கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் திருமுகம் - 2

அதிகாரங்கள்



1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13

அதிகாரம் 2

1 நான் மீண்டும் உங்களிடம் வந்து உங்களுக்கு மனவருத்தத்தைக் கொடுக்க விரும்பவில்லை.

2 நான் உங்களுக்கு மனவருத்தத்தைக் கொடுத்தால் எனக்கு மகிழ்ச்சியூட்ட யார் இருக்கிறார்? என்னால் மனவருத்தத்துக்குட்பட்ட நீங்கள்தானே எனக்கு மகிழ்ச்சியூட்ட வேண்டும்!

3 நான் வரும்போது எனக்கு மகிழ்ச்சி தர வேண்டிய உங்களாலே எனக்கு மனவருத்தம் வரக்கூடாது என்பதற்காகவே அத்திருமுகத்தை உங்களுக்கு எழுதினேன். நான் மகிழ்ச்சியடைந்தால் நீங்கள் எல்லாரும் மகிழ்ச்சியடைவீர்கள். இதுவே உங்கள் அனைவரையும் பற்றிய என் உறுதியான நம்பிக்கை.

4 நான் மிகுந்த வேதனையோடும் மனக்கவலையோடும் கலங்கிய கண்களோடும் அதை உங்களுக்கு எழுதினேன். உங்களுக்கு மனவருத்தம் தரவேண்டும் என்பதற்காக அல்ல, மாறாக நான் உங்கள் மேல் கொண்டுள்ள மிகுந்த அன்பை நீங்கள் உணரவேண்டும் என்பதற்காகவே அவ்வாறு எழுதினேன்.

5 ஒருவன் எனக்கு மனவருத்தம் தந்தால் அது எனக்கு மட்டும் அல்ல, ஓரளவுக்கு உங்கள் அனைவருக்குமேதான் என்றே சொல்லவேண்டும். அவன் செய்ததை மிகைப்படுத்த நான் விரும்பவில்லை.

6 அந்த ஆளுக்கு உங்களுள் பெரும்பான்மையோர் கொடுத்த தண்டனையே போதும்.

7 எனவே இப்பொழுது நீங்கள் அவனை மன்னித்து ஏற்றுக்கொள்வது தான் நல்லது. அவன் மனவருத்தத்தில் மூழ்கிவிடாமல் இருக்கும் வண்ணம் அவனுக்கு ஆறதல் அளியுங்கள்.

8 நீங்கள் அவன்மீது அன்புகொண்டிருக்கிறீர்கள் என்பதை உறுதிப்படுத்துமாறு நான் உங்களிடம் கேட்டுக் கொள்கிறேன்.

9 நீங்கள் எப்போதும் எனக்குக் கீழ்ப்படிகிறீர்களா எனச் சோதித்து அறியவே அத்திருமுகத்தை நான் எழுதினேன்.

10 நீங்கள் ஒருவனை மன்னித்தால் நானும் அவனை மன்னிக்கிறேன். நான் மன்னிக்க வேண்டியது ஏதாவது இருந்தால் அதை உங்கள் பொருட்டுக் கிறிஸ்துவின் முன்னிலையில் மன்னித்து விட்டேன்.

11 இவ்வாறு சாத்தான் நம்மை வஞ்சிக்க இடம் கொடுக்க மாட்டோம். அவனது சதித்திட்டம் நமக்குத் தெரியாதது அல்ல.

12 துரோவா என்னும் நகருக்குக் கிறிஸ்துவின் நற்செய்தியை அறிவிக்க வந்த பொழுது அங்கே ஆண்டவர் எனக்குப் பணியாற்ற நல்ல வாய்ப்பைத் தந்தார்.

13 ஆனால் அங்கே என் தம்பி தீத்துவைக் காணாததால் என் மனம் அமைதியின்றித் தவித்தது. எனவே அம்மக்களிடம் விடை பெற்றுக் கொண்டு அங்கிருந்து மாசிதோனியாவுக்குப் புறப்பட்டேன்.

14 கிறிஸ்துவோடு இணைந்து வாழும் எங்களைக் கடவுள் கிறிஸ்துவின் வெற்றிப் பவனியில் பங்கு கொள்ளச் செய்து எங்கள் வழியாய்த் தம்மைப்பற்றி யாவரும் அறியச் செய்கிறார்: இவ்வறிவு நறுமணம் போல் எங்கும் பரவுகிறது. இவ்வாறு செய்யும் கடவுளுக்கே நன்றி உரித்தாகுக!

15 மீட்புப் பெறுவோரிடையேயும் அழிவுறுவோரிடையேயும் நாங்கள் கடவுள்பால் எழும் கிறிஸ்துவின் நறுமணமாயிருக்கிறோம்.

16 அழிவுறுவோருக்கு அது சாவை விளைவிக்கும் நச்சுப் புகையாகும். மீட்புப் பெறுவோருக்கு அது வாழ்வளிக்கும் நறுமணமாகும். அப்படியெனில் இத்தகைய பணியை யார்தான் செய்ய இயலும்?

17 நாங்கள் கடவுளின் வார்த்தையை மலிவுச் சரக்காகக் கருதும் பலரைப் போன்றவர்கள் அல்ல. மாறாக, கிறிஸ்துவோடு இணைந்துள்ள நாங்கள் கடவுளால் அனுப்பப்பட்டவர்கள் என்னும் முறையில் அவர் முன்னிலையில் நேர்மையோடு பேசுபவர்கள்.

 மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு  திருவிவிலியம்

A Tamil Catholic website based on the scripture 2corinthians 4:20 to share your experience in Jesus and Mary with everyone.
anbinmadal.org | 2002-2019 | Email ID: anbinmadal at gmail.com