கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் திருமுகம் - 8

அதிகாரங்கள்



1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13

அதிகாரம் 8

1 சகோதர சகோதரிகளே, மாசிதோனியத் திருச்சபைகளுக்குக் கடவுள் கொடுத்த அருளைப்பற்றி உங்களுக்குத் தெரியப்படுத்த விரும்புகிறோம்.

2 அவர்களுக்கு ஏற்பட்ட இன்னல்களால் கடுமையாகச் சோதிக்கப்பட்ட போதும் அவர்கள் எப்போதும் மகிழ்ச்சி நிறைந்தவர்களாய் இருந்தார்கள். அவர்கள் வறுமையில் மூழ்கி இருந்தாலும் வள்ளன்மையோடு வாரி வழங்கினார்கள்.

3 அவர்கள் தங்களால் இயன்ற அளவுக்குத் தாங்களாகவே கொடுத்தார்கள். ஏன், அளவுக்கு மீறியே கொடுத்தார்கள். இதற்கு நானே சாட்சி.

4 இறைமக்களுக்குச் செய்யும் அறப்பணியில் பங்குபெறும் பேறு தங்களுக்கும் அளிக்கப்படவேண்டும் என மிகவும் வருந்திக் கேட்டுக் கொண்டார்கள்.

5 நாங்கள் எதிர்பார்த்ததற்கு மேலாக அவர்கள் தங்களை முதன்மையாக ஆண்டவருக்கு அர்ப்பணித்தார்கள்: நாங்கள் கடவுளின் திருவுளப்படி செயல்படுவதால், எங்களுக்கும் தங்களை அர்ப்பணித்தார்கள்.

6 எனவே இந்த அறப்பணியைத் தொடங்கிய தீத்துவே அப்பணியை முடிக்க வேண்டும் என நாங்கள் அவரை வேண்டிக் கொண்டோம்.

7 நம்பிக்கை, நாவன்மை, அறிவு, பேரார்வம் ஆகிய அனைத்தையும் மிகுதியாய்க் கொண்டிருக்கிறீர்கள். எங்கள் மேல் நீங்கள் கொண்டுள்ள அன்பும் பெருகிக்கொண்டு வருகிறது. அதுபோல் இந்த அறப்பணியிலும் நீங்கள் முழுமையாய் ஈடுபட வேண்டும்.

8 நான் இதை உங்களுக்கு ஒரு கட்டளையாகச் சொல்லவில்லை. மாறாக, பிறருடைய ஆர்வத்தை எடுத்துக் காட்டி உங்கள் அன்பு உண்மையானதா எனச் சோதிக்கவே இவ்வாறு செய்கிறேன்.

9 நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் அருள்செயலை அறிந்திருக்கிறீர்களே! அவர் செல்வராயிருந்தும் உங்களுக்காக ஏழையானார். அவருடைய ஏழ்மையினால் நீங்கள் செல்வராகுமாறு இவ்வாறு செய்தார்.

10 இவ்வறப்பணியைப் பொறுத்தவரை என் கருத்து இதுவே: இது உங்களுக்குப் பயனளிக்கும். கடந்த ஆண்டிலிருந்தே நீங்கள் இப்பணியைச் செய்து வருகிறீர்கள்: அது மட்டுமல்ல: இதனை விருப்பத்தோடு தொடங்கியவர்களும் நீங்களே.

11 அப்பணியை இப்போதே செய்து முடியுங்கள். ஆர்வத்தோடு தொடங்கியது போலவே உங்கள் நிலைக்கு ஏற்றவாறு கொடுத்து, ஆர்வத்தோடு அதனைச் செய்து முடியுங்கள்.

12 ஆர்வத்தோடு கொடுத்தால், தம் நிலைக்கேற்றவாறு எவ்வளவு கொடுத்தாலும் அது இறைவனுக்கு ஏற்புடையதாகும். தம்மிடம் இருப்பதற்குக் கூடுதலாக யாரும் கொடுக்க வேண்டியதில்லை.

13 மற்றவர்களின் சுமையைத் தணிப்பதற்காக நீங்கள் துன்புற வேண்டும் என்று நாங்கள் சொல்லவில்லை. மாறாக, எல்லாரும் சமநிலையில் இருக்க வேண்டும் என்றே சொல்கிறோம்.

14 இப்பொழுது உங்களிடம் மிகுதியாயிருக்கிறது: அவர்களுடைய குறையை நீக்குங்கள். அவ்வாறே அவர்களிடம் மிகுதியாக இருக்கும் போது உங்கள் குறையை நீக்குவார்கள். இவ்வாறு உங்களிடையே சமநிலை ஏற்படும்.

15 ‘மிகுதியாகச் சேகரித்தவருக்கு எதுவும் மிஞ்சவில்லை: குறைவாகச் சேகரித்தவருக்கும் எதுவும் குறைவுபடவில்லை’ என்று மறைநூலில் எழுதியுள்ளது அன்றோ!

16 எங்களுக்கு உங்கள் பேரில் உள்ள அதே ஆர்வத்தைத் தீத்துவின் உள்ளத்திலும் தூண்டியெழுப்பிய கடவுளுக்கு நன்றி உரித்தாகுக!

17 நாங்கள் விடுத்த வேண்டுகோளை முன்னிட்டு மட்டும் அல்ல, அவரே மிகுந்த ஆர்வம் கொண்டிருப்பதால் அவராக உங்களிடம் புறப்பட்டு வருகிறார்.

18 அவரோடு மற்றொரு சகோதரரையும் அனுப்புகிறோம். அவர் நற்செய்தி அறிவித்து எல்லாத் திருச்சபைகளிலும் புகழ்பெற்று விளங்குபவர்.

19 அது மட்டும் அல்ல, நாங்கள் செய்யும் அறப்பணிப் பயணத்தில் வழித்துணைவராகத் திருச்சபையினரால் தேர்ந்தெடுக்கப்பட்டவரும் அவரே. ஆண்டவரின் மாட்சி இலங்கவும் எங்கள் ஆர்வம் விளங்கவுமே நாங்கள் இவ்வறப் பணியை மேற்கொண்டுள்ளோம்.

20 இந்தப் பெருந்தொகையைக் கையாளும் முறைபற்றி எங்கள் மீது எவரும் குறை கூறாவண்ணம் கவனமாயிருக்கிறோம்.

21 ஆண்டவர் முன்னிலையில் மட்டுமல்ல, மனிதர் முன்னிலையிலும் கண்ணியத்தைக் கடைப்பிடிப்பதே எங்கள் நோக்கம்.

22 அவர்களோடு வேறொரு சகோதரதையும் அனுப்பி வைக்கிறோம். இவரது ஆர்வத்தைப் பலவற்றில் பலவேளைகளில் நாங்கள் சோதித்து அறிந்திருக்கிறோம். அவர் உங்களிடம் உறுதியான நம்பிக்கை மிகக் கொண்டிருப்பதால் இன்னும் மிகுதியாக ஆர்வம் காட்டுகிறார்.

23 தீத்துவைப் பற்றிக் கூற வேண்டுமென்றால் அவர் என் பணியில் பங்காளியும் உடன் உழைப்பாளரும் ஆவார். மற்ற சகோதரர்கள் திருச்சபைகளால் அனுப்பப்பட்ட தூதர்கள். கிறிஸ்துவைப் போற்றிப் புகழும் முறையில் வாழ்பவர்கள்.

24 ஆகவே அவர்களுக்கு உங்கள் அன்பைக் காட்டி, நாங்கள் உங்களைக் குறித்து அவர்களிடம் பெருமையாய்ப் பேசியது சரியே என்று எல்லாத் திருச்சபைகளுக்கும் எடுத்துக் காட்டுங்கள்.

 மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு  திருவிவிலியம்

A Tamil Catholic website based on the scripture 2corinthians 4:20 to share your experience in Jesus and Mary with everyone.
anbinmadal.org | 2002-2019 | Email ID: anbinmadal at gmail.com