மத்தேயு நற்செய்தி அதிகாரம் 12

அதிகாரங்கள்



1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28

அதிகாரம் 12

1 அன்று ஓர் ஓய்வுநாள். இயேசு வயல்வழியே சென்று கொண்டிருந்தார். பசியாயிருந்தால் அவருடைய சீடர் கதிர்களைக் கொய்து தின்னத் தொடங்கினார்.

2 பரிசேயர்கள் இதைப் பார்த்து இயேசுவிடம், “ பாரும், ஓய்வு நாளில் செய்யக்கூடாததை உம் சீடர்கள் செய்கிறார்கள் “ என்றார்கள்.

3 அவரோ அவர்களிடமும், “ தாமும் தம்முடன் இருந்தவர்களும் பசியாய் இருந்தபோது தாவீது என்ன செய்தார் என்பதை நீங்கள் வாசித்தது இல்லையா?

4 இறை இல்லத்திற்குள் சென்று அவரும் அவரோடு இருந்தவர்களும் அர்ப்பண அப்பங்களை உண்டார்கள். குருக்கள் மட்டுமே உண்ணக்கூடிய அப்பங்களை அவர்கள் உண்டது தவறல்லவா?

5 மேலும் ஓய்வு நாள்களில் குருக்கள் கோவிலில் பணியாற்றுவது ஓய்வுநாளை மீறும் குற்றமாகாது என நீங்கள் திருச்சட்டத்தில் வாசித்ததில்லையா?

6 ஆனால் கோவிலைவிடப் பெரியவர் இங்கே இருக்கிறார் என நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்.

7 “ பலியை அல்ல, இரக்கத்தையே விரும்புகிறேன் “ என்பதன் கருத்தை நீங்கள் அறிந்திருந்தால் குற்றமற்ற இவர்களைக் கண்டனம் செய்திருக்கமாட்டீர்கள்.

8 ஆம், ஓய்வு நாளும் மானிட மகனுக்குக் கட்டுப்பட்டதே “ என்றார்.

9 இயேசு அங்கிருந்து அகன்று அவர்களுடைய தொழுகைக்கூடத்திற்குள் சென்றார்.

10 அங்கே கை சூம்பியவர் ஒருவர் இருந்தார். சிலர் இயேசுவின்மேல் குற்றம் சுமத்தும் நோக்குடன் அவரிடம், “ஓய்வுநாளில் குணமாக்குவது முறையா? “ என்று கேட்டனர்.

11 அவர் அவர்களிடம், “ உங்களுள் எவரும் தம் ஒரே ஆடு ஓய்வு நாளில் குழியில் விழுந்துவிட்டால் அதைப் பிடித்துத் தூக்கி விடாமல் இருப்பாரா?

12 ஆட்டைவிட மனிதர் எவ்வளவோ மேலானவர். ஆகவே ஓய்வுநாளில் மனிதருக்கு நன்மை செய்வதே முறை “ என்றார்.

13 பின்பு இயேசு கை சூம்பியவரை நோக்கி, “ உமது கையை நீட்டும் “ என்றார். அவர் நீட்டினார். அது மறு கையைப் போல நலமடைந்தது.

14 பரிசேயரோ வெளியேறி இயேசுவை எப்படி ஒழிக்கலாம் என அவருக்கு எதிராகச் சூழ்ச்சி செய்தனர்.

15 இயேசு அதை அறிந்து அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். பலர் அவருக்குப்பின் சென்றனர். அவர்களெல்லாரையும் அவர் குணமாக்கினார்.

16 தம்மைக் குறித்து வெளிப்படையாகப் பேச வேண்டாம் என அவர்களிடம் அவர் கண்டிப்பாகச் சொன்னார்.

17 இறைவாக்கினராகிய எசாயா உரைத்த பின்வரும் வாக்குகள் இவ்வாறு நிறைவேறின:

18 “ இதோ என் ஊழியர்: இவர் நான் தேர்ந்துகொண்டவர். இவரே என் அன்பர்: இவரால் என் நெஞ்சம் பூரிப்படைகிறது: இவருள் என் ஆவி தங்கும்படி செய்தேன்: இவர் மக்களினங்களுக்கு நீதியை அறிவிப்பார்.

19 இவர் சண்டைசச்சரவு செய்யமாட்டார்: கூக்குரலிடமாட்டார்: தம் குரலைத் தெருவில் எழுப்பவுமாட்டார்: நீதியை வெற்றி பெறச் செய்யும்வரை,

20 நெரிந்த நாணலை முறியார்: புகையும் திரியை அணையார்.

21 எல்லா மக்களினங்களும் இவர் பெயரில் நம்பிக்கை கொள்வர். “

22 பேய்பிடித்த ஒருவரை இயேசுவிடம் கொண்டுவந்தனர். அவர் பார்வையற்றவரும் பேச்சற்றவருமாக இருந்தார். இயேசு அவரைக் குணமாக்கினார். பேச்சற்ற அவர் பேசவும் பார்வையற்ற அவர் பார்க்கவும் முடிந்தது.

23 திரண்டிருந்த மக்கள் யாவரும் மலைத்துப் போய், “ தாவீதின் மகன் இவரோ? “ என்று பேசிக்கொண்டனர்.

24 ஆனால் இதைக் கேட்ட பரிசேயர், “ பேய்களின் தலைவனாகிய பெயல் செபூலைக் கொண்டே இவன் பேய்களை ஓட்டுகிறான் “ என்றனர்.

25 இயேசு அவர்களுடைய சிந்தனைகளை அறிந்து அவர்களிடம் கூறியது: “ தனக்கு எதிராகத் தானே பிளவுபடும் எந்த அரசும் பாழாய்ப்போகும். அவ்வாறே தனக்கு எதிராகத் தானே பிளவுபடும் எந்த நகரமும் வீடும் நிலைத்து நிற்காது.

26 சாத்தான் சாத்தானையே ஓட்டினால் அவன் தனக்கு எதிராகத் தானே பிளவுபட்டுப் போவான். அப்படியானால் அவனது அரசு எப்படி நிலைத்து நிற்கும்?

27 நான் பெயல்செபூலைக் கொண்டு பேய்களை ஓட்டுகிறேன் என்றால் உங்களைச் சேர்ந்தவர்கள் யாரைக் கொண்டு பேய் ஓட்டுகிறார்கள்? ஆகவே அவர்களே உங்கள் கூற்றுத் தவறு என்பதற்குச் சாட்சிகள்.

28 நான் கடவுளின் ஆவியைக் கொண்டே பேய்களை ஓட்டுகிறேன் என்றால் இறையாட்சி உங்களிடம் வந்துள்ளது அல்லவா?

29 முதலில் வலியவரைக் கட்டினாலன்றி எப்படி அவ்வலியவருடைய வீட்டுக்குள் நுழைந்து அவருடைய பொருள்களைக் கொள்ளையிட முடியும்? அவரைக் கட்டிவைத்த பிறகுதான் அவருடைய வீட்டைக் கொள்ளையிட முடியும்.

30 என்னோடு இராதவர் எனக்கு எதிராக இருக்கிறார். என்னோடு இணைந்து மக்களைக் கூட்டிச் சேர்க்காதவர் அவர்களைச் சிதறச் செய்கிறார்.

31 எனவே நான் உங்களுக்குச் சொல்கிறேன்: தூய ஆவிக்கு எதிரான பழிப்புரை மன்னிக்கப்படாது. மக்களுடைய மற்றப் பாவங்கள், பழிப்புரைகள் அனைத்தும் மன்னிக்கப்படும்.

32 மானிட மகனுக்கு எதிராய் ஏதாவது ஒரு வார்த்தை சொல்லி விட்டவரும் மன்னிக்கப்படுவார். ஆனால், தூய ஆவிக்கு எதிராகப் பேசுவோர் இம்மையிலும் மறுமையிலும் மன்னிப்புப் பெற மாட்டார்.

33 “ மரம் நல்லது என்றால் அதன் கனியும் நல்லதாக இருக்கும். மரம் கெட்டது என்றால் அதன் கனியும் கெட்டதாக இருக்கும். மரத்தை அதன் கனியால் அறியலாம்.

34 விரியன் பாம்புக் குட்டிகளே, தீயோர்களோகிய நீங்கள் எவ்வாறு நல்லவை பேச முடியும்? உள்ளத்தின் நிறைவையே வாய் பேசும்.

35 நல்லவர் நல்ல கருவூலத்திலிருந்து நல்லவற்றை வெளிக் கொணர்வர். தீயவரோ தீய கருவூலத்திலிருந்து தீயவற்றையே வெளிக்கொணர்வர்.

36 மனிதர் பேசும் ஒவ்வொரு வீண் வார்த்தைக்கும் தீர்ப்பு நாளில் கணக்குக் கொடுக்கவேண்டும் என உங்களுக்குச் சொல்கிறேன்

37 உங்கள் வார்த்தைகளைக் கொண்டே நீங்கள் குற்றமற்றவர்களாகக் கருதப்படுவீர்கள்: உங்கள் வார்த்தைகளைக் கொண்டே குற்றவாளிகளாகவும் கருதப்படுவீர்கள். “

38 அப்பொழுது மறைநூல் அறிஞர் சிலரும் பரிசேயர் சிலரும் இயேசுவுக்கு மறுமொழியாக, “ போதகரே, நீர் அடையாளம் ஒன்று காட்ட வேண்டும் என விரும்புகிறோம் “ என்றனர்.

39 அதற்கு அவர் கூறியது: “இந்தத் தீய விபசாரத் தலைமுறையினர் அடையாளம் கேட்கின்றனர். இவர்களுக்கு இறைவாக்கினரான யோனாவின் அடையாளத்தைத் தவிர வேறு அடையாளம் எதுவும் கொடுக்கப்பட மாட்டாது.

40 யோனா மூன்று பகலும் மூன்று இரவும் ஒரு பெரிய மீனின் வயிற்றில் இருந்தார். அவ்வாறே மானிட மகனும் மூன்று பகலும் மூன்று இரவும் நிலத்தின் உள்ளே இருப்பார்.

41 தீர்ப்பு நாளில் நினிவே மக்கள் இத்தலைமுறையினரோடு எழுந்து, இவர்களைக் கண்டனம் செய்வார்கள். ஏனெனில் யோனா அறிவித்த செய்தியைக் கேட்டு அவர்கள் மனம் மாறியவர்கள். ஆனால், இங்கிருப்பவர் யோனாவைவிடப் பெரியவர் அல்லவா!

42 தீர்ப்பு நாளில் தென்னாட்டு அரசி இத்தலைமுறையினரோடு எழுந்து இவர்களைக் கண்டனம் செய்வார். ஏனெனில் அவர் சாலமோனின் ஞானத்தைக் கேட்க உலகின் கடைக் கோடியிலிருந்து வந்தவர். ஆனால் இங்கிருப்பவர் சாலமோனிலும் பெரியவர் அல்லவா!

43 “ ஒருவரைவிட்டு வெளியேறுகின்ற தீய ஆவி வறண்ட இடங்களில் அலைந்து திரிந்து இளைப்பாற இடம் தேடும். இடம் கண்டுபிடிக்க முடியாமல்,

44 “ “ நான் விட்டு வந்த எனது வீட்டுக்குத் திரும்பிப் போவான் “ எனச் சொல்லும். திரும்பி வந்து அவ்வீடு கூட்டி அழகுபடுத்தப்பட்டு யாருமின்றி இருப்பதைக் காணும்.

45 மீண்டும் சென்று தன்னைவிடப் பொல்லாத வேறு ஏழு ஆவிகளைத் தன்னோடு அழைத்து வந்து அவருள் புகுந்து அங்கே குடியிருக்கும். அவருடைய பின்னைய நிலைமை முன்னைய நிலைமையைவிடக் கேடுள்ளதாகும். இத்தலைமுறைக்கும் இவ்வாறே நிகழும். “

46 இவ்வாறு மக்கள் கூட்டத்தோடு இயேசு பேசிக் கொண்டிருந்த போது அவருடைய தாயும் சகோதரர்களும் வந்து அவருடன் பேச வேண்டும் என்று வெளியே நின்று கொண்டிருந்தார்கள்.

47 ஒருவர் இயேசுவை நோக்கி, “ அதோ, உம்தாயும் சகோதரர்களும் உம்மோடு பேச வேண்டும் என்று வெளியே நின்று கொண்டிருக்கின்றார்கள் “ என்றார்.

48 அவர், இதைத் தம்மிடம் கூறியவரைப் பார்த்து, “ என் தாய் யார்? என் சகோதரர்கள் யார்? “ என்று கேட்டார்.

49 பின் தம் சீடர் பக்கம் கையை நீட்டி, “ என் தாயும் சகோதரர்களும் இவர்களே.

50 விண்ணகத்திலுள்ள என் தந்தையின் திருவுளத்தை நிறைவேற்றுபவரே என் சகோதரரும் சகோதரியும் தாயும் ஆவார் “ என்றார்.

 மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு  திருவிவிலியம்

A Tamil Catholic website based on the scripture ACTS 4:20 to share your experience in Jesus and Mary with everyone.
anbinmadal.org | 2002-2019 | Email ID: anbinmadal at gmail.com