவார்: மற்றவர் விட்டு விடப்படுவார்.

35 இருவர் சேர்ந்து மாவரைத்துக்கொண்டிருப்பர். ஒருவர் எடுத்துக் கொள்ளப்படுவார்: மற்றவர் விட்டுவிடப்படுவார்.

36 (இருவர் வயலில் இருப்பர். ஒருவர் எடுத்துக் கொள்ளப்படுவார்: மற்றவர் விட்டு விடப்படுவார். ” )

37 அவர்கள் இயேசுவைப் பார்த்து, “ஆண்டவரே, இது எங்கே நிகழும்?” என்று கேட்டார்கள். அவர் அவர்களிடம், “பிணம் எங்கே இருக்கிறதோ அங்கேயே கழுகுகளும் வந்து கூடும்” என்றார்.

 மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு  திருவிவிலியம்

A Tamil Catholic website based on the scripture ACTS 4:20 to share your experience in Jesus and Mary with everyone.
anbinmadal.org | 2002-2019 | Email ID: anbinmadal at gmail.com