தேடிவந்த தெய்வம்

இரான்சம் அமிர்தமணி

ன்று காலையிலிருந்தே ‘சுள்’ளென்று வெயில் அடித்தது. மலையடிவாரத்தில் இருந்த குடிசையின் உள்ளே ஈசாக்கும் அவன் கூட்டாளிகளும் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் ஓட்டிவந்த ஆடுகள் சற்று தூரத்தில் புற்கள் அடர்ந்த பகுதியில் மேய்ந்து கொண்டிருந்தன. அறுபத்தைந்து வயதான யோனாஸ் ஆடுகளின் அருகே காவலிருந்தார். அவருடன் ஈசாக்கின் மகன் தோபியாஸும், மற்றொரு சிறுவனும் இருந்தார்கள். இன்னும் ஒருமணி நேரத்தில் சூரியன் மறைந்து, சீக்கிரமே இருள் சூழ்ந்து, பனிக்காற்று வீசவும் தொடங்கிவிடும். அதற்குள் அவர்களில் யாரேனும் நகரத்தின் உள்ளே சென்று, வீட்டிலிருந்து சாமக்காவல் இருப்போர்கெல்லாம் இரவு உணவை எடுத்துவர வேண்டும். ஈசாக்கு எழுந்து மேய்ச்சல் பகுதிக்குச் சென்று, தன் மகன் தோபியாஸையும், அவனுடனிருந்த எபினேசரையும் உணவு எடுத்து வருமாறு வீட்டிற்கு அனுப்பிவிட்டு, ஒரு மரத்தடியில் தன் மாமன் யோனாஸின் அருகே உட்கார்ந்து கொண்டான்.

எபினேசர், தோபியாஸை விட மூன்று வயது மூத்தவன். அதனால் தான், ஈசாக்கு அவர்கள் இருவரையும் ஒன்றாக அனுப்பினார். பெத்லகேம் ஊருக்குச் செல்லுகின்ற சாலையில் போய்க்கொண்டிருந்த இருவரையும் பார்த்த ஈசாக்கின் முகத்தில் கவலைக் கோடுகள். திரும்பி தன் மாமனை பார்த்த ஈசாக்கு, “என் மகனுக்கு ஏன் இந்த தண்டனை, மாமா? பதினோரு வயதாகியும் இன்னும் அவனுக்கு பேச்சு வரவில்லையே? ‘கடவுள் அருளால் அவன் குணமடைவான்’ என்று நீங்களும் இத்தனை காலம் சொல்லி வருகிறீர்கள். கடவுள் என்றொருவர் இருந்தால் அவனுக்கு எப்போதோ பேச்சுதிறன் வந்திருக்கும் அல்லவா?” என்றான்.

வானத்தை அண்ணார்ந்து பார்த்துக் கொண்டிருந்த முதியவர் யோனாஸ், சற்று நேரம் மௌனமாயிருந்தார். பிறகு, தலையை ஆட்டியபடி, “கடவுள் இருக்கிறார் என்பதிலேயே உனக்கு சந்தேகம் வந்துவிட்டதா, என்ன? நம் முன்னோருக்கு எத்தனையோ உதவிகளைச் செய்த ஆபிரகாமின் தேவன், நம்மை கைவிடமாட்டார். அவருடைய மக்களான நம்மை விடுதலை செய்வதற்காக அவரே நம்மைத் தேடி வருவதாக வாக்களித்திருக்கிறார். ‘திடன் கொள்ளுங்கள், அஞ்சாதிருங்கள்; இதோ, உங்கள் கடவுள் வருவார்; அப்போது பார்வையற்றோரின் கண்கள் பார்க்கும்; காது கேளாதோரின் செவிகள் கேட்கும். காலூனமுற்றோர் மான்போல் துள்ளிக்குதிப்பர்; வாய்பேசாதோர் மகிழ்ந்து பாடுவர்’ என்று மறைநூலில் வாசித்ததை மறந்துவிட்டாயா? அவர் எப்போது வருவார், எப்படி வருவார் என்பதெல்லாம் நமக்குத் தெரியாது. எனவே, நம்பிக்கை இழக்காதே. ‘எனக்கு நீதி அருள்கின்ற கடவுளே, நான் நெருக்கடியில் இருந்தபோது, நீர் எனக்குத் துணைபுரிந்தீர்; இப்போதும் எனக்கு இரங்கி, என் வேண்டுதலுக்குச் செவிசாய்த்தருளும்’ என்று நாள்தோறும் நம்பிக்கையோடு மன்றாடு; உன் மகன் நிச்சயம் நலமடைவான்” என்றார்.

***** ***** ***** *****

ரோமை பேரரசரின் உத்தரவின்படி மக்கள்தொகை கணக்கெடுப்பு வேலைகள் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருந்தன. யூதேயா நாட்டில் பெத்லகேம் பழைமையான ஒரு சிற்றூர். மாமன்னரான தாவீது பிறந்து வளர்ந்த கிராமம். வெளியூர்களிலிருந்து பலர் தங்கள் பெயரை பதிவு செய்வதற்காக குடும்பத்தோடு தம் சொந்த ஊரான பெத்லகேமுக்கு வந்தபடியிருந்ததால், சிலநாள்களாக அங்கு மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. கூட்டத்தைக் கட்டுப்படுத்துவதற்காக வந்திருந்த உரோமை படைவீரர்களும் எல்லா வீதிகளிலும் தென்பட்டார்கள். ஊரின் உள்ளே இருந்த விடுதிகளிலும், ஊருக்கு வெளியே இருந்த சத்திரங்களிலும் ஜனக்கூட்டம் நிரம்பி வழிந்தது.

இரவு உணவு எடுத்துக் கொண்டு, தோபியாஸும், எபினேசரும் நகர வாசலைக் கடந்து வெளியே வந்து, வயல்வெளிக்குச் செல்லும் சாலையில் நடக்க ஆரம்பித்தபோது, நன்றாகவே இருட்டிவிட்டது. அவர்களுடைய தோளில் தொங்கிய பைகளில் சாப்பாடு இருந்தது. எபினேசரின் தலையில் இருந்த கூடையில் சந்தையில் வாங்கிய அத்தி, மாதுளை, பேரீச்சம் ஆகிய பழங்களும், தோபியாஸின் தலையில் இருந்த கூடையில் ஆடுகள் தின்பதற்காக புல்கட்டுகளும் இருந்தன. சாலையின் ஓரமாக இருந்த ஓரிரு சத்திரங்களிலும், உணவுவிடுதிகளிலும், கடைகளிலும் கூட மக்கள் கூட்டம் தான். சிறுவர்கள் இருவரும், சாலையை அடுத்து இடிந்து கிடந்த பழைய வீட்டின் திண்ணையில் தங்கள் சுமைகளை இறக்கி வைத்துவிட்டு, கூடையிலிருந்த மாதுளம் பழங்களை ஆளுக்கொன்றாக எடுத்து சாப்பிட ஆரம்பித்தார்கள்.

அவர்கள் இருந்த வீட்டின் மற்றொரு புறத்தில், முதுகில் துணிமூட்டைகளுடன் ஒரு கழுதை நின்றிருந்தது. அதன் அருகில் திண்ணையின் மேல் உட்கார்ந்திருந்த இளம்பெண் ஒருத்தி, கீழே இறங்குவதற்கு சிரமப்பட்டுக் கொண்டிருப்பதைக் கண்ட தோபியும், எபியும், விரைந்து சென்று, அவள் கீழே இறங்குவதற்கு கைகொடுத்து உதவி செய்தார்கள். புன்னகையோடு அவர்களைப் பார்த்து, “நன்றி, தம்பி” என்று சொன்ன அந்தப் பெண் மிகவும் அழகாக இருந்தாள். நிறைமாத கர்ப்பிணியாகவும் இருந்தாள். அப்போது, “மரியா, என்ன ஆயிற்று?” என்று கேட்டுக் கொண்டே ஒரு தாடிக்கார ஆள் வேகமாக அங்கே வந்தார். மரியா என்று அழைக்கப்பட்ட அந்தப் பெண், முகத்தில் புன்சிரிப்போடு, “ஒன்றுமில்லை.. நான் கீழே இறங்குவதற்கு இந்த தம்பிகள் இருவரும் உதவி செய்தார்கள்..” என்று சொல்லிவிட்டு, “சரி, சத்திரம் எதிலாவது இடம் கிடைத்ததா?” என்றும் கேட்டாள். விரக்தியோடு தலையை ஆட்டிய அவர், “எங்கேயுமே இடம் கிடைக்கவில்லை” என்று சொன்னார்.

பிறகு எபினேசரைப் பார்த்து, “தம்பி, நாங்கள் வடக்கே நாசரேத்திலிருந்து வருகிறோம். இன்று இராப்பொழுது தங்குவதற்கு அருகிலே ஏதாவது சத்திரமோ, வீடோ இருக்கிறதா? உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்டார். முன்பின் அறிமுகமில்லாத அந்த ஆள் அப்படி கேட்டவுடன், “எங்களுக்கு எதுவும் தெரியாது, ஐயா.. நாங்கள் இருவரும் தொலைவிலே வயல்புறத்தில் ஆடுகளுக்கு இராக்காவலுக்கு செல்லவேண்டும். தாமதிக்க முடியாது.. நீங்கள் வேறு யாரையாவது கேளுங்கள்” என்ற எபி, “டேய், தோபி, நேரமாகிவிட்டது… சீக்கிரம் வா” என்று சொல்லிவிட்டு புறப்பட தயாரானான்.

ஆனால், தோபியாஸ் அவசரப்படவில்லை. அந்த இளம்பெண்ணையும், தாடிக்கார ஆளையும் நோக்கி கைகளை ஆட்டியவாறு ஏதோ சொல்ல முற்பட்டான். அவன் தொண்டையிலிருந்து “அ.. ஆ.. ஊ” என்ற ஒலிகள் மட்டும் வந்தன. தாடிக்காரர் எபியை திரும்பிப் பார்த்தார். “தோபியாஸுக்கு பேச்சு வராது, ஐயா.. அவன் பிறவி ஊமை” என்றான், எபி. அந்த இளம்பெண் தோபியை கனிவோடு நோக்கினாள். அதற்குள் பழக்கூடையையும், உணவுப் பைகளில் ஒன்றையும் எடுத்துக் கொண்ட எபி, “ஏய், சரியான நேரத்தில் சாப்பாடு வரவில்லை என்றால், தாத்தா கோபித்து கொள்வாரடா.. வா, வா.. நான் போறேன்” என்று சொல்லிவிட்டு வயல்வெளிக்குச் செல்லும் ஒற்றையடிப் பாதையில் நடக்கத் தொடங்கினான். புல்கட்டு இருந்தக் கூடையும், இன்னொரு உணவுப் பையும் திண்ணையில் ஓரமாக இருந்தன.

இப்போது தோபியாஸ் ஒரு காரியம் செய்தான். உணவுப் பையை தோளிலும், புல்கூடையை தலையிலும் எடுத்துக் கொண்ட தோபி, பெண்ணையும், கழுதையையும் கூட்டிக் கொண்டு, தன் பின்னே வரும்படி தாடிக்காரருக்கு சைகை செய்துவிட்டு, அந்தப் பாழடைந்த வீட்டின் பின்பக்கத்தை நோக்கி நடந்து சென்றான். சற்று தூரம் சென்று திரும்பி பார்த்த தோபி, தாடிக்கார ஆள் தயங்கி நிற்பதைக் கண்டு, தன்னோடு வருமாறு மீண்டும் சைகை செய்தான். அந்தப் பெண்ணை கழுதையின் மேல் அமர வைத்துக் கொண்டு, தோபியாஸ் சென்ற பாதையில் அவனைப் பின்தொடர்ந்து சென்றார், தாடிக்காரர். இருட்டில் நடந்து செல்வது சற்று சிரமமாயிருந்தது. ஒரு இடத்தில் நின்றுவிட்ட தோபி, தீப்பந்தம் ஒன்றைக் கொளுத்தி கையில் வைத்துக் கொண்டு, முன்னே நடந்தான். நாசரேத்தூர் ஆள்களும் அதற்குள் அருகே வந்துவிட்டார்கள்.

தீப்பந்தத்தின் வெளிச்சத்தில் அந்த இடம் இப்போது தெளிவாகத் தெரிந்தது. ஆடு மாடுகளை கட்டி வைக்கின்ற தொழுவம் அது. உணவுப் பையையும், புல்கூடையையும் ஓரமாக இறக்கி வைத்த தோபி, தீப்பந்தத்தை சுவரிலிருந்த வளையத்தில் பொருத்திவிட்டு, மற்றொரு சுவரில் செருகியிருந்த பந்தத்தையும் பற்றவைத்தான். வைக்கோல் கட்டுகள் ஆங்காங்கே சிதறிக் கிடந்தன. கால்நடை சாணத்தின் வாடை மூக்கைத் துளைத்தது. தண்ணீர் ஜாடிகளும், சில தீவனத்தொட்டிகளும் சுவரை ஒட்டி இருந்தன. ஒரு துடைப்பத்தை எடுத்த தோபி, குப்பைகளை ஒதுக்கத் தொடங்கினான். நாசரேத்தூர் ஆளும் அவனுக்கு உதவி செய்தார். கொஞ்ச நேரத்தில் அந்த இடம் முன்னைவிட சுத்தமாக தெரிந்தது. முகத்தில் மகிழ்ச்சி பொங்க நின்ற தோபியாஸ், “இங்கே தங்கிக் கொள்ளலாம்” என்பது போல அவர்களைப் பார்த்து கைகளால் சைகை செய்தான். பின்னர், கூடையிலிருந்த புல்கட்டுகளை பிரித்து, அவற்றை அங்கிருந்த தீவனத்தொட்டி ஒன்றில் பரப்பினான். தன் பையிலிருந்து ஒரு பாத்திரத்தை எடுத்து தாடிக்காரரிடம் கொடுத்து, சாப்பிடுமாறு சைகை செய்தான். புறப்பட தயாராயிருந்த தோபியை தன் அருகே அழைத்த அந்த பெண், அவனைத் தன்னோடு அணைத்தபடி, “மிக்க நன்றி, தோபியாஸ்!” என்று சொல்லி, அவன் நெற்றியில் முத்தமிட்டாள். அவர்களைப் பார்த்து கையசைத்து விடைபெற்ற தோபியாஸ், உணவுப் பையை எடுத்துக் கொண்டு தொழுவத்தைவிட்டு வெளியேறி இருட்டிலே சென்று மறைந்தான்.

***** ***** ***** *****

பெத்லகேம் ஊருக்கு புறம்பாக வயல்வெளியில் ஆடுகளுக்கு காவல் இருந்த இடையர்களிடையே பதற்றம் காணப்பட்டது. வெகு நேரமாகியும் தன் மகன் தோபியாஸ் அங்கு வந்து சேராததால், ஈசாக்கு கவலையுற்றிருந்தார். எபினேசரையும் கூட்டிக் கொண்டு தன் மகனைத் தேடி பார்க்க அவர் புறப்பட்டபோது, எபினேசர், “அதோ, தோபி வந்துவிட்டான்” என்று கூவினான். அவன் காட்டிய திக்கில் தோபியாஸ் நிதானமாக வந்து கொண்டிருந்தான். ஈசாக்கு ஓடிச் சென்று, தன் மகனை அணைத்துக் கொண்டார். தகப்பனும், மகனும் சைகை மொழியில் பேசிக் கொண்டார்கள். பிறகு ஈசாக்கு, “யாரோ வெளியூர்காரர்கள் தங்குவதற்கு பழைய தொழுவத்தைக் காட்டிவிட்டு வந்தானாம்” என்றார். எல்லோரும் சாப்பிட்டு முடித்துவிட்டு, மரத்தடியிலிருந்த குடிசைகளில் படுக்கைகளை விரித்துக் கொண்டனர். கிடைகளில் கிடந்த ஆடுகளின் கனைப்பையும், பூச்சிகளின் ரீங்காரத்தையும் தவிர வேறு சந்தடியின்றி, அந்த வயல்வெளியில் சுற்றிலும் ஆழ்ந்த அமைதி நிலவிற்று.

தோபியாஸ் வெகுநேரம் தூங்கவில்லை. தொழுவத்தில் தான் விட்டுவிட்டு வந்த அந்த நாசரேத்தூர் தம்பதிகளையே நினைத்துக் கொண்டிருந்தான். “நாளை பொழுது விடிந்ததும், அங்கு சென்று பார்க்க வேண்டும்..” என்று மனதில் எண்ணிக் கொண்டான். எப்போது தூங்கினான் என்று அவனுக்குத் தெரியவில்லை.. திடீரென உறக்கம் கலைந்து எழுந்த தோபியாஸ், உற்று கவனித்தான். மெல்லிய குரலில் யாரோ இனிமையாக பாடுவது அவனுக்குக் கேட்டது. சுற்றும் முற்றும் பார்த்தான். குடிசையிலிருந்த ஒரேயொரு தீப்பந்தம் மட்டுமே அந்த இடத்திற்கு வெளிச்சம் தந்து கொண்டிருந்தது. சுற்றிலும் கவ்வியிருந்த இருட்டில் ஒன்றுமே தெரியவில்லை. ஆனாலும், இனிமையான அந்தப் பாடல் காற்றோடு கலந்து வருவது போல இருந்தது. அடுத்த நொடியில், ஒன்றல்ல, இரண்டல்ல, ஏராளமான பேர் சேர்ந்து பாடுவது நன்றாகவே கேட்டது. பனிக்காற்று வீசும் அந்த நேரத்திலும் அவனுக்கு வியர்த்தது. தோபி, தாத்தா யோனாஸை தட்டி எழுப்பினான். துணுக்குற்று எழுந்த யோனாஸும் வியப்போடு சுற்றிலும் நோட்டம் விட்டார்.

ஊரை விட்டு ஒதுங்கியிருந்த வயல்வெளியில், இருள் சூழ்ந்த நிசப்தமான நள்ளிரவு நேரத்தில் அந்த பாட்டு சத்தம் அதிகமாகிக் கொண்டே வந்ததால், தூங்கிக் கொண்டிருந்த மற்ற இடையர்களும் விழித்துக் கொண்டார்கள். யாருக்கும் எதுவுமே புரியவில்லை. அவர்கள் ஒருவரையொருவர் திகிலோடு பார்த்துக் கொண்டார்கள். அப்போது தோபியாஸ் யோனாஸின் தோளைத் தட்டி, வானத்தை நோக்கி கையைக் காட்டினான். எல்லோருமே அண்ணார்ந்து ஆகாயத்தைப் பார்த்தார்கள். வானத்திலிருந்து நட்சத்திரம் ஒன்று பூமியை நோக்கி வந்துகொண்டிருப்பது போல தோன்றியது. வரவர அளவில் பெரியதாகிக் கொண்டே வந்த நட்சத்திரம், வயல்வெளியின் மேலே வந்தபோது பிரகாசமான வெண்மேகம் போல பரந்து விரிந்தது.

அடுத்த கணம் அங்கே மின்னலை ஆடையாக அணிந்தது போல வானதூதர் ஒருவர் நின்றிருந்தார். அந்த இடமே தெய்வீக ஒளியால் நிறைந்தது போலாயிற்று. அந்த இடையர்கள் எல்லோருமே கலக்கமடைந்து ஒருவரையொருவர் பற்றிக் கொண்டு பேச்சற்று போயினர். அவர்களில் நாலைந்து பேர் அச்சமுற்று தரையில் விழுந்தனர். அப்போது வானதூதர் அவர்களிடம், "அஞ்சாதீர்கள், இதோ, எல்லா மக்களுக்கும் பெரும் மகிழ்ச்சியூட்டும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன். இன்று ஆண்டவராகிய மெசியா என்னும் மீட்பர் உங்களுக்காகத் தாவீதின் ஊரில் பிறந்திருக்கிறார். குழந்தையைத் துணிகளில் சுற்றித் தீவனத் தொட்டியில் கிடத்தியிருப்பதைக் காண்பீர்கள்; இதுவே உங்களுக்கு அடையாளம்" என்றார். இதைச் சொல்லி முடித்ததும், அந்த வானதூதரோடு தோன்றிய எண்ணிலடங்காத விண்தூதர்கள் ஒன்றிணைந்து, "உன்னதத்தில் கடவுளுக்கு மாட்சி உரித்தாகுக! உலகில் அவருக்கு உகந்தோருக்கு அமைதி உண்டாகுக!" என்று பாடினார்கள்.

அடுத்த சில நொடிகளில் வானதூதர்கள் மறைந்து போனார்கள். அந்த வயல்வெளியை ஒளிமயமாக்கிய வெளிச்சமும் மறைந்து போனதால், சூழ்ந்திருந்த இருள் முன்னை விட பன்மடங்கு அதிகமாகத் தெரிந்தது. இடையர்களில் சிலர் பயந்து நடுங்கினர்; வேறு சிலர் வியந்து விழித்தனர். முதியவர் யோனாஸ் கைகளை வானோக்கி விரித்தபடி ஏதோ முணுமுணுத்தார். தோபியாஸ் மகிழ்ச்சி பொங்கும் முகத்தோடு தன் தகப்பனைக் கட்டிக் கொண்டான். ஈசாக்கு நடுங்கும் குரலில், “மாமா, இதன் பொருள் என்ன?” என்று கேட்டான். அதற்கு யோனாஸ், “நம் முன்னே தோன்றியவர் தேவதூதர் தான்.. ‘ஆண்டவராகிய மெசியா பிறந்திருக்கிறார்’ என்று சொன்னாரல்லவா? மக்களே, உண்மையிலேயே நாம் பாக்கியசாலிகள்.. காலங்காலமாக காத்திருந்த நம் முன்னோர் காணாத ஒன்றை நமது வாழ்நாளில் இன்று நாம் காணப் போகிறோம்.. வாருங்கள், நாம் போய் ஆண்டவர் நமக்கு அறிவித்திருக்கின்ற இந்த நிகழ்ச்சி என்னதென்று பார்ப்போம்" என்றார்.

இடையர்களில் ஒருவன், “அது சரி, ஐயா, இந்த நடுச்சாம நேரத்தில் குழந்தையை எங்கே போய் தேடுவது?” என்று கேட்டான். அங்கிருந்த எல்லாருடைய முகத்திலும் இந்தக் கேள்வி தெரிந்தது. யோனாஸும் திகைத்து நின்றார். அப்போது சிறுவன் தோபியாஸ், தாத்தா யோனாஸைப் பார்த்து ஏதோ சொல்லிவிட்டு, அவர் கைகளைப் பிடித்து இழுத்துக் கொண்டு முன்னோக்கி நடக்க ஆரம்பித்தான். யோனாஸ் தயங்கி நிற்பதைக் கண்ட ஈசாக்கு, “குழந்தை பிறந்துள்ள இடம் அவனுக்குத் தெரியுமாம், மாமா..” என்றார். வேகமாக முன்னே சென்ற தோபியாஸை அவர்கள் எல்லோரும் பின்தொடர்ந்தார்கள்.

***** ***** ***** *****

நாசரேத்தூர் பெண்ணும், அவள் கணவனும் தங்குவதற்கு தான் காட்டிய தொழுவத்திற்குத் தான் தோபியாஸ் அந்த இடையர்களை கூட்டிவந்தான். வயல்வெளியில் அவர்களுக்குத் தோன்றியதைப் போன்ற வினோதமான வெளிச்சத்தால் அந்தத் தொழுவம் பிரகாசமாயிருந்தது. வாயிலில் நின்று எட்டிப் பார்த்த தோபியாஸையும், மற்றவர்களையும் கண்ட அந்த நாசரேத்தூர் ஆள் புன்முறுவலுடன் அவர்களை உள்ளே வரும்படி அழைத்தார். அங்கே புற்கள் பரப்பப்பட்ட தீவனத் தொட்டியில் துணிகளில் சுற்றப்பட்டு குழந்தை ஒன்று தூங்கிக் கொண்டிருந்தது. தங்களுக்குச் சொல்லப்பட்டவாறே எல்லாம் நிகழ்ந்ததைக் கண்ட அந்த இடையர்கள் மகிழ்சியடைந்தார்கள்.

வயல்வெளியில் தாங்கள் கண்ட காட்சியையும், தேவதூதர் சொன்னதையும், யோனாஸ் அந்த பெண்ணிடமும், அவள் கணவனிடமும் விவரித்துக் கூறினார். அப்போது, தூக்கம் கலைந்து விழித்த குழந்தை கை கால்களை உதைத்துக் கொண்டு முறுவலித்தது. பரவசத்தோடு குழந்தையைப் பார்த்த தோபியாஸை அருகே அழைத்த அந்தப் பெண், அவனைத் தன்னோடு அணைத்துக் கொண்டு, “தோபியாஸ், நீ கொண்டுவந்த புல்கட்டு தான் என் மகனுக்கு மெத்தை ஆயிற்று, பார்த்தாயா?” என்று கேட்டாள். குழந்தையைக் காட்டி ஏதோ சொல்ல முயன்ற தோபியாஸிடம் அந்தப் பெண், “என்ன விஷயம்? சொல்” என்றாள். குழந்தை படுத்திருந்த தீவனத்தொட்டி அருகே சென்று அந்தப் பெண்ணை திரும்பிப் பார்த்த தோபியாஸ், முகத்தில் பெரும் சந்தோஷத்தோடு “அம்மா, உங்கள் குழந்தை ரொம்ப அழகாக இருக்கிறது” என்று சொன்னான். ஈசாக்கும், கூட இருந்த மற்ற இடையர்களும் தோபியாஸ் வாய் திறந்து பேசுவதைக் கண்டு வியப்படைந்தார்கள்.

முதியவர் யோனாஸ், அந்தப் பெண்ணின் கணவரது கைகளைப் பற்றிக் கொண்டு, “ஐயா!, எங்களுக்குக் காட்சி தந்த வானதூதர், ‘ஆண்டவராகிய மெசியா என்னும் மீட்பர் உங்களுக்காகத் தாவீதின் ஊரில் பிறந்திருக்கிறார்’ என்று கூறினார். அது உண்மை தானென்று இப்போது கண்டுகொண்டோம். பிறவி ஊமையான இவன் இன்று வாய் திறந்து பேசுகிறான்… தெய்வமே எங்களைத் தேடி வந்திருப்பதன் அடையாளம் இது.. அம்மா! ஆண்டவர் செயலிது; நம் கண்களுக்கு வியப்பாகத் தான் உள்ளது. ஆபிரகாமின் தேவன் தன் வாக்குறுதியை நிறைவேற்றிவிட்டார்..” என்று சொல்லி, தரையில் வீழ்ந்து வணங்கினார். வெகுநேரம் அந்தத் தொழுவத்தில் இருந்த இடையர்கள் தாங்கள் கேட்டவை, கண்டவை அனைத்தையும் குறித்துக் கடவுளைப் போற்றிப் புகழ்ந்து பாடிக்கொண்டே திரும்பிச் சென்றார்கள்.

www.anbinmadal.org ++2002-2019++ Tamil Catholic website. Email ID: anbinmadal at gmail.com