லூக்கா நற்செய்தி அதிகாரம் - 22

அதிகாரங்கள்



1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24

அதிகாரம் 22

1 அப்போது பாஸ்கா என்னும் புளிப்பற்ற அப்ப விழா நெருங்கி வந்தது.

2 தலைமைக் குருக்களும் மறைநூல் அறிஞரும் இயேசுவை எவ்வாறு கொலை செய்யலாமென்று வழி தேடிக்கொண்டிருந்தனர்: ஏனெனில் மக்களுக்கு அஞ்சினர்.

3 அந்நேரத்தில் பன்னிருவருள் ஒருவனான யூதாசு எனப்படும் இஸ்காரியோத்துக்குள் சாத்தான் புகந்தான்.

4 யூதாசு தலைமைக் குருக்களிடமும் காவல் தலைவர்களிடமும் சென்று அவர்களுக்கு இயேசுவைக் காட்டிக்கொடுப்பது பற்றிக் கலந்து பேசினான்.

5 அவர்கள் மகிழ்ச்சியுற்று அவனுக்குப் பணம் கொடுக்க உடன்பட்டார்கள்.

6 அவனும் அதற்கு ஒத்துக்கொண்டு மக்கள் கூட்டம் இல்லாதபோது, அவர்களிடம் அவரைக் காட்டிக் கொடுப்பதற்கு வாய்ப்புத் தேடிக் கொண்டிருந்தான்.

7 புளிப்பற்ற அப்ப விழாக்கொண்டாடும் நாளும் வந்தது. அன்றுதான் பாஸ்கா ஆடு பலியிடப்பட வேண்டும்.

8 இயேசு பேதுருவிடம் யோவானிடமும், “நாம் பாஸ்கா விருந்துண்ண நீங்கள் போய் ஏற்பாடு செய்யுங்கள்” என்று சொல்லி அனுப்பினார்.

9 அதற்கு அவர்கள், “நாங்கள் எங்கே ஏற்பாடு செய்ய வேண்டுமென நீர் விரும்புகிறீர்?” என்று கேட்டார்கள்.

10 இயேசு அவர்களிடம், “நீங்கள் புறப்பட்டு நகருக்குள் செல்லுங்கள். மண்குடத்தில் தண்ணீர் சுமந்துகொண்டு ஓர் ஆள் உங்களுக்கு எதிரே வருவார். அவர் பின்னே செல்லுங்கள். அவர் செல்லும் வீட்டிற்குள் நீங்களும் சென்று,

11 அந்த வீட்டின் உரிமையாளரிடம், “நான் என் சீடர்களோடு பாஸ்காவிருந்து உண்பதற்கான அறை எங்கே? என்று போதகர் உம்மிடம் கேட்கச் சொன்னார்” எனக் கூறுங்கள்.

12 அவர் மேல்மாடியில் தேவையான வசதிகள் அமைந்த ஒரு பெரிய அறையைக் காட்டுவார். அங்கே ஏற்பாடு செய்யுங்கள்” என்றார்.

13 அவர்கள் சென்று தங்களுக்கு அவர் சொல்லியவாறே அனைத்தையும் கண்டு, பாஸ்கா விருந்துக்கு ஏற்பாடு செய்தார்கள்.

14 நேரம் ஆனதும் இயேசு திருத்தூதரோடு பந்தியில் அமர்ந்தார்.

15 அப்போது அவர் அவர்களை நோக்கி, “நான் துன்பங்கள் படுமுன் உங்களோடு இந்தப் பாஸ்கா விருந்தை உண்பதற்கு மிக மிக ஆவலமாய் இருந்தேன்.

16 ஏனெனில் இறையாட்சியில் இது நிறைவேறும்வரை இதை நான் உண்ணமாட்டேன் என்று உங்களுக்குச் சொல்கிறேன்” என்றார்.

17 பின்பு அவர் கிண்ணத்தை எடுத்து, கடவுளுக்கு நன்றி செலுத்தி அவர்களிடம், “இதைப் பெற்று உங்களுக்குள்ளே பகிர்ந்துகொள்ளுங்கள்.

18 ஏனெனில், இது முதல் இறையாட்சி வரும்வரை, திராட்சைப் பழ இரசத்தைக் குடிப்பதில்லை என நான் உங்களுக்குச் சொல்கிறேன்” என்றார்.

19 பின்பு அவர் அப்பத்தை எடுத்துக் கடவுளுக்கு நன்றி செலுத்தி, அதைப் பிட்டு, அவர்களுக்குக் கொடுத்து, “இது உங்களுக்காகக் கொடுக்கப்படும் எனது உடல். எனது நினைவாக இவ்வாறு செய்யுங்கள்” என்றார்.

20 அப்படியே உணவு அருந்திய பின்பு அவர் கிண்ணத்தை எடுத்து, “இந்தக் கிண்ணம் உங்களுக்காகச் சிந்தப்படுகிற எனது இரத்தத்தால் நிலைப்படுத்தப்படும் புதிய உடன்படிக்கை.

21 என்னைக் காட்டிக்கொடுப்பவன் இதோ, என்னோடு பந்தியில் அமர்ந்திருக்கிறான்.

22 மானிடமகன் தமக்கென்று குறிக்கப்பட்டபடியே போகிறார், ஆனால் ஐயோ! அவரைக் காட்டிக்கொடுக்கிறவனுக்குக் கேடு” என்றார்.

23 அப்பொழுது அவர்கள், “நம்மில் இச்செயலைச் செய்யப் போகிறவர் யார்” என்று தங்களுக்குள்ளே கேட்கத் தொடங்கினார்கள்.

24 மேலும் தங்களுக்குள்ளே பெரியவராக எண்ணப்பட வேண்டியவர் யார் என்ற விவாதம் அவர்களிடையே எழுந்தது.

25 இயேசு அவர்களிடம், “பிற இனத்தவரின் அரசர்கள் மக்களை அடக்கி ஆளுகின்றார்கள்: அதிகாரம் காட்டுகின்றவர்கள் நன்மை செய்பவர்கள் என அழைக்கப்படுகின்றார்கள்.

26 ஆனால் நீங்கள் அப்படிச் செய்யலாகாது. உங்களுள் பெரியவர் சிறியவராகவும் ஆட்சிபுரிபவர் தொண்டு புரிபவராகவும் மாற வேண்டும்.

27 யார் பெரியவர்? பந்தியில் அமர்ந்திருப்பவரா? அல்லது பணிவிடை புரிபவரா? பந்தியில் அமர்ந்திருப்பவர் அல்லவா? நான் உங்கள் நடுவே பணிவிடை புரிபவனாக இருக்கிறேன்.

28 நான் சோதிக்கப்படும்போது என்னோடு இருந்தவர்கள் நீங்களே.

29 என் தந்தை எனக்கு ஆட்சியுரிமை கொடுத்திருப்பது போல நானும் உங்களுக்குக் கொடுக்கிறேன்.

30 ஆகவே என் ஆட்சி வரும்போது நீங்கள் என்னோடு பந்தியில் அமர்ந்து உண்டு குடிப்பீர்கள்: இஸ்ரயேலின் பன்னிரு குலத்தவருக்கும் தீர்ப்பு வழங்க அரியணையில் அமர்வீர்கள்.

31 ”சீமோனே, சீமோனே, இதோ கோதுமையைப்போல் உங்களைப் புடைக்கச் சாத்தான் அனுமதி கேட்டிருக்கிறான்.

32 ஆனால் நான் உனது நம்பிக்கை தளராதிருக்க உனக்காக மன்றாடினேன். நீ மனந்திரும்பியபின் உன் சகோதரர்களை உறுதிப்படுத்து” என்றார்.

33 அதற்கு பேதுரு, “ஆண்டவரே, உம்மோடு சிறையிடப்படுவதற்கும் ஏன், சாவதற்கும் நான் ஆயத்தமாய் உள்ளேன்” என்றார்.

34 இயேசு அவரிடம், “பேதுருவே, இன்றிரவு, 'என்னைத் தெரியாது' என மும்முறை நீ மறுதலிக்குமுன் சேவல் கூவாது என உனக்குச் சொல்கிறேன்” என்றார்.

35 இயேசு சீடர்களிடம், “நான் உங்களைப் பணப்பையோ வேறுபையோ மிதியடியோ எதுவுமில்லாமல் அனுப்பியபோது, உங்களுக்கு ஏதாவது குறை இருந்ததா?” என்று கேட்டார். அவர்கள், “ஒரு குறையும் இருந்ததில்லை” என்றார்கள்.

36 அவர் அவர்களிடம், “ஆனால், இப்பொழுது பணப்பை உடையவர் அதை எடுத்துக் கொள்ளட்டும்: வேறு பை உடையவரும் அவ்வாறே செய்யட்டும். வாள் இல்லாதவர் தம் மேலுடையை விற்று வாள் வாங்கிக் கொள்ளட்டும்.

37 ஏனெனில் நான் உங்களுக்குச் சொல்கிறேன்:”கொடியவருள் ஒருவராகக் கருதப்பட்டார்”என்று மறைநூலில் எழுதப்பட்டுள்ளது என் வாழ்வில் நிறைவேற வேண்டும். என்னைப் பற்றியவை எல்லாம் நிறைவேறி வருகின்றன” என்றார்.

38 அவர்கள்”ஆண்டவரே, இதோ! இங்கே இரு வாள்கள் உள்ளன” என்றார்கள். இயேசு அவர்களிடம், “போதும்” என்றார்.

39 இயேசு அங்கிருந்து புறப்பட்டுத் தம் வழக்கப்படி ஒலிவ மலைக்குச் சென்றார். சீடர்களும் அவரைப் பின் தொடர்ந்தார்கள்.

40 அந்த இடத்தை அடைந்ததும் அவர் அவர்களிடம், “சோதனைக்கு உட்படாதிருக்க இறைவனிடம் வேண்டுங்கள், “ என்றார்.

41 பிறகு அவர் அவர்களை விட்டுக் கல்லெறிதூரம் விலகிச் சென்று, முழந்தாள்படியிட்டு, இறைவனிடம் வேண்டினார்:

42 ”தந்தையே, உமக்கு விருப்பமானால் இத்துன்பக் கிண்ணத்தை என்னிடமிருந்து அகற்றும். ஆனாலும் என் விருப்பப்படி அல்ல: உம் விருப்பப்படியே நிகழட்டும்” என்று கூறினார்.

43 ( அப்போது விண்ணகத்திலிருந்து ஒரு தூதர் அவருக்குத் தோன்றி அவரை வலுப்படுத்தினார்.

44 அவரோ மிகுந்த வேதனைக்குள்ளாகவே, உருக்கமாய் இறைவனிடம் வேண்டிக் கொண்டிருந்தார். அவரது வியர்வை பெரும் இரத்தத் துளிகளைப் போலத் தரையில் விழுந்தது. )

45 அவர் இறைவேண்டலை முடித்துவிட்டு எழுந்து சீடர்களிடம் வந்தபோது அவர்கள் துயரத்தால் சோர்வுற்றுத் தூங்கிக்கொண்டிருப்பதைக் கண்டார்.

46 அவர்களிடம், “என்ன, உறங்கிக் கொண்டா இருக்கிறீர்கள்? சோதனைக்கு உட்படாதிருக்க விழித்திருந்து இறைவனிடம் வேண்டுங்கள்” என்றார்.

47 இயேசு தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தபோது, இதோ! மக்கள் கூட்டமாய் வந்தனர். பன்னிருவருள் ஒருவனான யூதாசு என்பவன் அவர்களுக்குமுன் வந்து அவரை முத்தமிட நெருங்கினான்.

48 இயேசு அவனிடம், “யூதாசே, முத்தமிட்டா மானிட மகனைக் காட்டிக் கொடுக்கப் போகிறாய்?” என்றார்.

49 அவரைச் சூழ நின்றவர்கள் நிகழப்போவதை உணர்ந்து, “ஆண்டவரே, வாளால் வெட்டலாமா?” என்று கேட்டார்கள்.

50 அப்பொழுது அவர்களுள் ஒருவர் தலைமைக் குருவின் பணியாளரைத் தாக்கி அவருடைய வலக் காதைத் துண்டித்தார்.

51 இயேசு அவர்களைப் பார்த்து, “விடுங்கள், போதும்” என்று கூறி அவருடைய காதைத் தொட்டு நலமாக்கினார்.

52 அவர் தம்மிடம் வந்த தலைமைக் குருக்களையும் கோவில் காவல் தலைவர்களையும் மூப்பர்களையும் பார்த்து, “ஒரு கள்வனைப் பிடிக்க வருவதுபோல நீங்கள் வாள்களோடும், தடிகளோடும் வந்தது ஏன்?

53 நான் நாள்தோறும் கோவிலில் உங்களோடு இருந்தும் நீங்கள் என்னைப் பிடிக்கவில்லையே. ஆனால் இது உங்களுடைய நேரம்: இப்போது இருள் அதிகாரம் செலுத்துகிறது” என்றார்.

54 பின்னர் அவர்கள் இயேசுவைக் கைதுசெய்து இழுத்துச் சென்று தலைமைக் குருவின் வீட்டுக்குக் கொண்டு போனார்கள். பேதுரு தொலையில் அவரைப் பின்தொடர்ந்தார்.

55 வீட்டு உள்முற்றத்தின் நடுவில் நெருப்பு மூட்டி, அதைச் சுற்றி அவர்கள் உட்கார்ந்திருந்தார்கள். பேதுருவும் அவர்களோடு இருந்தார்.

56 அப்போது பணிப்பெண் ஒருவர் நெருப்பின் அருகில் அவர் அமர்ந்திருப்பதைக் கண்டு, அவரை உற்றுப்பார்த்து, “இவனும் அவனோடு இருந்தவன்” என்றார்.

57 அவரோ, “அம்மா, அவரை எனக்குத் தெரியாது” என்று மறுதலித்தார்.

58 சிறிது நேரத்திற்குப்பின் அவரைக் கண்ட வேறு ஒருவர், “நீயும் அவர்களைச் சேர்ந்தவன்தான்” என்றார். பேதுரு, “இல்லையப்பா” என்றார்.

59 ஏறக்குறைய ஒரு மணிநேரத்திற்குப்பின்பு மற்றொருவர், “உண்மையாகவே இவனும் அவனோடு இருந்தான்: இவனும் கலிலேயன்தான்” என்று வலியுறுத்திக் கூறினார்.

60 பேதுருவோ, “நீர் குறிப்பிடுபவரை எனக்குத் தெரியாது” என்றார். உடனேயே, அவர் தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தபோதே, சேவல் கூவிற்று.

61 ஆண்டவர் திரும்பி, பேதுருவைக் கூர்ந்து நோக்கினார்:”இன்று சேவல் கூவு முன் நீ என்னை மும்முறை மறுதலிப்பாய்” என்று ஆண்டவர் தமக்குக் கூறியதைப் பேதுரு நினைவுகூர்ந்து,

62 வெளியே சென்று மனம் நொந்து அழுதார்.

63 இயேசுவைப் பிடித்துவைத்திருந்தவர்கள் அவரை ஏளனம் செய்து நையப்புடைத்தார்கள்.

64 அவரது முகத்தை மூடி, “உன்னை அடித்தவர் யார்? இறைவாக்கினனே, சொல்” என்று கேட்டார்கள்.

65 இன்னும் பலவாறு அவரைப் பழித்துரைத்தார்கள்.

66 பொழுது விடிந்ததும் மக்களின் மூப்பர்களும் தலைமைக்குருக்களும் மறைநூல் அறிஞர்களும் கூடிவந்தார்கள்: இயேசுவை இழுத்துச் சென்று தங்கள் மூப்பர் சங்கத்தின்முன் நிறுத்தினார்கள்.

67 அவர்கள், “நீ மெசியா தானா? எங்களிடம் சொல்” என்று கேட்டார்கள். அவர் அவர்களிடம், “நான் உங்களிடம் சொன்னால் நீங்கள் நம்பமாட்டீர்கள்:

68 நான் உங்களிடம் கேட்டாலும் பதில் சொல்ல மாட்டீர்கள்.

69 இதுமுதல் மானிடமகன் வல்லவராம் கடவுளின் வலப்புறத்தில் வீற்றிருப்பார்” என்றார்.

70 அதற்கு அவர்கள் அனைவரும், “அப்படியானால் நீ இறைமகனா?” என்று கேட்டனர். அவரோ, “நான் இறைமகன் என நீங்களே சொல்லுகிறீர்கள்” என்று அவர்களுக்குச் சொன்னார்.

71 அதற்கு அவர்கள், “இன்னும் நமக்குச் சான்றுகள் தேவையா? இவன் வாயிலிருந்து நாமே கேட்டோமே” என்றார்கள்.

 மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு  திருவிவிலியம்

A Tamil Catholic website based on the scripture ACTS 4:20 to share your experience in Jesus and Mary with everyone.
anbinmadal.org | 2002-2019 | Email ID: anbinmadal at gmail.com