மத்தேயு நற்செய்தி அதிகாரம் - 8

அதிகாரங்கள்



1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28

அதிகாரம் 8

1 இயேசு மலையிலிருந்து இறங்கிய பின் பெருந்திரளான மக்கள் அவரைப் பின்தொடர்ந்தார்கள்.

2 அப்பொழுது தொழுநோயாளர் ஒருவர் வந்து அவரைப் பணிந்து, “ ஐயா, நீர் விரும்பினால் எனது நோயை நீக்க உம்மால் முடியும் “ என்றார்.

3 இயேசு தமது கையை நீட்டி அவரைத் தொட்டு, “நான் விரும்புகிறேன், உமது நோய் நீங்குக! “ என்று சொன்னார். உடனே அவரது தொழுநோய் நீங்கியது.

4 இயேசு அவரிடம், “இதை எவருக்கும் சொல்ல வேண்டாம், கவனமாய் இரும். ஆனால் நீர் போய் உம்மைக் குருவிடம் காட்டி மோசே கட்டளையிட்டுள்ள காணிக்கையை”ச் செலுத்தும். நீர் நலமடைந்துள்ளீர் என்பதற்கு அது சான்றாகும் “ என்றார்.

5 இயேசு கப்பர்நாகுமுக்குச் சென்றபோது நூற்றுவர் தலைவர் ஒருவர் அவரிடம் உதவி வேண்டி வந்தார்.

6 “ஐயா, என் பையன் முடக்குவாதத்தால் மிகுந்த வேதனையுடன் படுத்துக் கிடக்கிறான் “ என்றார்.

7 இயேசு அவரிடம், “ நான் வந்து அவனைக் குணமாக்குவேன் “ என்றார்.

8 நூற்றுவர் தலைவர் மறுமொழியாக, “ ஐயா, நீர் என் வீட்டிற்குள் அடியெடுத்து வைக்க நான் தகுதியற்றவன். ஆனால் ஒரு வார்த்தை மட்டும் சொல்லும்: என் பையன் நலமடைவான்.

9 நான் அதிகாரத்துக்கு உட்பட்டவன். என் அதிகாரத்துக்கு உட்பட்ட படைவீரரும் உள்ளனர். நான் அவர்களுள் ஒருவரிடம் “ செல்க “ என்றால் அவர் செல்கிறார். வேறு ஒருவரிடம் “ வருக “ என்றால் அவர் வருகிறார். என் பணியாளரைப் பார்த்து “ இதைச் செய்க “ என்றால் அவர் செய்கிறார் “ என்றார்.

10 இதைக் கேட்டு இயேசு வியந்து, தம்மைப் பின்தொடர்ந்து வந்தவர்களை நோக்கி, “ உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்: இஸ்ரயேலர் யாரிடமும் இத்தகைய நம்பிக்கையை நான் கண்டதில்லை.

11 கிழக்கிலும் மேற்கிலுமிருந்து பலர் வந்து, ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோப்பு ஆகியோருடன் விண்ணரசின் பந்தியில் அமர்வர்.

12 அரசுக்கு உரியவர்களோ புறம்பாக உள்ள இருளில் தள்ளப்படுவார்கள். அங்கே அழுகையும் அங்கலாய்ப்பும் இருக்கும் “ என்றார்.

13 பின்னர் இயேசு நூற்றுவர் தலைவரை நோக்கி, “ நீர் போகலாம், நீர் நம்பியவண்ணமே உமக்கு நிகழும் “ என்றார். அந்நேரமே பையன் குணமடைந்தான்.

14 இயேசு பேதுருவின் வீட்டிற்குள் சென்றபோது, பேதுருவின் மாமியார் காய்ச்சலாய்ப் படுத்திருப்பதைக் கண்டார்.

15 இயேசு அவரது கையைத் தொட்டதும் காய்ச்சல் அவரை விட்டு நீங்கிற்று. அவரும் எழுந்து இயேசுவுக்குப் பணிவிடை செய்தார்.

16 பேய் பிடித்த பலரை மாலை வேளையில் இயேசுவிடம் கொண்டு வந்தனர். அவர் ஒரு வார்த்தை சொல்ல அசுத்த ஆவிகள் ஓடிப்போயின. மேலும் எல்லா நோயாளர்களையும் அவர் குணமாக்கினர்.

17 இவ்வாறு, “ அவர் நம் பிணிகளைத் தாங்கிக் கொண்டார்: நம் துன்பங்களைச் சுமந்துகொண்டார் “ என்று இறைவாக்கினர் எசாயா உரைத்தது நிறைவேறியது.

18 இயேசு திரளான மக்கள் தம்மைச் சூழ்ந்திருப்பதைக் கண்டு, மறு கரைக்குச் செல்ல சீடர்களுக்குக் கட்டளையிட்டார்.

19 அப்பொழுது மறைநூல் அறிஞர் ஒருவர் வந்து, “ போதகரே, நீர் எங்கே சென்றாலும் நானும் உம்மைப் பின்பற்றுவேன் “ என்றார்.

20 இயேசு அவரிடம், “ நரிகளுக்குப் பதுங்குக் குழிகளும், வானத்துப் பறவைகளுக்குக் கூடுகளும் உண்டு. மானிட மகனுக்கோ தலை சாய்க்கக்கூட இடமில்லை “ என்றார்.

21 இயேசுவின் சீடருள் மற்றொருவர் அவரை நோக்கி, “ ஐயா, முதலில் நான் போய் என் தந்தையை அடக்கம் செய்து விட்டு வர அனுமதியும் “ என்றார்.

22 இயேசு அவரைப் பார்த்து, “நீர் என்னைப் பின்பற்றி வாரும். இறந்தோரைப்பற்றிக் கவலை வேண்டாம். அவர்கள் அடக்கம் செய்யப்படுவார்கள் “ என்றார்.

23 பின்பு இயேசு படகில் ஏறவே, அவருடைய சீடர்களும் அவரோடு ஏறினார்கள்.

24 திடீரெனக் கடலில் பெருங்கொந்தளிப்பு ஏற்பட்டது. படகுக்குமேல் அலைகள் எழுந்தன. ஆனால் இயேசு தூங்கிக்கொண்டிருந்தார்.

25 சீடர்கள் அவரிடம் வந்து, “ ஆண்டவரே, காப்பாற்றும், சாகப் போகிறோம் “ என்று சொல்லி அவரை எழுப்பினார்கள்.

26 இயேசு அவர்களை நோக்கி, “ நம்பிக்கை குன்றியவர்களே, ஏன் அஞ்சுகிறீர்கள்? “ என்று கேட்டு, எழுந்து காற்றையும் கடலையும் கடிந்துகொண்டார். உடனே மிகுந்த அமைதி உண்டாயிற்று.

27 மக்களெல்லாரும், “ காற்றும் கடலும் இவருக்குக் கீழ்ப்படிகின்றவே! இவர் எத்தகையவரோ? “ என்று வியந்தனர்.

28 இயேசு அக்கரை சேர்ந்து கதரேனர் வாழ்ந்த பகுதிக்கு வந்தபோது, பேய் பிடித்த இருவர் கல்லறைகளிலிருந்து வெளியேறி அவருக்கு எதிரே வந்துகொண்டிருந்தனர். அவ்வழியே யாரும் போகமுடியாத அளவுக்கு அவர்கள் மிகவும் கொடியவர்களாய் இருந்தார்கள்.

29 அவர்கள், “ இறை மகனே, உமக்கு இங்கு என்ன வேலை? குறித்த காலம் வரும்முன்னே எங்களை வதைக்கவா இங்கே வந்தீர்? “ என்று கத்தினார்கள்.

30 அவர்களிடமிருந்து சற்றுத் தொலையில் பன்றிகள் பெருங் கூட்டமாய் மேய்ந்து கொண்டிருந்தன.

31 பேய்கள் அவரிடம் , “நீர் எங்களை ஓட்டுவதாயிருந்தால் அப்பன்றிக் கூட்டத்திற்குள் எங்களை அனுப்பும் “ என்று வேண்டின.

32 அவர் அவற்றிடம், “ போங்கள் “ என்றார். அவை வெளியேறிப் பன்றிகளுக்குள் புகந்தன. உடனே அக்கூட்டம் முழுவதும் செங்குத்துப் பாறையிலிருந்து கடலில் பாய்ந்து நீரில் வீழ்ந்து மடிந்தது.

33 பன்றிகளை மேய்த்துக் கொண்டிருந்தவர்கள் ஓடிப்போனார்கள். அவர்கள் நகருக்குள் சென்று, பேய் பிடித்தவர்களைப் பற்றிய செய்தியையும், நடந்த அனைத்தையுமே அறிவித்தார்கள்.

34 உடனே நகரினர் அனைவரும் இயேசுவுக்கு எதிர்கொண்டு வந்து, அவரைக் கண்டு தங்கள் பகுதியை விட்டு அகலுமாறு வேண்டிக்கொண்டனர்.

 மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு  திருவிவிலியம்

A Tamil Catholic website based on the scripture ACTS 4:20 to share your experience in Jesus and Mary with everyone.
anbinmadal.org | 2002-2019 | Email ID: anbinmadal at gmail.com