கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் திருமுகம் - 1

அதிகாரங்கள்



1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13

அதிகாரம் 1

1 கொரிந்து நகரில் உள்ள கடவுளின் திருச்சபைக்கும் அக்காயா மாநிலம் முழுவதிலும் வாழும் இறைமக்கள் அனைவருக்கும் கடவுளின் திருவுளத்தால் கிறிஸ்து இயேசுவின் திருத்தூதனாயிருக்கும் பவுலும் சகோதரராகிய திமொத்தேயுவும் எழுதுவது:

2 நம் தந்தையாம் கடவுளிடமிருந்தும் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவிடமிருந்தும் உங்களுக்கு அருளும் அமைதியும் உரித்தாகுக!

3 நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் தந்தை இரக்கம் நிறைந்த கடவுள். அவரே ஆறுதல் அனைத்துக்கும் ஊற்று: அவரைப் போற்றுவோம்.

4 கடவுள் எங்களுடைய இன்னல்கள் அனைத்திலும் எங்களுக்கு ஆறுதல் அளிக்கிறார். நாங்களே கடவுளிடமிருந்து ஆறுதல் பெற்றுள்ளதால் பல்வேறு இன்னல்களில் உழலும் மற்ற மக்களுக்கும் ஆறுதல் அளிக்க எங்களால் முடிகிறது.

5 கிறிஸ்து நமக்காக மிகுதியாகத் துன்புற்றார்: அது போல அவர் வழியாக நாம் மிகுதியான ஆறுதலும் பெறுகிறோம்.

6 ஆகவே நாங்கள் துன்புறுகிறோம் என்றால் அது உங்கள் ஆறுதலுக்காகவும் மீட்புக்காகவும்தான்: நாங்கள் ஆறுதல் பெறுகிறோம் என்றால் அது உங்கள் ஆறுதலுக்காகவே. நாங்கள் துன்பங்களைப் பொறுத்துக் கொள்வதைப் போல நீங்களும் உங்கள் துன்பங்களைத் தளராமனத்துடன் பொறுத்துக் கொள்வதற்கு இந்த ஆறுதல் ஆற்றல் அளிக்கிறது.

7 நீங்கள் எங்கள் துன்பத்தில் பங்கெடுத்ததைப்போல் எங்களுடைய ஆறுதலிலும் பங்குபெறுவீர்கள் என்பது எங்களுக்குத் தெரியும். நீங்கள் இவ்வாறு செய்வீர்கள் என உறுதியாக எதிர்நோக்கி இருக்கிறோம்.

8 சகோதர சகோதரிகளே, ஆசியாவில் எங்களுக்கு நேரிட்ட இன்னல்களைப் பற்றி நீங்கள் அறிந்திருக்க வேண்டுமென நாங்கள் விரும்புகிறோம். அவை எங்களை அளவுக்கு மிஞ்சி வாட்டின: எங்களால் தாங்க முடியாத சுமையாக மாறின. இனிப் பிழைப்போம் என்னும் நம்பிக்கையே இல்லாமல் போயிற்று.

9 எங்களுக்கு மரணதண்டனையே விதிக்கப்பட்டது போன்ற உணர்வு ஏற்பட்டது. நாங்கள் எங்களை அல்ல, இறந்தோரை உயிர்த்தெழச்செய்யும் கடவுளையே நம்பி இருக்க வேண்டும் என்பதற்காகவே இவ்வாறு நிகழ்ந்தது.

10 அவரேதான் இத்துணைக் கொடிய சாவிலிருந்து எங்களை விடுவித்தார்: இன்னும் எங்களை விடுவிப்பார்.

11 நீங்களும் உங்கள் மன்றாட்டு மூலமாக எங்களுக்கு உதவினால் இனிமேலும் எங்களை விடுவிப்பார் என்று எதிர் பார்க்கிறோம். இவ்வாறு பலர் எங்களுக்காக மன்றாடி இந்த அருளுக்காக எங்கள் சார்பில் கடவுளுக்கு நன்றி செலுத்துவர்.

12 மக்களிடையே, குறிப்பாக உங்களிடையே மனித ஞானத்தின்படி நடவாமல், கடவுளின் அருளைச் சார்ந்து அவர் தரும் நேர்மையோடும் நாணயத்தோடும் நடந்து வந்தோம் என எங்கள் மனச்சான்று உறுதியாகச் சொல்லுகிறது. இதுவே எங்களுக்குப் பெருமை.

13 நாங்கள் உங்களுக்கு எழுதும் திருமுகங்களில் நீங்கள் வாசித்துப் புரிந்து கொள்ள முடியாதது எதுவுமில்லை. இப்போது நீங்கள் எங்களை ஓரளவுக்குத்தான் புரிந்துகொண்டிருக்கிறீர்கள்.

14 ஆனால் நம் ஆண்டவர் இயேசு வரும் நாளில் நீங்கள் எங்களை முழுமையாகப் புரிந்துகொள்வீர்கள் என்னும் எதிர்நோக்குடன் இருக்கிறேன். அப்போது நாங்கள் உங்களைக் குறித்துப் பெருமைகொள்வது போன்று, நீங்களும் எங்களைக் குறித்துப் பெருமை கொள்வீர்கள்.

15 இந்த உறுதியான நம்பிக்கை இருந்ததால்தான் நான் முதலில் உங்களிடம் வரத் திட்டமிட்டேன். அப்போது நீங்களும் என்னை இருமுறை சந்திக்கும் பேற்றைப் பெற்றிருப்பீர்கள்.

16 மாசிதோனியாவுக்குப் போகும் வழியிலும் அங்கிருந்து திரும்பி வரும் வழியிலும் நான் உங்களைச் சந்தித்திருப்பேன். நீங்களும் என்னை யூதேயாவுக்கு வழியனுப்பி வைத்திருப்பீர்கள்.

17 இப்படித் திட்டமிட்ட பிறகு நான் பொறுப்பற்ற முறையில் அதை மாற்றிவிட்டேன் என நினைக்கிறீர்களா? அல்லது உள்நோக்கத்தோடு திட்டமிடுகிறேன் என்று நினைக்கிறீர்களா? ஒரே நேரத்தில் ‘ஆம் ‘ என்றும் ‘இல்லை’ என்றும் சொல்பவன் நான் என்று நினைக்கிறீர்களா?

18 நான் ஒரே நேரத்தில் ‘ஆம் ‘ என்றும் ‘இல்லை’ என்றும் உங்களிடம் பேசுவதில்லை. கடவுள் உண்மையுள்ளவராயிருப்பது போல் நான் சொல்வதும் உண்மையே.

19 நானும் சில்வானும் திமொத்தேயுவும் உங்களிடையே இருந்தபோது நாங்கள் அறிவித்த இறைமகன் இயேசு கிறிஸ்து ஒரே நேரத்தில் ‘ஆம்’ என்றும் ‘இல்லை’ என்றும் பேசுபவர் அல்ல. மாறாக அவர் ‘ஆம்’ என உண்மையையே பேசுபவர்.

20 அவர் சொல்லும் ‘ஆம்’ வழியாக, கடவுள் அருளும் எல்லா வாக்குறுதிகளும் நிறைவேறுகின்றன. அதனால்தான் நாம் கடவுளைப் போற்றிப்புகழும்போது அவர் வழியாக ‘ஆமென் ‘ எனச் சொல்லுகிறோம்.

21 கடவுளே எங்களை உங்களோடு சேர்த்துள்ளார்: இவ்வாறு கிறிஸ்துவோடு நமக்கு இருக்கும் உறவை அவர் உறுதிப்படுத்துகிறார். அவரே நமக்கு அருள்பொழிவு செய்துள்ளார்.

22 அவரே நம் மீட்பை உறுதிப்படுத்தும் அடையாளமாகத் தூய ஆவியை நம் உள்ளத்தில் பொழிந்து நம்மீது தம் முத்திரையைப் பதித்தார்.

23 என் உயிரின் மேல் ஆணையாகச் சொல்கிறேன்: உங்களை வருத்தத்துக்கு உள்ளாக்காமல் இருக்கவே இதுவரை நான் கொரிந்துக்கு வரவில்லை. கடவுளே இதற்குச் சாட்சி.

24 நீங்கள் எதையெதை நம்ப வேண்டும் என நாங்கள் உங்களை கட்டாயப்படுத்துவதில்லை. நீங்கள் கொண்டுள்ள நம்பிக்கையில் நிலையாய்த் தான் இருக்கிறீர்கள். உங்கள் மகிழ்ச்சிக்காக உங்களோடு ஒத்துழைக்கிறோம்.

 மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு  திருவிவிலியம்

A Tamil Catholic website based on the scripture 2corinthians 4:20 to share your experience in Jesus and Mary with everyone.
anbinmadal.org | 2002-2019 | Email ID: anbinmadal at gmail.com